Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 8

வைகை நதி நாகரிகம் !
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம் !

நாம் இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பது தொடுவானத்துக்கு அப்பால் கடலிலும் காலத்திலும் என்ன இருந்தது என்பதைப் பற்றியது..!

கிரேக்கத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் நிகழ்ந்த வணிகத்தின் சாட்சியாக அழகன்குளத்து கப்பல் கோட்டோவியம் இருப்பதைப் போல, அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த பெரும் நாகரிகங்களின் வணிக சாட்சியாக கப்பல் முத்திரைகள் இருந்துள்ளன. கடல்வெளியை கப்பல்களும் காலவெளியை காக்கைகளும் இணைத்துள்ளன. 

நைல் நதிக்கரையில் உருவான எகிப்திய நாகரிகமும், யூப்ரெடீஸ்-டைக்ரஸ் நதிக்கரைகளில் உருவான சுமேரிய நாகரிகமும், சிந்து நதிக்கரையில் உருவான சிந்துவெளி நாகரிகமும் தங்களுக்கு இடையில் நிகழ்த்திக்கொண்ட வணிகத் தொடர்பு குறித்து பல்வேறு ஆதாரங்கள் அங்கு நிகழும் அகழாய்வுகளில் கிடைத்து வருகின்றன.

வைகை நதி நாகரிகம் !
வைகை நதி நாகரிகம் !

சுமேரிய நாகரிகத்தின் முத்திரைகள் சிந்துவெளிப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்விலும், சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்கள் சுமேரியப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்விலும் கிடைத்துள்ளன.

சிந்துவெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட கப்பல் முத்திரைகள் அன்றைய செழிப்பு மிகுந்த நாகரிகத்தின் சான்றாக விளங்குகின்றன. சிந்துவெளியில் கிடைத்த முத்திரையில் உள்ள கப்பல், புராதன எகிப்தில் கட்டப்பட்ட கப்பலின் வடிவத்தைப்போல இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அதேபோல சுமேரிய நாகரிகத்தில் 'ஃபாரா’ (ஈராக்) என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த முத்திரையில் உள்ள கப்பல், சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நடுக்கடல் பயண வழிகள், கண்டு அறியப்படாத காலம் அது. அந்தக் காலத்தில் கரையை ஒட்டிய பயணமாக கப்பல்கள் செல்லும்பொழுது சில நேரங்களில் கப்பல்கள் விலகி, கடலுக்குள் நீண்ட தூரம் சென்றுவிட்டால், கரை எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியாமல் போய்விடும். அப்பொழுது மாலுமி, தன்னிடம் உள்ள காகத்தை எடுத்துப் பறக்கவிடுவார். அது, கரை இருக்கும் திசையை நோக்கிப் பறந்து செல்லும். அதனை வைத்து, கப்பலை அவர் இயக்குவார். கப்பல்களுக்கு காகங்கள் வழிகாட்டிய காலம் அது. ஃபாராவில் கிடைத்த கப்பல் முத்திரையில் திசைகாட்டும் பறவையும் சேர்ந்திருக்கிறது. காகத்தை அறிந்திராத சுமேரியப் பகுதியில் கிடைத்துள்ள இந்த முத்திரையானது, சிந்துவெளிப் பகுதியில் நடந்த வணிகப் பரிமாற்றத்தின் சான்றாகப் பார்க்கப்படுகிறது.

காலத்தின் பேரழிவுக்குள் சிக்கி இந்த நாகரிகங்கள் மறைந்தன. கட்டடங்கள், சாலைகள், குளங்கள் என்று மனிதனால் அலங்கரித்து, பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதி மண்ணுக்குள் மூழ்கியது. அவன் பேசிய மொழியும், அவன் எழுதிய எழுத்தும், அவன் வணங்கிய கடவுளும், கூடவே அவனும் அறிய முடியாத, புதிரான காரணங்களுக்குள் புதையுண்டனர். காலத்தின் பெரும் காட்சி ஒன்று உதிர்ந்து குவிந்தது.

வைகை நதி நாகரிகம் !
வைகை நதி நாகரிகம் !

பெரும் புகைமூட்டம் எனும் இருள் சூழ்ந்த ஒரு காலத்தை விலக்கி, இந்திய நிலப்பரப்பில் இரண்டாவது சகாப்தம் தொடங்கியது. உதித்து எழும் புலர்காலை பொழுதைப்போல புதிய நாகரிகத்தின் வாசல்படிக்குள் புத்தொளி பரவியது. அதன் ஆரம்பகாலத்தில் உருவான மாமனிதர் புத்தர், 'நீண்ட காலத்துக்கு முன்னர் கடல் வணிகர்கள் கப்பலில் கடற்பயணம் மேற்கொள்ளும்போது தங்களுடன் ஒரு பறவையையும் கொண்டுசெல்வார்கள். கரை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் அபூர்வத் திறன் படைத்தது அந்தப் பறவை. நடுக்கடலில் செல்லும்போது எங்கும் கரை காணப்படவில்லை என்றால், உடனே அந்தப் பறவையை பறக்கவிடுவார்கள். அது கிழக்கே செல்லும்; மேற்கே செல்லும்; தெற்கே செல்லும்; வடக்கே செல்லும்; இவற்றுக்கு இடைப்பட்ட இடங்களுக்கும் செல்லும். அப்பொழுது அடிவானில் எங்கேனும் நிலம் தென்பட்டால், அது திரும்பக் கப்பலுக்கு வந்து சேரும்' என்ற உதாரணத்தை தனது உரையின் ஊடே குறிப்பிடுகிறார்.

இந்த வழக்கம் அனைவராலும் அறிந்த வழக்கமாகவும், பரவலாகத் தெரிந்த வழக்கமாகவும் இருந்ததால்தான், சாதாரணமாகப் பேச்சுவழக்கில் இது உவமையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

அதாவது, சுமேரிய அகழாய்வில் கிடைத்த சிந்துவெளி நாகரிகத்துக் காக்கை, 1,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பறந்து வந்து, சாக்கிய வம்சத்து அரசகுலத்தில் தோன்றிய மாமனிதரான புத்தரின் கதைக்குள் நுழைந்திருக்கிறது. காகம், கடலைக் கடக்கும் வல்லமையை மட்டுமல்ல, காலத்தைக் கடக்கும் வல்லமையையும் கொண்டுள்ளது. அந்தக் காகம் சுமேரியாவில் உதிர்ந்துகிடந்த சுள்ளிகளை எடுத்துவந்து போதிமரத்தில் கூடுகட்டியதன் சான்றுதான் இந்தக் கதை.

அழிந்த ஒரு யுகத்தினுடைய அறிவுச்செல்வத்தை, அடுத்த யுகத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதுதான் கலை இலக்கியத்தின் சக்தி. 'சிந்துபாத் கதைகள்’  தொடங்கி, 'புத்த ஜாதகக் கதைகள்’ வரை காலத்தின் மாபெரும் சாட்சியத்தை தனது தோள்களில் தூக்கிக் கொண்டுவந்து சேர்த்துள்ளது. 'மேற்கே சிந்துபாத் கதையிலும், வடக்கே புத்த ஜாதகக் கதைக்குள்ளும் பறந்து திரிந்த காக்கைகள் தென்னகத்தின் கதைப்பரப்புக்குள் வராமலா போயிருக்கும்!’ என்று யோசித்தால், ஒரு நாட்டுப்புற நம்பிக்கைதான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறது.

'காக்கை கரைந்தால் விருந்து வரும்’ என்பது இன்றளவும் தமிழகத்துக் கிராமப்புறங்களில் நிலவும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை எதில் இருந்து உருவாகியிருக்கும்? வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பார்த்ததும், கரைந்து குரல் கொடுத்த காக்கையின் செயலில் இருந்து தொடங்கி இருக்குமா? என்றால், அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், வீட்டுக்கு வரும் அயலாரைப் பார்த்ததும் முதலில் சத்தம் எழுப்புவதாக நாய்தான் இருக்கும். வீட்டைச் சுற்றி இருக்கும் பிற பிராணிகள்கூட தன்னுடைய சூழலுக்குள் நுழையும் புதிய மனிதர்களைப் பார்த்து சற்றே குரல் எழுப்பி, நிலைகுலையும். இத்தகைய நிலையில் காக்கை மட்டும் தனித்துக் கரைவதின் மூலம் ஒரு நம்பிக்கை உருவாக வாய்ப்பு இல்லை.

அப்படி என்றால் இந்த நம்பிக்கையின் ஆரம்பப்புள்ளி எதுவாக இருக்கும் என்று யோசித்தால், அது கடற்கரை சார்ந்த பகுதிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. கடலின் உள்பகுதியில் இருக்கும் கப்பல், கரை தெரியாமல் தடுமாறும்போது, கப்பலின் மாலுமி காக்கையை வானில் பறக்கவிட்டிருக்கிறான். அவை கரையைப் பார்த்துப் பறந்து வருவதை கடற்கரையில் இருந்த மக்கள் கவனித்துள்ளனர். காக்கை வந்த பின், சற்று அவகாசத்தில் கடலுக்குள் இருந்து கப்பல் கரைக்கு வந்துள்ளது. வணிகத்துக்கு வந்தவர்கள் பெரும் பொருளோடும் புதிய பண்பாட்டோடும் வந்து இறங்கியிருக்கின்றனர். இந்தப் புது விருந்தினர்களின் முன்வருகையை உணர்த்துவதாக காக்கை இருந்தது என்பதே இந்த நம்பிக்கை உருவாக மூலகாரணமாக இருந்துள்ளது எனக் கருதலாம்.

'நாட்டார் மரபு மட்டும்தானா... அந்தக் கால செவ்வியல் இலக்கியத்தில் இது சார்ந்த பதிவுகள் இல்லையா?’ என்றால் காக்கைபாடினியார் நச்செள்ளையார் வந்து நம் முன்னால் நிற்கிறார். 'விருந்தினர் வரவை உணர்த்தும் காக்கையும் கரைந்தது’ என்பதைப் பாடியதற்காகவே காக்கைபாடினியார் என்று பெயர் எடுத்த கவி. இன்று இருக்கும் இந்த நம்பிக்கைதான் 2,000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்தது என்பதற்கு இந்தப் பாடலும், பாடலாசிரியரின் பெயருமே சான்று கூறுகின்றன.

இந்தக் கவியும் நாம் மேலே சொன்ன செய்தியை உறுதிப்படுத்துபவராக இருக்கிறார் என்பதை அவரின் இந்த ஒற்றைக் கவிதையில் இருந்து மட்டும் முடிவுக்குப் போய்விட முடியாது. அவர் எழுதிய பிற கவிதைகளைப் பார்த்தால் அவையும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. கடலைப் பற்றியும், கடலில் வீசும் வலுவான காற்றைப் பற்றியும், அயல்நாடுகளில் இருந்து அரிய பொருள்களைக் கொண்டுவருவதற்காக கடல்நீரில் மிதந்து வரும் கப்பல்களைப் பற்றியும், கடல் வழியாகக் கொண்டுவந்து சேர்க்கப்படும் பொருட்களைப் பத்திரப்படுத்தக் கட்டப்பட்டுள்ள பண்டகசாலைகளைப் பற்றியும், குளிர்மிகுந்த கடற்காற்றால் ஏற்படும் நடுக்கத்தைப் பற்றியும் மிகநுட்பமாக பல்வேறு பதிவுகளைச் செய்துள்ளார். அவரது கவிதைகளின் இடுக்குகளில் கடலில் வீசும் உப்பங்காற்றின் ஈரம் உலராமல் அப்படியே இருக்கிறது.

சுமேரிய அகழாய்வில் கிடைத்த, சிந்துவெளி நாகரிகத்துக் காக்கையை புத்த ஜாதகக் கதைகளின் வழியே விரட்டிவந்து சங்க இலக்கியத்துக்குள் கண்டுபிடிப்பது சற்றே மிகையாகத் தோன்றுமானால், அதுவே சரி. ஏனென்றால், நம்மைப் பொறுத்தவரை கண்ணுக்கெட்டிய தூரம் மட்டுமே பார்த்துப் பழகிவிட்டோம். தொடு வானத்துக்கு அப்பால் நம்மால் பறந்து செல்லவும் முடியாது, பார்த்துக்கொள்ளவும் முடியாது. ஆனால், நாம் இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பது தொடுவானத்துக்கு அப்பால் கடலிலும் காலத்திலும் என்ன இருந்தது என்பதைப் பற்றியது!

காலம் எவ்வளவு தூரம் நிலைத்திருக்குமோ, அவ்வளவு தூரம் நிலைகுலையவும் செய்யும். காலம் நிலைகுலையும் இடத்தில்தான் மனிதன் திமிறி எழுந்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். காலத்துடன் அவன் நடத்தும் போராட்டம், காலாகாலமாக நிகழ்ந்துகொண்டிருப்பது. 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளி மக்கள் தலைமுடியை சீவப் பயன்படுத்திய அதே வகை சீப்பு இன்றும் இந்தியாவில் செய்யப்படுகிறது. நீங்களும் நானும் தலைவாரும் சீப்புக்கான காப்புரிமை ஹரப்பன்களிடம்தான் இருக்கிறது. காலம் எல்லாவற்றையும் அழித்தாலும், நினைவுகளின் ஓரத்தின் வழியே மனிதன் ஒரு கிளை நதியை உருவாக்கி புதிய நிலத்துக்கு வந்து பழைய விதைகளை நட்டுவிடுகிறான். ஒரு முறை நட்டுவிட்டால், அப்புறம் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நெல்மணியின் ஆரம்ப விதைநெல் ஹரப்பாவின் பண்டகசாலையில் சேகரிக்கப்பட்டது அல்ல என்று நம்மால் சொல்ல முடியாது. தனித்து உரிமை கொண்டாட நம்மிடம் எதுவும் இல்லை.  நமது டி.என்.ஏ-வும் நம்மை அனுமதிக்காது. நமது டிரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் சீப்பும் நம்மை அனுமதிக்காது.

காலப்பெரு நதியின் தொடர்ச்சிதான் சிக்கெடுக்கும் சீப்பும், கரைந்து பறக்கும் காகமும், புத்தகம் படிக்கும் நாமும். பாய்ந்தோடும் அந்த நீர், நேற்று எகிப்தின் கீழ்த்திசையிலும், அதற்கு முன் சிந்துவெளியின் மையத்திலும், இன்று வைகையின் மணலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நீர் குடித்த காக்கை சமுத்திரத்தைக் கடந்து, சகாப்தத்தைக் கடந்து இன்று நம் தலைக்கு மேல் பறந்துகொண்டிருக்கிறது. காக்கை வானத்தில் உயரமாகப் பறக்க முடியாத, ஆனால் வரலாற்றில் மிக ஆழத்துக்குள் பறக்கக்கூடிய ஓர் அபூர்வப் பறவை என்பது நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

இதைவிட நம்மை பேராச்சர்யப்படுத்துவது, நம்முடைய கரையில் இருந்து புறப்பட்டு அக்கரைக்கு போய்ச் சேர்ந்த அழகிய பறவை ஒன்று!

- ரகசியம் விரியும்

- சு.வெங்கடேசன்,

ஓவியங்கள்: ஸ்யாம்