மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 11

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 11

ஸ்ரீரங்கத்து மண்!  

##~##

'பூமியினும் மிக்க
பொறையுடையாள்; ஆயினும்
தோமிழைப் பார் முன்
துர்க்கை யனையவள்!’

'பெண்ணின்
பெருந்தக்க யாவுள?’
- ஒன்று, செல்லம்மாள் புருஷன் செப்பியது;  
மற்றொன்று, வாசுகி புருஷன்
விளம்பியது!

'பெண்ணடிமை தீராது
பேசும் திருநாட்டின்-
மண்ணடிமை தீர்வது
முயற் கொம்பே!’

-இது, புதுச்சேரி வீதிகளில், செருப்பு அணிந்து சென்ற நெருப்பு -

பாரதிதாசனார் பகன்றது! இப்படி மூவர் பாடியதை அசை போடுங்கால் - மூவர் என் நினைவில் முளைக்கிறார்கள்!

புது டில்லியில் பள்ளி மாணவியாக இருந்த ஒரு பர்மியப் பெண் -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 11

துப்பாக்கியின் துரைத் தனத்திலிருந்து மியான்மர் மக்களை மீட்டெடுக்கப் போராடுகிறாள்; சமீபத்தில் வீட்டுச் சிறையினின்றும் விடுதலை பெற்றாள்! அவர்தான் 'சூ கி’.

லஹாபாத்; அரண்மனை அனைய வீடு. பெற்றோர் பாட்டன் - அனைவரும் விடுதலை வேள்வியில் ஈடுபட்டு, சிறையில்.

சின்னஞ்சிறுமி தனியாயிருக்கிறாள்; அந்தச் சிறுமி அவ்வளவு அழகல்லவென்று, உறவினரால் விமர்சிக்கப்பட்டவள்.

பின்னாளில், பிந்தரன்வாலேயின் வன் முறையை முடிவுக்குக் கொண்டுவரப் பொற்கோயிலுக்குள் புகுந்தது ராணுவம் -

அந்தச் சிறுமி நாடாண்ட நாளில்!

அவர்தான் 'இந்திரா காந்தி’.

ன் நினைவு நாடாக்களைப் பின்னோக்கிச் சுழலவிடுகையில், இன்னொரு பெண் என் கவனத்திற்கு வருகிறார்!

'மரம் சும்மா இருந்தாலும் - காற்று, அதைச் சும்மா இருக்க விடுவதில்லை!’ என்கின்ற -

மாசேதுங்கின் வார்த்தைதான் - அடடா! எவ்வளவு மெய்யானது!

நான் சொல்ல வருவது, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய சங்கதி.

'கோபி!’ வி.கோபால கிருஷ்ணனின் சுருக்கம்.

கோபிதான் என் God Father; Bene Factor எல்லாம்; இன்றைய என் இருப்பு கோபி தந்த கொடை! படத்தில் பாட்டெழுதும் முதல் வாய்ப்பை, நான் கோபியால்தான் பெற்றேன்.

'நானே ராஜா’ படத்தில் கோபிதான் ஹீரோ; சிவாஜி வில்லன்! அது மட்டுமல்ல; கோபிதான், பத்மினியின் முதல் கதாநாயகன் 'ஏழை படும் பாடு’ படத்தில்!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 11

டவுலகில் பிரபலமாயிருந்தாலும், கோபி ஒரு நாடகப் பிரியர். ஆங்கிலம், அவரது நுனி நாக்கில். எனவே அவர் ஒரு Shakesperian Actor ஆகவும் பிரசித்தி பெற்றார்.

'மெட்றாஸ் ப்ளேயர்ஸ்’ என்ற அமைப்பு, மியூசியம் தியேட்டரில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்தும்; கோபி 'ஒதெல்லோ’வில், 'இயாகோ’வாக வந்து - வெள்ளைக்காரனே மூக்கில் விரல் வைக்கும்படி நடித்ததை எல்லாம் நான் பார்த்ததுண்டு; பின்னாளில், தன் விருந்தாளியாக அவரை அழைத்தது அமெரிக்க அரசு!

ரு தமிழ் நாடகம். 'முடிவில் ஆரம்பம்’ என்று பெயர். அதில் ஜாவர் சீதாராமன்; கோபி; சந்திரபாபு; மற்றும் திருமதி வேதவல்லி; திருமதி அம்புஜம் ஆகியோரெல்லாம் பங்கேற்றனர். அற்றை நாளில் அந்த நாடகம்தான் 'Talk of the Town!’

நான் அதன் ஒத்திகைக்கு கோபியோடு சென்றிருக்கிறேன். அதனால், அந்த நாடகத்தில் நடித்த அனைவரும் குறிப்பாக... திருமதி வேதவல்லி; மற்றும் அவரது சகோதரியான திருமதி அம்புஜம்; அவரது கணவர் திரு.வெங்கட்ராமன் ஆகியோரெல்லாம், கோபியினால் எனக்கு நன்கு பரிச்சயமானார்கள்.

அந்த சகோதரிகளிடம் எனக்கு ஓர் ஈடுபாடு ஏற்பட்டது. அதற்குக் காரணம், அவர்களது பூர்வீகமும் என்போல் ஸ்ரீரங்கம். அது மட்டு மல்ல; அவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்கள்; ராமானுஜர் Cult!

மாம்பலம் சிவஞானம் தெருவிலிருந்த அவர்கள் வீட்டிற்கு நான் கோபியோடு அடிக்கடி சென்றிருக்கிறேன்.

என்னைக்கூட ஒரு நாடகம் எழுதித் தரச் சொல்லி திருமதி வேதவல்லி அவர்கள் கேட்டதுண்டு.

'நல்ல குடும்பம் தெய்வீகம்’ எனும் பாடலுக்கேற்ப அமைந்திருந்தது அவர்கள் வாழ்வு!

ரிரு ஆண்டுகளுக்குப் பின், நான் நாகேஷ§டன், கிளப் ஹவுஸ்  என்னுமிடத்தில் இருந்தபோது -

காலை மாலை வேளைகளில், திருமதி வேதவல்லி தன் பையனை, அங்கு அழைத்து வருவார்கள் டேபிள் டென்னிஸ் ஆட; அந்தப் பையன் பெயர் பாபு. ஒயிட் ஷார்ட்ஸில் செக்கச் செவேலென்றிருப்பான்.

தாயும் மகனும் என் அறைக்கு வந்துதான், நான் மண் பானையில் வைத்திருக்கும் 'சில்’லென்ற தண்ணீரை, தாகத்துக்குப் பருகுவார்கள்.

ந்த அம்மையாருக்கு ஒரு மகள் உண்டு. அந்தச் சிறுமி, கோபியின் ஸ்கூட்டரில் சில நேரம் அமர்ந்து போவதை நான் பார்த்திருக்கிறேன். சூர்யோதயம் ஒரு சிறுமியாகி, ஸ்கூல் யூனிஃபார்மில் போவது போலிருக்கும்!

அந்தப் பெண்ணின் நடன அரங்கேற்றத்திற்கும் நான் கோபியோடு சென்றிருக்கிறேன். 'தங்க விக்ரஹம்’ என்று தலைமை வகித்த சிவாஜி சிலாகித்துப் பேசினார்.

அழகு; அறிவு; அருங்கலை ஆற்றல்; அடக்கம் - ஆகிய அருங்குணங்களின் கலவையாக அந்தப் பெண் என் கண்ணுக்குக் காட்சியளித்தாள். இப்படியரு விசித்திரக் கலவை வையமிசை உளதோ என நான் வியந்துபோனேன்!

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 11

பின்னாளில் அந்தப் பெண் நடிகையானார். படப்பிடிப்புத் தளங்களில் - தனக்கான ஷாட் இல்லாதபோது - ஏதேனும் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்து - புறச்சூழலை அறவே தவிர்த்துத் தானொரு தீவெனத் திகழ்வார்.

புகழின் உச்சத்தில் இருந்தபோதும் - அவர்பால் தென்பட்ட ஓர் ஆரவாரமற்ற அமைதி என்னை வியப்புக்குள்ளாக்கியது!

ரு சில படங்களில், என் பாடல்களைப் பாடிஇருக்கிறார். என்ன சுதிசுத்தம்! என்ன லயசுத்தம்!

எதையும் செவ்வனே செய்ய வேண்டும் எனும் சிரத்தை - அதாவது 'Depicting the Role to the Very Core’ என்பார்களே, அப்படி! அது கண்டும் வியந்தேன்.

ன்னணம், வியப்பு மேல் வியப்பாக - என் விழிகளைப் புருவத்திற்கு உயர்த்திய அந்தப் பெண், அரசியலுக்கு வருவார் என்று அப்போது ஆரேனும் ஆரூடம் சொல்லியிருப்பின் - நான் நூறு விழுக்காடு நம்ப மறுத்திருப்பேன்!

ஆனால், அது நடந்தது. கண்ணதாசன் பாடி வைத்திருக்கிறானே -

'எங்கே வாழ்க்கை தொடங்கும்?
   அது - எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை;
இதுதான் பயணம்;
என்பது யாருக்கும் தெரியாது!’
என்று!

அதே கண்ணதாசன்தான், வாழ்வின் நிலையாமையைப் பாடுங்கால் சொல்கிறான்:

'அலையில் ஆடும் காகிதம்;
அதிலும் என்ன காவியம்!’

வெறும் காகிதமாயிருந்தால், அலை யின் மாட்டு அலைப்புற்று அழிய வேண்டியதுதான்; அது ஒரு காவியத்தை ஏந்தி நிற்குமாயின் -

அதைக் காலம் செரிக்காது; கறையான் அரிக்காது!

திருமதி வேதவல்லி என்று இயற் பெயர் கொண்ட - திருமதி சந்தியா அவர்கள்...

பெற்ற
பெண் பிள்ளையை -
'காவியம் ஏந்தி நிற்கும்
காகிதம்!’ என்று -
எஞ்ஞான்றும்
ஏத்தி நிற்கின்றது -
ஸ்ரீரங்கத்து மண்; செல்வி.ஜெயலலிதா
ஸ்ரீரங்கத்துப் பெண்!

ஒவியம் : மணி, படம் :  கே.ராஜசேகரன்

- சுழலும்...