
முகில்
அவன் ஓங்கி ஓர் உதை உதைக்க, அருணிமா ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழுந்தார். அதே சமயத்தில் பக்கத்துத் தண்டவாளத்தில் எதிர் திசையில் ஒரு ரயில் வேகமாகக் கடந்துகொண்டிருக்க, அருணிமாவின் உடல் அந்த ரயிலின் மீது மோதி, அதே வேகத்தில் தூக்கி எறியப்பட்டது. அந்த நள்ளிரவுப் பொழுதில் சில நொடிகள் அதிர்ச்சியில் அசைவற்றுக்கிடந்த அருணிமா, 'தடக் தடக்... தடக் தடக்... தடக் தடக்...’ என இன்னொரு ரயிலின் சத்தத்தையும், தான் விழுந்துகிடந்த தண்டவாளத்தில் அதிர்வையும் உணர்ந்தார். அடுத்த ரயில் வெகுவேகமாக அருணிமாவை நோக்கி வந்துகொண்டிருக்க, அவரால் ஒரு இன்ச்கூட நகர முடியவில்லை. அதற்குள் ரயில் நெருங்கிவிட...
...கட்ச்ச்ச்ச்!
வாழ்வின் ஒட்டுமொத்த வலியையும் அந்தக் கணத்தில் உணர்ந்தார் அருணிமா. ரயில் ஏறி, அருணிமாவின் இடது கால் முட்டிக்குக் கீழே கூழாகியிருக்க, ரத்தம் பெருக்கெடுக்க கண்ணீருடன் அலறினார். தெளிந்த வானத்தில், நட்சத்திரங்கள் சிரித்துக்கொண்டிருந்தன. எங்கு இருந்தோ திரண்டு வந்த எலிகள், பிய்ந்த காலின் ரத்தத்தைச் சுவைக்க ஆரம்பித்தன. அவற்றை விரட்ட, தன் கைகளைக்கூட அசைக்கச் சக்தி இல்லாமல் அருணிமா கிடந்தபோது, அடுத்த ரயில் வரும் சத்தம்.
தடக் தடக்... தடக் தடக்..!
உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் அருணிமா சின்ஹா (1988). தந்தை, ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். தாய், சுகாதாரத் துறைப் பணியாளர். அருணிமாவுக்கு ஓர் அக்கா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. அவரது ஆறாவது வயதில் தந்தை மர்மமாக இறந்துவிட்டார். அதற்கு சில வருடங்கள் கழித்து அண்ணன் கொல்லப்பட்டார். இப்படி பேரிடர்களோடுதான் அருணிமாவின் பால்யம் கழிந்தது.

அவரது மூத்த சகோதரியை ஓம் பிரகாஷ் என்கிற துணை ராணுவப் படை வீரர் திருமணம்செய்துகொண்ட பிறகே, குடும்பத்துக்குத் தெம்பு வந்தது. மருமகனாக வந்த ஓம், அந்தக் குடும்பத்தைத் தன் தோள்களில் தாங்க ஆரம்பித்தார். அருணிமாவை 'மகளே’ என அழைத்து, ஒரு தந்தைக்கு உரிய பாசத்தைக் கொட்டினார். அவரது படிப்பை, விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்தார். கால்பந்து, கைப்பந்து இரண்டிலுமே கவனம் செலுத்திய அருணிமா, தேசிய அளவில் வாலிபால் வீராங்கனையாக முன்னேறினார்.
பட்டமேற்படிப்பை முடித்த பின் சட்டமும் படித்தார். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் எந்த வேலையும் கிடைக்காமல் விரக்தி அழுத்திய தருணத்தில், அருணிமாவுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் பதவித் தேர்வுக்கான அழைப்பு வந்தது. அந்தக் கடிதத்தில் அருணிமாவின் பிறந்த தேதியில் பிழை இருந்தது. அதைச் சரிசெய்ய அவர் உடனே டெல்லி செல்ல வேண்டியிருந்தது.
2011-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 11-ம் தேதி. லக்னோவின் சார்பக் ரயில் நிலையத்தில் அருணிமா, பத்மாவத் எக்ஸ்பிரஸில் ஏறினார். தனி ஆளாக டெல்லிக்குப் பயணம். பொது வகுப்பு. கழிவறையில்கூட இடம் இல்லாத அளவுக்குப் பெருங்கூட்டம். அந்தப் பெண்ணை ஏராளமான விரசப் பார்வைகள் குத்திக் கிழித்தன. எப்படியோ ஒடுங்கி உட்கார்ந்த அருணிமாவின் கையில் செல்போன், சான்றிதழ்கள் அடங்கிய பை, முதுகில் சற்றே பெரிய பை, கழுத்தில் அம்மா ஆசையுடன் பரிசாக அளித்த தங்கச்சங்கிலி. தூங்க இயலாத அந்தப் பயணத்தின் நடுவில்தான், நான்கைந்து முரடர்கள், அருணிமாவைச் சூழ்ந்து, கழுத்துச் செயினைப் பிடுங்க முயன்றனர்.
அருணிமா எளிதில் விட்டுக்கொடுக்காமல் போராட, சுற்றிலும் இருந்த 'மனித ஜென்மங்கள்’ யாருமே உதவ முன்வரவில்லை. அந்த முரடர்கள் அருணிமாவைக் கடுமையாகத் தாக்கி, சங்கிலியைப் பறித்தனர். கண்ணீருடன் அருணிமா எதிர்க்க, அவர்களுள் ஒருவன் ஓங்கி உதைத்தான். ரயில் பெட்டியின் வாசலை நோக்கித் தள்ளப்பட்ட அருணிமா, கதவின் கைப்பிடியைப் பிடித்துச் சமாளிக்க, இன்னொரு பலமான உதை...
தடக் தடக்... தடக் தடக்..!
கடந்துபோன அந்த ரயிலில் இருந்து மனிதக் கழிவுகள் அருணிமாவை நனைத்துச் சென்றன. இனி இந்த வாழ்க்கையில் நானும் ஒரு 'கழிவு’தானா? அருணிமா அபயக்குரல் எழுப்பி ஓய்ந்திருந்தார். நகர முடியாத மரணவேதனை. அந்த இரவில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ்கள் அந்த இடத்தை எதிரும் புதிருமாகக் கடந்து சென்று உயிரை உலுக்கின. விடிகிற வேளையில் என் உயிர் அஸ்தமனமாகியிருக்குமோ? அருணிமாவின் கருவிழிகள் மெதுமெதுவாக மேலே ஏறிக்கொண்டிருந்தன.
காலைக்கடனுக்காக அங்கே ஒதுங்க வந்த பின்ட்டு என்பவர், தண்டவாளங்களுக்கு இடையில் உயிருடன் அந்தப் பெண்ணின் உடலைக் கண்டார்; ஓடிச்சென்று ஆட்களை அழைத்து வந்தார். வலியில் முனகிக்கொண்டிருந்த அருணிமாவிடம், இன்னொருவர் விவரங்களைக் கேட்டு அறிந்தார். ஓமிடம் போனில் தகவல் சொல்லப்பட்டது. அந்த மக்கள் அருகில் உள்ள சனேட்டி ரயில் நிலையத்துக்கு அருணிமாவைத் தூக்கிச் சென்றனர். அங்கே பிளாட்பாரத்தில் சுமார் இரண்டு மணி நேரம் 'பிணம்போல’ கிடத்திவைக்கப்பட்டிருந்த அருணிமா, வேதனையுடன் அருகில் இருந்த ரயில்வே காவலரிடம், 'ஹாஸ்பிட்டல்...’ என முனக, 'இரும்மா... எல்லாம் புரொசிஜர்படிதான் பண்ண முடியும்’ என்ற 'மனிதாபிமான’ பதில் வந்தது.
ஒருவழியாக அருணிமாவை அருகில் இருந்த பரேலி நகர அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே மருத்துவ வசதிகள் குறைவு. ரத்தம் ஸ்டாக் இல்லை. மயக்க மருந்து நிபுணர் கிடையாது. 'இடது கால் முட்டிக்குக் கீழ் சிதைந்த பாகங்களை உடனே வெட்டி எடுக்க வேண்டுமே... மயக்க மருந்து இல்லாமல் எப்படி?’ - அங்கு இருந்த ஒருசில டாக்டர்களும் கைகளைப் பிசைந்தபோது, அருணிமா விரக்தியுடன் அழுத்தமாகச் சொன்னார். 'இதற்கு மேலும் வலி தாங்குவது எனக்குப் பிரச்னை இல்லை. மயக்க மருந்து இல்லாமலேயே ஆபரேஷனைத் தொடங்குங்கள்!’

