மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 4

சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 4

''பூமியில் ஓர் இடம்விடாம தேடியாச்சு. மனிதர்களே இல்லை...'' என்றது சோல்ஜர் ஏலியன். 

'சான்ஸே இல்லை. இருக்காங்க' என்றது கேப்டன் ஏலியன்.

'நாங்கதான் தேடிட்டோமே. எப்படிச் சொல்றீங்க?'' சோல்ஜர்.

'மனுஷங்க இருக்காங்கனு சொல்றேன்!''

'இல்லவே இல்ல சார்.'

'இருக்காங்க.'

'இல்ல.'

'நல்ல்ல்லா பாரு. இந்த விகடனை இப்போ பிடிச்சிட்டு இருக்கிறது யாருடைய கைகள்? இந்த அஞ்ஞானச் சிறுகதைய இப்போ படிச்சிட்டிருக்கிறது யாருடைய கண்கள்?''

கலைடாஸ்கோப் - 4

புரட்சி, போராட்டம் என்பது எல்லாம் நகைக்கடை விளம்பரங்களில் மட்டும் நடப்பது என நினைத்துவிடாதீர்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டை, காலையில் கொஞ்சம் எட்டிப் பாருங்கள். வாண்டுகளின் வான்டட் லிஸ்ட்களால், அம்மாக்கள் லஞ்ச் டப்பாக்களுடன் அரக்கப்பரக்கப் போராடிக்கொண்டிருப்பார்கள். பாடப் புத்தகங்களில் போட்டிருப்பதைப்போல அப்பாக்கள் செய்தித்தாள் படிப்பது இல்லை. பாத்ரூம் கடமைகள் முதல் பவுடர் போடுவது வரை, அவர்கள் பாடும் ரணகள அதகளம்தான். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் கொடுத்து அனுப்பிய சாப்பாட்டில் கொஞ்சம் மீதியும் வரும்போது, அம்மாக்கள் தன்னம்பிக்கை இழப்பது நியாயம்தானே? இது உள்ளூர் பிரச்னை மட்டும் அல்ல... சர்வதேசப் பிரச்னைபோல் இருக்கிறது.

டேவிட் லெஃபேரியர்-போஸ்டனைச் சேர்ந்த பிரமாதமான டிசைனர்; ஓவியர். என்னவாகவும்

கலைடாஸ்கோப் - 4

இருந்துவிட்டுப்போகலாம்... ஆனால், ஓர் அப்பாவாக இருப்பதன் கஷ்டம் அவருக்குப் புரிந்திருக்கிறது. தினமும் காலையில் தன் மகனுக்கு லஞ்ச் ரெடி பண்ணி அனுப்புவது டேவிட்டுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கிறது. எதைச் செய்தாலும், 'போரிங் லஞ்ச்’ என, பிள்ளைகள் பன்ச் பேசுவது உலக விதி போலும். இதைச் சமாளிக்க டேவிட் கண்டுபிடித்த வழிதான் சாண்ட்விச் பேக்கில் தினம் ஒரு ஆர்ட்.

2008-ம் ஆண்டில் தொடங்கி, தினம் தன் பையனின் சாண்ட்விச் பேக்கில் (அதாவது சாண்ட்விச்சைப் பொதிந்து அனுப்பும் கவரில், மார்க்கரால் கலர்கலராக) தினம் ஓர் ஓவியம். அதுவும் அந்தச் சாண்ட்விச்சை ஒரு பின்னணியாகக்கொண்டு கிரியேட்டிவாக வரைந்திருக்கிறார். இப்படி 2,000 படங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது டேவிட்டின் சாண்ட்விச் பேக் ஆர்ட். இதையே இப்போது கண்காட்சிகளாகவும் வைத்து, காணும் பெற்றோர்களை உற்சாகம்கொள்ளச் செய்கிறார்.

'லஞ்ச் பேக் ரெடி பண்ண அரை மணி நேரம் என்றால், கூடவே ஐந்து நிமிடங்கள் இப்படி வரைவதற்கும் எடுத்துக்கொள்வேன்’ என்கிறார் டேவிட். உங்களிடமும் அந்த ஐந்து நிமிடங்கள் இருக்கின்றனவா?  

