மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 6

சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 6

''இந்த மலையில் மக்களே இல்லையா?'- வியந்தான் டெரேன் பாண்ட்ஸ்; அமெரிக்கன் டூரிஸ்ட்! 

'இருந்தார்கள்... இங்கேதான் உங்கள் நாட்டு கம்பெனி ஒன்று முன்பு ஃபேக்டரி வைத்திருந்தது' என்றான் கைடு ஜெயபாலன்.

'ஓஹோ... நீ இங்கேயே இரு' என்றபடி அடர்ந்த குன்றின் மேலே ஏறிச் சென்றான் பாண்ட்ஸ். சிறு நீரோடைகளையும் பெருமரங்களையும் தாண்டி காட்டின் நடுவில் நடந்தான். வெகுதூரம் வந்துவிட்ட களைப்பு தொண்டையில் தெரிய, ஃபிளாஸ்கைக் கவிழ்த்து, நீரை அருந்தியபடி நின்றான். சருகுகளின் அசைவில் திரும்பியபோது, சற்று தூரத்தில் ஒரு பெண் உருவம் கண்டு நெருங்கி, 'யார் நீ... மனிதர்களே இல்லாத காட்டில்?' எனக் கேட்டான்.

'மலையரசி என் பெயர்' என்றாள்.

அவனுக்குப் புரியவில்லை. ஏதோ சொல்வதைப் போல அசைந்த அவள் உதடுகள், மறுகணம் அமைதியில் உறைந்தன. அவள் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் பக்கத்தில் இருந்த இலையில் விழுந்தது. மறுகணம் செடிகளுக்கு அப்பால் விலகி மறைந்தாள்.

கலைடாஸ்கோப் - 6

அவளுடைய கண்ணீர்த் துளி இலை மீது சரிந்து சொட்டியது. அதை கைகளில் ஏந்தியபோதுதான்  கவனித்தான்... ஒரு துளி உருகிய உலோகம்போல, அது அவன் கைகளில் மின்னியபடி ஒட்டாமல் உருண்டது.

நடுங்கும் உதடுகளால் தனக்குத்தானே சொன்னான்...

'பாதரசம்!'

Kung Fury

கலைடாஸ்கோப் - 6

Exploitation films என்றொரு வகை இருக்கிறது. 60-களில் மேற்குலக சினிமாவில் உருவான ஒரு ஸ்டைல். குறைந்த பட்ஜெட்டில் மூன்றாம் தரமான நடிகர்-நடிகைகளை வைத்துத் தயாரிக்கப்படும் படங்கள். பெரும்பாலும் ஆக்‌ஷன், வன்முறை, செக்ஸ், கிரைம், ஹாரர் டைப். எந்தவித லாஜிக்கிலும் அடங்காத போலீஸ் கதைகள். அசட்டுத்தனமான அதீத ஸோம்பி படங்கள். ஆனால், எதிர்பாராத விதமாக சில படங்கள் தியேட்டர்களில் திரையைப் பிய்த்துக்கொண்டு ஓடி, கல்லா கட்டியதும் உண்டு.‘Night of the Living Dead’ போன்ற படங்கள் அந்த வகையில் கிளாசிக் என்கிறார்கள்.

‘Kung Fury’ - இந்த வகைப் படங்களுக்கு ஒரு 'ட்ரிபியூட்’ எனச் சொல்லலாம். இயக்குநர் டேவிட் சாண்ட் பெர்க், மியூசிக் வீடியோ, விளம்பரப் படங்கள் என இருந்த வேலைகளைத் தவிர்த்துவிட்டு இந்தக் குறும்படத்தை 'க்ரௌடு ஃபண்டிங்’ மூலமாக நிதி திரட்டி, இயக்கி, யூ-டியூபில் இலவசமாக வெளியிட்டிருக்கிறார். ஹிட்லரைக் கொலை செய்வதற்காக 1980-ம் ஆண்டில் இருந்து 1940-களுக்கு 'டைம் டிராவல்’ செய்யும் Kung Fury என்கிற அதிரடி போலீஸ்காரனின் சரவெடி ஸ்டோரி.

கதை 80-களில் நடப்பதால், அந்தக் கால VHS வீடியோ டேப் படங்கள்போல கலர், ஸ்கிராட்ச் என விஷ§வலில் விளையாடியிருக்கிறார்கள். 'பி’-கிரேடு படங்களில் வருவதைப்போல நம்ப முடியாத அதிரடி VFX  காட்சிகள், அந்தக் கால வீடியோ கேம்களின் ஸ்டைல் ஆக்‌ஷன் சண்டைகள், கிண்டலும் கேலியுமான வசனங்கள், 80-களின் கலாட்டாவான சிந்த்பாப் இசை என அரை மணி நேர அசால்ட்தான் படம்.

கலைடாஸ்கோப் - 6

மீதியை மென்திரையில் காணுங்கள்: https://www.youtube.com/watch?v=bS5P_LAqiVg

ரப்பர் என்னும் அழிப்பான்!

கலைடாஸ்கோப் - 6

'எத்தனை ரப்பர் வாங்கிக் கொடுத்தாலும் தொலைச்சுட்டு வந்து நிக்கிற...’ எனப் பிள்ளைகளை மிரட்டுகிறீர்களா? எரேசர்கள் என்னும் ரப்பர்கள் கரைந்துபோகும் முன்பே தொலைந்துபோவது உலக வழக்கம். இப்படி ரப்பரைத் தொலைப்பவர்களுக்கு என்றே ஒரு கம்யூனிட்டி பேஜ் ஃபேஸ்புக்கில் இருக்கிறது. அதையும் இரண்டு லட்சம் பேர் 'லைக்’கியிருக் கிறார்கள்!  

1770-ல் அழிக்கும் ரப்பரை உண்மையில் கண்டுபிடித்தவர், உயிர்களை அழிவற்றதாக வைத்திருக்கும் ஆக்சிஜனைக் கண்டறிந்த அறிஞர் ஜோசப் ப்ரீஸ்ட்லி. ஆனால், அதே வருடம் இயற்கை ரப்பரை அழிப்பான்களாக உபயோகிக்க முடியும் என்பதை ஆக்சிடென்டலாகக் கண்டுபிடித்தவர் எட்வர்டு நைர்ன் என்கிற ஆங்கிலேயர். பிறகு, அதை வியாபாரமும் செய்ய ஆரம்பித்தாராம். பிறகு, சார்லஸ் குட்இயர் (ஆம்... டயர் கம்பெனிக்காரர்!) ரப்பரை 'வல்கனைஸிங்’ செய்யும் முறையைக் கண்டறிந்திருக்கிறார்.

சரி... ரப்பர், பென்சில் கோடுகளை அழிக்கும் மேஜிக்தான் என்ன? பென்சில் கோடுகள் பேப்பரில் ஒட்டிக்கொள்ளும் கார்பைட் துகள்கள். ரப்பரின் மூலக்கூறுகளுக்கு பேப்பரின் மூலக்கூறுகளைவிட ஒட்டும்தன்மை அதிகம். ரப்பரை, கோடுகளின் மீது வைத்துத் தேய்க்கும்போது, கார்பைட் துகள்கள் அதிக ஒட்டும் தன்மையுள்ள ரப்பருடன் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகின்றன. கிட்டத்தட்ட காந்தம்போல செயல்படுகிறது. இதுவே ரப்பரின் 'அழிக்க’ முடியாத வரலாறு!

செராமிக் சிற்பங்கள்

மனிதர்களின் கலை வரலாற்றில், செராமிக் (நம் ஊரில் பீங்கான்) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது. தேநீர்க் கோப்பைகள், 'கப்’புகள் என நம் கிச்சன் முதல் வாஷ்பேசின், குளோசெட்கள் என பாத்ரூம் வரை அது இன்றும் தொடர்கிறது. செராமிக் என்பது தனியான ஒரு கலை. சென்னை ஓவியக் கல்லூரியில் செராமிக்குக்கு தனித் துறையே இருக்கிறது.

கலைடாஸ்கோப் - 6

நமது பானை வனைதல்போல மிக நுட்பமானது செராமிக் கலை. சுடவைத்து பாலீஷ் செய்து நாம்

கலைடாஸ்கோப் - 6

பார்க்கும் பளபளப்பு வரும் வரை அது கவனமாகக் கையாளப்படவேண்டியிருக்கும். அந்த வகையில் ஹேஜின் லீ என்கிற கொரியக் கலைஞரின் செராமிக் சிற்பங்கள் நுட்பமானவை.

செராமிக் சிற்பங்களில் அல்லது ஜாடிகளில் ரிப்பன் வடிவச் சுருள்களை இவர் உருவாக்குகிறார். அதை 'அசாதாரண கைவேலைப்பாடு’ என வியக்கிறார்கள் விமர்சகர்கள். காரணம், செராமிக் ப்ராசஸ் செய்யும்போது உடையாமல், நசுங்காமல் அப்படியே கொண்டுவருவது அசாத்தியம்.