மருத்துவமனையின் மருந்தாளுநர் யாதவ், ஒரு யூனிட் ரத்தம் கொடுத்தார். ஆபரேஷன் தொடங்கியது. படுக்கையைக் கைகளால் இறுகப் பற்றியிருந்த அருணிமாவுக்கு, அந்தப் பேரதிக வலியில் கடந்த'கால்’ நினைவுகள் நிழலாடின. சிறு வயதில் ஓடி விளையாடியது, கால்பந்தை உதைத்தது, எம்பிக் குதித்து வாலிபால் விளையாடியது... அந்தக் கால் இனி..? கண்ணீர் கட்டுப்பாடு இல்லாமல் வழிந்தது. 'கண் முன்னே வெட்டி எடுக்கப்பட்ட என் இடது காலுக்கு நான் பிரியாவிடை கொடுத்தேன்!’
முதல்கட்ட ஆபரேஷன் முடிந்து, தையல் எல்லாம் போடப்பட்டு படுக்கையில் கிடத்தப்பட்ட நிலையில் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்தனர். கண்ணீர்க் கதறல்கள். ஓம் மட்டும் உறுதி குலையாமல் நின்றார். 'அழாதீர்கள். அவள் குணமாகிவிடுவாள். இனிதான் அவள் வரலாறு படைக்கப்போகிறாள்.’ எதிர்பாராத தருணத்தில், அந்த எனர்ஜி வார்த்தைகளைக் கேட்டதும் அருணிமாவுக்குள் கூடுதல் யூனிட் ரத்தம் பாய்ந்ததுபோல் இருந்தது. நடந்ததை மாற்ற முடியாது. அருணிமாவை இந்த வீழ்ச்சியில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு, பெரும் பணமும் உயர்தர சிகிச்சையும் அவசியம். பரபரவெனத் திட்டமிட்டார் ஓம். முதல் வேலையாக, பத்திரிகையாளர் ஒருவரைப் பிடித்து, தேவையான அழுத்தத்துடன் செய்தி கொடுத்தார். 'அருணிமா, தேசிய வாலிபால் வீராங்கனை. அவருக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்தீர்களா?’ மறுநாள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் இடம்பெற்ற செய்தி, பரேலி மருத்துமனையை நோக்கி சேனல் வாகனங்களை வரவழைத்தது. டி.ஆர்.பி-க்கான செய்தியாக அருணிமாவின் அவலம் கவனம்பெறத் தொடங்கியது. 'ஒரு பெண்தான் (மாயாவதி) உ.பி-யின் முதலமைச்சர். இன்னொரு பெண்தான் (மம்தா பானர்ஜி) மத்திய ரயில்வே துறை அமைச்சர். ஆனால், இங்கே ரயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!’ என மைக் பிடித்து செய்தியாளர்கள் கிளப்பிய அனல், அரசியல்வாதிகளை, ரயில்வே போர்டு அதிகாரிகளை, சிறப்பு மருத்துவர்களை பரேலி அரசு மருத்துவமனைக்குப் பதறியபடி வரவழைத்தது.
உ.பி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் இருந்த அகிலேஷ் யாதவ், அருணிமாவைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். 'வேறு என்ன வேண்டும் கேள்?’ என அகிலேஷ் கேட்டபோது, ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்நாள் வலியை அருணிமா உணர்ந்திருந்தார். 'நீங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என நம்புகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்போர்ட்ஸ் அகாடமி கட்ட நீங்கள் உதவ வேண்டும்.’ - அருணிமாவின் சாமர்த்தியக் கோரிக்கையை, நிச்சயம் நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்ட அகிலேஷ், அவரை மேல்சிகிச்சைக்காக லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றவும் ஏற்பாடு செய்தார். அங்கே, அருணிமாவின் வலது காலில் எலும்பு முறிவுகளுக்கான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, உள்ளே இரும்பு ராடு வைக்கப்பட்டது. 'வலது காலாவது மிஞ்சியதே!’ - அருணிமா தன்னைத் தேற்றிக்கொண்டார்.
அருணிமா தேசிய அளவில் கவனம்பெறத் தொடங்க, சோனியா காந்தி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கானை லக்னோவுக்கு அனுப்பினார். அவர், அருணிமாவை 'ஏர் ஆம்புலன்ஸில்’ டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்தார். எய்ம்ஸில் வி.வி.ஐ.பி-க்களுக்கு உரிய வார்டில் அடுத்தகட்ட அறுவைசிகிச்சைகள், உயர்தரமான சிகிச்சைகள் தொடர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலையில் முன்னேற்றம். இந்தச் சமயத்தில்தான் ஓம், அருணிமாவிடம் கேட்டார். 'உடல் உறுப்புகளை இழந்த எந்த ஒரு பெண்ணும் இதுவரை எவரெஸ்ட்டை அடைந்தது இல்லை. நீ ஏன் அந்த முதல் பெண்ணாக இருக்கக் கூடாது?’
அருணிமா யோசித்தார். ஓம் எப்போதும் எதையும் யோசிக்காமல் சொல்ல மாட்டார். தவிர, என் மீதான சர்ச்சைகளுக்கு எல்லாம் சாதனைகள் மூலமாகத்தான் பதில் சொல்ல முடியும். ஆகவே, உறுதியுடன் ஒப்புக் கொண்டார்... 'நிச்சயமாக!’

செயற்கைக் கால் தயாராகி அருணிமாவை அடைந்தபோது, சந்தோஷத்தில் அவருக்கு நடனமாட வேண்டும் எனத் தோன்றியது. ஆனால், அதைப் பொருத்திக்கொண்டு ஓர் அடிகூட நடக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் விழுந்தார். ஆனால், எழுந்தார். சில வாரங்கள் கடும்முயற்சி செய்து, யாரையும் எதையும் பிடிக்காமல் அடிகள் எடுத்து வைத்த நொடியில், அருணிமா மனதால் பறந்துகொண்டி ருந்தார்.
எய்ம்ஸில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கவேண்டி இருந்தது. ஐந்தாவது மாடி. லிஃப்ட் கிடையாது. அருணிமா தயங்கவில்லை. தத்தித் தத்தி படிகள் ஏறினார். எவரெஸ்ட் லட்சியம் நோக்கிய முதல் அடி அது. மீடியா நண்பர்கள் உதவியுடன் 1984-ம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணியான பச்சேந்திரி பாலை, ஜாம்ஷெட்பூரில் நேரில் சந்தித்தார். 'நான் எவரெஸ்ட்டில் ஏறி சாதிக்க விரும்புகிறேன்’ தடுமாற்ற நடையுடன் வந்த அருணிமாவின் வார்த்தைகள், பச்சேந்திரியைச் சிலிர்க்கச்செய்தன. 'நீ ஏற்கெனவே மனதளவில் எவரெஸ்டில் ஏறிவிட்டாய். நிஜத்திலும் ஏறி உலகுக்கு நிரூபிக்க வேண்டும் அவ்வளவுதான்’! - வாழ்த்தினார் அவர்.
உத்தர்காசியில் உள்ள டாடா ஸ்டீல் ஃபவுண்டேஷனில் அருணிமாவுக்கு மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் பச்சேந்திரி. அங்கே, 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், அருணிமா மலையேற்றப் பயிற்சியைத் தொடங்கினார். துணை ராணுவப் படை வீரரான ஓம், உடன் இருந்து பயிற்சிகளில் உதவினார். சரிவுகளில் நடப்பது முதல் கடினமான செங்குத்துப் பாறைகளில் கயிற்றைப் பிடித்து தொங்கியபடி ஏறுவது வரையிலான பயிற்சிகள். மாற்றுத்திறனாளி என, பயிற்சியாளர்கள் எந்தக் கரிசனமும் காட்டவில்லை. காரணம்... ஏறப்போகும் எவரெஸ்ட்டுக்கு எல்லோரும் ஒன்றுதான். பல்வேறு டிரக்கிங் முயற்சிகள். அதுவும் ஓமின் துணையுடன் கரடுமுரடான பாதைகளில் டிரக்கிங் செய்து, அனுபவங்களைச் சேகரித்துக்கொண்டார் அருணிமா. உள்ளே நம்பிக்கை, விஸ்வரூபம் எடுத்தது.

முதுகில் 20 கிலோ வரையிலான சுமையுடன், மலையேற்றக் கருவிகளையும் (கயிறுகள், பனிக்கோடரி, கம்பு, ஆக்சிஜன் சிலிண்டர் இன்னபிற) எடுத்துக்கொண்டு, தினமும் குறைந்தது 10 கி.மீ மலைப்பாதையில் பயணம். அருணிமா அசரவில்லை; அசத்தினார். 'பொறுமை, நிதானம், கவனம், தட்பவெப்பத்துக்கு ஏற்ப உடலைப் பழக்கிக்கொள்ளும் தன்மை, நிலை தடுமாறாத மனம் இவையே மலையேற்ற வீரருக்குத் தேவையான குணங்கள். அதீத தன்னம்பிக்கை ஆபத்தில் கொண்டு விட்டுவிடும். எந்தச் சூழலிலும் மலையேற்றக் குழுத் தலைவரின் கட்டளைகளை மீறவே கூடாது’ - பச்சேந்திரி அத்தியாவசிய அறிவுரைகள் வழங்கினார்.
எவரெஸ்ட் பயணம் என்பது, உயிரை உயில் எழுதிவைத்துவிட்டுக் கிளம்புவதற்குச் சமமானதே. எந்த நொடியிலும் மரணம் முத்தமிடலாம். இனிதே 'பனி சமாதி’ அமையலாம். எவரெஸ்ட் மலையேற்ற வரலாறு இப்படிப் பல காவுக்கதைகள் கொண்டதே!
2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தன் லட்சியப் பயணத்தை ஆரம்பித்தார் அருணிமா. கடல் மட்டத்தில் இருந்து 8,622 அடி உயரம் உள்ள 'பாக்டிங்’ என்ற இடத்தில் இருந்து தன் குழுவினரோடு எவரெஸ்ட் பயணத்தை ஆரம்பித்தார். குழுவுக்குத் தனி ஷெர்பா (கைடு), அருணிமாவுக்கு என சிறப்பு ஷெர்பா (பெயர், நீமா கன்ச்சா) நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த ஷெர்பாக்கள் ஏற்கெனவே சில முறை எவரெஸ்ட்டில் ஏறிய அனுபவமிக்க நேபாளிகள். எவரெஸ்ட்டுக்கு முன்னதாக, ‘Island Peak’ என்ற அந்தப் பகுதியில் அமைந்த 20,299 அடி சிகரத்தில் ஏறிப் பார்ப்பது மனரீதியாக, குளிர்ரீதியாக உடலைத் தயார்படுத்தும் என்பதால், அருணிமாவின் குழுவினர் ஐலேண்டு பீக் நோக்கிக் கிளம்பினர்.
உயிரை உலுக்கும் குளிர். செயற்கைக் கால் கொண்டு அழுத்தமாக ஊன்றினாலும் பிடிமானம் கிடைக்காத சரிவுகள். விழுந்தால் பல ஆயிரம் அடி பள்ளத்தில் சாவைத் தரிசிக்கலாம். ஏறும்போதே, செயற்கைக் கால் கொஞ்சம் கழன்று 180 டிகிரி திருப்பிக்கொள்ள, அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாமல் அருணிமா திணறுவதும் நிகழ்ந்தது. காலில் ரத்தக்கசிவும் உண்டானது. இத்தனையும் தாங்கிக்கொண்டு, ஐலேண்டு பீக்கின் உச்சியை அடைந்தார் அருணிமா. ஷெர்பா நீமா பயந்துவிட்டார். 'இங்கே வந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் நீதான். இதுவே உலக சாதனைதான். நீ எவரெஸ்ட் ஏற வேண்டாம்.’ அருணிமா நம்பிக்கையுடன் பதில் கொடுத்தார். 'மன்னிக்கவும்... என் வாழ்வின் லட்சியத்தை மாற்றிக்கொள்ள முடியாது.’
ஐலேண்டு பீக்கின் அடிவாரத்தில் இரவு முகாம். இயற்கை உபாதைகளைக் கழிப்பதுகூட அருணிமாவுக்கு பெரும் துன்பமாக இருக்க, மாதாந்திரச் சங்கடமும் சேர்ந்துகொண்டது. குளிக்கவும் முடியாது; சளி, இருமல் சேர்ந்துகொண்டால், மலை ஏறுவது துன்பமாகிவிடும். இரவுகளில் ரத்தம் கசியும் காலைக் கவனிப்பதே தனி வேலை. வெந்நீர் ஒத்தடம் மனதுக்கும் இதமாக இருந்தது. ஐலேண்டு முகாமில் இருந்து எவரெஸ்ட் அடிவாரத்தின் பேஸ் கேம்ப் செல்லும் வழியில், குறிப்பிட்ட ஓர் இடத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி கண்களுக்குப் புலப்பட்டது. அருணிமாவுக்குள் சிலிர்ப்பு. 'மலையே... உன்னை அடைய என்னை ஆசீர்வதி!’
பேஸ் கேம்ப்பில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் முன், ஷெர்பா பூஜை செய்தார். (எவரெஸ்ட்டை அடைய ரூட் மேப்: https://www.youtube.com/watch?v=iuA14Z2QadM). கும்பு கிளேசியர் - உலகின் உயரமான பனிப்பாறைகள் நிறைந்த பகுதி. பனிப்பாறைகளுக்கு இடைப்பட்ட பிளவுகளில் கிடைமட்டமாகப் போடப்பட்டிருக்கும் இரும்பு ஏணியில் நடந்து கவனமாகக் கடக்க வேண்டும். சிறிதே பிசகினாலும்... ம், அதேதான். பனிப்பாறை ஒன்று உடைந்து விழ ஆரம்பித்தாலும், கண்களை மூடி கடைசியாகச் சுவாசித்துக்கொள்ள வேண்டியதுதான். அருணிமாவின் செயற்கைக் கால்களுக்குப் பெரும் சவால் கொடுத்த கணங்கள் அவை. அதை வெற்றிகரமாகக் கடந்து கேம்ப்1-ஐ அடைந்தனர் (19,000 அடி).
அங்கு இருந்து கேம்ப்-2 கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தெரிந்தது. ஆனால், அந்தக் கிண்ண வடிவப் பள்ளத்தாக்கில் நடக்க நடக்க, தூரம் குறையவே இல்லை. களைப்பும் சோர்வும் ஆட்கொள்ள, எடுத்துவைக்கும் அடிகளை எண்ணிக்கொண்டே நடந்தார் அருணிமா. களைப்பு மறந்தது. கேம்ப்2-ல் (21,300 அடி) இரண்டு நாட்கள் ஓய்வு.
அங்கு இருந்து இரவு 1:30-க்குக் கிளம்பினார்கள். தலைக்கவச டார்ச்கள் ஒளிர்ந்தன. பனிக்காற்றின் நடுங்கவைக்கும் ஊளைச் சத்தம். உயரே செல்லச் செல்ல ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வரும் என்பதால், அருணிமாவின் உடல் தளர்வு அடைந்தது. நீமாவின் அறிவுரைப்படி, அருணிமா ஆக்சிஜன் மாஸ்க் மாட்டிக்கொண்டார். உயிர் மீண்டது. இரவில் தூங்கும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழும் என்பதால், கேம்ப்3-ல் (23,100 அடி) அந்த இரவில் அருணிமா ஆக்சிஜன் மாஸ்க்குடனேயே தூங்கினார்.
கேம்ப்4-ஐ அடையும் பாதை, மிகக் கடினமானது; செங்குத்தான, மிகச் சரிவான பனிப்பாறைகள் நிறைந்தது; பனிச்சரிவும் வாடிக்கையானது. ஆக, ஷெர்பாக்கள் தகுந்த வானிலை இருந்தால் மட்டுமே கிளம்புவார்கள். மே 20. இரவு ஒரு மணிக்கு கேம்ப்3-யில் இருந்து கிளம்பி, 12 மணி நேரங்கள் தொடர்ந்து நடந்தும் ஏறியும் பகல் 1 மணிக்கு கேம்ப்4-ஐ அடைந்தனர் (25,900 அடி). அந்த இடத்தை அடைந்துவிட்டால், அன்று இரவோடு இரவாக உச்சியை நோக்கிக் கிளம்பிவிடுவார்கள். சூரிய உதயத்தில் இருந்து காலை 11 மணிக்குள் எவரெஸ்ட்டை சில நிமிடங்கள் தரிசித்துவிட்டு, அதே இரவுக்குள் மீண்டும் கேம்ப்4-ஐ வந்தடைந்துவிடுவதே உயிருக்குப் பாதுகாப்பு. காரணம், அத்தனை அடி உயரத்துக்கு மேல் மனிதன் சுவாசிப்பது மிகக் கடினம். தவிர, எந்த நேரமும் பனி, சனியாக மாறி உயிரை உறிஞ்சிவிடும்.
மற்றவர்கள் உச்சியை நோக்கி ஜரூராகக் கிளம்பிக்கொண்டிருக்க, அருணிமா கிட்டத்தட்ட கிடையில் கிடந்தார். பனிக்கோடரியைத் தொடர்ந்து பயன்படுத்தியதில் கைகள் முழுவதும் காயம். இடது காலில் தொடர் ரத்தக்கசிவு. வலது காலில் வீக்கம். ஷூக்களும், குளிர் தாங்கும் உடைகளும் முழுக்க நனைந்து இருந்தன. செயற்கைக் கால் பழுதாகி இருந்தது. நல்லவேளை, எக்ஸ்ட்ரா கால் எடுத்துவந்து இருந்தார். இத்தனைக்கு மத்தியிலும், 'நாளை, நான் எவரெஸ்ட்டில் பாதம் பதிக்கப்போகிறேன்’ என்ற ஒற்றை நினைப்பே அவரை மீண்டும் பயணத்தைத் தொடரச் செய்தது.
இரவு முழுவதும் பயணம்செய்து 26,250 அடி உயரத்தில் Death Zone- ஐ அடைந்தார்கள். அதற்கு மேல் சுமார் 30 சதவிகித ஆக்சிஜனே இருக்கும். நடப்பதே கடினம். மலை ஏறுவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட வேகத்தில் முன்னேறிச் சென்றுவிட, அருணிமாவால் இயலவில்லை. நீமா மட்டும் அவளுக்காகக் குறைந்த வேகத்தில் நடந்துகொண்டிருந்தார். பனிச்சரிவு நிறைந்த ஒரு பகுதியைக் கடக்க இயலாமல், அருணிமா உதவிக்காகத் தன் கைகளை நீட்டியபோது நீமா, 'இங்கே உன் தைரியம் மட்டுமே உன்னைக் காக்கும்’ என, பட்டென மறுத்துவிட்டார். அருணிமாவிடம் தன்னம்பிக்கை கரைய ஆரம்பித்தது. செயற்கைக் காலும் அடிக்கடி 180 டிகிரி திரும்பிக்கொண்டது. அதை ஒவ்வொரு முறையும் சரிசெய்து நகர்வதற்குள், வேறு குழுவினரும் அருணிமாவைக் கடந்து சென்றுகொண்டே இருந்தனர். இரவு 1 மணி. 'பால்கனி’ என அழைக்கப்பட்ட பகுதியை அடைந்தார் (27,550 அடி). அங்கு இருந்து மேலும் சில மணி நேரங்கள் நடந்து ஹிலாரி ஸ்டெப் பகுதிக்கு முன்னேறினார் (28,740 அடி). விடிந்திருந்தது.
அதைத் தாண்டிய பின், பாறைகள் நிறைந்த மிகக் கடினமான ஒரு சிறு பகுதியை தள்ளாட்டத்துடன் கடந்துகொண்டிருந்தார் அருணிமா. அப்போது அவரது குழுவினர் சிலர் உச்சியைத் தொட்ட மகிழ்ச்சியோடு மலை இறங்க ஆரம்பித்திருந்தனர். அருணிமாவின் பரிதாப நிலையைக் கண்டு தலைமை ஷெர்பா, 'போதும். நீ இவ்வளவு தூரம் வந்ததே சாதனைதான். திரும்பிவிடு’ என்றார். 'கொஞ்சம் காத்திருங்கள், நானும் தொட்டுவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று அருணிமா கெஞ்ச, 'இவள் சாகத்தான் போகிறாள்’ என்ற நினைப்புடன் தலைமை ஷெர்பா, மற்றவர்களுடன் தன் பாதையில் நடந்தார். உச்சியை அடைய இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்ற நிலை. அருணிமாவிடம் ஆக்சிஜன் குறைந்துகொண்டிருந்தது.
குறிப்பிட்ட ஒரு பகுதியில், கயிறு பிடித்து ஒவ்வொருவராகத்தான் ஏற வேண்டும். அங்கே பெரிய க்யூ. உலகத்தின் உச்சியில் டிராஃபிக் ஜாம். அதைக் கடந்த அருணிமாவால் அதற்கு மேல் நடப்பதே மிகச் சிரமமானதாக இருந்தது. நீமா கத்தினார். 'வா... திரும்பிவிடலாம். நானும் உன்னோடு சேர்ந்து சாகவேண்டியதுதான்’ - இறுதி நம்பிக்கையான நீமாவும் அவநம்பிக்கை விதைக்க, அருணிமாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் மறுகணமே உறையும் அளவுக்குக் கடுங்குளிர். அப்போது பச்சேந்திரியின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. 'இதுவரை கடந்து வந்த தூரத்தை நினை. கடக்கவேண்டிய தூரம் சுலபமானதாகத் தெரியும்.’
