
''ஏன்டா... எங்கிருந்தோ வந்து ஏ.சி. கடை போட்டு பிசினஸ் பாப்பீங்க. தமிழ்நாட்டுப் பையன் ஒருத்தன் ரோட்ல நின்னு வேகாத வெயில்ல புக்கு வித்தா ஒனக்கு வலிக்குதா... கடை கிடைலாம் ஒடைச்சுத் தொம்சம் பண்ணிருவேன்... போடா உள்ள...''
‘மக்களைப் படி’ என்றார் மாவோ!
நேற்று டீக்கடையில் 'எவனோ ஒருவன்’ பேப்பரில் பஜ்ஜிக்கு எண்ணெய் எடுத்தபடியே, ''நீ வேணாப் பாரு... கனிமொழிதான் அடுத்த சி.எம். லட்சம் கோடினு பார்த் துருச்சு. திஹார் வரைக்கும் போயிருச்சு.
சனி உச்சம் போனா, அப்பிடியே அடுத்த ரவுண்டு சுக்கிரன்தான். இனி, ஸ்டாலினும் கிடையாது, விஜயகாந்த்தும் கிடையாது. குறிச்சுவெச்சுக்க, கனிமொழிக்குத்தான் சான்ஸு'' என்றார் அலட்சியமாக. அவரது நண்பர் கிங்ஸை இழுத்து ஊதியபடியே சொன்னது இன்னும் பயங்கரம். ''இல்ல தலைவா, குஷ்புவுக்கு ஒரு சான்ஸ் இருக் குப்பா. இங்கிட்டு, சசிகலா குடும்பத்துல டாக்டர் வெங்கடேஷ§க்குக் கட்டம் கொஞ்சம் ப்ரைட்டு தலைவா!''
போகிற போக்கில், ஒரு தேநீர் இடைவேளையில் மூன்று முதலமைச்சர்களை ஃபிக்ஸ் பண்ணிவிட்டுப் போகிறார்கள் தமிழர்கள்!

அதே தெருவில் இருக்கும் சேட்டுக் கடையில் மொபைல் டாப்-அப் பண்ணச் சென்றால், ஒரு பெண்மணி கையில் குழந்தையோடு நிற்கிறார். ''சேட்டு, கவர் மென்ட் மிக்ஸி வந்தா... எவ்வளவுக்கு எடுத்துக்குவ?''
''அது... நீ கொண்டா... பார்த்துட்டுச் சொல்லுது!''
''அட்வான்ஸா 200 ரூவா குடு சேட்டு...''
''கஸ்டமர் வர்றாங்கள்ல... தள்ளி நில்லும்மா...''
நான் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டுக்கு வந்தால், வாசலில் கூட்டம். போலீஸ் நிற்கிறது. என்ன ஆச்சு எனக் கேட்டால், ''சி-1காரருக்கும் மேல் ஃப்ளாட் ஆளுக்கும் கார் நிறுத்துறதுல தகராறு சார். ஒரு மாசமா எவன் முன்னாடி வந்து நிறுத்தறதுனு சண்டை போட்டுனு இருந்தானுங்க. காத்தால, கடுப்புல சி-1காரர் கார் மேல, மேல் ஃப்ளாட் ஆளு கோடு போட்டுட்டான். ச்சும்மா இல்ல... இம்மாந்தண்டி கோடு'' என்றபோது இஸ்திரிக்காரர் முகத்தில் அதி உற்சாகம். சமாதானம் பேச வந்திருந்த போலீஸ்காரர் கல்லாப்பெட்டி சிங்காரம் வெயிட் போட்டதுபோல இருந்தார்.
''அய்யய்ய... செத்தா சிட்டில ஒரு டம்ளர் சாம்பலுங்க. ஸ்டேஷன் போனா கேஸாயிரும். இங்கனயேவெச்சு சமாதானம் பேசிக்குவோம்னா சொல்லுங்க...'' எனச் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டு இருந்த போலீஸ்காரரையும் சண்டைக்காரர்களை யும் கொஞ்ச நேரத்தில் காணவில்லை.
காலையில் பார்த்தபோது வாசலில் மேல் ஃப்ளாட்காரரின் கார் நின்றிருந்தது. பக்கத்தில் ஓர் அட்டையில் 'போலீஸ் அனுமதியுடன் இங்கு கார் நிறுத்தப்பட்டு இருக்கிறது’ என்று எழுதி மாட்டியிருந்தது!
அடையாரில் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு ரெஸ்டாரென்ட்டுக்குப் பக்கத்தில், பிளாட்ஃபார்மில் நின்றபடி ரைம்ஸ் புத்தகங்கள் விற்றுக்கொண்டு இருந்தான் ஓர் அழுக்குச் சிறுவன்.

ரெஸ்டாரென்ட்டில் இருந்து வந்த ஒருவர், ''சொல்லியிருக்கேன்ல... இங்கே நிக்காதேனு... போடா'' என அந்தச் சிறுவனை ஆங்கிலத்தில் திட்டியபடிதள்ளி விட்டார்.
ஓரமாக தம் அடித்துக்கொண்டு இருந்த ஒருவர், தடாரெனக் குதித்து ஓடி வந்து,
''ஏன்டா... எங்கிருந்தோ வந்து ஏ.சி. கடை போட்டு பிசினஸ் பாப்பீங்க. தமிழ்நாட்டுப் பையன் ஒருத்தன் ரோட்ல நின்னு வேகாத வெயில்ல புக்கு வித்தா ஒனக்கு வலிக்குதா... கடை கிடைலாம் ஒடைச்சுத் தொம்சம் பண்ணிருவேன்... போடா உள்ள...''
எனக் கத்தியபடி ரெஸ்டாரென்ட்காரரை ஒரு இழுப்பு இழுத்தார். ரெஸ்டாரென்ட் பார்ட்டி சட்டென்று பம்மிக் கடைக்குள் ஓடிவிட்டார்!
ஒரு முறை அம்பிகா எம்பயர் சிக்னல் பக்கத்தில் அச்சு அசல் ஹரி படம் மாதிரி ஒருவனை நாலைந்து பேர் துரத்தி வந்தார்கள். சிக்னலில் அத்தனை பேர் பார்க்க, அவனைப் பிடித்துத் துவைத்து எடுத்தார்கள். அவன் மக்களைப் பார்த்து, ''அய்யோ... யம்மா... சார்... சார்ர்ர்ர்...'' எனக் கதறினான். அவ்வளவு பேரும் வீடியோ கேம்ஸ் மாதிரி அதைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். கொஞ்ச நேரத்தில் அவனை அடித்துக் கிழித்து மூர்ச்சையாக்கி, வீசிவிட்டுப் போனார்கள். ''அய்யோ பாவம்ப்பா...'' என ஒருவர் அவனைத் தூக்க ஓடினார். இயர்போன் போட்டபடி தொப்பையோடு பைக்கில் நின்ற ஒருவர், ''சார், இவன் என்ன பண்ணானோ? எல்லாம் ரௌடிங்க சார். கேஸ் அது இதுனு தலைவலி சார்'' என்றார். அதைக் கண்டுகொள்ளாமல், விழுந்தவனை ஆட்டோவில் அள்ளிக்கொண்டு ஓடினார் யாரோ ஒரு நல்லவர். நல்ல பசியில் நான் 'ஙே’ என நின்று இருந்தேன்!
நண்பர் ஒருவரின் உறவினர் ஐ.பி.எஸ். அதிகாரி. சமீபத்தில் ஒரு வேலையாக அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். வள்ளுவர் கோட்டம் பக்கம் ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டோம்.
''தம்பிக்கு ஊரு எது..?'' என்றார் அவர்.
''திருவாரூர் சார்...''
''திருவாரூரா... பக்கமா..?''
''பக்கம் சார்... கொரடாச்சேரி பக்கத்துல அபிவிருத்தீஸ்வரம்...''
''அட... அப்போ ..............க்குச் சொந்தமா?''
''இல்ல சார். எனக்கு அவ்வளவு தெரியாது!''
''ம்... அது சரி... என்ன சாமி கும்பிடுவீக?''
''அது வந்து எந்த சாமியா இருந்தாலும் கும்புடுறதுதான் சார்!''
''என்ன தம்பி நீங்க... சரி, என்ன ஆளுக நீங்க?''
ஏற்கெனவே, இதுபோல நிறைய அனுபவங்களைக் கடந்து இருந்ததால், கோபம் வரவில்லை. இப்பெருநகரத்திலும் சாதி அடையாளங்களைத் தேடும் ஆயிரம் ஆயிரம் நபர்களில் இவரும் ஒருவர்!
இந்திய மக்களைப் படிப்பது அதி பயங்கரமான அனுபவங்களைத் தருகிறது. ஒரு பக்கம் பிளாட்ஃபார்மில் சாமி கும்பிட்டு, பிள்ளை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் குடும்பம் குடும்பமாக பக்கெட் சிக்கன் வாங்கிக்கொண்டு இருக் கிறார்கள். ஓட்டுக்குக் காசு வாங்குகிறார் கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார் கள். ஈழப் பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது வைகோவைத் தோற்கடிக்கிறார்கள். வடிவேலுவில் இருந்து குண்டு ஆர்த்தி வரை யார் வந்தாலும் கூட்டம் காட்டு கிறார்கள்.
