
விகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப் கான், கண்ணா
நாட்டு வைத்தியர், நாட்டுக்கு அமைச்சரான கதையைத் தெரிந்துகொள்வோமா?
தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை கிராமத்தில் வாழையடிவாழையாக நாட்டு வைத்தியம் செய்துவரும் குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.பி.சண்முகநாதன். பண்ணைவிளை தக்கர் பள்ளியில் ஒன்பதாவது வரை படித்தவர், பின்னர் படிப்புக்கு 'குட்பை’ சொல்லிவிட்டு அப்பாவின் தொழிலைக் கைக்கொண்டார். கை, கால்களில் அடிபட்டு எலும்பு முறிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் யாருக்காவது கை, கால் முறிந்தால் புல்லட்டில் சீறிப் பாய்ந்து ஸ்பாட்டில் ஆஜர் ஆவார். கைராசி வைத்தியர் என்று பெயர் கிடைத்தாலும், வருமானம் கொட்டவில்லை. அதனால், மக்களையும் தன்னையும் ஒருசேர மகிழ்விக்கும் விற்பனை வியாபாரத்தில் கள்ளத்தனமாக இறங்கினார். சண்முகநாதனின் சரக்கு வீரியம் வெளியூர்களுக்கு எல்லாம் மணத்தது. அதனால் உண்டான தொழில் போட்டி மூட்டிய கோஷ்டி மோதல், ஏரல் காவல் நிலையத்தில் சார் மீது வழக்கு போடப்பட்டதாக ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது. இப்படி கரடுமுரடான பயணம் மேற்கொள்பவர்களுக்கு, கட்டக்கடைசியில் அரசியல்தானே புகலிடம்? அது சண்முகநாதனுக்கும் இடம் கொடுத்தது!

அப்போது தூத்துக்குடி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது. 'மாவட்ட விவசாயிகள் அணி’யின் முக்கியப் புள்ளியாக இருந்த எஸ்.எம்.ஏ.நயினார் மூலம் அப்போதைய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனிடம் அறிமுகமாகிறார் சண்முகநாதன். அ.தி.மு.கவில் ஐக்கியமாகிறார். அதுவரை பளீர் துணியில் பிரஸ் பட்டன் வைத்த சட்டை, பாலிஸ்டர் வேட்டி, சட்டையின் இரண்டு பக்கக் கைகளையும் முட்டிக்கு மேலே மடக்கிவிட்டு... பார்த்தாலே மெர்சலாக்கும் தோற்றத்துடன் புல்லட்டில் உலா வந்துகொண்டிருந்தவர், அரசியலில் சேர்ந்ததும் 'சாஃப்ட் வெர்ஷன்’ மாறினார். பிராந்தியத்தில் உச்சத்தில் இருந்த கோஷ்டி மோதல் காரணமாக தன் தரப்புக்கு ஆதரவு சேர்க்க நினைத்த கருப்பசாமி பாண்டியன், பெரும்குளம் பேரூராட்சித் தலைவர் சீட்டை சண்முகநாதனுக்கு வாங்கிக் கொடுத்து ஜெயிக்க வைத்தார். அந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுக்க தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க சார்பில் வென்ற சண்முகநாதனை பலரும் திரும்பிப் பார்த்தனர். எம்.ஜி.ஆரின் கவனமும் அவர் மீது விழுந்தது. அந்த நேரத்தில் நெல்லையில் நடந்த விழாவில் சண்முகநாதனின் தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பின்னர் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் (இரண்டு முறை), மங்களகுறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் போன்ற பதவிகளுக்கு வந்தவர், கட்சியின் வலுவான பொறுப்புக்குக் குறிவைத்தார். சந்தர்ப்பமும் அமைந்தது. ஜெயலலிதா நடத்திய மாவட்டவாரியான நேர்க்காணல் கூட்டத்தில் அப்போதைய மாவட்டச் செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினாருக்கு எதிராக திரி கொளுத்திப் போட்டார் சண்முகநாதன். 'கட்சியை வளர்க்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என ஜெயலலிதா முன் புகார் பட்டியல் வாசிக்க, தடாலடியாக தூத்துக்குடி 'மா.செ’ ஆக்கப்பட்டார் சண்முகநாதன். சில மாதங்களிலேயே 'பிளசன்ட் ஸ்டே’ வழக்கில் ஜெயலலிதா வுக்கு தண்டனை கிடைக்க, அதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். இப்படியான கவன ஈர்ப்புகளால் 2001-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைத்து, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வென்று, மக்கள் பிரதிநிதியானார். முதல் சிட்டிங்கிலேயே கைத்தறித் துறை மந்திரியும் ஆக்கப்பட்டார். ஆனால், சிவப்பு விளக்கு சுழல காரில் பவனி வரத் தொடங்கியதும் சண்முகநாதனுக்கு தலைகால் புரியவில்லை. ஆடாத ஆட்டத்தின் விளைவு... ஆறே மாதங்களில் மந்திரி, மாவட்டச் செயலாளர் என அத்தனைப் பொறுப்புகளும் அவரிடம் இருந்து பிடுங்கப்பட்டன. 2006-ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தோல்வி. 2009-ம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.கவுக்குத் தாவியதால், அதிர்ஷ்டக் காற்று மீண்டும் வீசியது. தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவில் நிலவிய தேக்கநிலையைப் போக்க, மறுபடியும் சண்முகநாதன் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீவைகுண்டத்தில் வென்று, எம்.எல்.ஏ. ஆன கையோடு மந்திரியும் ஆனார். சண்முகநாதனை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. ஒரு முறை சூடுபட்டால்.... உஷாராக இருக்க வேண்டும். ம்ஹும்... ஆறே மாதங்கள்... அதிரிபுதிரிப் புகார்கள் கிளம்ப, கல்தா கொடுக்கப்பட்டார் சண்முகநாதன். அமைச்சரோடு சேர்த்து மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோனது. அவருக்குப் பதில் தூத்துக்குடி தொகுதி
எம்.எல்.ஏ.வான சி.த.செல்லப் பாண்டியன் அமைச்சர், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளைக் கைப்பற்றினார்.

'எத்தனுக்கு எத்தன்’ இல்லாமல் இருப்பாரா? சண்முகநாதனைக் காலிசெய்து அமைச்சரான சி.த.செல்லப் பாண்டியன் மீதும் ஏகப்பட்ட புகார்கள். 2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் அவரைத் தூக்கிவிட்டு, மீண்டும் மந்திரி ஆக்கப்பட்டார் சண்முகநாதன். சுற்றுலாத் துறை வழங்கப்பட்டது. ஆக, அ.தி.மு.க கேபினெட்டில் மூன்று முறை நுழைந்தவர் சண்முகநாதன். அதற்காக அவர் காட்டிய அரசியல் ஆர்வம், அக்கறையை தான் நிர்வகித்த துறைகளின் மேம்பாட்டுக்குக் காட்டியிருக்கிறாரா?
துறையில் சாதித்தது என்ன?
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடுகளில், சுற்றுலா மூலம் அபரிமிதமான வருவாயைக் குவிக்கலாம். வெளிநாட்டினர் மத்தியில் நல்லெண்ணத்தை விதைக்கலாம். ஆனால், 'வேலைவாய்ப்பு, வருவாய், அந்நியச் செலாவணி ஆகியவற்றைக் கொட்டிக்கொடுக்கும் சுற்றுலாவுக்கு என தனியாக ஓர் அமைச்சர் இருந்தும் என்ன பிரயோசனம்?’ எனக் கேட்கும் நிலையில்தான் இருக்கிறது துறைசார் வளர்ச்சி. அந்த அளவுக்கு முடங்கிக்கிடக்கிறது அமைச்சரின் முயற்சி!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புனிதத்தலங்கள், மலைப் பிரதேசங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், நினைவுச் சின்னங்கள், தொல்லியல் இடங்கள் என தமிழ்நாட்டில் சுற்றுலா வாசஸ்தலங்கள் அதிகம். ஆனால், அவை அனைத்தும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத சுகாதாரம் அற்ற தலங்களாக இருக்கின்றன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோட்டைகள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறிக்கிடக்கின்றன. காலங்காலமாக நடந்து வரும் சுற்றுலா பொருட்காட்சிகள், நாட்டிய விழாக்கள், மலர் கண்காட்சிகள், பொங்கல் கொண்டாட்டங்கள் தாண்டி சுற்றுலா ஆர்வத்தைத் தூண்டும் புதிய முயற்சிகள் எதையும் சுற்றுலாத் துறை முன்னெடுக்கவில்லை. தனியார் நிறுவனங்கள் தெளிவான திட்டமிடலுடன் முறைப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, வாடிக்கையாளர் திருப்தியையும் வருமானத்தையும் அபாரமாக சம்பாதிக்கின்றன. ஆனால், அரசு சுற்றுலாத் துறையோ பயணிகளை ஈர்க்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை.
