
முகில்
'என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ என முகம்மது அல் நமி கேட்டபோது, 17 வயதான தவாக்குல் கர்மான் வெட்க ஈர்ப்பில் தலைகுனிந்து, சிணுங்கல் புன்னகையுடன் 'சம்மதம்’ எனச் சொல்லவில்லை. தலைநிமிர்ந்து முகம்மதுவின் கண்களை அழுத்தமாகப் பார்த்து, சில நிபந்தனைகளை முன்வைத்தார். 'என் படிப்பை நிறுத்தக் கூடாது. நான் பர்தாவுக்குள் முடங்கிக்கிடக்க மாட்டேன்; வேலைக்குச் செல்வேன். இந்தச் சமூகத்துக்காக, பெண்களுக்காக, மக்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவேன். இவை எல்லாம் உங்களுக்குச் சரிப்படும் என்றால், திருமணத்துக்குச் சம்மதம்.’
முகம்மது முழு மனதுடன் தவாக்குலை ஏற்றுக்கொண்டார். அவர்கள் சந்தோஷமாக மண வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இன்று தவாக்குல், மூன்று குழந்தைகளுக்கும்; தன் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அமைதிப் புரட்சிக்கும் தாய். பற்றி எரிந்துகொண்டிருக்கும் ஏமனில், வருங்காலத்தில் ஜனநாயகத்தை மலரவைக்கும் சக்தி, தவாக்குல் கர்மானுக்கு மட்டுமே உண்டு.
தவாக்குல் பிறந்தது ஏமனில் (1979). இஸ்லாமியப் பழைமைவாதம் மண்டிக்கிடக்கும் நாடு. எட்டு வயதில் எல்லாம் சிறுமிகளை, வயது முதிர்ந்தவர்களுக்கு எத்தனையாவது தாரமாகவோ கட்டிவைத்துவிடுவார்கள். அந்தச் சூழலில், 17 வயதுப் பெண்ணிடம் ஒருவர் 'திருமணம் செய்துகொள்ளச் சம்மதமா?’ எனக் கேட்பதே அரிது. அதிலும் நிபந்தனைகள் விதித்து, அவரைத் திருமணமும் செய்துகொண்டு, தாயான பின், தன் நோக்கத்தில் இருந்து சற்றும் பிறழாமல், பழைமைவாத, சர்வாதிகார, தீவிரவாத சக்திகளுக்கு எதிராக, ஓர் அரேபியப் பெண் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருப்பது அரிதினும் அரிது. இந்த இஸ்லாமியப் புதுமைப் பெண்ணின் பொதுவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பதற்கு முன்பாக, ஏமனின் அரசியல் வரலாற்றை பருந்துப் பார்வையில் நோக்கிவிடுதல் உத்தமம்.

அரேபியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் பரவிக்கிடக்கும் நாடு, ஏமன். வடக்கில் சவுதி அரேபியா; கிழக்கில் ஓமான். 19-ம் நூற்றாண்டில் ஏமனின் 'சனா’வைத் தலைநகரமாகக்கொண்டு துருக்கிய ஒட்டமான்கள் ஆட்சி செய்தனர்; சென்ற நூற்றாண்டில் மன்னர் ஆட்சி. அதே சமயம் ஏமனின் தெற்குப் பகுதி பிரிட்டிஷ் காலனியாக மாறியது. ஏமனின் தென் முனையில் அமைந்துள்ள ஏடன், பிரிட்டிஷின் முக்கியத் துறைமுகமாக வளர்ந்தது. ஏமன் ஒரே நாடு என்றாலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வடக்கு ஏமன் தனியானதாகவும், பிரிட்டிஷ் காலனியாக இருந்த தெற்கு ஏமன் தனியானதாகவும்தான் கருதப்பட்டன.
1962-ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியில் வட ஏமனில் மன்னர் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 'ஏமன் அரபுக் குடியரசு’ பிறந்தது. 1967-ம் ஆண்டில் தெற்கு ஏமன், பிரிட்டிஷின் பிடியில் இருந்து விடுபட்டு, 'ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசாக’ மலர்ந்தது. ஏமனின் சோஷலிஸக் கட்சி ஆட்சி அங்கே அமைந்தது.
வடக்கு ஏமனுக்கு அமெரிக்கா, சவுதி அரேபியாவின் ஆதரவு இருந்தது. மத்திய கிழக்கில் அமைந்த ஒரே கம்யூனிஸ்ட் அரசு என்பதால், தெற்கு ஏமனை சோவியத் ரஷ்யா அரவணைத்தது. ஆனால், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி, தெற்கு ஏமனைத் தடுமாறச் செய்தது. வட - தென் ஏமனின் எல்லைப் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது, அவற்றின் இணைப்பைச் சாத்தியமாக்கியது. 1990-ம் ஆண்டில் ஏமன் ஒரே நாடு ஆனது. 1978-ம் ஆண்டு முதலே வட ஏமன் அதிபராக இருந்த கர்னல் அலி அப்துல்லா சாலே, ஒருங்கிணைந்த ஏமனின் அதிபராகவும் பொறுப்பேற்றார். ஆனால், ஓட்டுப்போட்ட ஏமனுக்குள் ஓராயிரம் பிரச்னைகள். வட ஏமன், ஷியா பிரிவு இஸ்லாமியர்களால் நிறைந்தது. (அதிலும் ஷியாவின் ஒரு பிரிவான ஷைதி பிரிவினரே அங்கு அதிகம்). தெற்கு ஏமன் சன்னி பிரிவினரால் நிறைந்தது. எண்ணெய் - தண்ணீர்... கலக்கவில்லை. 1994-ம் ஆண்டில் 'சாலே, தெற்கு ஏமனைப் புறக்கணிக்கிறார்’ எனக் குரல்கள் பலமாக எழுந்தன. அங்கே போராட்டக் குழுவினர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு, 'தெற்கு ஏமன் ஜனநாயகக் குடியரசு’ அமைந்ததாக அறிவித்தனர். இதை விரும்பாத சாலே, வட ஏமன் மக்களை, மதரீதியாகத் தூண்டிவிட்டார். பகை பகபகவெனப் பற்றி எரிந்தது. தெற்கு ஏமன் போராட்டக் குழுவினர், ஜனநாயக ஆதரவாளர்கள், சோஷலிஸ்ட்கள் என பல்லாயிரக்கணக்கானோர் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். சாலே, ஏமனின் சர்வாதிகாரியாக நிமிர்ந்து அமர்ந்தார்.
பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், உணவுத் தட்டுப்பாடு, வறுமை... எதையும் சாலேவால் மாற்ற இயலவில்லை; மாற்றும் முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை. உலகின் ஏழை நாடுகள் பட்டியலில் ஏமனும் கிடந்து உழல, ஆட்சியாளர்கள் மட்டும் சொகுசு வாழ்க்கையில் செழித்தனர். 2004-ம் ஆண்டில் சாலே அரசுக்கு எதிராக, ஹுசைன் அல் ஹூத்தி என்பவர் போராட்டக் குழு ஒன்றை உருவாக்கினார். விரைவிலேயே ஹூத்தி கொல்லப்பட்டார். ஆனால், அவரது இயக்கம் அரசுக்கு எதிராக வீறுகொண்டு வளர்ந்தது. சிறுவயது முதலே இப்படிப்பட்ட அரபு அரசியலை எல்லாம் உள்வாங்கிக்கொண்டுதான் தவாக்குல் கர்மானும் வளர்ந்திருந்தார்.
தவாக்குலின் தந்தை, அப்தெல் சலாம் ஒரு வழக்குரைஞர். சர்வாதிகாரி சாலேவின் கட்சியான ஜெனரல் பீப்புள் காங்கிரஸின் உறுப்பினர். தேர்தலில் வென்று சட்ட அமைச்சராகவும் இருந்தார். ஆனால், ஊழல் மிகுந்த, நேர்மையற்ற சாலே அரசுடன் அவரால் இணைந்து செயல்பட முடியவில்லை. பதவியை உதறிவிட்டு வெளியேறினார். தீவிர பழைமைவாதக் கட்சியான 'அல்இஸ்லா’வில் இணைந்தார். ஏழு மகள்கள், மூன்று மகன்கள் என அப்தெல் சலாமுக்கு 10 குழந்தைகள். ஆண்-பெண் பேதம் இல்லாமல் அனைவருக்கும் நல்ல கல்வி வழங்கினார். சுதந்திரமாகச் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்தார். தந்தையின் ஊக்கத்தோடு வளர்ந்த தவாக்குல், இளநிலை வணிகவியலும், முதுநிலைப் பட்டப்படிப்பாக பொலிட்டிக்கல் சயின்ஸும் முடித்தார். இடையில் திருமணம்; குழந்தைகள்.
உலகில் வாழத் தகுதியற்ற நாடுகளில் ஏமனும் ஒன்று. அடிப்படை வசதிகளுக்குக்கூட மக்கள் அல்லாடும் நிலை. United Nations Development Programme மேற்கொண்ட மதிப்பீட்டின்படி, ஆண்-பெண் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் பட்டியலில், ஏமனுக்கு கடைசி இடம். அடிப்படை மனித உரிமைகள்கூட இல்லாத ஏமனில், பெண்களின் நிலை அந்தோ பரிதாபம். அவர்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு. தேசத்தின் இந்த இழிவான சூழல், தவாக்குலின் மனதில் போராட்டக் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது. ஆகவே தவாக்குல், ஒரு பத்திரிகையாளராகத் தன் சமூகப் பங்களிப்பைத் தொடங்கினார் (2004).
சர்வாதிகாரி சாலேவின் ஆட்சியில் ஒவ்வொரு பத்திரிகையாளரின் கழுத்தில் கத்தியும் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியும் கண்ணுக்குத் தெரியாமல் அழுத்திக்கொண்டு இருந்த சூழலில், தவாக்குல் தன் சக பெண் பத்திரிகையாளர்கள் ஏழு பேருடன் சேர்ந்து அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார்... Women Journalists Without Chains (WJWC). 'பத்திரிகைச் சுதந்திரத்துக்காகப்’ போராடும் அமைப்பு.
ஏமனில் பெண்கள் பர்தா அணியாமல் வெளியே வரக் கூடாது. தவாக்குல் எடுத்து வைத்த முதல் அடி, தன் முகத்திரையை நீக்கியது.

'முகத்திரை அணிவது பாரம்பர்ய வழக்கமாக இருக்கலாம். ஆனால், அதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை’ என்றார் துணிச்சலுடன். தலையைச் சுற்றி முக்காடாக 'ஹிஜிப்’ அணிந்து கொண்டு, சமூகத்தை நேரடியாக எதிர்கொண்டார். தன் வலிமையான எழுத்துக்கள் மூலமாகவும் கவனம் பெற்றார் தவாக்குல்.
'எங்களுக்கு முழுமையான கருத்துச் சுதந்திரம் வேண்டும். அதற்கு ஒரு வானொலி நிலையமும் செய்தித்தாளும் தொடங்க அனுமதி வேண்டும்’ என WJWC மூலமாக, அரசின் செய்தித் துறைக்கு விண்ணப்பித்தார் தவாக்குல். பதிலாகக் கொலைமிரட்டல்களே வந்தன. பதறாமல், அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தார். ஏமனின் தலைநகரான 'சனா’வில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் தன் சக பத்திரிகையாளர்களுடன் கூடினார். 'இந்த இடம் இனி நம் சுதந்திரச் சதுக்கம். வறுமையில் இருந்து, சர்வாதிகாரத்தில் இருந்து, மனித உரிமை மீறல்களில் இருந்து, அடக்குமுறையில் இருந்து நமக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை, இங்கே ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் கூடிப் போராடுவோம்’ - அதிரடியாகப் பேசினார் தவாக்குல்.
