மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ராமராஜனை ஏன் ஃபாலோ செய்யவில்லை?

##~##

எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.

 தண்ணீரில் கல்லைப் போடுவதற்கும் கன்னியிடம் கடலை போடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இரண்டுக்குமே 'செயின் ரியாக்ஷன்’ உண்டு. அதுதான் ஒற்றுமை. தெளிந்த நீரில் கல்லைப் போட்டால், நீரில் வளையங்கள் ஏற்படும். அதோடு சரி. கன்னியுடன் கடலை போடும்போது ஏற்படும் ஒலி வளையங்கள் அவளுக்குப் பிடித்திருந்தால், அவற்றை அவள் மாலையாகக்கூட அணிந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு!

ச.இராசன், திருச்சி.

தவளை ஏன் சத்தம் போடுகிறது என்னும் கேள்விக்கு, 'பெண் தவளையைக் கூப்பிடுகிறது’ என்று பதில் அளித்து இருக்கிறீர்கள். பெரும்பாலான உயிரினங்கள் பெட்டை யைத்தானே துரத்துகின்றன. தவளை விஷயத்தில் இது நேர் மாறுதலாகத் தெரிகிறதே?

இல்லை! பெண் தவளையும் பதிலுக்குக் குரல் கொடுக்கும் ('ஏ... மச்சான்’ என்பது போல!). ஐடியா என்னவென்றால், 'நம்ம குரல் எப்படி? 'வீக்’கா இல்லாம பிரபல வித்வான் மாதிரி ஒரு குரல் எனக்கு இருக்குன்னா, ஆளும் ஸ்ட்ராங்காத்தானே இருப்பேன்? வெயிட் பண்ணு, வாரேன்!’ என்று ஆண் தவளை சொல்கிறது.

வ.பெரியசாமி, சேலம்-10.

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஒருவரைத் திட்டும்போது Country Brute (கன்ட்ரி புரூட்) என்று திட்டுகிறோம். எதற்காக இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்? (குறிப்பாக, படத்தில் கதாநாயகி கதாநாய கனைத் திட்டுகிறாள்!)

இப்போது வரும் படங்களில் அப்படித் திட்டி நான் பார்த்தது இல்லை. அது மோசமான, கிராமவாசிகளைத் தாழ்த்திப் பேசும் அநாகரிகமான சொல். 'பட்டிக்காட்டான்’ என்பதற்கு இணையான ஆங்கில வார்த்தை. உண்மையில், நமக்காகப் பழங்களையும் காய்கறிகளையும் உற்பத்தி செய்யும் விவசாயிகளை  Country Fruti  என்றல்லவா அழைக்க வேண்டும்?!

ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

மூடு மந்திரம் என்றால் என்ன?

பல ஆண்டுகளுக்கு முன்பு ஜூ.வி-க்காக ஒரு சாமியாரைப் பார்க்கப் போனேன், சாமியார் ஜாலி டைப் என்று கேள்விப்பட்டுத் தான்! வாளிப்பான ஒரு பக்தை அவரிடம் ஏதோ கேட்க, சாமியார் 'ஒரு மந்திரம் சொல்லித் தரேன்’ என்றார். 'பிரைவஸி’யே இல்லை. சாமியார் என்ன செய்தார் தெரியுமோ? ஒரு போர்வையை எடுத்து தங்கள் இருவர் மீதும் முழுக்கப் போர்த்திக் கொண்டு ரொம்ப நேரம் மந்திரம் சொன்னார். நான் நேரில் பார்த்தேன். இதுதான் (போர்வை) மூடு மந்திரம்!

ஏ.கே.நாசர், திருப்பட்டினம்.

என்னதான் அறுவையாக இருந்தாலும் ஒரு சினிமாவைக் கடைசி வரை பார்ப்பீர்களா?

பார்ப்பேன்! மேலதிகாரி உங்களுக்குத் தொடர்ந்து மணிக்கணக்காக 'ரம்பம்’ போட்டால், கொஞ்ச நேரம் கழித்து அது உங்களுக்குப் பழகிவிடும். அதே போலத்தான் இதுவும். தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அறுத்தால் அதுவே பழகிப்போய், கடைசியில் 'டைட்டில்ஸ்’ முடிந்த பிறகும் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்து இருப்பேன். நண்பர் 'அட, முடிஞ்சாச்சு... கிளம்புங்க!’ என்றவுடன் தான் எழுந்திருப்பேன்!

தாய், மனைவி, சகோதரி - யாருடைய கண்ணீருக்கு முதல் இடம் தருவீர்கள்?

  கண்ணீருக்குக் காரணம் என்னவென்று அமைதியாக அமர்ந்து விசாரித்த பிறகுதான் முடிவு செய்ய முடியும். இல்லாவிட்டால், அந்தக் கண்ணீருக்கும் மதிப்பு இருக்காது. என் 'ஜட்ஜ்மென்ட்’டுக்கும்!

வி.பி.டி. வெங்கிடுசாமி, தஞ்சாவூர்.

ஒரு முறை கி.வா.ஜ. சொன்னார்... ஒரு முறைகலைவாணர் சொன்னார்... என்று வரும் துணுக்குகள் முழுவதும் உண்மையா?

நிச்சயம் முழுவதும் உண்மையாக இருக் காது. அப்படிச் சொன்னால்தான், நீங்கள் 'கப்சிப்’ என்று கேட்பீர்கள். ('நான் சொன்ன தைவிட, நான் சொல்லாததை - நான் சொன்னதாக மற்றவர்கள் சொன்னதன் எண்ணிக்கைதான் அதிகம்!’ என்று பெர்னாட் ஷாவோ, ஆஸ்கர் ஒயில்டோ சொன்னதாக நினைவு!) உதாரணமாக, நான் ஒரு பஞ்ச் டயலாக் சொன்னால், என்னை மேலும் கீழும் பார்ப்பீர்கள். அதுவே ரஜினி சொன் னால், பயங்கரமாகக் கை தட்டுகிறீர்கள் இல்லையா?!

வி.சௌம்யா, மும்பை-4.

பெண்களுக்கு ஏன் தத்துவத்தில் நம்பிக்கை இல்லை? அதாவது, உலகில் புகழ்பெற்ற பெண் தத்துவ ஞானிகள் ஏன் இல்லை?

நீங்கள் சொல்வது ஓரளவுதான் உண்மை. குறைவாக இருக்கக் காரணம், சமூகச் சூழல்தான். இந்தியாவிலேயே ரிக் வேதத் திலும், உப நிஷத்துக்களிலும் பெண்ஞானி களும் பெண் மகரிஷிகளும் வருகின்றனர். 'பிரும்மவாதினிகள்’ என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். வசிஷ்டர், விசுவாமித்திர ருக்கு இணையாக 23 பெண் மகரிஷிகள் - பிரும்மவாதினிகள் இருந்ததாகக் கூறப்படு கிறது.

யாராலும் வாதத்தால் வெல்ல முடியாத, மகா மேதையான மகரிஷி யஜ்ன வாக்ய ருடன் வாதம் புரிந்து, அவரை ரொம்பவே அலைக்கழித்த கார்கி ஒரு பெண் ரிஷி தான். 'இப்படி அதீத அறிவாற்றலுடன் வாதம் புரியக் கூடாது. நீங்கள் ரொம்பவே கேள்விகள் கேட்கிறீர்கள்’ என்று யஜ்ன வாக்யர் கார்கியிடம் சற்று சிடுசிடுத்தாராம்! கிரேக்க நாட்டிலும் பல பெண் தத்துவ ஞானிகள் வாழ்ந்தார்கள் (அங்கேயும் 'ஃபிலாசபி’ ரொம்பப் பிரபலம்!) கி.மு.370-ல் பிறந்த ஹைபேஷியா மறைந்த விதம் உங்களை திகைப்புக்கு உள்ளாக்கும். அவரைப்பற்றி இப்போது வேண்டாம். பிற்பாடு ஒரு சமயம் பார்ப்போம்!

விஜயலட்சுமி, சென்னை-61.

குழந்தைகளுக்கு (இந்து மதம் சார்ந்த) ஒரு வயது ஆகும் நிலையில் காது குத்தி மொட்டை போடுவது மரபு. மருத்துவமும் அது சரி என்றே கூறுகிறது. ஆனால், காது குத்துவது, மொட்டை போடுவதை நாம் கொச்சையாகப் பயன்படுத்துவது சரியா?

'என்ன? என்னை ஒரு வயசுக் குழந்தைனு நெனைச்சு ஏமாத்தப் பாக்கிறியா?’ என்று அதற்கு அர்த்தம். இதிலே என்ன தப்பு?!

யு.மந்திர குமார், திருநெல்வேலி.

பாட்டுப் பாடுவதற்கும் பால் கறப்பதற்கும் சம்பந்தம் உண்டா? உண்டு என்றால் எப்படி?

நடிகர் ராமராஜன் மட்டுமே அதைச் செய்துகாட்டினார். ஆனால், அவரை யாருமே பிற்பாடு 'ஃபாலோ’ பண்ணாதது எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

வெ.கா., கடையநல்லூர்.

நடமாடும் ஜூ ஒன்று நடத்தலாம் என்று நண்பர் விரும்புகிறார், போணி ஆகுமா?

எப்படிப் போணி ஆகும்? போகிற, வருகிற எல்லோரும் இலவசமாகவே பார்த்துவிடுவார்களே? புலி, யானைகளை எல்லாம் போர்வை யால் மூடி எடுத்துச் செல்லப்போகிறாராமா?!

சிவபாரதி, சிதம்பரம்.

முதுமையிலும் ஆனந்தம் தருவது?

அன்போடு கடமைகளைச் செய்யும் மகன்கள் - மகள்கள்!