சென்னை முதல் மாமல்லபுரம் வரை அமைந்துள்ள பல சுற்றுலாத் தலங்களை நிதானமாக ரசிக்க, 'எங்கும் ஏறலாம்... எங்கும் இறங்கலாம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பேருந்தில் ஏறிச் சென்று ஒரு ஸ்பாட்டில் பொறுமையாக ரசித்துவிட்டு அடுத்த வண்டியில் ஏறி அடுத்த இடத்துக்குச் செல்லலாம் என்பது திட்டத்தின் ஹைலைட். திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. விசாரித்தால், 'மக்களிடம் வரவேற்பு இல்லை’ என்று சப்பைக் காரணம் சொல்வார்கள். ஆனால், இன்றும் ஆயிரக்கணக்கில் மக்கள் சென்னையிலிருந்து மாமல்லபுரத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை ஈர்க்கும் வகையில் பயண நேரம், திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். 'பிரபலமாகாத சுற்றுலா மையங்கள் கண்டறிப்பட்டு மேம்படுத்தப்படும்’ என்ற அறிவிப்பை, தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஆண்டுதோறும் அணிவகுக்கின்றன. அவற்றின் இறுதி வடிவத்தைப் பார்த்தால், இரண்டு மூன்று குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி, பூங்காக்கள் அமைப்பதோடு நின்றுவிடுகின்றன. 'மகிழ்வூட்டும் தமிழ்நாடு... நீங்களே உணருங்கள்’ என்கிறது சுற்றுலாத் துறை. ஆனால், அதை எங்கும் உணரவே முடியவில்லை.
உயிரோடு விளையாடு!
'சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பிரிவுக்கு அரசு மற்றும் தனியார் மூலமாக 10 ஆயிரத்து 300 கோடி ரூபாய் 2023-ம் ஆண்டுக்குள் முதலீடு செய்யப்படும்’ என 'தொலைநோக்குப் பார்வை- 2023’ ஆவணத்தில் சொல்லியிருந்தார்கள். அந்த இலக்கை எட்டுவதைப் பற்றித் திட்டமிட வேண்டாம். விடுமுறையை உற்சாகமாகக் களிக்கவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவாவது திட்டமிட வேண்டாமா? படகுக் குழாம்கள் அமைந்திருக்கும் சுற்றுலாத் தலங்களில் வருடத்துக்கு சில உயிர்ப்பலிகள் அவசியம் அரங்கேறுகின்றன. சமீபத்திய நிகழ்வு... ஒகேனக்கல் பலி. 'ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் துறை விடுதி 43.78 லட்ச ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 14.28 லட்ச ரூபாய் செலவில் உணவகம் கட்டப்பட்டு இருக்கிறது. விடுதி கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என தம்பட்டம் அடிக்கிறார் அமைச்சர். ஆனால், அங்கே பரிசல் பயணத்தில் ஆறு பேர் ஜல சமாதியானார்கள். அந்தப் பரிசல் பயணத்தை முறைப்படுத்தவோ, லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயணிகளைப் பயன்படுத்தச் சொல்லி நடவடிக்கை எடுக்கவோ யாரும் இல்லை. மனித உயிர் அத்தனை மலிவாகிவிட்டதா அமைச்சரே?
முட்டுக்காடு, முதலியார்குப்பம், பிச்சாவரம், ஏற்காடு, கொடைக்கானல், உதகமண்டலம் என தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் படகுக் குழாம்களில் ஓட்டை உடைசல் படகுகள்தான் உலா செல்கின்றன. லைஃப் ஜாக்கெட்டுகள்கூட போதுமான எண்ணிக்கையில் இல்லாமலோ, இருப்பவையும் ஊசலாடிக்கொண்டோதான் இருக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் வரையில் நீர்விளையாட்டுக்கள் மற்றும் கடற்கரை சுற்றுலா நடவடிக்கைகளைச் செயல்படுத்த நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் சண்முகநாதன் எடுக்கவில்லை.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளால் 'மருத்துவ சுற்றுலா’ தமிழ்நாட்டுக்குப் பெரு வருமானம் அளிக்கிறது. சுற்றுலாத் துறை அது பற்றி பெருமை பேசிக்கொள்கிறது. ஆனால், அந்த வருமானம், பெருமை அத்தனையும் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே சொந்தமானவை.
'மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில் 10 ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன் கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என 2012-ம் ஆண்டு அறிவித்தது அ.தி.மு.க அரசு. மாமல்லபுரம் கடற்கோயிலுக்கு அருகே நீர்மூழ்கி அருங்காட்சியகம் அமைக்க இடமும் தேர்வு செய்தார்கள். அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தின் முன்னோட்டமாக விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டிருக்கும் 'குருசுரா’ நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்தை சண்முகநாதன் நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பினார். 'பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கப்பற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் 'ஐ.என்.எஸ். வாக்லி’ அருங்காட்சியகமாக மாற்றப்படும்’ என அறிவித்து, அந்தக் கப்பலை கடற்படையிடம் இருந்து வாங்கியது தமிழ்நாடு அரசு. விசாகப்பட்டினத்தில் இருந்து 'வாக்லி’ மாமல்லபுரம் கொண்டுவரப்பட்டது. கப்பல் வந்த பிறகுதான் தெரிந்தது, அதை மாமல்லபுரத்தில் நிறுத்தப் போதுமான தண்ணீர் இல்லையென! 'வாக்லி’யை மாமல்லபுரத்தில் நிலைநிறுத்த முடியவில்லை. சென்னை துறைமுகத்தில் 'வாக்லி’ நிலைகொள்ள, 'நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகக் கனவு’ கானல் நீரானது. திட்டம் சாத்தியமா என்கிற சாத்தியக்கூறு, அறிக்கை தயாரிக்கப்பட்டு, நடைமுறைச் சிக்கல்களைப் பரிசீலித்த பிறகு திட்டத்தை அறிவிப்பதே நடைமுறை. ஆனால், சண்முகநாதன் ரிவர்ஸில் பயணிக்கிறார். விளைவு... மக்களின் பணம் விரயம்!
படபடக்காத பட்டாம்பூச்சிகள்!
அறிவித்த கடல்சார் அருங்காட்சியகம் நிறைவேறாதது ஒரு பக்கம் என்றால், நிறைவேற்றப்பட்ட 'பட்டாம்பூச்சி பூங்கா’, திறப்புவிழா காணாமல் இருக்கிறது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்காவை அமைக்க 2010-11-ம் ஆண்டில் சுற்றுலாத் துறை 4 கோடி ரூபாய் ஒதுக்கியது. பூங்கா வளாகத்தில் ஓட்டேரி ஏரி அருகே, 110 கிரவுண்ட் நிலப்பரப்பில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்தும் இன்னும் திறப்புவிழா காணவில்லை. இதுபோல இன்னும் பல பஞ்சர் அறிவிப்புகள் இருக்கின்றன. திருவண்ணாமலையைச் சுற்றி கிரிவலப்பாதை அமைக்கும் திட்டம், 50 லட்ச ரூபாய் செலவில் சென்னை தீவுத்திடலில் செயற்கை இசை நீரூற்று அமைக்கும் பணி, 3.25 கோடி ரூபாய் செலவில் முட்டுக்காடு படகு குழாம், 1.40 கோடி ரூபாய் செலவில் முதலியார்குப்பம் படகுக் குழாம் மேம்பாட்டுப் பணிகள், 2.50 கோடி ரூபாய் செலவில் மாமல்லபுர கடற்கரைக் கோயில் வளாக மேம்பாட்டு பணிகள்.... இவை போல இன்னும் பலவும் கிடப்பில் இருக்கின்றன.