பழைமைவாதத்தில் ஊறிய கண்கள் அவரை வெறுப்புடன், கோபத்துடன் நோக்கின. 'இவள் பெண் அல்ல; சைத்தான். தண்டிக்கப்பட வேண்டியவள்’. பல ஆண்கள் கேலியாகச் சிரித்தனர். 'பைத்தியம்... கத்திக்கொண்டிருக்கிறது’ எனச் சிலர் உள்ளூரப் பயத்துடன் கடந்து சென்றனர். பிற்போக்குச் சிந்தனைகளில் ஊறிக் கிடக்கும், அடக்குமுறைகளுடன் வாழப் பழகிக்கொண்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுவது, அதுவும் ஓர் இஸ்லாமியப் பெண் பெறுவது என்பது எத்தனை பெரிய சவால். தவாக்குல் தளரவில்லை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும், அரசுக்கு எதிரான தவாக்குலின் கனல் முழக்கங்களால் சதுக்கம் சூடானது. பர்தாவுக்குள் மறைந்து இருந்த பிற பெண்களின் ஏக்கமும் தவிப்பும் நிறைந்த கண்கள், தவாக்குலை நம்பிக்கையுடன் நோக்கத் தொடங்கின. அரசால் பாதிக்கப்பட்டவர்கள், மனிதஉரிமை மீறல்களுக்கு உள்ளானவர்கள் எனப் பலரும் தவாக்குலைத் தேடி வந்தனர். தன்னை நம்பி வந்தவர்களின் பிரச்னைகளுக்காகவும் நீதிக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்தார் தவாக்குல்.
ஏமனில் ஓர் ஆண், தன் மனைவியை மிக எளிதாக விவாகரத்து செய்துவிடலாம். ஆனால், பெண்ணால் இயலாது. ஏகப்பட்ட சட்டக் குடைச்சல்கள் உண்டு. எட்டு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட சிறுமி ஒருத்தியை மீட்டெடுத்து, நீதி வழியில் போராடி அவளது 10-வது வயதில் அவளுக்கு விவாகரத்தும் புதிய சிறகுகளும் வாங்கிக் கொடுக்க உறுதுணையாக நின்றார் தவாக்குல்.
10 பேர், 20 பேருடன் போராடத் தொடங்கிய தவாக்குலுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் திரள ஆரம்பித்தனர். குறிப்பாக பர்தா அணிந்த பெண்கள், தவாக்குல் போல முகத்திரையை விலக்கிய பெண்கள் தயக்கங்களை, கட்டுப்பாடுகளை எல்லாம் உடைத்து வீதிக்கு வந்தனர்... தலைவிதியை மாற்றலாம் என்ற நம்பிக்கையுடன்.
2008-ம் ஆண்டு. ஏமனில் 40 சதவிகித மக்கள் வேலை இல்லாமல் திண்டாடும் அளவுக்கு, சாலே அரசின் நிர்வாகம் சீரழிந்திருந்தது. நாட்டின் பெருவாரியான இடங்களில் குடிக்கத் தண்ணீர்கூட இல்லாத நிலை. மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றத் தகுதி இல்லாத அதிபர் சாலேவைத் தூக்கி எறிவோம். தவாக்குல் குழுவினர், ஒருபுறம் அமைதி வழியில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, இன்னொரு புறம் ஹூத்திகளும் ஆயுதப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியிருந்தனர். அரசுக்கும் ஹூத்திக்குமான மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருந்தனர். ஹூத்திகளின் பின்னணியில் ஈரான்; சாலேவுக்குப் பின்பலமாக சவுதி. மோதல்கள் முற்றின.
இன்னொரு பக்கம் அல்காய்தாவின் சவுதி, ஏமன் கிளைகள் இணைந்து 'அரேபியத் தீபகற்ப அல்காய்தா’ என்ற பெயரில் நாச வேலைகளைத் தொடங்கியிருந்தன. கார் வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டுகள், ரத்தம், பலி!
இந்த நிலையில் சவுதி வலியுறுத்தியதன் பின்னணியில், சில அரசியல் காரணங்களுக்காக, தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் சாலே இறங்கிவந்தார். ஹூத்தி இயக்கத்தினருடன் பேசி அமைதி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். ஏதோ சில காலம் அமைதி திரும்புவதுபோலத் தோன்றினாலும், எல்லாம் கானல் காட்சிகளே. மீண்டும் ஹூத்திகள் ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள். இன்னொரு பக்கம் வட ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடான துனிசீயாவில் நீண்டகால ஏகாதிபத்திய அரசைக் கவிழ்க்கும்விதமாக மக்கள் புரட்சி ஆரம்பமானது. 2011-ம் ஆண்டின் ஆரம் பத்தில் அந்த 'ஜாஸ்மின் புரட்சி’ வென்று, புதிய அரசும் அமைந்தது. அந்தப் புரட்சி எகிப்துக்கும் பரவியது. 30 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட அதிபர் ஹொஸ்னி முபாரக், இளைஞர் புரட்சியால் தூக்கி எறியப்பட்டார்.
தவாக்குல், அந்த நாடுகளில் தோன்றிய புரட்சியின் கதகதப்பை அப்படியே ஏமன் மக்களின் மனதிலும் கடத்தினார். 2011-ம் ஆண்டு ஜனவரியில் 'அரேபிய வசந்தம்’ எனப்படும் 'ஏமன் மக்கள் புரட்சி’ ஆரம்பம் ஆனது. 'ஆயுதப் போராட்டங்கள் என்றைக்கும் தீர்வைத் தரப்போவது இல்லை. அதை உணராமல், 33 ஆண்டுகள் ஏமனைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய சாலேவின் சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிவோம். காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா... பின்பற்றி வெற்றிகண்ட அகிம்சையே நம் ஆயுதம். துனீசியர்களால், எகிப்தியர்களால் இயலும் என்றால், ஏமானியர்களால் ஏன் இயலாது?’
2010-ம் ஆண்டிலேயே ஒரு போராட்டத்தின்போது, பர்தா அணிந்த ஒரு பெண், தவாக்குலை கத்தியால் குத்திக் கொல்ல முற்பட்டார். மற்றவர்கள் தடுத்துக் காப்பாற்றினர். 2011-ம் ஆண்டில் தீவிர மக்கள் புரட்சியில் இறங்கிய பின், தவாக்குலுக்கும் குடும்பத்தினருக்கும் யாரேனும் ஒருவர் 'மரண பயம்’ காட்டுவது வாடிக்கையானது. ஒருமுறை அதிபர் சாலேவின் செயலாளர் ஒருவரே, தவாக்குலின் சகோதரிக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்தார். போராட்டங்களில் அரசுப் படையினரால் தவாக்குல் தாக்கப்படுவதும் தொடர்ந்தது. எதற்காகவும் தவாக்குல் பின்வாங்கவில்லை.
2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் ஒரு நள்ளிரவில் தவாக்குல் கடத்தப்பட்டு, அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்; சங்கிலியால் பிணைக்கப்பட்டார். உதை; வதை. 'இனி எந்தப் போராட்டத்திலும் ஈடுபட மாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டுப் போ.’ - தன் முன் நீட்டப்பட்ட காகிதத்தைப் பார்வையால் எரித்துவிட்டு, சிறையறையில் சென்று அமர்ந்தார் தவாக்குல்.
'தவாக்குலைக் கைதுசெய்துவிட்டார்கள். அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என வெளியே அவரது கணவர் முகம்மது மீடியாவில் கதறினார். தவாக்குலை விடுதலை செய்யச் சொல்லி, கூட்டம் திரண்டது. எழுந்த கோஷத்தால் ஏமன் திணறியது. பிரச்னை சர்வதேச அளவில் கவனம் பெற, சாலேவுக்கு சகல திசைகளில் இருந்தும் நெருக்கடி. மூன்றாவது நாள், தவாக்குல் விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக்குச் சென்று ஒரே ஒருநாள் குழந்தைகளுடன் இருந்த தவாக்குல், மறுநாள் சதுக்கத்துக்கு வந்தார். கூடாரம் அடித்து அங்கேயே தங்கினார்.
'சாலேவைப் பதவியில் இருந்து துரத்தும் வரை, நான் வீட்டுக்குச் செல்லப் போவது இல்லை’ என உறுதியாகச் சொன்னார். போராட்டக் கனல், மேலும் தகித்தது. அந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதியை, 'பெருங்கோப நாள்’ என அறிவித்த தவாக்குல், அன்று மாபெரும் எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடத்திக்காட்டி, சாலேவின் சர்வாதிகார அரசை கிடுகிடுக்கச் செய்தார். மீண்டும் மீண்டும் கைது; விடுதலை. சிறையில் மற்ற பெண்களுக்கு 'போராட்டப் பாடல்கள்’ சொல்லிக்கொடுத்த தவாக்குல், வெளியில் தன் ஆவேசப் பேச்சால் ஏமன் பெண்களைப் பெரும் அளவில் ஈர்த்து, களத்துக்கு வரவழைத்தார்.
'பெண்களின் பங்களிப்பு இல்லாமல் எங்கும் மறுமலர்ச்சி ஏற்படாது. பெண்களே... காலங்காலமாகப் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தது போதும். தேசத்தைக் காப்பாற்றுபவர்களாக நீங்கள் மாறவேண்டிய தருணம் இது. இந்தச் சமூகம் ஆண்-பெண் இருவருக்குமானதே. தெருவில் இறங்கி நம் சுதந்திரத்துக்காகப் போராட, யாருடைய அனுமதியும் தேவை இல்லை. அது கண்ணியக் குறைபாடான செயலும் அல்ல. வெளியே வாருங்கள். நம் உரிமைகளுக்காகக் குரல் எழுப்புங்கள். ஏமனின் சிறந்த எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்!’
நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அதே சதுக்கத்தில் தவாக்குலின் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது. மாணவர்களின், பெண்களின் ஆதரவு பெருகியது. ஆங்காங்கே சே குவேரா படங்கள், ஜாஸ்மின் புரட்சிப் பாடல்கள், அதைக் குறிக்கும் இளஞ்சிவப்புப் பட்டைகள், அரசுக்கு எதிரான பிரசுரங்கள்,
குறுஞ்செய்திகள், சமூக வலைதளப் பரப்பல்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம், எழுச்சி ஊர்வலம்.
அதிபர் சாலேவுக்கு ஹூத்திகள் கிளர்ச்சி, அல்காய்தாவின் தீவிரவாதத் தாக்குதல்... இவற்றைவிட தவாக்குலின் அமைதிப் போராட்டமே பெரும் சவாலாக இருந்தது. சாலே, தீவிர வன்முறையை ஏவினார். ரப்பர் தோட்டாக்கள் பாய்ந்தன. கூட்டம் கலையாதபட்சத்தில் நிஜத் தோட்டாக்கள் உயிரைப் பருக ஆரம்பித்தன. 2011-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், போராட்டக் குழுவைக் கலைக்க அரசுப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலருக்குக் காயம்.
மே மாதத்தில் தன் ஆதரவாளர்களுடன் தவாக்குல், அதிபர் மாளிகையை நோக்கி ஊர்வலம் நடத்தியபோது, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சமயங்களில் தவாக்குல் உள்ளுக்குள் நிலைகுலைந்தார். 'அங்கே நான் அழவில்லை. அவர்கள் முன்பு நான் அழவும் கூடாது’! பாதிக்கப்பட்டவர்களை அள்ளிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார். பின் மீண்டும் சதுக்கத்துக்கு வந்து மேடை ஏறினார்.
'உங்கள் வன்முறையும் தோட்டாக்களும் எங்களை அடக்கிவிடாது. எத்தனை பேரைக் கொன்றாலும் இந்தப் போராட்டம் ஓயாது’!
அக்டோபர் 7, 2011. போராட்டக் கூடாரத்தில் இருந்த தவாக்குல், தொலைபேசியில் தோழி சொன்ன செய்தியை நம்பவே இல்லை; டி.வி-யில் பார்த்தார். செய்தி ஜொலித்தது. '2011-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு லைபீரியா அதிபர் எலன் சர்லீஃப், லைபீரிய அமைதிப் போராளி லேமா குபோவீ, ஏமனின் அமைதிப் போராளி தவாக்குல் கர்மான் ஆகிய மூன்று பெண்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.’ உண்மையில் தன் பெயர் நோபலுக்காகப் பரிந்துரைக்கப்பட்டதுகூட தவாக்குலுக்குத் தெரியாது. சந்தோஷக் கண்ணீர்.
அந்த டிசம்பர் மாதம் 10-ம் தேதியில், நார்வேயில் ஓஸ்லோவில் நோபல் அமைதிப் பரிசை நெகிழ்வுடன் பெற்றுக்கொண்ட தவாக்குல், 'இது, அரேபியப் பெண்களுக்குக் கிடைத்த வெற்றி; போராட்டத்தில் உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி; அமைதிப் புரட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்’ என ஏமனுக்காக நெகிழ்ந்தார். 'நாம் அனைவரும் சேர்ந்து புதிய, அமைதி நிறைந்த, மனித உரிமைகள் மதிக்கப்படுகிற, ஊழல் அற்ற உலகம் படைப்போம்’ என அனைவரையும் உறுதிமொழியும் எடுக்கவைத்தார். (இணைப்பு www.youtube.com/watch?v=K7lZ9k_ITKk).
நோபலின் ஒளியால் தவாக்குலின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஏமனின் முன்னாள் அரசியல்வாதிகள், பழங்குடித் தலைவர்கள், ராணுவ வீரர்கள் எனப் பலரும் தவாக்குலுக்கு ஆதரவாகக் கைகோக்க, நாளுக்கு நாள் அவரது பலம் பெருகியது. சுமார் 50 ஆயிரம் ஏமன் பெண்கள் வீதிக்கு வந்து போராடினர். இன்னொரு பக்கம் 'பதவி விலகப்போகிறேன்’ என சாலே சிலமுறை அறிவித்து, ஏமாற்றவும் செய்தார். 'துப்பாக்கியோடு வந்தாலும், அரசுப் படையினரைப் பூக்கள் போல ஏந்தி எதிர்கொள்ளுங்கள்’ என தவாக்குல் அறிவித்தார். அந்தப் பூக்கள் சர்வதேச அளவில் கொடுத்த அழுத்தத்தை சாலேவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 34 வருடங்கள் ஆண்டு அனுபவித்த அதிபர் அரியணையை, பெரும் பாரத்துடன் விட்டுவிலகினார் சாலே.

நிச்சயம் அது தவாக்குல் நிகழ்த்திய பெரும் சாதனையே. ஆனால், அதற்குப் பின்? அதுவரை துணை அதிபராக இருந்த மன்சூர் ஹாதி ஏமனின் புதிய அதிபர் ஆனார். புதிய ஜனநாயக அரசை அமைப்பதற்காகப் பல குழுக்களுடனான பேச்சுவார்த்தை நடத்தினார். ஹூத்திக்களும் அதில் பங்கேற்றனர். உள்ளுக்குள்ளேயே ஆயிரத்தெட்டுப் பிரச்னைகள். அல்காய்தாவின் தொடர் தாக்குதல்கள். கூடுதலாக ஐ.எஸ் அமைப்பின் மிரட்டல் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள். 2015-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஹூத்திகள், தலைநகர் சனாவையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றி, புதிய புரட்சி அரசாங்கம் அமைந்ததாக அறிவித்தனர். சவுதிக்குத் தப்பிச் சென்ற அதிபர் ஹாதி, தற்சமயம் ஹூத்திகளுக்கு எதிராகப் போர் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். சவுதி விமானங்கள் குண்டு மழை பொழிய, ஏமனின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருண்டு கிடக்கிறது.
புரட்சிக்குப் பிந்தைய ஏமனின் சூழல் குறித்த தவாக்குலின் கருத்து இதுவே. 'சாலேவைப் போர்க் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து, உரிய தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். அவரைத் தப்பிக்கவைத்தது முதல் தவறு. இன்று ஹூத்திகள் சனாவைக் கைப்பற்றத் தூண்டியதுகூட அவர்களது பழைய எதிரி சாலேதான். ஹாதி, மிகப் பெரும் தோல்வியாளர். அதிபராக அவர் எதையுமே சாதிக்கவில்லை. புரட்சிக்குப் பின் ஏமன் மக்களின் வாழ்க்கை மேலும் சீரழிந்துவிட்டது. பழைமைவாத ஹூத்திகளின் தற்போதைய ஆட்சியில் பெண்கள் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. ரத்தத்தால் அல்காய்தா எதையும் சாதிக்கப்போவது இல்லை. அல்காய்தாவை அழிப்பதாக அமெரிக்கா, ஏமன் குடிமக்களை அழித்துக்கொண்டிருக்கிறது’!