2013-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி. காலை மணி 10:55. அருணிமா, உலகின் உச்சியான எவரெஸ்ட்டில் கால் பதித்தார் (29,029 அடி)! அதுவரை அனுபவித்த வலிகள் எல்லாம் வழிதவறிப்போயிருந்தன. சாதித்த திருப்தி. வாழ்க்கையை அர்த்தமாக்கிக்கொண்ட நிறைவு. மனம் சந்தோஷக் கூத்தாட, இந்திய தேசியக் கொடியுடன் புன்னகை செய்தார். தான் எவரெஸ்ட் உச்சியை அடைந்ததை உலகுக்கு நிரூபிக்க, வீடியோ எடுத்துக் கொண்டார். 'அர்ப்பணிப்புடன் உழைத்தால் எதையும் சாதிக்கலாம்!’ என அதில் பேசினார்.
நீமா பதறினார். நேரம் கடந்தால் ஆபத்துகள் அதிகம். இறங்க ஆரம்பிக்கும் முன், அங்கு இருந்து நினைவாக கல் ஒன்றையும் எடுத்துக்கொண்டார் அருணிமா. ஏறுவதைவிட இறங்கும்போது பல மடங்கு அதிகக் கவனம் தேவை. பூமியின் உச்சிப் புள்ளியைத் தொட்ட மிதப்புடன் அசால்ட்டாக இறங்கி, விபத்துக்கு உள்ளாகி இறந்துபோகிறவர்கள் உண்டு. அப்படி ஓரிருவர் அந்தப் பாதையில், அணுக முடியாத பள்ளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை அருணிமாவும் கவனித்தார். 'ம்... அங்கே பார்க்காதே. வந்துகொண்டே இரு!’ - நீமா எச்சரித்தார். வேறு வழி இல்லை. அப்படித்தான் செய்தாக வேண்டும்.
அருணிமாவின் ஆக்சிஜன் சிலிண்டர் தீரப்போகும் நிலை. என் வெற்றியை உலகுக்கு அறிவிக்கும் முன் இறந்துவிடுவேனா? துயரத்துடன் மூச்சுத்திணறலும் இணைந்த வேளையில், யாரோ ஒரு பயணி அங்கே தான் பாதி உபயோகித்த ஆக்சிஜன் சிலிண்டரைக் கழற்றிவைத்திருந்தார். அருணிமாவுக்கு மூச்சு வந்தது.
எவரெஸ்ட் உச்சியை அடைந்த, உடல் உறுப்பு இழந்த முதல் பெண்ணாக, இந்தியப் பெண்ணாக உலக சாதனை படைத்த அருணிமா, வெற்றிகரமாக, பத்திரமாகத் தரை இறங்கினார். பின் மீடியாவில் உணர்வுபூர்வமாக உதிர்த்த வார்த்தைகள்... 'அன்று இரவு தண்டவாளத்தில் இறப்பை, பேரிழப்பைத் தொட்ட நான், உலகின் உச்சியில் மீண்டும் புதிதாகப் பிறந்தேன்!’
ஏழு சிகரங்கள் தொடு!

உலகின் உயரமான ஏழு சிகரங்களையும் தொட்டுவிட வேண்டும் என்பது அருணிமாவின் அடுத்தகட்ட முயற்சி. எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ, எல்பரஸ், கொஸ்கியஸ்கோ என நான்கு சிகரங்களை இதுவரை தொட்டுவிட்டார். மெக்கின்லே, வின்சன் மாஸிப், அக்கோன்காகுவா இந்த மூன்றிலும் ஏறிவிட்டால், அது மாபெரும் புதிய உலக சாதனை!
சிகரத்தில் பிறந்த பத்மஸ்ரீ!
** 2015-ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது, அருணிமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
** அருணிமாவின் சுயசரிதையான ‘Born Again on The Mountain’ என்ற புத்தகத்தை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மோடி வெளியிட்டார்.

** இந்தியாவில் பல இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று, தன்னம்பிக்கை உரையாற்றிவருகிறார் அருணிமா. அதன்மூலம் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்காக நிதி திரட்டுகிறார். (உரை ஒன்று: https://www.youtube.com/watch?v=Wx9v_J34Fyo)
** 2012-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைமைக் காவலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
கனவு அகாடமி!

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்று கட்ட வேண்டும் என்பது, அருணிமாவின் மிகப் பெரிய கனவுத் திட்டம். அதன் மதிப்பீடு 25 கோடி. அதை நிறைவேற்றத்தான் பல விதங்களில் நிதி திரட்டிவருகிறார். இதற்காக உ.பி முதலமைச்சர் அகிலேஷ், 25 லட்சம் கொடுத்திருக்கிறார். முதல் கட்டமாக, 'அருணிமா ஸ்போர்ட்ஸ் அகாடமி’ தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்!