ஆனால், நம் அமைச்சரோ சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த காலத்தில் நடந்த சுற்றுலாப் பொருட்காட்சியில் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம் பெற்றுவிடாமல், ஜெயலலிதாவின் படமே இடம் பிடிக்க வேண்டும் என்பதில் அக்கறையாகச் 'செயல்பட்டார்’. அமைச்சரின் எண்ணம் எல்லாம் தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா வரும் 'அந்நியர்களை’ திருப்திப்படுத்த வேண்டும் என்பது இல்லை. 'அம்மா’வின் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்பதே!
மயில் தேனீர்!

ஊரில் தங்கினால் அதிகாலையிலே எழுந்து மயில் என்பவர் நடத்தும் டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்துவிடுவார். அங்கே பேப்பர் படித்தபடியே மக்களிடம் பேசிக்கொண்டிருப்பார். 'அமைச்சர்’ என்கிற பந்தா கொஞ்சமும் இருக்காது. சிறியவர்களைக்கூட 'அண்ணே...’ என அழைப்பார். பிடிக்காவிட்டால் அவர் பெரியவராக இருந்தாலும் எரிந்துவிழுவார். தன்னைப்பற்றி புகார் சொல்கிறார்கள் என யாராவது சொன்னால், அதை அப்படியே நம்பிவிடுவார். அடுத்த முறை அந்த நபரைப் பார்த்தால், பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வார்.
மாற்றுக் கட்சியினருக்கு மரியாதை!

வேண்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியின் முக்கிய பொறுப்புக்களுக்குக் கொண்டுசெல்வது எல்லோரும் செய்வதுதான். ஆனால், வேறு கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார் சண்முகநாதன். 'காய்கறிகள் விற்பதுபோல கட்சிப்பதவிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சாதாரண வட்ட அளவு பொறுப்புகளுக்குக்கூட பல லகரங்கள் கை மாறுகின்றன. கட்சியின் நீண்டகால விசுவாசிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். தே.மு.தி.கவில் மாவட்டச் செயலாளராக இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த பி.டி.ஆர்.ராஜகோபாலுக்கு மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் பதவி தரப்பட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளரான சுதாகரன், மீளவிட்டான் வேளாண்மைக் கூட்டுறவு சங்க செயலாளராகவும், மாவட்ட ஒன்றிய கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இதற்கெல்லாம் சண்முகநாதனின் ஆசிதான் காரணம். கார்டனுக்கு புகார் அனுப்பியும் கண்டுகொள்ளப்படவில்லை’ எனப் புலம்புகிறார்கள் சீனியர்கள்.
தூத்துக்குடி மாநகர் பகுதிச் செயலாளர் பதவிக்கு நான்கு பேரைப் பரிந்துரை செய்திருக்கிறார் அமைச்சர். அதில் ஒருவர் தி.மு.கவுடன் தொடர்பில் இருப்பவர். மற்றொருவர் அ.தி.மு.க கொடிக் கம்பத்தை உடைத்தவராம். இன்னொருவர் ஃபார்வர்டு பிளாக் கட்சியில் 2011-ம் ஆண்டு வரையில் பொறுப்பில் இருந்தவர். நான்காமவர் தி.மு.கவினருடன் தொழில் உறவு வைத்திருப்பவர் எனப் புகார்கள் கிளம்ப... நியமன உத்தரவு இப்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், எதையும் சமாளிக்கும் சண்முகநாதன் நிச்சயம் பதவியைப் பெற்றுத் தருவார் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.
வில்லங்க சொத்து!

நில மோசடிப் புகாரும் சண்முகநாதன் மீது படிக்கப்படுகிறது. 'பெரும்குளத்தில் குறிப்பிட்ட பகுதியை தனது மனைவி பெயரில் பட்டா போட்டுவிட்டார்’ எனப் புகார் எழ... அரசு நிலத்தைக் கையகப்படுத்திய இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்துக்குப் போயிருக்கிறது. 'இது எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பலாம்’ என்கிற பேச்சு அலை அடிக்கிறது!
சண்முகநாதன் Vs செல்லப்பண்டியன்

சி.த.செல்லப்பாண்டியனும் எஸ்.பி.சண்முகநாதனும் தூத்துக்குடி மாவட்டத்தில் கீரியும் பாம்புமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊரக பகுதிகளில் சாலை வசதியை மேம்படுத்த சமீபத்தில் 17.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் சுமார் எட்டரை கோடி ரூபாயை தனது தொகுதிக்கு ஒதுக்கி கொண்டார் சண்முகநாதன். இதனால் கொதித்துப் போன தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. செல்லப்பாண்டியன், 'அமைச்சர் தொகுதிக்கு மட்டும் அதிகம் நிதியா? இதை ஏற்க முடியாது’ என மாவட்டத்தின் சக எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து போர்க் கொடி தூக்கியிருக்கிறார். இதனால் அந்தப் பணிகளுக்கான டெண்டரை ரத்து செய்திருக்கிறார் கலெக்டர்.
முன்னர் செல்லப் பாண்டியன் அமைச்சராக இருந்தபோது புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை இயக்கினார் ஜெயலலிதா. அதன்படி தூத்துக்குடியில் புதிய ரூட்களில் இயங்கிய பேருந்துகளுக்கு, 'என் தொகுதிக்கு நான் கேட்காமல் எப்படிப் புதிய பஸ்களை இயக்கலாம்?’ எனக் கொதித்தார் சண்முகநாதன். இதனால் முதல்வர் ஜெயலலிதாவால் பச்சைக்கொடி காட்டித் தொடங்கி வைக்கப்பட்ட பல பேருந்துகளுக்கு சிவப்புக்கொடி காட்டினார் சண்முகநாதன். இருவர் இடையிலான அடிபிடியில் தூத்துக்குடி மாவட்டமே பின்தங்கிக் கிடக்கிறது!
அக்கறை காட்டாத அமைச்சர்!

'பேருக்குத்தான் அமைச்சர்... அதிகாரிகளிடம் பேசி வேலை வாங்கும் திறமை சண்முகநாதனிடம் இல்லவே இல்லை’ என்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள். புதிய தொழில் தொடங்க வேண்டும், அணையைத் தூர்வார வேண்டும், ரோடு போட வேண்டும் என எதிலும் அக்கறை எடுத்துக்கொள்ள மாட்டார். பாபநாசம் அணையில் 115 அடி அளவு தண்ணீர் இருந்தபோதும்கூட, 'தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுங்க...’ என கோரிக்கை வைக்கத் தயங்குவார். கடந்த ஆண்டு குளம், குட்டைகள் வற்றிக்கிடப்பதைப் பார்த்து ஒரு முக்கிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய பிறகுதான், தண்ணீர் திறந்துவிட்டார்கள்.
கணக்குப் 'பிள்ளை’!

சண்முகநாதனுக்கு ஐந்து மகள்கள், ஒரு மகன். மகள்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக இருக்கிறார்கள். மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் ராஜா, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அப்பாவின் வருமானத்தைக் கணக்கு பார்ப்பதும் இவரே.
நண்பர்கள் தூரத்தில்...
எதிரிகள் பக்கத்தில்!
'நண்பர்களை எப்போது வேண்டுமானாலும் சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், பகையாளியைப் பக்குவமாகக் கையாள வேண்டும்’ என்பதைக் கொள்கையாகவே கொண்டவர் சண்முகநாதன். அதனாலேயே ஆரம்பகால நண்பர்கள் பலர் அவரைவிட்டு விலகி நிற்க, எதிர்த்தரப்பில் முண்டாசு கட்டியவர்கள் பலர் இப்போது சண்முகநாதனோடு கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக வி.பி.ஆர்.ரமேஷ் இருந்தபோது, அவருக்கு விசுவாசியாக இருந்தார் சண்முகநாதன். காலத்தின் கோலம்... இப்போது சண்முகநாதனின் விசுவாசியாக வி.பி.ஆர்.ரமேஷ்!
இது நட்பின் கதை!
சில நட்புக்காக எதையும் செய்வார் சண்முகநாதன் என்பதற்கு சாம்பிள் சம்பவம் இது. 'பொட்டைக்குளம்’ எனச் சொல்லப்படும் பொட்டல் குளம் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் நிரம்பியது. அந்த நீரை 48-வது கண்மாய் வழியாக கடலுக்குத் திறந்துவிட அதிகாரிகள் முயன்றபோது விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 'இப்போது ஏன் சம்பந்தமே இல்லாமல் கண்மாயைத் திறக்க வேண்டும்?’ என விசாரித்தால், அதிகாரிகள் அமைச்சரைக் கை காட்டி னார்கள். குளத்தை ஆக்கிரமித்து இருக்கும் அமைச்சரின் நண்பர் அங்கு பயிரிட்டிருக்கும் வாழைகள் அழுகிவிடும் என்பதால், தண்ணீரைக் கடலுக்குத் திருப்பிவிடும் முயற்சிகள் நடந்ததாம். விவசாயிகள் எதிர்ப்புக் காரணமாக அமுங்கியது விவகாரம்.
மூர்த்தி... அமைச்சரின் கீர்த்தி!

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனின் நிதிநிலைகளை கவனித்து வந்த மூர்த்தி என்பவர்தான் சண்முகநாதனுக்கு எல்லாமே. தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் 'மூர்த்தி அண்ணனைப் பாருங்க’ என சண்முகநாதன் கை நீட்டுகிறார். ஒன்பதாவது வகுப்பைத் தாண்டாத அமைச்சரின் கணக்கு வழக்குகள் தொடங்கி சகல சங்கதிகளையும் மூர்த்திதான் பார்த்துக்கொள்கிறார். அமைச்சரின் நிழலாகச் செயல்படும் மூர்த்திக்கு தூத்துக்குடியில் செல்வாக்கு அதிகம். அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவர்தான் தெற்கே உள்ள ஐந்து மாவட்டங்களில் கான்ட்ராக்ட் எடுத்து கோலோச்சிக்கொண்டிருக்கிறார். அந்த வரவு- செலவுகளில் கணிசமான பங்கு முக்கியமானவர்களுக்குப் போகிறதாம். அமைச்சரோடு போட்டிபோடும் அளவுக்கே மூர்த்தியின் வளர்ச்சி இருப்பதைப் பார்த்து வாய் பிளக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
என்ன ஆயின வாக்குறுதிகள்?
2011 சட்டசபைத் தேர்தல் பிரசாரத்துக்கு தூத்துக்குடி வந்தபோது, 'ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் நிலவும் அனைத்து பிரச்னைகளையும் நான் நன்கு அறிவேன்’ எனச் சொல்லி சில வாக்குறுதிகள் கொடுத்தார் ஜெயலலிதா. அப்படி கொடுக்கப்பட்ட, 'தூத்துக்குடி 1வது மற்றும் 2வது ரயில்வே கேட்களில் மேம்பாலம்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும்; திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும்; திருச்செந்தூர், நாசரேத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்படும்; அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்’ என சொன்னவை எல்லாம் புஸ்வானமாகிவிட்டன. தலைவி கொடுத்த வாக்குறுதிகளைக்கூட ஞாபகத்தில் வைத்து நிறைவேற்றத் தவறிவிட்டார் அமைச்சர். 'தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மணல் மாதா ஆலயம் சுற்றுலாத் தலமாக்கப்படும்’ எனச் சொன்னார் ஜெயலலிதா. சுற்றுலாத் துறையை கைவசம் வைத்திருந்தும் சண்முகநாதன் அதற்காகப் பெரிதாக மெனக்கெடவில்லை. தொகுதியில் உள்ள நவ கைலாயம், நவ திருப்பதி ஆகியவற்றை மேம்படுத்தும் காரியத்தைகூட செய்யவில்லை. அவற்றை இணைப்பதற்கான போக்குவரத்து வசதியை செய்து கொடுக்கவில்லை எனப் புலம்பல்கள் கேட்கின்றன.