மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 19 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம், படம்: தி.விஜய், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி

90-களின் தொடக்கம். தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் 'ஹிப்பி ஹேர்ஸ்டைல்’ ஹிட்டடித்து இருந்த நேரம். 10-ம் வகுப்பை முடித்துவிட்டு, சினிமாவில் நடிப்பதையே லட்சியமாகக்கொண்டிருந்த அந்த இளைஞரும், ஹிப்பி ஹேர்ஸ்டைலோடு ஊருக்குள் வலம்வந்தார். சினிமா கனவோடு சென்னைக்கு வந்து அவ்வப்போது வாய்ப்பு தேடி ஏமாந்து ஊருக்குத் திரும்பினார். அப்போது சினிமாவில் துண்டு துக்கடா வேடத்தில்கூட நடிக்க முடியாத அவரை, அரசியல் பரமபத ஏணி, பல உச்சாணிகளில் ஏற்றிவைத்தது. அந்த ஹிப்பி ஸ்டைல் இளைஞர்தான் இன்று, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சினிமாவில் நடித்திருந்தால்கூட, 'டபுள் ஆக்ட்’ வேடங்கள் செய்திருக்க முடியும். ஆனால், அரசியலில் பல துறைகளை கையில் வைத்துக்கொண்டு ஜெகஜ்ஜால வித்தை காட்டுகிறார் வேலுமணி. 

சீண்டாத சினிமா!

கோவைக்கு அருகே சுகுணாபுரம்தான் எஸ்.பி.வேலுமணிக்கு பூர்வீகம். தந்தை பழனிச்சாமி, மில் தொழிலாளி. தாயார் மயிலாத்தாள், சத்துணவு அமைப்பாளர். பழனிச்சாமி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அந்த ரசனை அவரை அ.தி.மு.க-வின் தீவிரத் தொண்டராகவும் மாற்றியது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த கே.பி.ராஜூவுடன் பழனிச்சாமிக்கு நெருக்கம். அதன் மூலம் சிறு சிறு கான்ட்ராக்ட் வேலைகள் கிடைத்தன. அப்போது பழனிச்சாமியின் மகன் வேலுமணி, கே.பி.ராஜூவின் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து போவார். எனினும், கட்சியில் பெரிய ஈடுபாடு கிடையாது. அவருடைய கனவு சினிமா... சினிமா... சினிமா. 'ஊருக்குள்ளயே சுத்திட்டிருந்தா சினிமாவுல எப்டி வாய்ப்பு கிடைக்கும்? மெட்ராஸுக்குப் போ...’ என நண்பர்கள் சொல்ல, மெட்ராஸ் வந்து இறங்கினார் வேலுமணி. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்த பழைய எம்.எல்.ஏ விடுதியில் தங்கி, வாய்ப்பு தேடினார். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் முதல் உப்புமா கம்பெனி வரை ஏறி இறங்கினார். ம்ஹூம்... ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. மீண்டும் ஊருக்குத் திரும்பியவர், அப்பா செய்துகொண்டிருந்த அரசியல் பக்கம் கவனம் திருப்பினார். கட்சி வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தார். பலன்... அ.தி.மு.க மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பதவி.  

மந்திரி தந்திரி - 19 !

ஆல்வேஸ் 'ஆளும் கட்சி’ பந்தா!

1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்து, தி.மு.க அபாரமாக வென்றது. அ.தி.மு.க பிரமுகர்களின் அரசியல், தொழில் உள்ளிட்ட அன்றாடப் பிழைப்புகள் அந்தக் காலகட்டத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனால் வேலுமணி, அசரவில்லை; தி.மு.க முக்கியப் பிரமுகர் ஒருவருடன் ரகசிய நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். அதனால், அவர் குடும்பத்துக்குப் படி அளந்த கான்ட்ராக்ட் வேலைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. 2001-ல் அ.தி.மு.க ஆட்சி. அடுத்த கட்டத்துக்கு நகர நினைத்தவர், அன்றைய கால்நடைத் துறை அமைச்சர் ப.வெ.தாமோதரனின் உதவியோடு, குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக மகுடம் சூட்டிக்கொண்டார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து பம்பரமாகச் சுழன்று கட்சி வேலைகளைச் செய்தார். எப்படியும் பேரூர் தொகுதி எம்.எல்.ஏ ஸீட்டைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. வேலுமணியை வளர்த்துவிட்ட கே.பி.ராஜூவுக்கு வாய்ப்பை வழங்கி இருந்தது தலைமைக் கழகம். வேலுமணி மனதில் பொருமினார். பார்க்கவேண்டியவர்களைப் பார்த்தார்; சொல்லவேண்டியதைச் சொன்னார்; செய்யவேண்டியதைச் செய்தார். மறுநாளே, கே.பி.ராஜூவுக்குக் கொடுத்த ஸீட்டைப் பறித்து, எஸ்.பி.வேலுமணிக்குக் கொடுத்தது தலைமைக் கழகம்.

அந்தத் தேர்தலில் வேலுமணி வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். ஆனால், ஆட்சியை அ.தி.மு.க பறிகொடுத்தது. அதனால் வேலுமணிக்குப் பாதிப்போ, அவரது வளர்ச்சியில் சுணக்கமோ இல்லை. எதிர் முகாமுடன் அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார். நேரடியாகக் களத்தில் இறங்காமல், தனது நண்பர்கள், உறவினர்களை வைத்து சில நிறுவனங்களைத் தொடங்கினார். அந்த நிறுவனங்களுக்கு தி.மு.க அமைச்சர் ஒருவரின் உதவியோடு, கான்ட்ராக்ட் வேலைகளைப் பெற்றுத் தந்தார். தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ வேலுமணியின் வளர்ச்சி அப்போது பலரை வாய் பிளக்கவைத்தது!

களையெடுப்பில் சிக்கிய தலை!

2011-ம் ஆண்டு தேர்தலில் எஸ்.பி.வேலுமணிக்கு  மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதி வேலுமணியின் தூண்டிலில் விழுந்தது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அ.தி.மு.க-வில் தன்னிகரற்று லாபி செய்துகொண்டிருந்த ராவணனின் சிபாரிசு. மற்றொன்று, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஜெயலலிதா கோவையில் பிரமாண்டக் கூட்டத்தை நடத்தியபோது, வேலுமணி தன் சார்பில் பெரும் அளவு தொண்டர்களைத் திரட்டியிருந்தார். அதில் ஜெயலலிதாவுக்கு ஏக மகிழ்ச்சி. அந்தத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை எனும் புதிய துறைக்கு அமைச்சர் ஆனார் வேலுமணி.

இலவசப் பொருட்களை வழங்கும் துறையின் அமைச்சராக இருந்த வேலுமணி, அமைச்சரவையில் அடுத்தடுத்த படிகளில் அநாயசமாக முன்னேறினார். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, தொழில், கனிமவளம், சிறப்பு முயற்சிகள், வருவாய்... என துறைகள் மாறியபடியே இருந்தார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டின் தொடக்கத்தில், சசிகலாவையும் மன்னார்குடி மக்களையும் போயஸ் கார்டனில் இருந்து தூக்கி எறிந்தார் ஜெயலலிதா. அந்தக் குடும்பத் தொடர்புகளால் அமைச்சர், மாவட்டச் செயலாளர் எனப் பதவிகளைப் பெற்ற வேலுமணியின் அந்த இரண்டு பதவிகளும் பறிபோயின.

மந்திரி தந்திரி - 19 !

