மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 50

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலிஓவியங்கள் : ம.செ., மணி

குறையன்றுமில்லை!

##~##

ழுதுகோலை ஏந்துவதற்கு முன்னால், என் கை - தூரிகையைத் தூக்கிய கை!

பிள்ளைப் பிராயத்தில் - கலர் கலராய்ப் படம் வரைந்துவிட்டு, கலர்ச் சாயம் போகக் கை கழுவுவேன்; பின்னாளில், அந்தக் கலையையே கை கழுவுவேன் என்று - நான் கனாக்கூடக் கண்டதில்லை!

பாட்டுதான் பிழைப்பு என்று ஆன பிற்பாடும்கூட -

பல்வேறு சித்திரக்காரர்களின் படங்களின் மாட்டு - என்னை இழந்து நின்ற தருணங்கள் ஏராளம்!

அடியேனுக்குக் கொஞ்சம் அரசியல் பித்தும் உண்டு; ஆதலால், கார்ட்டூன்கள் பால் கவனத்தை அதிகம் செலுத்துவேன்.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 50

த்துணை பக்கங்களையும் கார்ட்டூன் களே அடைத்துக்கொண்டு - ஓர் ஆங்கில வார ஏடு, அற்றை நாளில் வெளியாகி...

அனேகப் பிரமுகர்களின் அடிவயிற்று அமிலத்தை அதிகப்படுத்தியது.

பத்திரிகையின் பெயர் 'SHANKER'S WEEKLY!’

அதன் ஆசிரியரும் அதிபரும் ஒருவரே. அவர்தான் மிஸ்டர் ஷங்கர். சிறந்த கார்ட்டூனிஸ்ட்.

கேரளாக்காரர். அவரது கேலிச் சித்திரங் கள், நேந்திரம் பழம் முழுக்க - நீள நெடுக நோகாமல் ஊசியேற்ற வல்லவை!

நேருவின் மந்திரி சபையில் - ஒருவர் உணவு மந்திரியாக இருந்தார். பெயர் நினைவில்லை. ஆனால், அவர் PERSONALITY   ஆவி படர்ந்த ஆடிபோல் - மங்கலாக என் மனத்துள் நிற்கிறது; தொந்தி பருத்தும், தலை சிறுத்தும் இருப்பார் அவர்!

கேள்வி கேட்பதில் மிகச் சமர்த்தராக விளங்கிய திரு.காமத், இன்றளவும் எல்லோராலும் கொண்டாடப்படுகிற ஒரு PARLIAMENTARIAN!

உணவு மந்திரியைப் பார்த்துப் பாராளுமன்றத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார்  -

'தற்போது நம் தேசத்தில் - உணவு தானியங்களின், DEFICIT AREA எது? SURPLUS AREA எது?’ என்று.

உடனடியாக பதிலிறுக்க உணவு மந்திரியால் ஏலவில்லை.

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 50

துபற்றி -

மறுநாள் கார்ட்டூனிஸ்ட் ஷங்கர் ஒரு கார்ட்டூன் வரைந்தார்.

உணவு அமைச்சரின் உடலமைப்பில் - தலை சற்று சிறியதாகவும் - தொந்தி சற்றுப் பெரியதாகவும் இருக்குமென்பதை ஓர்ந்து-

அவரது படத்தைப் போட்டு -

தலைப் பகுதியில், DEFICIT AREA  - என்றும்; தொந்திப் பகுதியில் SURPLUS AREA என்றும் எழுதினார் ஓவியர் ஷங்கர்!

உலகு சிரித்தது ஒருபுறம் இருக்கட்டும். உணவு அமைச்சரே விலா நோகச் சிரித்து, திரு.ஷங்கரைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியதாகச் சொல்வார்கள்!

பின்னாளில் - என் மனதைப் பெரிதும் கவர்ந்த கார்ட்டூனிஸ்ட்  மிஸ்டர். மதன்!

அப்போதெல்லாம் - புதன் கிழமையில் 'விகடன்’ வந்துகொண்டிருந்தது.

'புதன் வந்தால், மதன் வருவார்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்லி, விகடனைப் புரட்டுவேன்.

நக்கலும் நையாண்டியுமாய்ப் படங் கள் வரைந்து - சமூக அவலங்களைச் சாடியதில் -

மதன், மற்றவரிடமிருந்து தனித்து நின்றார் என்பேன்.

சுருங்கச் சொன்னால் -

'செவ்வாய்க்குப் பின் புதன்;

ஷங்கருக்குப் பின் மதன்!’ எனலாம்.

மதன் அவர்கள் -

நல்ல CARTOONIST மட்டுமல்ல;

நல்ல COLUMNIST கூட!

கேள்வி பதில் பகுதியே - அதற்குக் கண்கூடு.

அவ்வளவு ஏன்? என்னுடைய 'விகட’னில் வெளியான ராமாயணத் தொடருக்கு -

அவர்தான் வைத்தார் 'அவதார புருஷன்’ என்னும் தலைப்பை!

புடவைகளுக்கு மட்டுமல்ல; புதினங்களுக்கும் -

தலைப்பு என்பது தலையாய விஷயம். புடவைத் தலைப்பு, வாங்க வைக்கும்; புதினத் தலைப்பு, வாசிக்கவைக்கும்!

அப்படியோர் அசத்தலான தலைப்பு-

'சில நேரங்களில்

சில மனிதர்கள்!’

நினைவு நாடாக்கள் ஒரு rewind - 50

- அடியேனுடைய அய்ம்பதாண்டு கால நண்பர் திரு.ஜெயகாந்தன். அவரது இந்தத் தலைப்பு -

நேர்ப்படும் மனிதர்களின் நிஜங்களையும் நிழல்களையும் - நாம், நேரங்களுக் கேற்பவேதான், காண நேர்கிறது என்பதைப் பட்டாங்காய்ப் பறை சாற்றுகிறது!

ரண்டு ஆண்டுகளுக்கு முன் என் மனைவி இறந்தது -

என்னளவில் ஒரு தனிமனிதத் துக்கம். இருப்பினும், அது ஒரு பொதுத் துயரமாகப் பலரிடமிருந்து வெளிப்பட்டபோதுதான் -

நான் மானுடப் பண்புகளை தரிசித்தேன்.

'பொருட்பா’லில் வள்ளுவன் பொழுது போகாமலா பாடியிருக்கிறான் -

'பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்’ என்று?

உயிரினங்களை உள்ளீடாகக்கொண்டுஇருக்கும் உலக முட்டையானது உடையாதிருக்கக் காரணம் -

பண்புடையார் சிலரும் அதன் வயின் பொதிந்திருப்பதால்தான்!

ர் அதிகாலைப் பொழுதில் என் மனைவி ஆக்கையை உதறினாள்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், முதல் நபராக என் வீட்டுக்கு வந்து, தன் கையைக் கைக்குட்டையாக்கி என் கண்ணீரைத் துடைத்தவர் -

என் மகளனைய ஒரு பெண்மணி. பெரிய இடத்தில் தோன்றியவர்; பெரிய பதவியிலும் இருப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாகப், பெண்பாற் கவிஞர்களில் தனக்கென ஒரு பாணியை ஏற்றிருப்பவர்.

தண்ணியம்;
கண்ணியம்;
மண்ணியம்;
பண்ணியம்;

- இத்துணை இயங்களும் ஒரு சேரப் பிறங்கும் பெண்ணியம் -

அவரது நவீன கவிதைகளின் நடு எலும்பாக நிற்கக் கண்டு -

அவரை இன்னும் இன்னும் இடையறாது இயற்றுக கவிதையென்று, உச்சிமுகர்ந்து ஊக்குவித்திருக்கிறேன்.

தமிழுக்கு அவரால் தகவுகள் அமைய இருக்கையில் -

அரசியல் அவரை ஆட்கொண்டுவிட்டதில், எம்மனோர்க்குச் சிறிது வருத்தம்தான்.

அதுவும் - 'சிவ்’ வென்று சிந்து பாடிப் பறக்கச் சிறையிருக்கும் பாட்டுப் பறவையன்று - சிறையிருக்கும் அவலம்தான் என் சிந்தையைச் சிரமப்படுத்துகிறது!

வர் எனக்கு ஆறுதல் சொல்லிச் சென்ற, அரை மணி நேரத்திற்கெல்லாம் -

அவரது அன்னையார் வந்து என்னிடம் துக்கம் விசாரித்தார்கள்.

அந்த அம்மையாரை அவரது பதின்மூன்று வயதிலிருந்து நான் அறிவேன்.

கண்டவிடத்தும், காணாவிடத்தும் - என் நலன் கருதும் நீள்விசும்பனைய நெஞ்சு படைத்தவர் அவர்.

என் மனைவியும் அவரும் நெடுங்காலத்திற்கு முன்பே நெருங்கிய தோழியர்.

அத்தகு பண்புசால் பெண்மணி - வெறுமனே எனக்கு ஆறுதல் சொல்லிப்போனதோடு நில்லாமல் -

தன் வீட்டிலிருந்து என் உடல் நலத்துக்கு உகந்த உணவைச் சமைத்து அனுப்பினார். மிகப் பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவருக்கு - இத்தகு DOWN TO EARTH  எளிமை இருப்பது வியப்பிற்குரியது!

நான் -

முதலில் குறிப்பிட்ட பெண் கவிஞர் திருமதி. கனிமொழி. பின்பு குறிப்பிட்ட பெண்மணி, அவரது தாயார். அதாவது, கலைஞர் பெருந்தகையின் வாழ்க்கைத் துணைவியான திருமதி. ராஜாத்தி அம்மாள்.

ன் மனைவி மரித்தபோது நான் கண்டுகொண்டேன் -

மண்மிசை மானுட மாண்புகள் மரிக்கவில்லை என்று!

