Published:Updated:

வைகை நதி நாகரிகம்! - 7

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம் !

வைகை நதியின் முகத்துவாரத்தில் இருக்கும் அழகன்குளத்தில், அகழாய்வில் கண்டெடுக் கப்பட்ட பானை ஓட்டின் மீது வரையப்பட்ட கப்பல் கோட்டோவியத்தை, ஓர் ஆண் வரைந்தான் என எப்படிச் சொல்ல முடியும்? அதை ஏன் ஒரு பெண் வரைந்திருக்கக் கூடாது? அந்தப் பானை எந்தக் காலத்தில் உருவாக்கப் பட்டது என்பதை வேண்டுமானால் நவீன   விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்திக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதில் கோட்டோவியம் வரைந்தது ஆணா, பெண்ணா என எந்த     விஞ்ஞான முறையாலும் கண்டுபிடிக்க  முடியாது. ஆனால், பண்பாட்டுக் கருவிகளைக்கொண்டு அவற்றை அனுமானிக்க முடியும். 

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

ஆணோடு சம்பந்தப்பட்ட பொருள் அல்ல பானை... அது சதா சர்வகாலமும் பெண்ணோடு சம்பந்தப்பட்டது. தலையிலும் இடுப்பிலும் பானையைத் தூக்கிச் செல்லும் பெண்களைப் பற்றித்தான் இலக்கியங்கள் பேசுகின்றன. அப்படிப்பட்ட ஓர் ஆண்கூட இலக்கியப் பரப்பு எங்கும் தென்படவில்லை. இடுப்பில் பானையைத் தூக்கி, கள் விற்கும் பெண்களையும், இறுமாப்பு குறையாமல் அதை வாங்கிக் குடிக்கும் ஆண்களையும்தான் நாம் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்.

இந்த ஓவியத்தை ஆண் வரைந்திருக்க மாட்டான் என்பதற்கு, இரண்டு காரணங்களை நம்மால் கூற முடியும். ஓவியக் கலையைக் கற்ற ஆண், பானை ஓட்டில் படம் வரைந்துகொண்டிருக்க மாட்டான். அவன் படம் வரைய உயரிய பொருட்கள் பல உள்ளன. அவனது தூரிகை மண்ணில் கிடக்கும் ஓர் இரும்புக்குச்சியாகவோ, அவன் வரையவேண்டிய திரைச்சீலை ஒரு மண்பானையின் மேற்புறமாகவோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

அப்படி எனில், 'ஓவியக் கலை கற்காத ஓர் ஆண் இதை வரைந்திருக்க மாட்டானா?’ என்றால், நிச்சயமாக அதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால், ஓவியக் கலை கற்காத ஆணுக்கு நேர்க்கோடுகளும் வளைவுகளும் இவ்வளவு நேர்த்தியாக வராது. அதுவும் கோடுகள் கோணலாகாமல் முதல் கீறலிலேயே தெளிவாக வர எந்த வாய்ப்பும் இல்லை. கண்டறியப்பட்ட பானை ஓட்டுக் கோட்டோவியமோ தெளிவான கோடுகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு கோடுகூட குறுக்குச்சால் ஓட்டவில்லை.

பெண் இந்த ஓவியத்தை வரைந்திருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. பானை, பெண்களுக்கு எந்நேரமும் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு பொருள். அவளது விரல்கள் பேசும் மொழியைக் கேட்டுப் பழகியவை பானைகள். மரத்தைச் சுற்றி கொடி படர்வதைப்போல எல்லா பானைகளும் பெண்களைச் சுற்றித்தான் காலம் முழுவதும் இயங்குகின்றன. அவள் அதில் கீறிவைக்கவும் கிறுக்கிவைக்கவுமே வாய்ப்புகள் மிக அதிகம். அவளது தற்செயலான கிறுக்கல்கள்கூட மிக அழகானவையாகத்தான் இருக்கும். அப்படி ஒரு தற்செயல் நிகழ்வாகத்தான் அந்தக் கோட்டோவியத்தைக் கிறுக்கியிருப்பாள். தற்செயலாகக் கிறுக்கப்பட்ட கோடுகள் இவ்வளவு நேர்த்தியாக இருப்பது கண்டு ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. ஏனென்றால், அவள் நேர்க்கோடுகளையும் வளைந்த கோடுகளையும்தான் முற்றத்தில் போடும் கோலத்தின் வழியாக சிறுபிராயத்திலேயே கற்றுத் தேர்ந்துவிடுகிறாள். அவள் விரல்களின் வழியே மறுமுறை அழித்துப் போடவேண்டிய அவசியம் இல்லாமல், கோடுகள் அவளின் சொல்பேச்சு கேட்டு நிற்கும்; நகரும்; முடியும்.

அழகுணர்ச்சிமிக்க வரைகலையைத்தான் தமிழ் இலக்கியம் 'கோலம்’ என அர்த்தப்படுத்துகிறது. அழகுணர்ச்சி நிறைந்த இந்தக் கலையை, ஆதியில் இருந்து பயின்றுவருபவள் பெண்.

வைகையில் நீராடும் பெண்கள், அந்தப் புது நீர், கோலம்கொள்ளும் பொருட்டு மலர் மாலைகளையும் சந்தனத்தையும் அணிகலன்களையும் வைத்துச் செய்யும் வேலைகளைப் பட்டியல்போடுகிறது பரிபாடல்.

நீரானாலும் நிலமானாலும் அழகூட்டி, கோலங்கொள்ளச்செய்வது பெண்ணுக்கு கைவந்த கலை. அவளால் பெரிய முன்தயாரிப்புகள் இல்லாமல், கையில் கிடைத்த ஓர் உலோகக் குச்சியால், பானை ஓட்டில் கீறி ஒரு கப்பலின் வரைபடத்தை எந்த மெனக்கெடலும் இல்லாமல், எளிதில் வரைந்திருக்க முடியும். எனவே, அந்தப் பானை ஓட்டுக் கோட்டோவியத்தை, ஓர் ஆண் வரைந்தான் என்பதைவிட அதை ஒரு பெண் வரைந்திருப்பாள் என்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

'சரி, அவள் ஏன் கப்பலை வரைய வேண்டும்? தனது வீட்டையோ, கரையில் இருக்கும் பனை மரத்தையோ, கண்ணுக்கு முன்பாக விரிந்துகிடக்கும் கடலையோ வரைந்திருக்கலாமே!’ என்றால், அவளோடு சம்பந்தப்பட்ட ஆண் அதில் ஏறித்தானே வணிகம் செய்ய கடலுக்குப் போனான். 'போனவன் வந்து சேரவில்லையே... எப்போது வருவானோ?’ என்கிற தவிப்போடு கடலையே பார்த்தபடி எவ்வளவோ காலமாக நின்றுகொண்டிருக்கிறாள்!

கடலில் பயணம்போன எல்லா ஆண்களின் நினைவுகளும் ஏதோ ஒருவகையில் ஒரு பெண்ணின் இதயத்தில்தான் நங்கூரம் பாய்ச்சி நிலைகொண்டுள்ளது. அசையும் கப்பலாக அவன் நினைவும், நங்கூரம் கிழிக்கும் அடிநிலமாக அவள் மனமும் எப்போதும் இருக்கின்றன. துடிக்கும் தாயும், தவிக்கும் மகளும், கலங்கும் மனைவியும், கதறும் காதலியுமாக எல்லா வடிவங்களிலும் நீர் தேங்கிய கண்களோடு, அலைமோதும் கரையில் அவள் நின்றுகொண்டே இருக்கிறாள்.

இரு வகை பிரிவைப் பற்றி தொல்காப்பியம் பேசுகிறது. கால் நடையாக பொருள் தேடிச் செல்வதை 'காலிற்பிரிவு’ என்றும், கடல் கடந்து செல்வதை 'கலத்திற்பிரிவு’ என்றும் சொல்கிறது. இந்தக் கடல் கடந்த பிரிவுக்குக் காரணமானவன் எவ்வளவு தூரம் கடந்துசென்றான் என்பதை இலக்கியங்கள், பல அளவைகள் கொண்டு அளக்கின்றன; பருவகால அளவை வைத்துச் சொல்கின்றன; தலைவியின் காத்திருப்பை வைத்துச் சொல்கின்றன; அவள் சிந்தும் கண்ணீரை வைத்துச் சொல்கின்றன.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

காலம், காத்திருப்பு, கண்ணீர் எல்லாமே அளவீட்டுக் கருவிகள்தான். அவள் சிந்திய கண்ணீர்த்துளியின் இடைவெளிகளில் பயண நீளத்தைப் பற்றிய கணக்கீடுகளும் அடங்கியுள்ளன. பயணத்தை, தூரம் கொண்டு அளவிட்டுச் சொல்வது விஞ்ஞானம்; துயரம் கொண்டு அளவிட்டுச் சொல்வது இலக்கியம். விஞ்ஞானம், இடைவெளியின் நீளத்தை மட்டும் சொல்கிறது. இலக்கியம், இடைவெளியின் ஆழத்தை, கனத்தை அதன் மொத்தப் பரிமாணத்தையும் சொல்கிறது. கண்ணீர்த் துளிகளை எண்ணிக்கைகொண்டு ஒருபோதும் அளக்க முடியாது அல்லவா?!

திருமணம் முடிந்து சிறிது நாளே ஆன கணவன், தொழில் நிமித்தம் மனைவியைப் பிரிந்து கப்பலில் புறப்பட்டுப் போனான். அச்சம்கொள்ளும் நாவாய், இரவும் பகலும் ஓர் இடம் நில்லாது, நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறிப் போய்க்கொண்டே இருக்கும். மாதங்கள் பலவாகின. இன்னும் அவன் திரும்பவில்லை. அவளின் துயரத்தை, அவனிடம் போய்ச் சொல்லக்கூட எந்த வழியும் இல்லையே எனக் கையறுநிலையில் கதறும் பெண்ணின் உள்ளக்குமுறலை அகநானூற்றில் பதிவுசெய்கிறான் மதுரை மருதன் இளநாகன்.  

இப்படிப்பட்ட காத்திருப்பும் தவிப்பும்தான் பெண்ணை அலைக்கழித்தன. அந்த அலைக்கழிப்பின் வெளிப்பாடுகளில் ஒன்றாக இந்தப் பானை ஓட்டுக் கோட்டோவியம் இருக்கலாம். தனக்கானவன் பயணம்போன கப்பலின் நினைவு அவளது எண்ணத்தில் உறைந்து கிடக்க, ஒடுங்கிய வீட்டுக்குள், இருள் சூழ்ந்த ஒரு நள்ளிரவில், விளக்கு ஒளியின் சிறுவெளிச்சத்தில் அவள் வரைந்த கோட்டோவியமாகக்கூட இது இருக்கலாம். இதை கப்பல் என நினைத்து அவள் வரைந்திருக்க மாட்டாள்... கரை சேராத தனது கனவு என நினைத்தே வரைந்திருப்பாள்.

கப்பலில் ஆணை அனுப்பிவிட்டு எல்லா பெண்களுமா வீட்டில் இருந்தார்கள்... சிலராவது கப்பலில் உடன் போயிருப்பார்கள் அல்லவா? என்றால், பெண் கடல் பயணம் செய்யக் கூடாது என்ற கொள்கை ஆரம்பம் முதலே இருந்துள்ளது. 'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை’ என தொல்காப்பியன் திட்டவட்டமாக வரையறுக்கிறான்.

ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் நிலை மிக உயர்ந்த இடத்தில் இருந்த காலமாக சங்ககாலத்தைத்தான் நாம் சொல்ல முடியும். நட்பை, காதலை, காமத்தை பெண் அவ்வளவு வெளிப்படையாகப் பேச, அதன் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியுள்ளது. தத்துவத்தை விசாரணை செய்வதில் தொடங்கி, பூசாரியாக சமூகத்துக்கு குறிசொல்வது வரை, மிக முக்கிய இடங்களில் எல்லாம், பெண் இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலம். பெண் அவ்வளவு வலிமையுடன் இருந்த அந்தக் காலத்தில்கூட, அவள் கப்பலில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பழம்நூற்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு பெண்கள், கப்பலில் பயணம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளதாக நாம் கருதலாம். இலங்கையின் வரலாற்றைக் கூறும் 'மகாவம்சம்’, இலங்கையை முதன்முதலாக ஆட்சி செய்த மன்னன் விஜயன், பாண்டிய அரசனின் மகளை மணந்தான் எனக் கூறுகிறது.

அசோகப் பேரரசன், இலங்கை மன்னன் தீசனுக்கு அனுப்பிவைத்த பட்டாபிஷேக அன்பளிப்புப் பொருட்கள் பற்றி 'வம்சத்த பாஹாசினி’ என்ற பாலி மொழி நூல் விரிவான செய்திகளைப் பதிவு செய்கிறது. அதில், 'ஒரு சாமரை, ஓர் அரச சின்னம், ஒரு வாள், நிழற்குடை, சிவந்த புற்றுமண், கங்கையின் புனித நீர், தங்கத் தாம்பாளங்கள், திரைபோட்ட அரச கட்டில்,  புனித ஒலியைத் தரும் மங்கலகரமான வெண்சங்கு, அன்று மலர்ந்த செந்தாமரையைப்போல இளமை இதழ் விரியும் கன்னிகை ஒருத்தி...’ என அந்தப் பட்டியல் நீள்கிறது.

பேரரசன் அசோகனால் அனுப்பப்பட்டவர்கள் பாண்டிய நாட்டின் கடற்கரை வழியாகத்தான் இலங்கைக்குப் போயிருக்க முடியும். எனவே, அசோகனால் அனுப்பப்பட்ட அந்தப் பெண்ணும், மணம்முடித்து அனுப்பப்பட்ட பாண்டியனின் மகளும்தான் தமிழகத்தின் துறையில் இருந்து, கடல் தாண்டி கப்பலில் பயணம் செய்ததாக இலக்கியக் குறிப்புகளில் இருந்து நாம் அனுமானிக்கலாம். வேறு எந்தப் பெண்ணும் கப்பலில் பயணம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.

கப்பல், நாவாய், மரக்கலம், கலம், வங்கம், தோணி... என எண்ணற்ற பெயர்களில் அழைக்கப்படும் கடல் வாகனங்கள் எல்லாமே ஆணின் வாகனமாகத்தான் இருந்திருக்கின்றன. பெண் ஒருபோதும் உள்நுழைய முடியாத இடமாக கப்பல்கள் இருந்துள்ளன. மறுக்கப்படுகிற இடத்தின் மீதான ஈர்ப்பே எப்போதும் அதிகம். கப்பல்களின் மீதான ஈர்ப்பு, ஒரு பெண்ணுக்கு இருப்பது இயல்பே. அத்தகைய ஈர்ப்பின் வெளிப்பாடாகவும் இந்தக் கோட்டோவியம் இருக்கலாம். தான் ஒருபோதும் பயணிக்காத கப்பலைத்தான், காலங்கடந்து பயணிக்கவைத்திருக்கிறாள் பெண்.

அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் கதையோ காத்திருப்பு மற்றும் புறக்கணிப்பின் அடையாளம் என்றால், அதே கடற்கரையில் பறந்து சென்ற காக்கையின் கதையோ வியப்பின் குறியீடாக உள்ளது!

- ரகசியம் விரியும்...

- சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ஸ்யாம்