சளைக்கவில்லை வேலுமணி. மீண்டும் 'அ’-வில் இருந்து ஆரம்பித்தார். முன்பைவிட அதிகம் கட்சி வேலைகளைச் செய்தார். மக்களைச் சந்தித்துப் பேசினார்; மாணவர்களைத் திரளாகக் கூட்டி ஜெயலலிதாவின் சாதனைகளைப் பேசினார்; விழாக்களுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் எம்.எல்.ஏ என்ற முறையில் தானாகச் சென்று கலந்துகொண்டு 'ஜெ’ புகழ் பாடினார். இதனால் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு வேலுமணியை மீண்டும் அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

துறையில் சாதித்தது என்ன?

முதலில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளைப் பார்ப்போம். 'அனைத்து மக்களுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை, 24 மணி நேரமும் வழங்குவதே அரசின் முதன்மையான  நோக்கம்’ என்கிறார் அமைச்சர் வேலுமணி. ஆனால்,  தமிழ்நாட்டில் குடிநீர் குழாய்களே இல்லாத ஊர்கள் இன்னும் எத்தனை இருக்கின்றன என்பது அமைச்சருக்குத் தெரியுமா? பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெறுவது தெரியுமா?  

சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்ய, தற்போதைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை 4.20 டி.எம்.சி அளவுக்கு உயர்த்த 1,851 கோடி ரூபாயில் திட்டம் போட்டார்கள். அதன் பலன்? 'கத்தி’ படம்போல முதியவர்களுடன் குடிநீர் குழாய்களில் தர்ணா செய்தால்தான், உண்மை நிலை சொல்வார்கள்போல! இதோடு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தண்ணீர் பாயவில்லை.  

ஆந்திரா கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீர் சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது. ஒப்பந்தப்படி சென்னையின் குடிநீர் தேவைக்கு ஒவ்வோர் ஆண்டும் 12 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும். ஆனால், கடந்த வருடங்களில் 4.5 ஆயிரம் மில்லியன் கனஅடி முதல் 8.2 ஆயிரம் மில்லியன் கனஅடி வரை மட்டுமே நமக்கு நீர் கிடைத்தது. இந்தக் குறைந்த நீர்வரத்தால் சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது குடிநீர் வாரியம். இந்த நீரைப் பெறுவதற்காக ஆந்திரா சென்று, அங்கே இருக்கும் நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்தாரா வேலுமணி? முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது மழைநீர் சேகரிப்பை ஓர் இயக்கம்போல செயல்படுத் தினார் ஜெயலலிதா. ஆனால், இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அமைச்சருக்கு அக்கறையே இல்லை. மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வும் குறைந்துவிட்டது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் நிறைவேற்றப்படும் என 2013-14ம் ஆண்டு காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சுமார் 3,500 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட திட்டம் இன்னும் நிறைவேறவில்லை.

சென்னை மாநகராட்சிப் பகுதி விரிவடைந்துகொண்டே இருக்கிறது. ஆனால், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அரசின் திறன் சுருங்கிக்கொண்டே இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட மேம்பால வேலைகள் முடங்கிக்கிடக்கின்றன. ஓர் உதாரணம்... வியாசர்பாடி ரயில்வே மேம்பாலப் பணிகள். அது எப்போது முடியும் எனத் தெரியவே இல்லை. ஆனால், புதிய பாலங்களுக்கான அறிவிப்பு மட்டும் கலர் மத்தாப்புகளாக ஜொலிக்கின்றன. எல்லா ஆட்சிக் காலத்திலும் பேசப்படுவதுபோல, இந்த ஆட்சியிலும் கூவம் நதியைச் சுத்தம் செய்வதாகச் சொன்னார்கள். கூவம் நதியை மேம்படுத்த பருத்திப் பட்டு அணையில் இருந்து முகத்துவாரம் வரையிலான 32 கி.மீ தூரத்தைச் சீரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. கழிவுநீர் கூவத்தில் கலப்பதைத் தடுக்க மாற்று ஏற்பாடு, நதியின் வெள்ள நீர் கொள்ளளவை மேம்படுத்துதல், பராமரித்தல், கரையில் வாழும் மக்களுக்கு மாற்று இடம்... என முக்கிய அம்சங்கள் எல்லாம் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்ட பிறகு கூவத்தைச் சுத்தப்படுத்த 3,833.62 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. அது இன்னும் எழுத்தில்தான் இருக்கிறது!

சட்டம் மற்றும் நீதிமன்றங்கள்...

சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கி கீழ் நீதிமன்றங்கள் வரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 968 நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. உயர் நீதிமன்றம் தவிர்த்து மற்ற நீதிமன்றங்களில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில், 2013-ம் ஆண்டு 12.88 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் 5.57 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றப் பணிகளை முடுக்கிவிடவோ, விசாரணை வசதிகளை அதிகரிக்கவோ அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது... நோ கமென்ட்ஸ்!

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழியே பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த முடியவில்லை. தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டு நிராகரித்துவிட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசை வலியுறுத்தியோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவோ தீவிரமாக முயற்சித்திருக்கலாம். பெங்களூரு குன்ஹா கோர்ட்டிலும் பரப்பன அக்ரஹாரா சிறை வாசலிலும் காத்துக்கிடக்கத் தெரிந்த அமைச்சருக்கு, தமிழ் மொழி மீது அக்கறை இல்லாமல்போனது. அட, 'தமிழ் மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற வாக்குறுதி அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் விஷயமாவது அமைச்சருக்குத் தெரியுமா?

சிறைச்சாலைகள்...

திருந்துவதற்காக உள்ள சிறைச்சாலைகள் கிரைம் கூடாரமாகத்தான் காட்சி அளிக்கின்றன. அதிகாரிகளின் கண்காணிப்பு செல்லரித்துப்போனதால், சிறை வளாகங்களில் செல்போன்கள் சர்வசாதாரணமாகப் புழங்கிவருகின்றன. செல்போன்களைச் செயல் இழக்கச் செய்யும் கருவிகள் சில சிறைச்சாலைகளில் இருந்தும் பயன் இல்லை. இதுபோக பல முக்கிய கிரைம்களுக்கு ஸ்கெட்ச் போடும் இடமாக மாறிவருகின்றன சிறைச்சாலைகள். அங்கே இருந்தபடியே காரியங்கள் நடத்தப்படுகின்றன. உடல்நலம் பாதிக்கப்படும் கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் இல்லாததால், தமிழ்நாட்டுச் சிறைகளில் 2000 முதல் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மட்டும் 1,095 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். சிறை நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சிறையில் கைதிகள் மரணம் தொடர்பாக, அரசு அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ஆனாலும் சிறை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி விழவில்லை.

மரணக் குழிகள்...

'ஓடி விளையாடு பாப்பா... ஆழ்துளைக் கிணற்றை மூடி விளையாடு பாப்பா!’ - இப்போது பாரதி இருந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார். அந்த அளவுக்கு ஆழ்துளைக் கிணற்றில் பிஞ்சுகள் விழுந்து மடிந்துகொண்டிருக்கிறார்கள். ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் உரிமையாளர்களின் அஜாக்கிரதையால் திருவண்ணாமலை கலசப்பாக்கத்தில் சுஜித், விழுப்புரம் பல்லகசேரியில் மதுமிதா, நெல்லை கைலாசநாதபுரத்தில் சுதர்சன், வேலூர் ஆற்காட்டில் தமிழரசன், கரூர் சூரிப்பாளையத்தில் முத்துலட்சுமி, திருவண்ணாமலை தண்டராம்பட்டில் கோபிநாத், திருவண்ணாமலை புலவன்பாடியில் தேவி என மரணக் குழிக்குள் விழுந்த பிஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு 2009-ம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. அடுத்தடுத்து மரணங்கள் நடந்தபோதும் அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. இது தொடர்பான பொதுநல வழக்கில் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, 'அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிவுறுத்தியிருக்கிறோம்’ என விட்டேத்தியாகச் சொன்னது. ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற அதிநவீன ரோபோவை உருவாக்கினார் மதுரையைச் சேர்ந்த தொழிற்கல்வி ஆசிரியர் மணிகண்டன். இந்தியாவின் எந்தப் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுந்தாலும், உடனே மணிகண்டனைத்தான் அழைக்கிறார்கள். நெல்லை சங்கரன்கோவில் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஹர்சன் என்ற சிறுவனைக்கூட தங்கள் ரோபோ மூலம் மீட்டது மணிகண்டன் டீம். தமிழ்நாட்டில் ரோபோ மூலம் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தை மீட்கப்பட்ட முதல் சம்பவம் இது. ஆழ்துளை விபத்துக்கள் அதிகரித்துவருவதால் இதுபோன்ற ரோபோ கருவிகளை அனைத்துத் தீயணைப்பு நிலையங்களிலும் வைக்க வேண்டும் என ஆலோசனை சொன்னார் மணிகண்டன். அட, மணிகண்டனுக்குப் பரிசோ விருதோ  கொடுக்க வேண்டாம். தீயணைப்பு நிலையங்களில் அந்த உயிர் காக்கும் கருவிகளை வாங்கி வைத்திருக்கலாமே! அதுகூட நடக்கவில்லை. 'அப்பாவி குழந்தைகளின் உயிர் பற்றி நமக்கு என்ன?’ என அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளின் அசட்டை மனோபாவம் தவிர, இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?!  