என்பால்   எடுத்தோத   ஏலா அளவு - அன்புடைய கவிஞர் திரு.காசிமுத்து மாணிக்கம். அவர் -

என் மனைவி மரித்த அன்று -

தமிழ் சுமக்கும் தோளால் என் தாரத்தைச் சுமந்தார்!

ரண்டு மாதங்களுக்கு முன்னால், ஓர் இரவு நேரத்தில் -

'வாலி சார்! இந்தப் பாட்டு நீங்க எழுதினாத்தான் நல்லாருக்கும்! ட்யூனை அனுப்பட்டுமா?’ என்று தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டார், ஓர் இசையமைப்பாளர்.

உடனே நான் -

'நீ இங்கு வந்தால் எழுதலாம்; என்னால் உன் ஸ்டூடியோ வர நினைத்தாலும், என் உடல் நிலை இடம் தர வில்லை!’ என்றேன்.

'சார்! நீங்க STRAIN பண்ணிக்காதீங்க!

நான் உங்க வீட்டுக்கு வறேன். இனிமே - எந்தப் பாட்டுக்கும் நான் உங்க வீட்டுக்கு வந்து, எழுதி வாங்கிக்கிறேன்!’ என்று சொல்லி -

இரவு 7 மணிக்கு என் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார், அந்த இசையமைப்பாளர். அதற்கு நான் 'பழநிபாரதியை 7 மணிக்கு வரச் சொல்லியிருக்கிறேன், வேறொரு வேலையாக! நீ இரவு 9 மணிக்கு வாயேன்!’ என்றேன்.

'NO PROBLEM’ என்று சொல்லி, அந்த இசையமைப்பாளர் - கொட்டும் மழையில் என் வீட்டிற்கு இரவு 9 மணிக்கு வந்து - நள்ளிரவு வரை என்னோடு தங்கிப் பாட்டெழுதி வாங்கிக்கொண்டு போனார்.

அவர்தான் திரு.ஏ.ஆர்.ரஹ்மான்!

துபோல் -

'ஆதவன்’ படத்திற்கும், 'எங்கேயும் காதல்’ படத்திற்கும் -

என் வீட்டிற்கு வந்து பாட்டெழுதி வாங்கிக்கொண்டு போனதுண்டு, திரு.ஹேரிஸ் ஜெயராஜ்!

ஏழு பாட்டுகள் எழுத - ஏழு நாள்கள் என் வீட்டிற்குத் தொடர்ந்து வந்து, என்னை வேலை வாங்கியவர் இசைஞானி திரு.இளையராஜா.

அற்றை நாளில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி சகிதமாக என் வீட்டிற்கு வந்து - நான் ஜுரத்தில் படுத்திருந்த போது, என்னிடம் 'படகோட்டி’ படத்தின் பாட்டெழுதி வாங்கிப் போனதுண்டு!

குறிப்பாக, திரு.ரஹ்மானுக்கும்; திரு.ஹேரிஸ் ஜெயராஜுக்கும்; திரு.இளையராஜாவிற்கும் -

- நான் பாட்டெழுதித்தான், படம் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.

அவர்கள், அவர்களது சொந்தக் காலில் நிற்பவரே யல்லாது - எனது சந்தக் காலில் நிற்பவரல்ல!

இருந்தாலும் - ஒரு மூத்த கவிஞனை - அவன் அகவை மிகுந்த நிலையில், மரியாதைக் குரியவனாய்க் கருத வேண்டும் என்கிற -

மானுட மாண்புகள் இம்மூவரிடத்தும் மண்டிக்கிடக்கின்றன!

துதான் -

இந்த வயதிலும் நான் பாட்டெழுதும் இரகசியம்!

மனைவியின் பிரிவு; முதுமையின் வரவு - இவையெல்லாம் குறைகள்தாம்;

- இருப்பினும், உற்சாகமாக உலா வருகிறேன் என்றால் இன்னொருவர் என்னை எப்பொழுதும் 'வாலிப வாலி’யாகவே வைத்திருக்கிறார்.

அவர்தான் திரு.J.சுந்தர் அவர்கள். தூர்தர்ஷனில் அதிகாரியாகப் பணிபுரிபவர்; என்னை வியாழன்தோறும் இயக்குபவர்.

அவரிடம் நான் கண்ட அதிசயம் யாதெனில் -

சினிமா தோன்றிய நாள் முதல் நாளது வரை -

நான் எழுதிய பாடல்களை மட்டுமல்ல; ஏனைய கவிஞர்கள் எழுதிய பாடல்களைக்கூட -

மெட்டோடு பாட வல்லவராயிருப்பதுதான்; அவ்வளவு PHOTOGRAPHIC MEMORY!

என் பழம் பாடல்களை எனக்கவர் நினைவுபடுத்தும்போதெல்லாம் - என்னுள் இளமை அரும்புகிறது.

மேலே நான் குறிப்பிட்ட மானுட மாண்புகள் மிக்கோர் - என்னைத் தாங்கி நிற்பதால் -

எனக்குக் 'குறையன்றுமில்லை!’

- நிறைந்தது