மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200

அனுபவங்கள் பேசுகின்றன!

அதிசய கணவன்!

என் உறவினர் வீட்டில் வேலை செய்யும் பெண், தன் கணவனுடன் ஜோடியாக மொபெட்டில் வருவாளாம். மனைவி பெருக்கி, துடைக்கும் வேலைகளைச் செய்யும்போது, கணவன் பாத்திரம் எடுத்துப் போடுவார். அவள் வந்தவுடன் இருவரும் சேர்ந்து தேய்த்து, கழுவுவார்கள். அரை மணி நேரத்தில் வேலை முடித்து, இருவரும் கிளம்பிவிடுவார்கள். இதுபோல சில ஃப்ளாட்டுகளில் வேலை செய்கின்றனராம். அந்தப் பெண்ணின் கணவன், குழந்தைகளைப் பள்ளிக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவராகவும் உள்ளாராம். தான் வேலைக்குப் போகுமுன், தன் மனைவிக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவிட்டு போகிறார்.

சொந்த வீட்டில் வேலை செய்வதையே தன்மானக் குறைவாக நினைக்கும் ஆண்கள் மத்தியில், `பிறர் என்ன நினைப்பார்கள்’ என்று கவலைப்படாமல், தன் மனைவிக்கு உதவும் அந்தக் கணவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

- எஸ்.சிவசித்ரா, சென்னை-64

அனுபவங்கள் பேசுகின்றன!

இவன்தான் மனிதன்!

சமீபத்தில் மகளின் திருமண அழைப்பிதழைத் தருவதற்காக மாற்றுத்திறனாளியான என் நண்பனின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். வீட்டுக்கு வெளியே `இங்கு மாற்றுத்திறனாளி ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்படும்’ என்று  போர்டு வைக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி நான் கேட்டபோது, ``ஒரு காலத்தில் நானும், `ஊனமாக பிறந்துவிட்டோமே’ என்று மூலையில் முடங்கி கிடந்தவன்தான். ஆனால், என் தலையெழுத்தை மாற்றும் சக்தி கல்விக்கு உண்டு என்று தெரிந்துகொண்டு என் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்தி படித்தேன். நல்ல வளமாகவும் வாழ்கிறேன். நான் பெற்ற கல்வியின் பயனை இவர்களும் பெறட்டுமே என்று இலவசமாக டியூஷன் எடுக்கிறேன். மேலும் இவர்கள் படிப்புக்குத் தேவையான பணத்தை அவ்வப்போது தருகிறேன்’’ என்று கூறினான்.

`இவ்வளவு நல்ல மனிதனை நண்பனாக அடைந்திருக்கிறோமே’ என்ற பூரிப்போடு, மனதார பாராட்டிவிட்டு வந்தேன். 

- டி.மனோன்மணி, உடுமலைப்பேட்டை

அனுபவங்கள் பேசுகின்றன!

இதுவா தமாஷ்..?!

என் தோழிக்கு ஒரே மகன். அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து வளர்த்தாள். அவனும் வளர்ந்து வாலிபன் ஆனான். அவனது வாய்த்துடுக்கால், அக்கம்பக்கத்தினர் புகார் கூறினாலும், `‘என் பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியும்! யார் என்ன சொல்வது?” என அலட்சியமாகப் பேசுவாள். நாங்கள் நான்கைந்து தோழிகள், வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், மாதம் ஒருமுறை யார் வீட்டிலாவது சந்தித்துப் பேசி மகிழ்வோம். இந்தத் தோழியும் கலந்துகொள்ள வரும்போது, அவள் மகன், `‘ஓ... கிழவிகள் மாநாடா, நடக்கட்டும்!” என கேலியாகக் கூறி, அவளை அனுப்பி வைப்பானாம். இதை எங்களிடம் கூறி சிரிப்பாள்.

ஒருமுறை, அவளைத்தேடி, அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்த அவள் மகன், உள்ளே திரும்பி, `‘ஏய்... கிழம்! உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்க!'' எனக் கத்தினான். அதிர்ந்தே போனேன்! அவளோ சிரித்தபடியே வந்து, `‘ச்சும்மா விளையாட்டுக்கு!'' எனக் கூறினாள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் எல்லாம்! தாய்மார்கள் தயவுசெய்து, செல்லம் கொடுப்பதாக நினைத்து, குழந்தைகளைக் குட்டிச்சுவர் ஆக்கிவிடாதீர்கள்!

- மேரிராணி, மதுரை

ஓவியங்கள்: சேகர்