கருத்துக் கணிப்புகளை அடித்து நொறுக்கி, வாக்குகளை மாத்திக் குத்து கிறார்கள். அன்பே சிவத்தையும் ஆரண்ய காண்டத்தையும் காலி பண்ணுகிறார்கள். 'திருப்பாச்சி’யை ஹிட்டாக்குகிறார்கள். அதே டெம்போவில் 'திருப்பதி’ எடுத்தால், மொட்டை அடிக்கிறார்கள். ஈழப் பிரச்னைக்கு 'உச்சு’ கொட்டிக்கொண்டே ஐ.பி.எல். பார்க்கிறார்கள். அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு மெழுகுவத்தி ஏற்றிவிட்டு, ஆர்.டி.ஓ. ஆபீஸில் லஞ்சம் கொடுக்கிறார்கள். குழந்தையை ப்ரீ.கே.ஜி. சேர்க்க ஒரு லட்சம் டொனேஷன்கொடுக் கிறார்கள். உணவகங்களில் மேஜை துடைக்கும் சிறார்களைத் திட்டுகிறார்கள். விஜய்க்கு எதிராக எஸ்.எம்.எஸ். இயக்கம் கட்டுகிறார்கள். 'மக்கள் இயக்கம்’ மாநாடு போட்டால், ரவுண்ட் கட்டுகிறார்கள். மதுக் கடைகளிலும் கூட்டம். தியான மையங்களிலும் கூட்டம். துணிக் கடை, நகைக் கடை எங்கெங்கும் கூட்டம். ஆனால், எப்போது யாரைக் கேட்டாலும், ''ஒரே பணக் கஷ்டம் பாஸ்'' என்கிறார்கள். நேர்மை, நியாயம், கோபம், அன்பு பேசும் எழுத்துக்கும் சினிமாவுக்கும் பேச்சுக்கும் கொந்தளிக்கிறார்கள், அழுகிறார்கள்.
எதிர் ஃப்ளாட்டில் நடக்கும் வெட்டுக்குத்தை மொபைல் பேசியபடி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருவில் ஒரு சத்தம் கேட்டால், கதவைச் சாத்திக்கொள்கிறார்கள். திருட்டு வி.சி.டி. பார்க்கிறார்கள். நித்யானந்தா சி.டி-க்கு அலைகிறார்கள். யாருக்கும் எதுவும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் அழுகிறார்கள். சமூகத்தின் பெரும் அவலங்களையும் அபத்தங்களை யும் நொடியில் கடந்து சென்றுவிடுகிறார் கள்!

ஒரு முறை நண்பனை பஸ் ஏற்றிவிட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போயிருந்தேன். அது பண்டிகை நாள் என்பதால் கூட்டம் கும்மியடித்தது. 200 ரூபாய் டிக்கெட்டுகள் 1,000 ரூபாய்க்கும் கிடைக்கவில்லை. திடுதிப்பென்று ஒரு பிளாட்ஃபார்மில் முண்டியடித்தது கூட்டம். ஒரு வயசுதான் இருக்கும்... ஒரு குழந்தையை யாரோ நடு பஸ் ஸ்டாண்டில் விட்டுப் போயிருக்கிறார்கள். ஒரு தூண் ஓரமாக அது கிடந்து அலறியது.
''ரொம்ப நேரமா அது அங்கதான் கெடக்குது. நானும் யாராவது வருவாங்கனு பாக்கறேன்... காணோம்'' என்கிறார் பக்கத்துக் கடைக்காரர். எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க... ஒரு பெண்மணி மட்டும் சட்டென்று குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டு, ''ச்சூ... ச்சூம்மா... அம்மாவைக் காணமா... வந்துருவாங்கடா குட்டி'' எனத் தட்டிக்கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. மைக்கில் குழந்தையைப் பற்றி அறிவிப்பு கொடுத்தார்கள். அரை மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஏதோ ஒரு நொடியில், அந்தப் பெண்மணி சட்டென்று குழந்தையை முந்திக்குள் வைத்துப் பால் கொடுக்க ஆரம்பித்தார். கூட்டத்தைக்கூடப் பார்க்கவில்லை. எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்த கணம், உடல் சிலிர்த்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் கூட்டம் கலைந்து ஓடியது. அவரவர்க்கான பேருந்துகளில், அவரவர்க்கான ஊர்க ளுக்கு, அவரவர் போய்ச் சேர்வதுதான் முக்கியம் அல்லவா? போலீஸோடு குழந்தையை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி சென்றார். எனக்கு அந்தப் பேருந்து நிலையமே நம் தேசத்தைப் போலத் தோன்றுகிறது!
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan