எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்
உலகின் அனிமேஷன் கேரக்டர்கள் அனைத்தும் உயிர்பெற்று திரையைவிட்டு வெளியேறத் தொடங்கின. ஸ்னோ ஒயிட்டின் 'ஏழு குள்ளர்கள்’ முதல் 'மினியன்ஸ்’ வரை ஓர் அணியில் திரண்டிருந்தார்கள். மானிட்டர்களுக்குள் இதுவரை அடைபட்டிருந்த வெறி, அவர்களுக்குள் வன்முறையாகத் திரண்டிருந்தது. மனிதர்கள் இல்லாத உலகில் தனித்து வாழ தங்களால் முடியும் என்பதைக் காட்ட, இதுவே சந்தர்ப்பம். அனிமேஷன் படை மூலைமுடுக்குகள் எல்லாம் மனிதர்களைத் தேடி அலைந்தது.
'மனிதர்கள் இல்லாமல் நாம் இல்லை' என்று இருவர் மட்டும் குறுக்கே நின்றார்கள்.
'கொல்லுங்கள் அவர்களை...' என்று அனிமேஷன் படை ஆர்ப்பரித்தது.
''மனிதர்களின் மூளைகளில் வாழ்பவர்கள் நாம். மனிதர்களை அழிப்பது நமக்கு நல்லது அல்ல' என்றார்கள் அந்த இருவரும்.
அனிமேஷன் படையில் இருந்து தடியன் ப்ளூட்டோ சற்று முன்னால் வந்து, 'அடேய்... மனிதர்கள் உங்கள் இருவரையும் இப்போது மதிப்பதுகூட இல்லை. உங்களை அவர்கள் மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் மட்டும் ஏன் மனிதர்களுக்காகப் பேசுகிறீர்கள்?' என்று பெரிய பற்களால் சிரித்தான்.

'ஏனென்றால், நாங்கள் உங்களைப்போல வெறும் கணினியின் பிக்ஸல் பிம்பங்கள் அல்ல. நாங்கள் மனிதர்களின் சுக-துக்கங்களைப் பேசினோம்; சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தோம்; அவர்களுடன் வாழ்ந்தோம். அனிமேஷன் உலகின் மூதாதைகள் நாங்கள்' என்றார்கள் இருவரும்.
'கொல்லுங்கள் அந்த மூதாதை நாய்களை...' என்று அனிமேஷன் படையில் இருந்து குரல் உயர்ந்து வந்தது.
''எந்த சேனலிலும் உங்களைப் பார்த்தது இல்லையே!' என்று கிறீச்சிட்டது ஒரு மினியன். படை ஆவேசமாகச் சிரித்தபடி அவர்களை நெருங்கி, ''உங்கள் பெயர்களைச் சொல்லுங்கடா...' என்றது.
காற்றில் தங்கள் தோல்பாவை மென் உடல்கள் படபடக்க, இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்...
''உச்சிக்குடும்பன், உளுவத்தலையன்!'

'ஜிங் சா... ஜிங் சா’ எனக் கைதட்டும் பொம்மையுடன் மூங்கில் கொம்பு, அதில் கெட்டியாக ஒட்டவைத்திருக்கும் மிட்டாய், வியாபாரியின் விரல்கள் வழியே வேண்டிய உருவத்துக்கு மாறும் மாயாஜாலம்... இதுதான்
'வாட்ச் மிட்டாய்’!
சீனியும் எலுமிச்சையும் கலந்து செய்த பாகில், தேவையான வண்ணப்பொடிகளைக் கலந்து கெட்டியாக்கி, அதைக் கொம்பில் சுற்றிக்கொள்வார்கள். சிறுவர்களின் ஆசைக்கு ஏற்ப வாட்ச், விமானம், பைக், மயில்... என கண் எதிரிலேயே கலைநயத்துடன் வடிவம் எடுக்கும். சிலசமயம் இலவசமாக ஒரு மீசையையும் ஒட்டிவிடுவார்கள். அதைச் செய்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல; கைவினைக் கலைஞர்கள் என்றே சொல்லலாம்.
நம் ஊர் சிறுவர்களின் பாக்கெட்டுக்குள் சாக்லேட்களைத் திணித்து, தங்கள் மார்க்கெட்டை விரிவுபடுத்திக்கொண்டிருக்கிறது வியாபாரமயம். அதன் அதீத விளம்பர ஒளியில், வாட்ச் மிட்டாய் கரைந்து, உருகி, காணாமல்போய்விட்டது.
' 'ஜவ்வு மிட்டாய்’, 'பாம்பே மிட்டாய்’ எனப் பல பெயர்கள்கொண்ட இந்த மிட்டாய்கள், இன்று கிட்டத்தட்ட வழக்கொழிந்து, நமது பால்ய காலம் எனும் மூங்கில் கொம்பில் ஒட்டிக்கொண்டு இனிக்கும் ஞாபகங்கள் ஆகிவிட்டன’ என இலக்கியத்தனமாக நெகிழ மட்டுமே இப்போது முடிகிறது!
நம் ஊரில் இப்போது எல்லாம், 'டார்க் காமெடி’ என்ற வார்த்தை அடிக்கடி காதில் விழுகிறது. அந்த வகை காமெடியில், சயின்ஸ் ஃபிக்ஷன் குறும்படங்கள் செய்வதில் ட்ரூவ் மைல்ரியா கில்லாடியாக இருக்கிறார்.

'புரொடக்ஷன் குவாலிட்டி என்பது, நாம் எவ்வளவு செலவுசெய்கிறோம் என்பது அல்ல; திரையில் என்ன காட்டுகிறோம் என்பதுதான்’ என வெர்னர் ஹெர்சாக் ஒரு பயிற்சி வகுப்பில் சொன்னதாக ஜெர்மன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் என் நண்பன் சொன்னான்.
ட்ரூவ் மைல்ரியாவின் படங்களைப் பார்க்கும்போது அது சரி எனத் தோன்றுகிறது. குறைந்த பட்ஜெட்டில், லைட்களை உபயோகித்து இருக்கும் விதத்தில், ஒரு சைஃபை மூட் கொண்டுவந்துவிடுகிறார். இந்த 'லிசா’ எனும் குறும்படம் நான் மேலே சொன்ன விஷயங்களுக்கு எல்லாம் பொருந்திப்போகிறது. கதையை நான் சொல்லப்போவது இல்லை; நீங்களே பாருங்கள்.
க்ளிக் பண்ணுங்க: https://vimeo.com/67034293

'டிஸ்னிலேண்ட்’ தெரியும்... அதென்ன 'டிஸ்மாலேண்ட்?’. இதுவரை மீடியாவுக்கு முகம் காட்டாத, ரகசிய ஓவியன் பேங்க்ஸியின் புதிய படைப்புக்குத்தான் இந்தப் பெயர். அவரின் தெருவோர கிராஃபிட்டி ஓவியங்கள் பிரபலம். ஆனால், இப்போது அவர் செய்திருக்கிற இந்த 'டிஸ்மாலேண்ட்’ பிரமாண்டமான ஒரு ஆர்ட் மிமிக்ரி.
'டிஸ்னிலேண்ட்’ என்பது அமெரிக்க நுகர்வுக் கலாசாரத்தின் ஒரு குறியீடு. அதைப் பகடிபண்ணும் ஆர்ட் அட்டகாசம்தான் பேங்க்ஸி செய்திருக்கும் இந்த 'டிஸ்மாலேண்ட்’. 'அதற்குள் நுகர்வுக் கலாசாரம், அதிகாரம், பொருளாதாரம், ஊடக வன்முறை, இயந்திரமயமாகும் வாழ்க்கை என ஆயிரம் அரசியல்களை ஒளித்துவைத்து, பார்ப்பவர்களைச் சிரிக்கவும் அழவும் வைக்கிறார்’ என விமர்சகர்கள் 'கமென்ட்’கிறார்கள்.
டிஸ்மாலேண்ட் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால், அத்தனையும் சோல்டுஅவுட் என அட்ராசிட்டி பண்ணுவதில் இருந்து, என்ட்ரன்ஸில் கார்டுபோர்டு அட்டைகளால் செய்த செக்யூரிட்டி டிவைஸால் பார்வையாளர்களை ஸ்கேன் செய்வது வரை, எங்கும் எதிலும் 'போலி’த்தனமான வியாபார, நுகர்வுக் கலாசாரத்தைக் கிண்டலடிக்கிறார். 'குழந்தைகள், வழக்குரைஞர்கள் மற்றும் டிஸ்னிலேண்ட் பிரதிநிதிகளுக்கு உள்ளே அனுமதி இல்லை’ எனக் குறும்பாக கண்டிஷன் போட்டிருக்கிறார் பேங்க்ஸி.
ஊடகப் பசிக்குப் பலியான டயானாவை ஞாபகப்படுத்தும் 'சிண்ட்ரெல்லாவின் மரணம்’ என்ற 'ஃபேரி டேல்’ சிலை, அகதிகளின் கள்ளத்தோணிகளை ஞாபகப்படுத்தும் தண்ணீர் போட் சிற்பங்கள் என உலக அரசியலையும், க்யூவில் நிற்கும் பார்வையாளர்களைக் கள்ளத்தனமாக க்யூவைத் தாண்டிப் போகச் சொல்லும் கடுப்பும் சோர்வும் காட்டும் செக்யூரிட்டி ஊழியர்கள், சோகமே உருவான மிக்கிமவுஸ் காது அணிந்த பெண் என வழக்கமான அம்யூஸ்மென்ட் பார்க்குகளின் எக்கனாமிக் ஒழுங்குகளையும் பகடிசெய்வது என, மூலைக்கு மூலை பார்வையாளர்களின் மூளைக்கு வேலை.
ஒட்டுமொத்த ஐடியாவும் பேங்க்ஸியுடையது. ஆனால், 50-க்கும் மேற்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகளும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். எதையும் ரகசியமாகச் செய்யும் பேங்க்ஸி இவ்வளவு பெரிய புராஜெக்ட்டை எப்படிச் செய்தார்? ஏதோ சினிமா ஷூட்டிங்குக்காக செட் போடுகிறோம் என எல்லோரையும் நம்பவைத்திருக்கிறார். கண்காட்சி தொடங்கும் நாள் வரை உள்ளூர் மக்களுக்கே தெரியாதாம். இப்போது உலகின் கலை ரசிகர்கள் எல்லோரும் கண்காட்சி நடக்கும் இங்கிலாந்தின் 'சோமர்செட்’ ஊருக்கு டிக்கெட் புக் செய்துகொண்டிருக் கிறார்கள். அதில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் அடக்கம்!