கலைடாஸ்கோப் - 4

Trick Meter 

(New Zealand/4mts)

கலைடாஸ்கோப் - 4

'கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல...’ எனக் கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் இந்தப் படத்தின் நாயகன் 'ஸ்கேட் ரைடர்’, ஒரு விநோத இடத்தில் மாட்டிக்கொள்கிறான்.வெளியேறவே முடியாதபடி ஒரு விசித்திர விளையாட்டு. தடதடக்கும் நான்கு நிமிட  ஷாட்களால் படபடக்கவைக்கிறார்கள்.

இதன் இயக்குநர் சிமியோன் டன்காம்ப். அடிப்படையில் ஒளிப்பதிவாளர். விஷ§வல் எஃபெக்ட்டின் வெவ்வேறு துறைகளான             ஸ்டாப்மோஷன், 3-டி கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், கேமரா எஃபெக்ட்... என எக்கச்சக்க உழைப்பை இந்தக் குறும்படத்தில் பிரயோகித்திருக்கிறார்.

தன் நண்பர் ஹைடென் இயக்கும் அடுத்த முழுநீள சைஃபை படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் சிமியோன். எதற்கு இந்த அடிஷனல் தகவல் என்கிறீர்களா? 'அந்தப் படத்துக்கு பட்ஜெட்டே இல்லை. 'நோ மணி ஃபிலிம்!’ என்கிறார்கள். நம் ஆட்களோ படத்தைச் சொதப்பிவிட்டு 'பட்ஜெட் இல்லை’ என்பார்கள்!

படபட பட லிங்க்:  www.youtube.com/watch?v=jKCL4ofC9YA

'முதலில் வந்தது கோழியா... முட்டையா?’ என்பது ஒரு டைலமா கேள்வி. அதுபோல 'முதலில் கண்டுபிடித்தது பட்டனா... பட்டன் காஜாவா?’ என்றும் ஒரு கேள்வி இருக்கிறது. பதில்... கடைசியில்!  

கலைடாஸ்கோப் - 4

பட்டன் ஹிஸ்டரியைத் தேடினால், நமது சிந்து சமவெளியைக் கைகாட்டுகிறார்கள். ஆமாம், பட்டன்களைப் பயன்படுத்தியதிலும் நம் பாட்டன்கள்தான் முன்னோடிகள் போல. 5,000 வருடங்களுக்கு முன்பே, சங்குகளின் ஓடுகளை வட்டமாக நறுக்கி பட்டன் செய்திருக்கிறார்கள். போலவே சீனா முதல் ரோம் வரை பட்டன்கள் பயன்படுத்திய தடயங்கள் இருக்கின்றனவாம். எலும்புகள் முதல் மரத் துண்டுகள் வரை, எதை எதையோ பட்டன்களாகச் செதுக்கியிருக்கிறார்கள்.

துணிகளை இணைப்பதற்கு என்பதைவிட, அலங்கார வஸ்துவாக பட்டன்களைப் பயன்படுத்தியதுதான் அதிகம் என்கிறார்கள்.                              16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அரசன் பிரான்சிஸ், இங்கிலாந்து மன்னர் எட்டாவது ஹென்றியைச் சந்திக்கச் சென்றபோது, அணிந்திருந்த ஸ்பெஷல் உடையில் இருந்த தங்கப் பட்டன்களின் எண்ணிக்கை 13,600.

இப்போது நாம் பயன்படுத்தும் பட்டன்கள்                   20-ம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்பு. இன்றைய தேதிக்கு உலகில் புழங்கிக்கொண்டிருக்கும் பட்டன்களில் 60 சதவிகிதத்துக்கு மேல் தயாரிக்கப்படுவது, சீனாவின் கியாட்டோ நகரத்தில் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

சரி பட்டனா... காஜாவா... எது? ' 'பட்டன்’தான் முதலில்’ என்கிறார்கள். காரணம், காஜா எனும் பட்டனை மாட்டுவதற்கான துவாரங்கள், 13-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் புழக்கத்தில் வந்ததாம். அதற்கு முன்னால் ஒரு மாதிரியாக முடிச்சுப் போட்டுக்கொள்ளத்தான் பட்டன்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்!

90-களின் இடை / கடைக் காலத்தில் பிறந்தவர்கள் இதைப் பரவலாகப் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவு. அதற்கு முந்தைய தலைமுறைகளுக்கு, பாட்டுப் புத்தகங்கள் 'ஞாபகங்களைத் தாலாட்டும்’ ஒரு வஸ்து.

சாணித்தாளில் புள்ளிகளாக விரியும் படங்களைக்கொண்ட முன் அட்டை. பின் பக்கத்தில் 'மீதியை வெள்ளித்திரையில் காண்க...’ என வாசகத்துடன் முடியும் சினிமாவின் கதைச்சுருக்கம். உள்ளே இசையமைப்பாளர், எழுதியவர், பாடியவர்கள் விவரங்களுடன் பாடல் வரிகள். இதுதான் பெரும்பாலான பாட்டுப் புத்தகங்களின் அமைப்பு.

கலைடாஸ்கோப் - 4

கொட்டகையில் சினிமா பார்த்த கையோடு, வெளியில் நடைபாதைக் கடைகளில் வாங்கிய பாட்டுப் புத்தகத்துடன் வீடு திரும்பும் அண்ணன்களை, என் சிறுவயதில் கண்டிருக்கிறேன். தங்களுக்குள் ஆல்ட்டர் ஈகோவாக அடக்கிவைத்திருக்கும் சுசீலாக்களையும் சித்ராக்களையும் பாட்டுப் புத்தகப் பக்கங்கள் உதவியுடன் வெளியே கொண்டுவரும் அக்காக்களைப் பார்த்திருக்கிறேன். 'எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள்’, 'சிவாஜி சோகப் பாடல்கள்’ என காம்பினேஷன் கலெக்‌ஷன்களாகவும் வாங்கிவைத்திருக்கும் பெருசுகளும் உண்டு.

'குஜிலி இலக்கியம்’ எனச் சொல்லப்படும் பெரிய எழுத்துப் புத்தகங்களைப் பற்றி 'முச்சந்தி இலக்கியம்’ எனும் தலைப்பில் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். பாட்டுப் புத்தகங்கள் பற்றி, தியடோர் பாஸ்கரன் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்திருக்கிறேன். சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 2,000 பாட்டுப் புத்தகங்கள் பாதுகாக்கப்படுவதாகச் சொல்கிறார். பாட்டுப் புத்தகங்களும் ஒருவகையில் முச்சந்தி இலக்கியம்தான். யாராவது ஆய்வுசெய்து புத்தகமாகக் கொண்டுவந்தால்,

அது தமிழனின் அரை நூற்றாண்டு இசை ரசனையின் பதிவாக இருக்கும்.  

ஒரு காலகட்டத்தின் இசை அடையாளமாக, நமது மூளையின் பரண்களில் இன்னும் படபடத்துக்கொண்டிருக்கின்றன பாட்டுப் புத்தகங்கள்!

கொலாஜ்

ஒரு லேட்டரல் திங்க்கிங் கேள்வி.

கீழே உள்ள பாய்ன்ட்களில் ஒன்று மட்டும் சரியானது. அது எது?

1. இந்த நான்கு வரிகளில் ஒன்று தவறான தகவல்.

2. இந்த நான்கு வரிகளில் ரெண்டு தவறான தகவல்.

3. இந்த நான்கு வரிகளில் மூன்று தவறான தகவல்.

4. இந்த நான்கு வரிகளில் நான்கு தவறான தகவல்.

விடை: 3 எனச் சரியாகச் சொன்னவர்கள் கை கொடுங்கள். மற்றவர்கள் 'ஏன்?’ என உட்கார்ந்து யோசியுங்கள்!

நாஸ்டால்ஜியா நோட்

பாட்டு புத்தகம்