மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 200

அனுபவங்கள் பேசுகின்றன!

பெண்ணை வாழவிடுங்கள்..!

ன் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் கணவர், திருமணமான மூன்றே வருடத்தில் இறந்துவிட்டார். கைக்குழந்தையோடு அம்மா வீட்டில் தஞ்சமடைந்துவிட்டாள் அந்தப் பெண்! ஒருமுறை அவளுடைய அம்மாவிடம், ‘`உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்துடுங்க’’ என்றேன். உடனே அவர், ``என்ன பேச்சு பேசற நீ..! டவுனுக்காரியா இருந்தா எதை வேணும்னாலும் பேசிடுவியா? இது கிராமம்... ஊரு உலகம் என்ன சொல்லும்..? எம்பொண்ணு ஒண்ணும் அப்படிப்பட்டவளில்ல’’ என்று கோபப்பட்டதோடு, என் மாமியார், மாமனாரிடமும் புகார் கூறிவிட்டுச் சென்றார்.

சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது வீட்டு வாசலில் ஒரே சத்தம். எட்டிப் பார்த்தபோது அந்த இளம்பெண்ணும் அவளின் தாயாரும் ஒரு பக்கம் நின்றிருக்க, எதிர்பக்கம் ஒரு கூட்டமே தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டே அந்தப் பெண்ணையும், அவள் தாயாரையும் அடிக்கத் தயாராகிவிட்டது. என் மாமனார் தலையிட்டு சமரசம் பேச முற்பட்டும் முடியாததால், பெண்ணையும் அவளின் தாயாரையும் கேட்டுக்குள் இழுத்துவிட்டு கேட்டை பூட்டிவிட்டார். இல்லையேல், ஏதேனும் அசம்பாவிதம் கண்டிப்பாக நடந்திருக்கும். பெண்ணின் தாயை விசாரித்தபோது, அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாளாம்... அதுவும் இன்னொரு பெண்ணின் கணவர் மூலமாக! அவள் உறவினர்கள் ஒன்று சேர்ந்து இவளை அடிக்க வந்துள்ளனர். இது எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை.

கணவனை இழந்த இளம் பெண்களுக்கு அவர்களின் குடும்பமே ஆதரவாக இருந்து திருமணம் செய்து வையுங்கள். கணவனோடு வாழ முடியவில்லையே என்ற ஏக்கம், பாதுகாப்பற்ற மனநிலையில் சிலர் தடுமாறிவிடுகிறார்கள். அதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? தயவுசெய்து இதுபோன்ற பெண்களின் தாய்மார்கள் நிதர்சனத்தை உணர்ந்து செயல்படுங்கள்.

- நங்கை.காவியசேகரன், திருச்சி

அனுபவங்கள் பேசுகின்றன!

இப்படியும் செய்யலாமே..!

டி வெள்ளியன்று கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில பெண்கள் வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை தட்டில் வைத்து சுமங்கலிப் பெண்களுக்கு கொடுத்தார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் பெண்களை வீட்டுக்கு அழைத்து ஆடி வெள்ளி, தை வெள்ளியில் எல்லாம் வெற்றிலை - பாக்கு வைத்துக் கொடுப்பார்கள். ஆனால், நகர்ப்புறங்களில் இதற்கு சாத்தியம் குறைவு.

பெண்களும் வேலைக்கு செல்லும் இக்கால சூழலில் நாம் எங்கு போய் நிறைய பெண்களைத் தேடுவது? கோயில் என்றால் கண்டிப்பாக வருவார்கள். அங்கு வைத்து வெற்றிலை, பாக்கு வழங்குவது நல்ல யோசனையாக உள்ளது. தோழிகளே... நீங்களும் இந்த முறையைப் பின்பற்றலாமே?!

- சுப்பலட்சுமி சந்திரமௌலி, மடிப்பாக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன!

தேவையற்ற குழப்பம்!

மீபத்தில் என் தோழி ஒருத்தியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பத்தாவது படிக்கும் தன் மகளை பள்ளியில் விட்டு விட்டு வருவதாக சொல்லி, என்னை காத்திருக்க வைத்து சென்றாள். அவள் வந்த பின்னர், ``வீட்டுக்கு ரொம்ப பக்கத்துலதானே ஸ்கூல் இருக்கு... அவளே போயிட மாட்டாளா... பெரிய பெண்தானே?’’ என்று தோழியிடம் கேட்டேன். ``என் பொண்ணோட ஜாதகத்துல, `அவள் காதல் திருமணம் செய்துகொள்வாள்’ என்று இருப்பதாக ஜோசியர் சொன்னார். அதுபோல் நடந்துடக் கூடாது என்பதற்காக அவளை எங்கள் கண்காணிப்பிலேயே வெச்சிருக்கோம். இந்த விஷயம் என் பொண்ணுக்கும் தெரியும்’’ என்று விளக்கமளித்தாள் தோழி.

ஜாதகம், ஜோசியம் என்ற பெயரில் பெண் குழந்தையின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது எனக்கு அதிர்ச்சி ப்ளஸ் வருத்தத்தை அளித்தது. பெற்றோர்களே... குழந்தைகளின் மனதில் நல்ல விதைகளை ஊன்றுங்கள்; களைகளை வளர்த்துவிடாதீர்கள்.

- பி.ரமணி, சேலம்

ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி