மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 டேனிஸ் கிமெட்டோ - 25

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

செப் 28, 2014. 

ஜெர்மனியின் பெர்லின் நகரத்தின் மேற்கில் அமைந்துள்ள பிராண்டென்பர்க் கேட். இது, 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டாம் ஃப்ரடெரிக் வில்லியம் கட்டிய பிரமாண்ட அமைதிச் சின்னம்.

ஒருகாலத்தில் பெர்லினின் நுழைவுவாயிலாகக் கருதப்பட்ட அந்த கேட்டின் மேல்பகுதியில், பாய்ந்து ஓடும் நான்கு குதிரைகள் உண்டு. அந்த கேட்டுக்குச் சற்று அருகில்தான் பாய்ந்து ஓடத் தயாராக ஆயிரக்கணக்கானோர் நின்றுகொண்டிருந்தனர். அது 2014-ம் ஆண்டு பெர்லின் மாரத்தான் போட்டி. முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த சர்வதேச மாரத்தான் வீரர்கள், துப்பாக்கி வெடித்த நொடியில் தங்கள் கைகளில் கட்டியிருந்த 'டிஜிட்டல் ஸ்டாப் வாட்ச்’சை முடுக்கியபடி ஓடத் தயாராக இருந்தார்கள். கறுப்புக் கால்சட்டை, கறுப்பு-வெள்ளை டிசைனில் 'ரிமிவிணிஜிஜிளி’ எனப் பெயர் குத்தப்பட்ட அடிடாஸ் பனியன், ரோஸ் நிற அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்த கென்யா வீரர் 'டேனிஸ் கிமெட்டோ’வும் கிளம்பத் தயாராக இருந்தார். துப்பாக்கி முழங்க, மாரத்தான் தொடங்கியது.

மொத்தத் தொலைவு 42.195 கி.மீ... அதாவது 26.2 மைல். ஓடும் மக்களில் பலர், சிறிது தூரம் ஆசைக்கு ஓடிவிட்டு அக்கடாவெனச் சாய்ந்துகொள்வார்கள். முறையாகப் பயிற்சிபெற்றவர்கள் மட்டுமே மொத்தத் தொலைவுக்கும் தாக்குப்பிடித்து ஓட முடியும். அதிலும் 30 கி.மீ-க்குப் பிறகே சர்வதேச வீரர்களுக்கு இடையே வலுவான 'முந்தல்-பிந்தல்’ மோதல்கள் ஆரம்பிக்கும். சில போட்டிகளில் சில காரணங்களால் சர்வதேச வீரர்களே, 'ஓட ஓட ஓட தூரம் குறையல’ எனக் களைத்து, ஒதுங்கி, போட்டியின் இடையிலேயே விலகிவிடுவதும் உண்டு. நன்கு பயிற்சிபெற்ற, அனுபவமிக்க சர்வதேச வீரர்கள், 2 மணி நேரம் சில நிமிடங்கள் தொடர்ந்து ஓடி, போட்டி தூரத்தைக் கடப்பார்கள். அது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் அல்ல. கிமெட்டோ, தன் வாழ்வில் கலந்துகொள்ளும் நான்காவது மாரத்தான் போட்டி இது. எப்பாடுபட்டாவது முழு தூரத்தையும் கடந்துவிட வேண்டும் என்பது மட்டுமே கிமெட்டோவின் அப்போதைய எண்ணம். பெர்லின் சாலைகளில் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள், விதவிதமான பதாகைகளுடன், தினுசுதினுசான அலங்காரங்களுடன் உற்சாகக் குரல் எழுப்ப, எதிலும் கவனம் சிதறாமல் ஒரே ரிதத்துடன் ஓடிக்கொண்டிருந்தார் கிமெட்டோ.

பொதுவாகவே கென்யர்களுக்கு ஓட்டம் என்பது வாழ்வியலோடு இயைந்த ஒன்று. சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு விரைவாகச் செல்ல 'கால்கள் உண்டு... பாதை உண்டு... ஓடு ராஜா’தான். வீட்டில் இருந்து வயல்களுக்கு, பள்ளிக்கு, சந்தைக்கு என, தினமும் மைல்கணக்கில் ஓடியே பழகிய கால்கள் அவர்களுடையவை. 1984-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கென்யாவின் காம்வோசோர் என்ற கிராமத்தில் பிறந்த கிமெட்டோவும், ஓடச் சளைக்காத பிறவியே. ஜேம்ஸ் - அலைஸ் தம்பதிக்கு நான்காவதாகப் பிறந்த மகன் கிமெட்டோ. ஜேம்ஸ், தன் பள்ளிக்காலத்தில் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டவர்; அலைஸும் அப்படியே. அதனால் கிமெட்டோவின் மரபணுவிலும் ஓட்டம் கலந்திருந்தது. அவனும் சிறுவயது முதலே ஓட்டத்தில் நாட்டம் வைத்தான். நான்கு கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு வெறும் கால்களுடன் ஓடிச் செல்வான். மதிய உணவுக்கு வீட்டுக்கு ஓடோடிவந்து உண்டுவிட்டு, மீண்டும் ஓடுவான். மாலையிலும் வீட்டுக்கு ஓடித்தான் வந்தான். தவிர, பள்ளி அளவிலான ஓட்டப்பந்தயங்கள் சிலவற்றில் கலந்துகொண்டு பரிசுகளால் சிரித்தான். ஆனால், வறுமையும் விதியும் சேர்ந்துகொண்டு, 'படித்துக் கிழித்தது போதும். போய் மாடு மேய்...’ எனச் சிரித்தன. ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய கிமெட்டோ ஆடு - மாடு மேய்த்தான்; தங்களுக்கு இருந்த சிறிய, சொந்த வயலில் வேலை செய்தான். சந்தைகளில், பிறர் வயல்களில் கூலி வேலைக்குப் போனான்; அன்றன்றைய பசி தீர்க்க, பணம் வேண்டும் என்பதற்காக, யார் எந்தவிதமான வேலை சொன்னாலும் செய்தான்; அதில் வயலில் எலி பிடிக்கும் வேலையும் ஒன்று. மக்காச்சோள வயல்களில் பெருத்துக்கிடக்கும் எலிகளைத் தந்திரமாகப் பிடிப்பது, தப்பித்து ஓடும் எலிகளை அதன் வேகத்தில் பாய்ந்துசென்று படக்கெனப் பிடிப்பது... கிமெட்டோ இதில் கில்லாடி.

ஒரு எலிக்கு 50 ஷில்லிங் (சுமார் 31 ரூபாய்) கிடைக்கும்.

நம்பர் 1 டேனிஸ் கிமெட்டோ - 25

பெர்லின்... செப் 28, 2014.

இந்தப் போட்டியில் வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பது எல்லாம் அப்போது கிமெட்டோவின் நினைவிலேயே இல்லை. போட்டியின் 12-வது நிமிடத்தில் பெர்லின் நகர வீதிகளில் முதல் 10 வீரர்களில் ஒருவராக ஓடிக்கொண்டிருந்தார் கிமெட்டோ. ஒரு வாரத்துக்கு முன்புகூட கைகளில் வலி. இந்தப் போட்டியில் ஓட முடியாது என்றுதான் நினைத்தார். ஆனால், கிமெட்டோவின் வெற்றிகளில் அதிக அக்கறைகொண்ட சக வீரர் ஜியோஃப்ரே முடாய் விடவில்லை. 'உன்னால் முடியும். நீ ஓடியே தீர வேண்டும்’ என ஊக்கம் கொடுத்து, ஆளைத் தேற்றி ஓடவைத்துவிட்டார். ஜியோஃப்ரேவுக்குத்தான் கிமெட்டோ மீது எவ்வளவு அன்பு!

2010-ம் ஆண்டு ஒருநாள், வீட்டில் இருந்து வயல் நோக்கி உள்ளூர்ச் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கிமெட்டோவின் தடதட ஓட்டத்தை, ஜியோஃப்ரே முடாய் கண்டார். ஜியோஃப்ரே, கென்யாவின் முன்னணி மாரத்தான் வீரர். 2008-ம் ஆண்டு முதல் சர்வதேச மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்பவர். 2008, 2009-ம் ஆண்டுகளில் தான் கலந்துகொண்ட நான்கு சர்வதேச மாரத்தான்களில் மூன்றில் முதல் இடம் பிடித்து அசத்தியவர். ஆறு அடி உயர கிமெட்டோ, சாலையில் சளைக்காமல் ஓடும் வேகம், அவரது உறுதியான கால்களின் பெண்டுலம் போன்ற லாகவ அசைவுகள் ஜியோஃப்ரேவை ஈர்த்தன.

'நீ நன்றாக ஓடுகிறாய். நான் உனக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்கிறேன்.... வருகிறாயா?’ என ஜியோஃப்ரே கேட்டபோது, கிமெட்டோவுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

பிழைப்பு? குடும்பத்தின் வருமானம்? தயங்கினார் கிமெட்டோ. ஜியோஃப்ரே, தனக்கு ஸ்பான்ஸர் செய்யும் Volare ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் ஜெரார்டிடம் கிமெட்டோவை அழைத்துச் சென்றார். கிமெட்டோ ஓடிக்காண்பித்தார். 'அட, இவன் இயற்கையான ஓட்டக்காரன்’ துள்ளிய ஜெரார்ட், கிமெட்டோவுக்கும் ஸ்பான்ஸர் செய்ய ஒப்புக்கொண்டார். எல்லாம் எளிதாக நடந்துவிட்டாலும் கிமெட்டோ வுக்குத் தயக்கம். 'குடும்பத்துக்கு என் வருமானம் முக்கியம். வேலையும் பார்த்தபடி, பயிற்சியிலும் கலந்துகொள்ளலாமா?’ என கிமெட்டோ கேட்க, அவர்கள் சம்மதித்தார்கள்.

Kapngetuny  என்ற ஊருக்கு வெளியே பயிற்சி முகாம் அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கான கென்யர்கள் தங்கி, உண்டு, உறங்கி பயிற்சி செய்யும் இடம். அங்கே சர்வதேச அளவில் மாரத்தானில் முன்னணியில் இருந்த ஜியோஃப்ரே முடாய், இம்மானுவேல் முடாய், வில்சன் கிப்ஸங் உள்ளிட்ட கென்ய வீரர்களுடன் பயிற்சிபெற இணைந்தார் கிமெட்டோ. பலவகையான உடற்பயிற்சிகள். ஓட்டம்தான் மிக முக்கியமான பயிற்சி. அதுவும் செம்மண் சாலைகள் நிறைந்த அந்த மலைப்பகுதியில் மேல் ஏறி, கீழ் இறங்கி... என தொடர் ஓட்டம். ஜியோஃப்ரே கொடுத்த ஸ்போர்ட்ஸ் ஷூவை ஆசையுடன் வாங்கினார் கிமெட்டோ. வாழ்க்கையில் முதன்முதலாக ஷூ அணிந்து ஓடும்போது, அவரது முகத்தில் அத்தனை உற்சாகம். இருந்தாலும், ஆரம்பப் பயிற்சி நாட்களில் நாக்கு தள்ளியது. 'இதெல்லாம் தேவையா?’ என உள்ளே நெகட்டிவ் குரல் ஒலிக்க, 'இதெல்லாம் உனக்கும் கிடைத்திருக்கிறது பார்’ என பாசிட்டிவ் குரலும் பதிலுக்கு ஒலித்து, கிமெட்டோவின் உத்வேகத்தைக் கூட்டியது.

பெர்லின்... செப் 28, 2014.

மாரத்தானைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அதிவேகமாக ஓடுவதும் சரிப்படாது. இறுதி மைல்களில் வேகத்தைக் கூட்டிக்கொள்ளலாம் என்பதும் வேலைக்கு ஆகாது. சீரான வேகமே சிறப்பான முடிவைத் தரும். அதாவது முதல் 5 கி.மீ-ஐ 14.5 நிமிடங்களில் கடந்தால், இறுதி 5 கி.மீ-யும் அதே வேகத்தில் கடக்கும் தெம்பு வேண்டும். அப்படிப்பட்ட சீரான வேகத்தில்தான் முதல் 15 கி.மீ-ஐ கடந்தார் கிமெட்டோ (14:42,14:42,14:46). அப்போது ஏழு கென்ய வீரர்களும், இரண்டு எத்தியோப்பிய வீரர்களுமே முன்னிலை பெற்றிருந்தனர். இம்மானுவேல் முதலாவதாக வந்துகொண்டிருந்தார். கிமெட்டோ அவருக்குப் பின். ஜியோஃப்ரே போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

யிற்சி முகாமில் ஜியோஃப்ரேதான் கிமெட்டோவின் முதல் குரு. 2010-ம் ஆண்டில் கிமெட்டோ, ஜியோஃப்ரேவின் ஆலோசனைப்படி முதலில் 10 கி.மீ மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். வெற்றிகள் ருசித்தன. 'நீ முழு நேரமும் பயிற்சி எடு. நாங்கள் மற்றதைப் பார்த்துக்கொள்கிறோம். கவலைப்படாதே’ குடும்பத்தினர் ஊக்கம் கொடுத்தனர். மனதில் பெரிய பாரம் குறைந்ததால், கால்கள் மேலும் வேகமாக ஓடத் தொடங்கின. தினம் ஐந்து வேளை சத்தான உணவு. வாரம் ஒன்றுக்கு சுமார் 250 கி.மீ ஓடும் அளவுக்குக் கடுமையான பயிற்சிகள். வாரத்தில் ஏழு நாட்களும் ஜூனியர் - சீனியர் பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பயிற்சிதான். இளம்வயதில் இருந்தே மாரத்தான் பயிற்சியில் இறங்கி, கொஞ்சம்

கொஞ்சமாக முன்னேறி இலக்கை மூன்று மணி நேரங்களுக்குள் கடப்பது என்பதே பெரிய விஷயம். ஆனால், தனது 26-வது வயதில் மாரத்தான் பயிற்சியை ஆரம்பித்த கிமெட்டோ, மிகக் குறைந்த காலத்திலேயே முழுத் தொலைவையும் களைப்பு இல்லாமல், தொய்வு இல்லாமல், உடல் உறுதியுடன் கடக்கப் பழகினார்... அதுவும் 2:10 மணி நேரத்துக்குள்ளாகவே.

பெர்லின்... செப் 28, 2014.

கிமெட்டோ தனது அடுத்த 5 கி.மீ-ஐ 14:26 நிமிடங்களிலேயே கடந்தார். 14:32, 14:30 என்ற சீரான வேகத்தில் அடுத்தடுத்த 5 கி.மீ-களைக் கடந்தார். 30 கி.மீ கடந்த பிறகு, இறுதி 12.195 கி.மீ-ஐ கடப்பதே ஆகப்பெரும் சவால். களைப்பு ஆட்கொள்ளும். இதற்கு மேலும் உழைக்க முடியாது என கால்கள் தள்ளும். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அப்போதுதான் ஓட ஆரம்பித்ததுபோல, மேலும் நொடிகளைச் சேமிக்கும் வேகத்தில் செவ்வனே ஓட வேண்டும். ஆம், அதற்குமேல் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும், எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நொடியும் அதிமுக்கியம். முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டால் பரிசு; பணம்; பலன். உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியும் கிட்டும். ஒரு சில நொடிகளில் அவற்றைத் தவறவிட்டால், மாரத்தானை ஓடிமுடித்த வெற்றுத் திருப்தியுடன் நடையைக் கட்ட வேண்டியதுதான்.

2011-ம் ஆண்டில் நைரோபியில் நடந்த அரை மாரத்தானில் (தொலைவு 21.0975 கி.மீ) கலந்துகொண்ட கிமெட்டோ முதலாவதாக வந்தார் (01:01:30). முதல் வெற்றி. அவர் சம்பாதித்த முதல் பெரும் பரிசுத்தொகையும் அதுவே. அடுத்து துபாயில் நடந்த அரை மாரத்தானிலும் கிமெட்டோவுக்கே முதல் இடம் (01:00:40). 2012-ம் ஆண்டு பெர்லினில் நடந்த அரை மாரத்தான் தொலைவை 1 மணி நேரத்துக்குள்ளாகக் கடந்து (00:59:14) அசரடித்தார்.

2012-ம் ஆண்டில் கிமெட்டோ கலந்துகொண்ட போட்டி  Big 25 Berlin.. பந்தயத் தொலைவு 25 கி.மீ. 2010-ம் ஆண்டில் சாமுவேல் என்ற கென்ய வீரர் அந்தத் தொலைவை 01:11:50 மணி நேரத்தில் கடந்து, அந்தப் பிரிவில் உலக சாதனை படைத்திருந்தார். 2012-ம் ஆண்டில் கிமெட்டோ 32 நொடிகள் முன்னதாகக் கடந்து (01.11.18) புதிய உலக சாதனை படைத்தார். சர்வதேசக் களத்தில் வந்த இரண்டாவது ஆண்டிலேயே உலக சாதனை. கிமெட்டோ, தான் மாரத்தானுக்குத் தயாராகிவிட்டதாக அழுத்தமாக நிரூபித்த தருணம் அது.

பெர்லின்... செப் 28, 2014.

கிமெட்டோ 30-35-க்கு இடைப்பட்ட 5 கி.மீ தூரத்தை வெறும் 14 நிமிடங்கள் 9 நொடிகளில் கடந்து அசத்த, பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. இம்மானுவேல் சில நொடிகள் தாமதத்தில் இரண்டாவது இடத்துக்குப் பிந்தியிருந்தார். கென்யாவில் கிமெட்டோவின் தாயார், போட்டி நடக்கும் அந்த நேரத்தில் சர்ச்சுக்குள் நுழைந்திருந்தார். அவரது உதடுகள் பிரார்த்தனைகளை முணுமுணுத்தன. சாலையில் ஓடிக்கொண்டிருந்த கிமெட்டோவின் இதயம், நிமிடத்துக்கு 160 முறை துடித்துக் கொண்டிருந்தது.

2012-ம் ஆண்டில் இதே பெர்லின் சாலைகளில்தான் தனது முதல் சர்வதேச முழு தூர மாரத்தான் பயணத்தை ஆரம்பித்தார் கிமெட்டோ. அப்போதும் இறுதி மைல்களில் இரண்டாம் இடத்தில் வந்துகொண்டிருந்த கிமெட்டோவைத்தான் அத்தனை கண்களும் ஆச்சர்யத்துடன் பார்த்தன. ஜியோஃப்ரே முதல் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தார். அவருக்கு அது மிக முக்கியமான போட்டி. காரணம், அமெரிக்காவின் பாஸ்டனில் 2011-ம் ஆண்டில் நடந்த மாரத்தானில் ஜியோஃப்ரே பந்தயத் தொலைவை 02:03:02-ல் கடந்து உலகை வாய்பிளக்க வைத்தார். மாபெரும் சாதனைதான். ஆனால், பாஸ்டன் ஓட்டப்பாதையில், சாலைகள் பெரிய வளைவுகளோ, திருப்பங்களோ இல்லாமல் பெரும்பாலும் நேராகக் காணப்படும். ஆக, சர்வதேசத் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பு (IAAF)  இந்தப் போட்டியை மாரத்தான் விதிகளுக்கு உட்பட்டதாகக் கருதாமல், உலக சாதனை என அங்கீகரிக்க மறுத்துவிட்டது. எப்படியாவது ஓர் உலக சாதனை படைத்துவிட வேண்டும் என்ற வெறியில் 2012-ம் ஆண்டு பெர்லினில் அனுபவஸ்தர் ஜியோஃப்ரே ஓடிக்கொண்டிருக்க, 'கத்துக்குட்டி’ கிமெட்டோவும் அவரை நெருங்கியிருந்தார். பிராண்டென்பர்க் கேட்டை இருவரும் தோளோடு தோள் உரசவே கடந்தனர். இறுதி 400 மீட்டரில், ஜியோஃப்ரே முதலில்; ஓர் அடி பின்னால் கிமெட்டோ. எந்த நொடியில் கிமெட்டோ, ஜியோஃப்ரேவை முந்தப்போகிறார் என அனைவரும் படபடப்புடன் காத்திருக்க, எல்லையை ஜியோஃப்ரேவே முதலில் கடந்தார் (02:04:15). மிகச் சரியாக ஒரு நொடி தாமதத்தில் கிமெட்டோ இரண்டாவதாகக் கடந்தார். இருவரும் மூச்சுவாங்க மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டார்கள். (ஹைலைட்ஸ் வீடியோ: www.youtube.com/watch?v=wOU73LSIXXI) ஓர் அறிமுக மாரத்தான் வீரர் இத்தனை குறைவான நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்தவிதத்தில், கிமெட்டோ புதிய உலக சாதனை படைத்தார்.

கிமெட்டோவால் அந்தப் போட்டியில் ஜியோஃப்ரேவை வீழ்த்தி நிச்சயம் முதல் இடம் பிடித்திருக்க முடியும். ஆனால், ஜியோஃப்ரேதான் கிமெட்டோவுக்கு வாய்ப்பு அளித்தவர். அந்த மரியாதை ஒரு காரணம். தவிர, ஜியோஃப்ரே ஜெயித்தால் அவருக்கு 5 லட்சம் டாலர் பணம் கிடைக்கும். அவருக்குக் கிடைத்தால் தன்னைப்போல இன்னும் பலருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பார் என கிமெட்டோ நினைத்தார். அதனாலேயே விட்டுக்கொடுத்தார் என விமர்சனங்கள் எழுந்தன. பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்ட, மைக்கைக் கண்டாலே பேசத் திணறுகிற கிமெட்டோ இதற்குப் பதில் சொல்லவில்லை. மேனேஜர் ஜெரார்ட், 'இதில் எந்த டீலும் இல்லை’ என்றார். ஜியோஃப்ரே அழுத்தமாகச் சொன்ன வார்த்தைகள், 'கிமெட்டோ என்னைவிடச் சிறந்த ஓட்டக்காரர். வருங்காலத்தில் நிச்சயம் புதிய உலக சாதனைகள் படைப்பார்!’

2013-ம் ஆண்டில் இரண்டே இரண்டு மாரத்தான் போட்டிகளில் மட்டுமே கிமெட்டோ கலந்துகொண்டார். இரண்டிலும் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. டோக்கியோவில் 02:06:50. சிகாகோவில் 02:03:45. அதில் ஏழு நொடிகள் தாமதமாக வந்த சக கென்ய வீரர் இம்மானுவேல், இரண்டாம் இடம் பிடித்தார்.

பெர்லின்... செப். 28, 2014.

இப்போதும் கிமெட்டோவைவிட, சுமார் 7 நொடிகள் தாமதத்தில்தான் இம்மானுவேல் (இரண்டாம் இடத்தில்) வந்துகொண்டிருந்தார். 2012-ம் ஆண்டில் இதே இடத்தில் அறிமுகமான கிமெட்டோவால், 2013-ம் ஆண்டில் பெர்லின் பந்தயத்தில் கலந்துகொள்ள முடியவில்லை  (அந்தப் போட்டியில் சக கென்ய வீரரான வில்சன் கிப்ஸங், 02:03:23 நேரத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார்.) 01:56:26 என கடிகாரம் நேரம் காட்டியபோது கிமெட்டோ 40 கி.மீ-ஐ கடந்திருந்தார். இன்னும் 2.195 கி.மீ மட்டுமே. கிமெட்டோவின் தடதடக்கும் வேகம் 'புதிய உலக சாதனை’ எதிர்பார்ப்பைப் பார்வையாளர்கள் இடையில் ஏற்படுத்தியது.

ரு மணி நேரத்தில் மூன்று லிட்டர் வியர்வை வெளியேற, இதயத்துடிப்பு காதில் எகிறிக் கேட்க, கிமெட்டோ நொடிக்கு நொடி மூன்று அடிகள் வைத்து முன்னேறிக்கொண்டிருந்தார். கிமெட்டோவின் நுரையீரல் ஒவ்வொரு மூச்சுக்கும் அரை கேலன் கொள்ளளவு காற்றை இழுத்து வெளிவிட்டுக் கொண்டிருந்தது. கிமெட்டோவின் தொடர்வேகத்தில்  உடலின் ஆற்றல் கரைந்துகொண்டே வர, 'போதும் என்னை விட்டுவிடு’ என இதயமும் நுரையீரலும் கால்களும் கெஞ்சிக்கொண்டிருக்க, 'விடாதே... இன்னும் வேகமாகப் போ’ என மூளை கட்டளையிட்டுக்கொண்டிருந்தது.

கிமெட்டோ 41-வது கி.மீ-ஐ 2:56 நிமிடங்களில் கரைத்தார். பிராண்டென்பர்க் கேட்டை அவர் கடந்தபோது, 2 மணி 2 நிமிடங்கள். இன்னும் சுமார் 350 மீட்டரே பாக்கி. மாரத்தானின் மொத்தத் தொலைவை 2 மணி 3 நிமிடங்களுக்குக் குறைவாகக் கடப்பது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதே 'நிபுணர்களின்’ கருத்து. கிமெட்டோ அந்த நேரக் கணக்கை எல்லாம் யோசிக்கவில்லை. கண்களில் தெரியும் எல்லைக்கோட்டை நோக்கி எக்ஸ்பிரஸாக வந்துசேர்ந்தார். முதல் இடம். அப்போது கடிகாரம் காட்டிய நேரம் 02:02:57. அல்லோலகல்லோல உலக சாதனை. (போட்டியின் முழு வீடியோ:  www.youtube.com/watch?v=OaSLEU2Xe4Y)
 

அத்தனை ஆற்றலும் கரைந்த நிலையிலும் கிமெட்டோ மூச்சு வாங்க, கெத்தாக நிற்க, டி.வி-யில் போட்டியைப் பார்த்துக்கொண்டி ருந்த கிமெட்டோவின் மனைவி கரோலின், 'ஆனந்த அதிர்ச்சியில்’ மயங்கி விழுந்தார். இத்தனை பெரிய சாதனை படைத்த பிறகும் எந்தவிதக் கொண்டாட்டமும் இல்லாமல் கிமெட்டோ, தனக்கு 16 நொடிகள் பின்னால் வந்த இம்மானுவேலைக் கட்டிப்பிடித்துப் பாராட்டிக் கொண்டிருக்க, கென்யாவில் அந்த சர்ச்சில் விஷயம் கேள்விப்பட்ட கிமெட்டோவின் அம்மா ஆனந்தக் கூத்தாடினார்.

கென்யாவில் கொண்டாட்டங்கள். உலகம் முழுக்கச் செய்திகளில் கிமெட்டோ புராணம். 2 மணி 3 நிமிடங்களுக்குக் குறைவாக இனி ஒருவரால் மாரத்தான் தொலைவைக் கடக்கவே முடியாது. அது மீண்டும் நிகழ்ந்தால் அதைச் சாதித்ததும் கிமெட்டோவாகத்தான் இருக்க முடியும் என்பது சில விமர்சகர்களின் அழுத்தமான கருத்து. ஆனால், கிமெட்டோவோ அடுத்த தலைமுறை கென்ய வீரர்களை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கிவிட்டார். 'சரியான நேரத்தில் சரியான சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பும் பயிற்சியும் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு முக்கியம் என எனக்குத்தான் தெரியும். அப்போதுதான் வருங்காலத்தில் புதிய சாம்பியன்கள் கிடைப்பார்கள். மேலும் பல புதிய உலக சாதனைகளும் நிகழும்!’

கென்யா ரகசியம்!

90-களுக்குப் பிறகு மாரத்தான் ஓட்டத்தில், கென்யர்களே ஆதிக்கம் (அடுத்து எத்தியோப்பியர்கள்) செலுத்திவருகிறார்கள். ஐந்தில் நான்கு உலக சாதனைகளைப் படைத்தவர்களும் கென்யர்களே. இது எப்படி சாத்தியம் எனப் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன. கென்யர்களின் உடல் அமைப்பு, பெண்டுலம் போல வீசி ஓடும் நீண்ட கால்கள், சிறு வயதில் இருந்தே எதற்கெடுத்தாலும் ஓடியே தீர வேண்டிய வாழ்க்கைமுறை, வறுமையை வெல்ல தடகளத்தில் ஓடித்தான் சம்பாதிக்க முடியும் என்ற சூழ்நிலை... இப்படி பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 'உகாலி இஸ் தி சீக்ரெட்’ என சிம்பிளாகச் சிரிக்கிறார்கள் கென்யர்கள். உகாலி - மக்காச்சோள, சோள, தினை மாவுகள் கலந்து செய்யப்படும் கென்யர்களின் பாரம்பர்ய முக்கிய உணவு.

நம்பர் 1 டேனிஸ் கிமெட்டோ - 25

கிமெட்டோவின் வார்த்தைகள் மிக முக்கியமானவை. 'மேற்கத்திய வீரர்கள் பயிற்சியில் தாங்கள் ஓடும் ஒவ்வொரு மீட்டருக்கும் நொடிக் கணக்கு புள்ளிவிவரங்கள் எல்லாம் பார்ப்பார்கள். நாங்கள் ஓடும் மைல்களைக்கூட கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. ஓட வேண்டும் அவ்வளவுதான். ஓடி முடித்த பின் போட்டியை உட்கார்ந்து ஆராய்வது அவர்கள் வழக்கம். ஓடும்போது முன்னால் ஓடுபவர்களையும் கடிகாரத்தையும் அவ்வப்போது பார்த்து வேகத்தை அதிகரித்துக்கொள்வது என் வழக்கம்... அவ்வளவுதான்.’

'ஊக்க’ மருந்து கையில் எடேல்!

நம்பர் 1 டேனிஸ் கிமெட்டோ - 25

கறுப்பினத்தவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு விரைவாக ஓட முடிகிறது என்ற சந்தேக போதை  வெள்ளை இனத்தவருக்கு எப்போதும் உண்டு. அதனால் கென்ய, எத்தியோப்பிய வீரர்கள் மீது அடிக்கடி 'ஊக்க மருந்து’ குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது உண்டு. அதில் சில 'பாசிட்டிவ்’ முடிவுகளும் வந்து, வீரர்கள் மீது தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜியோஃப்ரே, கிமெட்டோ உள்ளிட்ட கென்ய முன்னணி மாரத்தான் வீரர்கள் மீதும் ஊக்க மருந்து சர்ச்சை அடிக்கடி எழுப்பப்படுகிறது. 'எத்தனை முறை வேண்டுமானாலும் என்னைப் பரிசோதியுங்கள். ஒரு முறை பாசிட்டிவ் என நீங்கள் நிரூபித்தால் கடவுள் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும்’ என்பது ஜியோஃப்ரேவின் ஸ்டேட்மென்ட். 'ஊக்கமது கைவிடேல்... ஊக்க மருந்து கையில் எடேல்’ என்பதே கிமெட்டோவின் பாலிசி!