இந்த மிக மோசமான சூழலிலும், ஹூத்திகள் தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையிலும், தன் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து என்றபோதும் தவாக்குல் தன் போராட்டங்களில் இருந்து பின்வாங்கவில்லை. சர்வதேச சபைகளில் ஏமனின் முகமாக 'ஜனநாயகமும் அமைதியும்’ வேண்டி தன் கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார். ஏமனில், 'சுதந்திரமான, பெண்களுக்கும் சமஉரிமை கொண்ட மக்களாட்சி’ அமைக்கும் பெருங்கனவுடன் புதிய கட்சி தொடங்கும் நடவடிக்கையில் இருக்கிறார்.
'வரலாற்றைப் பாருங்கள். எங்குமே மக்கள் புரட்சிக்குப் பின் உடனே ஜனநாயகம் மலர்ந்தது இல்லை. அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். அதேபோல, ஏமனிலும் நிச்சயம் ஜனநாயகம் பிறக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்’ - இது தவாக்குலின் நம்பிக்கை வாக்கு!
'வீட்டுக்கு வாம்மா!’
2011-ம் ஆண்டு புரட்சியின்போது பல மாதங்கள் வீட்டுக்குச் செல்லாமல் கூடாரத்திலேயே தங்கிவிட்டார் தவாக்குல். வார இறுதியில் கணவர், குழந்தைகளை சதுக்கத்துக்கு அழைத்துவருவார். 'வீட்டுக்கு வாம்மா’ என குழந்தைகள் சில சமயங்களில் கலங்கியபோது, தவாக்குல் அவர்களைச் சமாதானப்படுத்தினார். சில நேரங்களில்,
'நீ இங்கேயே இரும்மா’ என குழந்தைகள் ஆதரவு கொடுத்தபோது தவாக்குல் கண்ணீருடன் நெகிழ்ந்தார்!
பெண்ணின் திருமண வயது 18

'அல்இஸ்லா’வின் கட்சி உறுப்பினரான தவாக்குல், அந்தக் கட்சியின் சார்பாக சுரா சபை உறுப்பினராக (மேலவை உறுப்பினர் போல) இருந்தார். அல்இஸ்லா பழைமைவாதக் கட்சி. ஆனால், தவாக்குல் கட்சிக்குக் கட்டுப்படாமல் சுதந்திரமாக, தனிப்பட்ட முறையிலேயே இயங்கினார். பெண்களின் திருமண வயதை 18 ஆக்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, தவாக்குல் பலமுறை பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அதற்கு அல்இஸ்லாவின் பழம்பெருச்சாளிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது வரை இந்தச் சட்டத் திருத்தம் நிகழவில்லை!
இரும்புப் பெண்மணி!
நோபல் பரிசு பெற்ற முதல் அரேபியப் பெண் தவாக்குலே. இரண்டாவது இஸ்லா மியப் பெண்ணும்கூட. இளவயதிலேயே நோபல் அமைதி பரிசு பெற்ற பெண்ணாக 2011-ம் ஆண்டில் தவாக்குல் இருந்தார். 2014-ம் ஆண்டில் மலாலா அந்த இடத்தைப் பிடித்தார்.

'ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உள்ள புதிய ஏமன் பிறக்க வேண்டும். அங்கே முழுமையான பேச்சு உரிமை, எழுத்து உரிமை வேண்டும். அங்கே நடனமும் இசையும் எங்களுக்கு வேண்டும். பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதெல்லாம் அதிகபட்ச ஆசையா என்ன?’ - இது தவாக்குல் எழுப்பும் முக்கியக் கேள்வி.
'இரும்புப் பெண்மணி’, 'புரட்சியின் தாய்’, 'ஏமனுக்குக் கிடைத்த புதிய ராணி ஷீபா’... இவை தவாக்குலுக்கு ஏமன் மக்கள் வழங்கியிருக்கும் பட்டங்கள்.
தவாக்குல் கர்மானின் நேர்காணல் ஒன்று... www.youtube.com/watch?v=lsZ6kHamRfQ