Published:Updated:

வந்தேன்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 10

vandenda nanbenda santhonam
பிரீமியம் ஸ்டோரி
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேன்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 10

##~##
''வா
ழ்க்கையில பல சமயம் எதிர்பார்க்காத விஷயங்கள்தான் கபீம் குபீம் காமெடி ஆகும். நமக்கு காமெடியா இருக்கிற விஷயம், நிச்சயமா யாரோ ஒருத்தருக்குக் கடுப்புதான். அப்படி நான் ஒருத்தருக்கு 'பிங்கி பிங்கி பாங்கி’ சொல்லி ஊசி சொருகி பெல்லி டான்ஸ் ஆடவெச்ச லகலக சம்பவம் ஒண்ணு...

'காதலன்’ ரிலீஸ் ஆகியிருந்த நேரம். தமிழ்நாடே 'முக்காபுலா’ ஜுரத்துல ஆடிட்டு இருந்தது. 'இன்னும் படம் பார்க்கலையா... நீயெல்லாம் ஒரு யூத்தா?’னு அவமானப் பார்வை களால் அவதிப்பட்டுக்கிட்டு இருந்தோம். ஒருவழியா இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு, கருமாயப் பட்டு படத்துக்கு நாலு டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டோம். மேட்னி ஷோ போறதா திட்டம். காலையில வீட்ல காலிங்பெல் அலறுது. தொறந்து பார்த்தா, தொடையைப் பிடிச்சுட்டு நிக்கிறான் நண்பன் ஒருவன். 'நாய் கடிச்சிடுச்சுடா’ன்னு புலம்பல்ஸ். 'சரி... வாடா ஆஸ்பிட்டல்ல ஊசி போட்டுட்டு அப்படியே மேட்னி ஷோ போயிடலாம்’னு கூட்டிட்டுப் போனேன். அங்கே போனா, ஒரு ஊசி போட ஒண்ணரை மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. ஏன்னா, நாய்க் கடி ஊசி மருந்து பாட்டிலைத் திறந்ததும் பயன்படுத்திடணுமாம். ஒரு பாட்டில்ல இருக்குற மருந்தை அஞ்சு பேருக்குப் போடலாம். அப்போ நண்பனையும் சேர்த்து நாலு பேர்தான் இருந்தாங்க. 'இன்னும் ஒரு ஆள் இருந்தாதான் அஞ்சு பேருக்கும் ஊசி போட முடியும்’னு சொல்லிட்டாங்க ஸ்ட்ரிக்ட் சிஸ்டர்!

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 10

கடுப்போடு காத்திருந்தப்ப, ஆப்புபாந்தவன்... ச்சே, ஆபத்பாந்தவனா ஒருத்தரு வந்தாரு. 'தம்பி, இங்கே எங்கே ஊசி போடுவாங்க?’ன்னு கேட்டு வந்து நின்னாரு ஒருத்தரு. 'இங்கேதான் சார்... இதோ போடுவாங்க சார்’னு வீட்டுக்கு வந்த விருந்தாளி கணக்கா உபசரிச்சு உக்காரவெச்சோம். 'சிஸ்டர், அஞ்சாவதா ஒருத்தர் வந்துட்டாரு. சீக்கிரம் சிரிஞ்சைச் சொருகுங்க’ன்னேன். சிஸ்டர் அஞ்சு பேருக்கும் ஊசி போட்ட பிறகுதான் மேட்டரு ஹீட்டரு ஆச்சு. அந்த அஞ்சாவது ஆளுக்கு ஊசி சொருகிட்டு, 'ஆமா... உங்களுக்கு நாய் எங்கே கடிச்சது? வீட்டு நாயா? தெரு நாயா? அல்சேஷனா, ராஜபாளையமா, கோம்பையா, கோயம்பேடா?’ன்னு அக்கறையா விசாரிச்சு இருக்காங்க. முதல்ல ஒண்ணும் புரியாம முழிச்ச ஊசி பார்ட்டி, அப்புறம் தெளிஞ்சு 'அலறோ அலறோ’ன்னு அலறி, 'என்னது நாயா... கடியா..? ஐயையோ! என்னை நாயே கடிக்கலையே’ன்னு கதர்றாரு. அப்புறம்தான் தெரிஞ்சது, அவரு மலேரியாவுக்கு ஊசி போட வந்த மனுஷன்னு. ''சார்... கோச்சுக்காதீங்க. கொசு கடிச்சாதான் மலேரியா வரும். ஆனா, நீங்க நாய்க் கடி ஊசியே போட்டுட்டீங்க. கொசுவைவிட நாய் பெரிசு சார். அப்போ நாய்க் கடி ஊசிக்கும் பவர் அதிகம்’னு கூல் பண்ணேன். ஆனா, அந்த மலேரியா வாசுதேவன் டன் டன்னா கெட்ட வார்த்தையில திட்டி, டண்டணக்கா ஆடிட்டுப் போயிட்டாரு.

நான் கலாய் வாங்குன ஒரு எசகுபிசகு எக்ஸ்பீரியன்ஸ் சொல்லவா?

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 10

ஸ்கூல் படிக்கச்சொல்லோ டியூஷன் விட்டு வீட்டுக்கு வர்ற வழியில, ஒரு வீட்ல ஒருத்தரு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவரு ஆவியா அலையறாருன்னு தெருவே திகில்அடிச்சுக்கிடக்கு. திடீர்னு வந்து தீப்பெட்டி கேட்பாரு, பொடனியில போட்டுட்டு பொலபொலன்னு சிரிப்பாரு, பேரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பேயறை அறைவாருன்னு எக்கச்சக்கமா வதந்தி. கூட படிச்ச பையன் ஒருத்தனும் அப்படி ஒரு அடி வாங்குனதா சொல்லி, ரெண்டு வாரம் காய்ச்சல்ல கெடந்தான். அப்ப எங்கம்மா, 'சந்தானம்... யாராவது உன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டா, சட்டுனு திரும்பிப் பார்க்காதே. சாமி பேரைச் சொல்லிட்டு சடசடன்னு வந்துடு. வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி வெளியில காலைக் கழுவிட்டுத்தான் வரணும்’னு கோஸ்ட் பயத்துக்குக் கோனார் நோட்ஸ் போட்டாங்க.

ஒருநாள் நான் அந்தத் தெரு வழியா வந்துட்டு இருக்கேன். பவர்கட்ல தெருவே கருங்கும்னு இருக்கு. 'டேய் சந்தானம்!’னு இருட்டுல ஒரு குரல். 'மாரியம்மா, காளியம்மா, நீலியம்மா’ன்னு எல்லா அம்மனுக்கும் அட்டென்டன்ஸ் எடுத்துட்டு திக்திக்னு நடக்குறேன். நான் நடக்க நடக்க அந்தக் குரலும் 'நில்லுடா சந்தானம்’னு கூப் டுட்டு பின்னாடியே வருது. எடுத்தேன் பாருங்க ஓட்டம். வீட்டு வாசல்லதான் மூச்சு இரைக்க நின்னேன். காலைக் கழுவிட்டு, விபூதி எல்லாம் வெச்சிட்டு உக்காந்தா, வீட்டுக் கேட்டைத் தொறக்கற சத்தம். சின்ன நடுக்கத்தோடு எட்டிப் பார்க்குறேன்... என் அப்பா ரெண்டு கைலயும் மளிகைச் சாமான் பையை வெச்சுட்டு கடுப்பா நிக்கிறாரு. 'ஏன்டா, உன்னைத் தெரு முக்குல இருந்து 'சந்தானம்... சந்தானம்’னு கூப்பிடுறேன். ரெண்டு பையையும் தூக்க முடியாமத் தூக்கிட்டு வர்றேன். நீ பாட்டுக்கு ஓடி வந்துட்ட?’னு ரௌத்ர மூர்த்தியா நிக்கிறாரு. 'இல்லப்பா... பேய் அறையும்னுதான்...’னு நான் முடிக்கிறதுக்குள்ள அப்பா அறைஞ்சாரு பாருங்க ஒரு அறை! சான்ஸே இல்லை. பேய்கிட்டயே அறை வாங்கி இருக்கலாம். அரண்டவன் கண்ணுக்கு அப்பாவும் பேயான சம்பவம் இது!

சில பேரு வாழ்க்கையில என்ன நடந்தாலும் தன் காரியத்துலயே குறியா இருப்பாங்க. அப்படி ஒரு ஆள் எங்க 'லொள்ளு சபா’ டைரக்டர் ராம்பாலா சார்.

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 10

ஒருநாள் ஈ.சி.ஆர் பங்களாவுல ஷூட்டிங். அப்பதான் சுனாமி வந்து போயிருந்த நேரம். கடல்ல அலை அஞ்சு மீட்டர் மேலே எந்திருச்சாலே, 'சுனாமி சுனாமி’ன்னு ஊரே திகில் ஆயிடும். அப்படி ஒருநாள் கடல் கொந்தளிச்சுட்டு இருந்தப்ப, சுனாமி வார்னிங் சொல்லி  போலீஸ் வந்துட்டு இருக்காங்க. திமுதிமுன்னு கூட்டம் அங்கே, இங்கே ஓடிட்டு இருக்கு. ஷூட்டிங் பங்களாவுக்குள்ளேயும் ரெண்டு போலீஸ் வந்தது. டைரக்டர் செம கடுப்புல, 'யாருப்பா அது ஃபீல்டுக்குள்ள ஆளை விட்டது?’ன்னு கத்துறாரு. 'சார், சுனாமி வருதாம்’னு சொன்னோம். 'சரி... சரி... கேட்டைப் பூட்டுங்க’ன்னாரு அசால்ட்டா. 'சார்... ஆடு, மாடா வருது... கேட்டைப் பூட்டுறதுக்கு? சுனாமி சார்’னு அலறினோம் நாங்க. ஓவர் தொழில்பக்தி உடம்புக்கு நல்லதில்லே ராம்பாலா சார்!

ஒவியம் : ஹரன்

(இன்னும் கலாய்ப்பேன்...)