காரணம் யார்?

பசையுள்ள துறைகள் வேலுமணியின் வசம் இருந்தபோது, சக அமைச்சர்களால் பொறாமையுடன் பார்க்கப்பட்டவர் இவர். தொழில் துறையைக் கவனித்த காலத்தில் பணம் கொழிக்கும் கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள், பல காலம் வெளியே வராமல் இருந்ததற்குக் காரணம் யார் எனப் பலத்த முணுமுணுப்புகள் கேட்கின்றன.

கோடிகளில் யாகம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, ஜெயலலிதா சிறையில் இருந்த நேரத்தில், அவர் விடுதலையாக வேண்டி அ.தி.மு.க அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவரும் போட்டிபோட்டு யாகங்களையும் வழிபாடுகளையும் நடத்தினர். வேலுமணியும் அதில் சளைக்கவில்லை. ஆனால், ஒரு வித்தியாசம். மற்றவர்கள் தீச்சட்டி, பால்குடம், அலகு குத்துதல் என அலைந்துகொண்டிருந்தபோது, வேலுமணி 'அஸ்வரூடா யாகம்’, 'கஜ பூஜை’ என காஸ்ட்லி யாகங்களை நடத்திக்கொண்டிருந்தார். அந்தச் செலவுகள் மலைக்க வைத்ததாம். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானபோது, ஒருமுறை மொட்டையடித்துக்கொண்டார். அவர் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டபோது, இன்னொரு முறை மொட்டை அடித்துக்கொண்டார் வேலுமணி!

மந்திரி தந்திரி - 19 !

ஆகா... ஓகோ... வளர்ச்சி!

வேலுமணியின் அப்பா பழனிச்சாமி வீடு கட்டி வாழ்ந்த இடத்துக்கு, பின்னர் பட்டா வாங்கப்பட்டது உள்ளூரில் சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது அந்த வீட்டுக்கு முன்பாக உள்ள மொத்த இடத்தையும் வாங்கி, பிரமாண்ட வீட்டைக் கட்டியுள்ளார் வேலுமணி. வேலுமணியின் உடன்பிறந்த சகோதரர் அன்பு, ஆரம்பத்தில் நகைக் கடை நடத்தி வந்தார். வேலுமணி அரசாங்கத்தில் வளர வளர, அன்புவின் நகைக் கடைகளின் எண்ணிக்கையும் ஏகமாகப் பெருகின!

சீனியர்களுக்கு கல்தா!