கலைடாஸ்கோப் - 6

வெறும் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் அவருடைய சிற்பங்கள் கலைரீதியிலும் காண்பவர்களை வியக்கவைக்கின்றன. உலகின் பல இடங்களிலும் கண்காட்சிகள் வைத்திருக்கிறார். கனடாவில் ஒரு ஸ்டுடியோ திறந்து தேநீர்க் கோப்பைகள், கிண்ணங்கள் என தனித்துவ ரசனையுடன் உருவாக்கி விற்கவும் செய்கிறார். 'கலையை விற்கலாமா?’ எனக் கேட்டால், 'பொழைப்பையும் பார்க்கணுமே’ எனப் போட்டு 'உடைக்க மாட்டார்’போல!

விக்டோரியா லாட்மேன் என்கிற சிகாகோ பத்திரிகையாளர் 'Stepwell’ எனச் சொல்லப்படும் இந்தியக் கிணறுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். தண்ணீரைத் தேக்கிவைக்க, பிறகு பயன்படுத்த என, பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட இந்த வகையான கிணறுகளை 'ஆர்க்கிடெக் வொண்டர்’ என வியக்கவும் செய்கிறார்.

பெரும்பாலும் குஜராத், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்டவை இந்த Stepwell கிணறுகள். கிணறு என்றால் வட்டமாக ஆழமாக இருக்கும் என்பதைத் தாண்டி, அதையே ஒரு கட்டடக் கலையாகப் பாவித்து பிரமாண்டம் காட்டியிருக்கிறார்கள். தண்ணீர் மட்டம் மெள்ள மெள்ள கோடையில் கீழ்நோக்கிச் செல்லும்போது அடி ஆழம் வரை சென்று நீர் அள்ளுவதற்குத் தேவையான படிகளின் அமைப்புகள், மழைக்காலத்தில் தண்ணீர் நிறைந்து பெருகத் தேவையான அழகான அறைகள்... என அவற்றை உருவாக்கியிருக்கும் விதம் அசாத்தியம்.

கலைடாஸ்கோப் - 6

இவற்றை எல்லாம் பார்க்கும்போது எனக்கு நம் ஊர் தெப்பக்குளங்கள் ஞாபகத் துக்கு வராமல் இல்லை. அதன் அகன்ற படித்துறை அமைப்புகள், மண்டபங்கள் என அவையும் அட்டகாச ஆர்க்கிடெக்சர்கள்தான். ஆனால், நமது அசட்டைத்தனமும் பராமரிப் பின்மையும், இன்று இந்தியா முழுக்க இந்தத் தண்ணீர் அதிசயங்களைக் கண்ணீர் சிந்தவைத்திருக்கின்றன. 'வொண்டர்’ என ஒரு வெளிநாட்டு எழுத்தாளர் வியக்கும் இந்த ஸ்டெப்வெல்கள் எல்லாம் சிதிலமாகியும் குப்பையாகவும் 'ப்ளண்டர்’ எனச் சொல்லும் அளவுக்கு உள்ளது.

எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தெப்பக்குளம், கிருஷ்ணன் கோயில் குளம், நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் இருக்கும் தெப்பக்குளம் என பல தெப்பக் குளங்களில் மக்கள் இன்றும் குளிக்கிறார்கள். ஆனால், சென்னையில் பெரும்பாலான தெப்பக்குளங்கள் பாசிபடர்ந்த வற்றிய நீருடன், இரும்பு வேலி போடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. 'அப்படி எதைப் பாதுகாக்கிறார்கள்?’ என்ற கேள்வி மட்டும் அந்தத் தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப்போல எழுகின்றன. சென்னையின் அதீத வெயிலால் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் வற்றிப்போய்விடும். அதனால் பராமரிக்க முடியாது என்பது 'வறட்டு’வாதம்தானா? நம் முன்னோர்கள் பராமரிக்கவில்லையா அல்லது கவனமின்மையா? தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு அல்லது கால் நனைத்துவிட்டாவது கோயிலுக்குள் நுழைவதுதானே நமது மரபு? சாமிக்குக் கோபம் வராவிட்டாலும் பரவாயில்லை... பக்தர்களுக்கு வரவேண்டாமா?