Published:Updated:

நாக்குகள் நாகரிகம் பழகட்டும் !

நாக்குகள் நாகரிகம் பழகட்டும் !

நாக்குகள் நாகரிகம் பழகட்டும் !

முதலமைச்சர் ஜெயலலிதா - பிரதமர் மோடி சந்திப்பின் பின்னணி என்ன என்பதற்கு, பலரும் பல காரணங்கள் சொன்னார்கள். மத்திய அரசின் புதிய மசோதாக்களுக்கு ஆதரவு, ஜெயலலிதா வழக்கு மீதான கரிசனம், வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஒத்திகை எனச் சொல்லப்பட்ட இந்தக் காரணங்கள் அனைத்தும் பொதுவானவை; அரசியலில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டவை. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் நக்கல் பேச்சு மிக மலிவானது; மிகமிக இழிவானது. 

ஒரு நாட்டின் பிரதமருக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்புக்கு,  இதைவிட மோசமான உள்நோக்கத்தை யாரும் கற்பித்துவிட முடியாது. அதை இந்தியாவின் தொன்மையான கட்சியின் பொறுப்பான மூத்த தலைவரே சொன்னது இன்னும் அதிர்ச்சியானது.

பெண்கள் பொதுவெளிக்கு வரும்போது அவர்களைத் துரத்தி அடிக்க ஆண்கள் கையாளும் முதலும் இறுதியுமான ஆயுதம், 'அவர்கள் பெண்கள்’ என்பதுதான். தன் பாலினமே தனக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்படும் கொடுமையை பெண்கள், இந்த மில்லினிய யுகத்திலும் எதிர்கொள்ளவேண்டியிருப்பது வேதனை. ஒரு மாநில முதலமைச்சரும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பது, முகத்தில் அறையும் உண்மை.

சுமார் 30 வருடங்களுக்கு முன் ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோது, இப்படியான அவதூறு வன்முறைகளை நிறையவே எதிர்கொண்டிருக்கிறார். அதன் பின் மூன்று முறை வாக்காளர்களின் அமோக ஆதரவோடு தேர்தலில் வென்று முதலமைச்சர் பதவியை எட்டிப் பிடித்த பிறகும், தன் 67-வது வயதிலும், ஒரு பெண்ணாக இருப்பதால் ஜெயலலிதா இத்தகைய இழிவான விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது என்பது தமிழ்நாட்டின் வெட்கக்கேடு!  

தமிழ்நாடு அரசியலில் பெண்கள் இப்படி மோசமாக எதிர்கொள்ளப்பட்டதற்கு 50 ஆண்டுகால வரலாறு உண்டு. இப்போது இளங்கோவனை அரசியல் காரணங்களுக்காக ஆதரிக்கும் பலரும், இதே தவறை இதற்கு முன்பு செய்திருக்கிறார்கள். இத்தகைய 'பாரம்பர்யத்தில்’ திளைத்துவந்தவர்கள் என்பதால்தான், காங்கிரஸ் அலுவலகங்கள் மீதான அ.தி.மு.க-வினரின் தாக்குதல்களைக் கண்டிக்கும் இவர்கள், முதலமைச்சர் மீதான இளங்கோவனின் அவதூறைக் கண்டிக்கவே இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரின் மாண்பையே கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் இந்தக் கட்சிகள், ஒரு சாதாரணப் பெண் பிரஜையின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்?

நாக்குகள் நாகரிகம் பழகட்டும் !

அதே நேரம் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களை காவல் துறை வேடிக்கை பார்த்து, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டத் தவறியது, ஆளும் அரசாங்கத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி. இளங்கோவன் மீது வழக்கு தொடுத்து, இந்தப் பிரச்னையை எதிர்கொண்டிருக்க வேண்டிய முதலமைச்சர், தன் கட்சியினரின் அனைத்து வன்முறைகளும் அரங்கேறிய பிறகு, ஆற அமர, கண்துடைப்பாக ஓர் அறிக்கை வெளியிடுவது... ஜெயலலிதா என்ற 'கறார் நிர்வாகி’க்கான அழகு அல்ல.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல. சிந்தனையிலும் நாகரிகத்திலும் மேன்மை அடைவதே முக்கியமானது. தவறு இழைத்த இளங்கோவனும், அதை அங்கீகரிக்கும் மற்ற அரசியல் தலைவர்களும் முதலில் நாகரிகம் பயிலட்டும்; பண்பாடு பழகட்டும். அப்போதுதான் நீங்கள் தலைவர்கள் என்பதற்கான தகுதியைப் பெறுவீர்கள்!