டி.வி ரிமோட், சேனல்களை மட்டும் அல்ல...வாழ்க்கையைக்கூட மாற்றுகிறது. 'ரிமோட் என்பது டி.வி-யை கன்ட்ரோல் பண்ணத்தான்... என்னை அல்ல’ என, தன் வாழ்க்கைத் துணைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது இன்று வெளிநாடுகளில் சகஜம். விவாகரத்துக்கான காரணங்களில், இந்த ரிமோட் விவகாரமும் சேர்ந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
டி.வி ரிமோட்டைக் கைப்பற்றுவதில் 'பாலின அரசியல்’ மறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆண்கள் எப்போதும் சர்ஃப் போர்டு போல ரிமோட்டில் சேனல் தாவுகிறார்கள். ஆனால் பெண்கள் நிதானமாக, பொறுமையாகப் (தலைமுறைகளைக் கடக்கும் சீரியல்களே சாட்சி!) பார்க்கிறார்கள் என்பதுபோல பல காரணங்களைப் பட்டியல் போடுகிறார்கள். சரி, இந்த மிஸ்டரிகளை விட்டுவிட்டு கொஞ்சம் ஹிஸ்டரியைப் பார்க்கலாம்.
1950-ம் ஆண்டு வரை டி.வி-யில் சேனல் மாற்றவும் வால்யூம் கன்ட்ரோல் பண்ணவும் எழுந்து டி.வி-க்குப் பக்கத்தில் போக வேண்டும். 'கவுச் பொட்டட்டோ’ எனச் செல்லமாக அழைக்கப்படும் சோம்பேறிப் பார்வையாளர்களுக்கு இது பெரும் 'கால்வலியாக’ இருக்க, 'செனித்’ என்கிற டி.வி கம்பெனிக்காரன் கண்டுபிடித்ததுதான் முதல் டி.வி ரிமோட் கன்ட்ரோல். அதற்கு அவர்கள் பொருத்தமாக வைத்த பெயர் ‘Lazy Bones’. ஆனால், ஒயர்லெஸ் அல்ல. ரிமோட் கன்ட்ரோல் என அவர்கள் தந்த வஸ்துவுடன் தொப்புள்கொடிபோல ஓயர் ஒன்று டி.வி-யுடன் இணைக்கப்பட்டிருக்கும். அறையின் எந்த மூலையில் நின்றும் டி.வி-யை கன்ட்ரோல் பண்ணலாம்; ஆனால், தரையில் சுற்றிச் சுழன்று, ஓடும் ஒயர் அடிக்கடி கால்களில் சிக்கிக்கொள்ளும்; தடுக்கிவிழ நேரிடும்.

அதனால் 1955-ம் ஆண்டு அதே செனித் கம்பெனியின் இன்ஜினீயர் 'யூஜின் பாலே’ ஒயர்லெஸ் ரிமோட்டைக் கண்டுபிடித்து 'கவுச் பொட்டடோ’க்களிடம் நல்ல பெயர் வாங்கினார். பார்ப்பதற்கு பிள்ளைகள் விளையாடும் 'பொம்மை கன்’போல இருந்த இது, டார்ச் லைட் மாதிரி ஒளியை நேர்க்கோட்டில் உமிழும். அந்த ஒளி டி.வி-யின் நான்கு மூலைகளில் இருக்கும் 'போட்டோ செல்’ தொழில்நுட்பத்தை இயக்கி, வெவ்வேறு கன்ட்ரோல்களைச் செய்யும். ஆனால், சூரிய ஒளி அறைக்குள் விழும்போது கொஞ்சம் மக்கர் பண்ணும்.
இப்படி ஆரம்பித்து அல்ட்ராசோனிக், இன்ஃப்ரா ரெட் கதிர்கள் என மாறி, 'நியூரோ ஸ்கை ஹெட்செட்’ போன்ற நுட்பத்தில், நீங்கள் மூளையில் நினைக்கும் சேனலையோ சத்தத்தையோ டி.வி-யில் கன்ட்ரோல் பண்ணலாம் என, ரிமோட் டெக்னாலஜி கன்ட்ரோலே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது!