Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 9

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

தலைவனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் கவிதைக்குள் கொட்டிக் கிடக்கும் வரலாற்றுச் செய்திகள் இவை.

லகம் எங்கும் தங்களின் ஆட்சியை, அதிகாரத்தை நிலைநிறுத்தத் துடித்த ரோமானியர்கள், கிழக்கு திசையிலும் மேற்கு திசையிலும் மின்னலைப்போல வாளைச் சுழற்றி முன்னேறினர். ஆண் - பெண் இருபாலரும் யுத்தமுனைக்கு அணிவகுக்கப் பயிற்றுவிக்கப் பட்டனர். படையைத் திரட்டுவதிலும், வெற்றிக்குப் பின் அதைக் கலைப்பதிலும் வியக்கத்தகுந்த ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தனர். 

அனைத்துத் திசைகளிலும் பிற நாடுகளால் சுற்றிவளைக்கப்பட்ட நிலப்பரப்பைக்கொண்ட அவர்களுக்கு, தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவே பெரும் சாமர்த்தியமும் அடங்காத வீரமும் தேவைப்பட்டன. அவை, அவர்களுக்கு எண்ணற்ற வெற்றிகளை ஈட்டிக்கொடுத்தன; செல்வ வளத்தை கணக்கு இல்லாமல் கொண்டுவந்து சேர்த்தன. அந்த அளவற்ற செல்வச்செழிப்பு அவர்களின் படையை மேலும் வலிமையாக்கியது. சிந்துசமவெளி நாகரிகக் காலத்தில் இருந்து, ஒப்பற்ற நிலப்பகுதியாக வர்ணிக்கப்படும் இந்திய நிலப்பரப்பை, தங்களது எல்லைக்குள் கொண்டுவந்துவிடத் துடிக்கும் கனவு,  கிரேக்கர்களை ஆட்டிப்படைத்தது. அந்தப் பெருங்கனவை அரங்கேற்ற அலெக்ஸாண்டர் தலைமையிலான படை, கிழக்கு திசையில் நகரத் தொடங்கியது. மனிதர்களால் ஏற்படுத்தப்படும் நில அதிர்வை அந்தப் படைகள் ஏற்படுத்தின. வழிநெடுக நாடுகளை வகுந்துகொண்டு அந்தப் படை முன்னேறியது.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

வரலாற்றின் பாதையைத் தீர்மானித்ததில் ஒவ்வொரு காரணிக்கும் ஒவ்வொருவிதமான பங்கு இருந்துள்ளது. ரோமானியப் படையின் வெற்றிக்குக் காரணங்கள் பல கூறப்பட்டாலும், அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது அவர்கள் வடிவமைத்த ஈட்டிகள். ஆதிகாலம் தொட்டு மனிதன் பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று ஈட்டி. விலங்குகளை வேட்டையாடத் தொடங்கி,  பின்னர் அதைப் போர் ஆயுதமாக, வலிமையான கைப்பிடியோடு கூர்முனை கொண்ட ஆயுதமாக உருமாற்றினர்.  

உலகம் எங்கும் தொடக்கக்கால அரசுகளின் வலிமை மிகுந்த போர் ஆயுதமாக ஈட்டிகளே இருந்தன. போர்முனையில் ரோமானியர்கள் அடைந்த வெற்றிகள், அதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் நிற்கும்படி அமைந்ததற்கு முக்கியக் காரணம், அவர்கள் வடிவமைத்த ஈட்டிகள். பிறநாட்டு வீரர்கள் 8 அடி அல்லது 10 அடி உயரம் உள்ள ஈட்டிகளைத்தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தனர். அந்த ஈட்டிகள்தான் அதுவரை போர்க்களத்தின் வெற்றி-தோல்விகளைத் தீர்மானித்தன.