சீனியர்களைக் காலிசெய்வதில் வேலுமணி கில்லி. தன்னை, தன் குடும்பத்தைத் தூக்கிவிட்ட கே.பி.ராஜூவுடன் இருந்துகொண்டே அவருக்குக் கிடைத்த எம்.எல்.ஏ ஸீட்டைத் தனதாக்கினார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின்போது பொள்ளாச்சி ஜெயராமன், ப.வெ.தாமோதரன், செ.ம.வேலுசாமி... என கோவைக்கு மூன்று அமைச்சர்கள் இருந்தனர். வேலுமணி 'பவர் சென்டராக’ உருமாறத் தொடங்கிய பின், பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்டத்தை விட்டே வெளியேற்றப்பட்டார். தாமோதரன், செ.ம.வேலுசாமி ஆகியோர் டம்மி ஆக்கப்பட்டனர்.

உடன்பிறப்பே...  

1996-ம் ஆண்டு காலகட்டத்தில், வேலுமணி கான்ட்ராக்டராக இருந்தபோது தி.மு.க ஆட்சி. அப்போது தி.மு.க-வில் மண்டலத் தலைவராக இருந்தவரோடு நெருக்கம் காட்டி காரியங்களைச் சாதித்தார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இவர் எம்.எல்.ஏ - ஆனபோதும் தி.மு.க ஆட்சி. அப்போது எம்.எல்.ஏ என்ற முறையில் ஒரு தி.மு.க அமைச்சரோடு நெருக்கம் காட்டி தன் காரியங்களைச் சாதித்துக்கொண்டார். தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுக்கு நெருக்கமானவர் ஆனந்த். அந்த ஆனந்த், வேலுமணிக்கு மிக நெருக்கம். இதனாலேயே தி.மு.க ஆட்சியில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டு வேலைகளில் பல பணிகள், வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்குக் கிடைத்தன!

மந்திரி தந்திரி - 19 !

வாட்ஸ்அப் வைரல் ஆடியோ!

ஊரக வளர்ச்சித் துறையின் 'பெருந்தலை’ தனது பி.ஏ மூலம் கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகப் புலம்பும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு வாட்ஸ்அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், 'ரொம்பப் பேராசை பிடிச்சு அலையறாங்க. ஸ்டேஷனரி வாங்குனா, அதுலகூட கமிஷன் வேணும்கிறாங்க. ரோடு போடுறவன் லாபத்துல கொஞ்சம் கமிஷன் கொடுப்பான். இவங்க அவன்கிட்ட 16 சதவிகிதம் கேட்டா, அவன் என்ன வேலை செய்வான்?’ என ஏகத்துக்கும் அதிர்ச்சி தகவல்களைக் கொட்டியது அந்தப் பேச்சு. 'அது மிகைப்படுத்தல் எதுவும் இல்லை. கமிஷனுக்காக இவங்க பண்ற டார்ச்சர் கொஞ்ச நஞ்சம் இல்ல’ என்கிறார்கள் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும். ஆனால், துறையின் தலைமையான அமைச்சரிடம் இதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லை!  

தமிழ்நாடு எங்கும் கான்ட்ராக்ட் மேளா!

குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக வேலுமணி இருந்தபோது, அவரோடு இருந்து கான்ட்ராக்ட் வேலைகளைச் செய்தவர் சந்திரசேகர். அப்போது தொடங்கிய நட்பு இன்னும் தொடர்கிறது. குனியமுத்தூர் நகராட்சியில் இவர்களுக்குள் தொடங்கிய 'டீல்’... நகராட்சி, மாநகராட்சி, மாவட்டம் என விரிந்து இப்போது, தமிழ்நாட்டில் நடக்கும் பல ஒப்பந்தப் பணிகளை, 'சந்திரசேகர் அண்ட் கோ’-தான் எடுத்துவருகிறதாம். உள்ளாட்சி அமைப்புகள் எல்லாம் வேலுமணி வசம் வருவதால், கான்ட்ராக்ட்டுகளைப் பெறுவதில் சந்திரசேகருக்கு எந்தச் சிரமமும் இல்லை!