ரோமானியர்கள் புதிய ஈட்டி ஒன்றை வடிவமைத்தார்கள். அதன் நீளம் 21 அடி. அதுவரை உலக வரலாற்றில் இல்லாத ஒரு புதிய வடிவம் தாங்கிய ஈட்டியுடன் அவர்கள் யுத்தக் களம் புகுந்தனர். பாய்ந்துவரும் ரோமானியப் படைவீரனின் குதிரைக்கு, 21 அடிக்கு முன்னாலே எதிரியின் நெஞ்சுக்குள் ஈட்டிமுனை பாய்ந்து உள்ளே இறங்கியது. எதிரிப்படையின் குட்டையான ஈட்டிகளுக்கு எந்தவிதமான வேலையும் வைக்காமல், மாசிடோனியப் படை போர்க்களத்தின் தீர்ப்பை எழுதிக்கொண்டிருந்தது. ரோமானியர்கள் ஈட்டி கொண்டு ஈட்டிய வெற்றி புதிய வரலாற்றை எழுதியது.

பழைய சோவியத் யூனியன் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆர்க்கிமேனிடிய பேரரசனான மூன்றாம் டாரியஸைத் தோற்கடித்து, கி.மு 327-ம் ஆண்டில் ஹிந்துகுஷ் மலையைக் கடந்து, 21 அடி நீளம் உள்ள ஈட்டிகள் முன்களத்தில் சீறிப்பாய, இந்தியாவுக்குள் நுழைந்தான் அலெக்ஸாண்டர்.

அவனது படையெடுப்பு பற்றி இந்திய ஆதாரங்கள் எதிலும் குறிப்புகள் இல்லை. கிரேக்கர்கள் எழுதிய குறிப்புகளைக் கொண்டுதான் இந்தப் படையெடுப்பை அறிய முடிகிறது. ஆனால், இந்த ஆதாரம்தான் இந்திய நிலப்பரப்பின் வரலாற்றுரீதியான காலத்தை உறுதிப்படுத்துகிறது. ஹிந்துகுஷ் மலையில் கி.மு 327-ம் ஆண்டு என்ற காலத்தை அலெக்ஸாண்டர் கொடி நட்டதில் இருந்து, இந்திய வரலாறு முன்னும் பின்னுமாக இரு கூறுகளாகப் பிரிகிறது.

மலையைக் கடந்து இந்திய நிலப்பரப்பில் நுழையும் வரை அவன் இந்தியப் போர்க்களம் இவ்வளவு தீவிரத்தோடு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. பல மன்னர்கள் விடாப்பிடியான போரை இறுதி வரை நடத்தினர். அவர்களின் ஆவேசம் மிகுந்த தாக்குதல்கள் கடைசி வரை குறையவே இல்லை. பல இனக்குழுத் தலைவர்கள் அலெக்ஸாண்டர் படையுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தயாராக இல்லை. தட்சசீலத்தை ஆண்ட மன்னன் அம்பி, அவனோடு கைகோத்தான். வடமேற்கு இந்தியாவின் வலிமை மிகுந்த அரசனாக விளங்கிய பௌரவன் (கிரேக்க மொழியில் போரஸ்) ஜீலம் மற்றும் ரவி ஆற்றுக்கு இடையிலான நிலப்பரப்பை ஆண்டவன். இவன் அலெக்ஸாண்டருடன் நேரடியாகப் போரிட முடிவுசெய்தான். இந்தப் பெரும் போரின் இறுதியில் பௌரவன் தோற்கடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், அவன் மீது உருவான நல்ல எண்ணத்தால் அலெக்ஸாண்டர் அவனை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினான். பின்னர் பியாஸ் நதியைக் கடப்பதற்கு பலம் திரட்டினான். நதிக்கு அப்பால் இருக்கும் அரசனையும் அவனது படை வலிமையையும் அவனது செல்வச்செழிப்பையும் பற்றித் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்தான்.

நதியைக் கடந்த பெரும் நிலப்பரப்பான மகதத்தை நந்த வம்ச அரசன் உக்கிரசேனன், பாடலிபுரத்தைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி செய்துவந்தான். கங்கை நதிக்கும் சோணை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சிசெய்த அவனைப் பற்றிய தகவல்களைக் கிரேக்க வரலாற்றாளர்கள் தியடோரசும், குர்ஸியஸ் ரூபஸும் அலெக்ஸாண்டருக்கு வழங்கினர்.

காலாட்படையினர் இரண்டு லட்சம், குதிரைப் படையினர் 20 ஆயிரம், போர் தேர்கள் 2,000, போர் யானைகள் 4,000... இதுபோக நந்தர்களிடம் பெரும் செல்வக் குவியல் இருந்ததாக அவர்களின் குறிப்புகள் கூறுகின்றன.

எதிரிப் படையின் எண்ணிக்கை, அலெக்ஸாண்டரின் வீரர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. முடிவற்ற போருக்கு அவர்கள் முடிவுகாண முயன்றனர். தனது வீரர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை உணர்ந்த அலெக்ஸாண்டர் வேறு வழி இல்லாமல், தனது அடுத்தகட்டத் தாக்குதலைக் கைவிட்டுப் படையைத் திருப்பினான். ஆனால், அவன் திரும்பிப்போன வழி ஒன்றும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இந்திய பூர்வகுடிகள் விடாது தாக்குதல் தொடுத்தனர். சிறந்த வில்லாளன் ஒருவன் குறிவைத்து எய்த அம்பு, கேடயத்தையும் மார்புக் கவசத்தையும் துளைத்துக்கொண்டு அலெக்ஸாண்டரின் விலா எலும்புக்குள் இறங்கியது. இரண்டு ஆண்டுகள் இந்திய நிலப்பரப்பில் அலெக்ஸாண்டர் நடத்திய யுத்தத்தின் கதை, விலா எலும்புக்குள் இறங்கிய அம்பின் தீராவலியோடு அவனுக்கு விடை கொடுத்தது. இந்தக் கதை இப்படி இருக்க, இந்திய நிலப்பரப்பின் தென்கோடியில் நடந்த கதை ஒன்று உள்ளது.

வைகை நதி நாகரிகம்
வைகை நதி நாகரிகம்

அவன் இருப்பிடம், வைகை ஆற்றங்கரையா அல்லது காவிரியின் கரையா... இல்லை பெரியாற்றின் ஓரத்தில் குடியிருந்தானா எனத் தெரியவில்லை. அவன் வணிகம் செய்ய

வடஇந்தியாவை நோக்கித் தரைமார்க்கமாகப் புறப்பட்டுப் போகிறான். அந்தத் தரைவழிப் பாதை எவ்வளவு ஆபத்து நிரம்பியது என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் வணிகர்கள் பெரும்பொருளோடே நிலப்பரப்பைக் கடக்க வேண்டியிருந்தது. தென்கோடியில் இருந்து வடதிசையில் அமைந்த பேரரசின் எல்லைக்கு, அவன் வியாபாரம் நிமித்தம் போனான். போனவன் திரும்புவதாகச் சொல்லிச் சென்ற காலம் கடந்த பின்பும், அவன் வந்து சேரவில்லை.

அவனது வருகையை எதிர்நோக்கி வீட்டில் காத்திருக்கும் தலைவிக்கு, காலம் செல்லச் செல்ல வேதனை அதிகமாகிறது. தனிமையும் பிரிவும் வாட்டுகின்றன. இன்னொரு பக்கம் அவனுக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்ற பதற்றம் அவளைத் தொற்றுகிறது. அவள் தன் தோழியிடம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துகிறாள்.

தலைவியின் மனம் அறிந்த தோழி சொல்கிறாள்... 'புலிகளை தனது தந்தத்தால் நிலம் பள்ளம் ஆகும்படி குத்திக் கொல்லும் யானைகள் அலைந்து திரியும் காட்டைக் கடந்து, நம் தலைவன் சென்றுள்ளான். ஆனாலும் நீ இங்கு அனுபவிக்கும் துயரத்தை விளக்கி, அவருக்குத் தூது அனுப்பியுள்ளோம். தூதுவன் இந்தச் செய்தியை அவரிடம் சொன்னால் போதும். அதன் பிறகு அவர் அங்கு தங்கியிருக்க மாட்டார். பாடலிபுரத்தை ஆளும் நந்தர்கள் குவித்துவைத்துள்ள பெருஞ்செல்வமே கிடைத்தாலும், அவர் அங்கு இருக்க மாட்டார்’ என்கிறாள். இன்னோர் இடத்தில் நந்தர்களின் படை வெல்லும் ஆற்றலையும் பெரும் செல்வத்தைப் பற்றியும் தோழி, தலைவிக்கு எடுத்துரைக்கிறாள்.

வடஇந்தியாவில் முதலில் அமைந்த பேரரசான மகதத்தை நந்த வம்சத்தினர் 28 வருடங்கள் மட்டுமே ஆண்டனர் (கி.மு 345-317). அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்தபோது, பாடலிபுரத்தைத் தலைமை இடமாகக்கொண்ட நந்தவம்சத்தினரின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அவர்களின் படை பலத்தையும், ஆற்றைக் கடக்க வேண்டியதில் இருந்த அபாயத்தையும் கணக்கில்கொண்டு அலெக்ஸாண்டர் தனது தாக்குதலைக் கைவிட்டுப் பின்னோக்கித் திரும்பினார்.

ஆற்றின் அக்கரையில் அமைந்திருந்த நந்த வம்சத்தினரைப் பற்றி, உலகையே உலுக்கிய ஒரு மாமன்னனுக்கு அவன் உடன் வந்த வரலாற்றாளர்கள் சேகரித்துச் சொன்ன செய்தியை, தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு, வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த சாமானியப் பெண்ணான அவளின் தோழி சொல்லிக்கொண்டிருக்கிறாள். இது எப்படி நடந்தது?

ஏதோ பக்கத்து ஊரைப் பற்றிய செய்தியைச் சொல்வதைப்போல நந்த வம்சத்துப் படை பலத்தையும் செல்வச் செழிப்பையும் மனிதர்கள் பேசித் திரிந்திருக்கிறார்களே... எப்படி? பெரும்தொலைவுக்கு அப்பால் நிகழ்ந்த அரசியல் செய்திகள், எப்படி அவ்வளவு தொலைவைக் கடந்து மிக விரைவாக தென்னகத்துக்கு வந்து சேர்ந்தன?

வடக்குக்கும் தெற்குக்குமான இணைப்பு என்பதைவிட, வலிமை மிகுந்த இரு நாகரிகத்துக்கான இணைப்பாகத்தான் இது இருந்துள்ளது. அதனால்தான் இந்தச் செய்திகள் அதன் சமகால உதாரணமாக, அன்றாட வாழ்வின் துயரங்களுக்கு இடையில் மிக இலகுவாகப் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்துள்ளன. அலெக்ஸாண்டருடன் வந்த தியடோரசும், குர்ஸியஸ் ரூபஸும் சொன்ன செய்திகளை, அதே காலகட்டத்தில், தான் எழுதிய கவிதைகளில் சொல்கிறார் மாமூலனார்.

மாமூலனார் எழுதிய கவிதைகள் எத்தனையோ? சில நூறு ஆண்டுகளுக்குப் பின் அதைத் தொகுத்தவர்கள் கழித்துக்கட்டியது எத்தனையோ? ஆனால் இத்தனையையும் கடந்து இன்று நமக்குக் கிடைக்கும் கவிதைகளில் காணக்கிடைக்கும் வரலாற்றுத் தகவல்கள் இவை. அவை, புறவாழ்வைப் பற்றிப் பேசும் கவிதைகள்கூட அல்ல; அகவாழ்வைப் பற்றிப் பேசும் கவிதைகள். தலைவனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் கவிதைக்குள் கொட்டிக் கிடக்கும் வரலாற்றுச் செய்திகள் இவை.

கிரேக்கர்கள் எழுதிவைத்த எழுத்துக்களின் வழியேதான் மேற்கு உலகு, இந்தியாவின் வரலாற்றைத் தெரிந்துகொண்டது. அந்தக் கிரேக்கர்கள் அறிந்திராத வரலாறாக இந்தியாவின் தென்கோடியில் ஒரு நாகரிகம் செழித்தோங்கி இருந்தது.

அடுத்த சில பத்து ஆண்டுகளில் அவர்கள் இதை அறிய நேர்ந்தபோது...

- ரகசியம் விரியும்