
முகில்
இவரது படங்களை, எத்தனையாவது ரீலில் இருந்து பார்த்தாலும் சுவாரஸ்யம்தான். ஏதோ ஒருவிதத்தில் ரசிகனை உள்ளிழுத்து உட்காரவைத்துவிடும். இவரது வாழ்க்கைக் கதைகூட அப்படித்தான். எங்கே வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அத்தனையும் சுவாரஸ்யம்.
'பாகுபலி’யின் முதம் பாகம் வரை, தான் இயக்கிய 10 படங்களையும் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் கொடுத்து சாதனை படைத்தவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 'ஸ்டூடன்ட் நம்பர் 1’னில் இருந்து ஆரம்பிக்கலாம். எனில், முன் வாழ்க்கை? அட, ராஜமௌலியின் ஃபார்முலாவின்படி நாயகனின் பின்னணியை எப்போதும் படத்தின் இடையே ஃப்ளாஷ்பேக்காகத்தான் சொல்ல வேண்டும். இங்கும் அப்படியே!
என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் அறிமுகமான தெலுங்குப் படம் 'நின்னு சூடலானி’, அதீத எதிர்பார்ப்புடன் வெளியாகி அக்மார்க் தோல்வி கண்ட படம். எப்படியாவது ஜெயித்தே தீர வேண்டும் என்ற வெறியில் இருந்த ஜூனியர் என்.டி.ஆர்., தெலுங்கின் சீனியர் இயக்குநரான கே.ராகவேந்திரராவ் திரைக்கதை அமைத்துத் தயாரிக்க இருந்த 'ஸ்டூடன்ட் நம்பர் 1’-னைத் தேர்ந்தெடுத்தார். ராகவேந்திர ராவின் முதல் உதவியாளரான முடாபள்ளிதான் படத்தை இயக்குவதாக இருந்தது. அவர் சீரியலில் பிஸியாக இருந்ததால், ராகவேந்திர ராவின் 'சின்சியர் ஸ்டூடன்ட் நம்பர் 1’ என இருந்த 28 வயது ராஜமௌலிக்கு டைரக்டர் நாற்காலி கிட்டியது. அந்தப் படத்தின் கதை, திரைக்கதை விவாதத்தில் ராஜமௌலி பங்கேற்று இருந்தார். பல விஷயங்களில் முழு உடன்பாடு இல்லாவிட்டாலும், குருவுக்கு அடங்கிய சிஷ்யனாக இயக்கும் வேலையை மட்டும் செவ்வனே செய்து முடித்தார்.
2001-ம் ஆண்டில் 'ஸ்டூடன்ட் நம்பர் 1’, தெலுங்குத் திரையுலகை ஆண்டது. பாக்ஸ் ஆபீஸில் 10 கோடி ரூபாய் வசூல். ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏகோபித்த வெற்றி. படத்தின் டைட்டிலில் டைரக்ஷன் மேற்பார்வை என ராகவேந்திர ராவ் பெயரும், டைரக்ஷன் என எஸ்.எஸ்.ராஜமௌலியின் பெயரும் வந்தன. ஆனால், 'ராஜமௌலி’தான் படத்தின் இயக்குநர் என்பதை திரை உலகத்தினரே ஒப்புக்கொள்ளவில்லை. 'ராகவேந்திரகாருவே டைரக்டரு’ என ஆந்திராவின் கடைக்கோடி ரசிகன்கூட அசால்ட்டாகச் சொல்லிவிட்டு நகர்ந்தான். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடிச் சென்ற ராஜமௌலிக்கு, நிராகரிப்புகளும் அவமானங்களும் ஏமாற்றங்களுமே வெகுமதியாகக் கிடைத்தன. ஓர் இயக்குநருக்கு முதல் வெற்றி, வளமான எதிர்காலத்துக்கான அங்கீகாரம். ஆனால், அதுவே ராஜமௌலிக்குப் பெரும் சுமையானது.

நம்பிக்கை வறண்டு, சோர்ந்து துவண்ட பொழுது களில், ராஜமௌலியைத் தன் அன்பால் தேற்றி, அரவணைப்பால் நிமிர்ந்து உட்காரவைத்தவர் ஜீவன் ரமா. ராஜமௌலியின் திருமதி. இவர்களுக்கு இடைப்பட்டதும் வித்தியாசக் காதல் கதையே. ராஜமௌலிக்கு, சரித்திரக் கதைகள், புராணக் கதைகள் மீது அளவற்ற காதல். சிறுவயதில் அரசு நூலகத்தில் கிடைக்கும் 'அமர் சித்ர கதா’ புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருப்பார். ராஜா, ராணி, மந்திரி, கோட்டை, அரண்மனை, போர்க்களம், மந்திரம், மாயாஜாலம்... அவருக்குள் அந்தக் கற்பனை உலகம் தனியே இயங்கிக்கொண்டிருந்தது. தான் படித்த கதைகளை ராஜமௌலி தன் வயது நண்பர்களிடம் சொல்ல ஆரம்பித்தால் வெற்றிடத்திலேயே மாபெரும் கோட்டைகள் எழும்; ராஜாவும் ராணியும் காற்றில் உருக்கொள்வார்கள்; காதுகளில் குதிரைகளின் குளம்படிச் சத்தங்கள் தடதடக்கும். ஏதும் இன்றியே போர்க்களங்கள் உருவாகும்; வாள்களும் ஈட்டிகளும் பொறிபறக்க மோதிக்கொள்ளும். கேட்பவர்கள் வாய் பிளந்து உட்கார்ந்திருப்பார்கள்.
ராஜமௌலி, தன் பதின்வயதின் இறுதியில் சினிமாதான் எல்லாம் என முடிவுசெய்த பின், தன் சித்தப்பா இசையமைப்பாளர் கீரவாணியிடம் (தமிழ்த் திரையுலகில் மரகதமணி.) சென்று, தான் உருவாக்கிய திரைக்கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அவை பெரும்பாலும் சரித்திர ஃபேன்டசி கதைகள். கீரவாணியின் வீட்டில் இருந்த சிறுவன் கார்த்திகேயாவுக்கு ராஜமௌலியிடம் கதை கேட்பது என்றால் இஷ்டம். கார்த்திகேயாவை 'ரசிகனாக’ உருவகப்படுத்திக்கொண்டு, அவனை அசரடிக்கும் விதத்தில் கதை சொல்ல மெனக்கெடுவார் ராஜமௌலி. கார்த்திகேயாவின் அம்மா, ரமா. கீரவாணியின் உறவுப்பெண். கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றவர். மகனிடம் கதை சொன்ன ராஜமௌலி, காலப்போக்கில் ரமாவிடம் காதலையும் சொன்னார். மகனின் பூரிப்பான சம்மதத்துடன் இருவரும் தம்பதியாயினர். (சில வருடங்களில் மகள் பிறந்தாள்!)
ஏதுமின்றித் தவித்துக்கொண்டிருந்த ராஜமௌலியை மீண்டும் அழைத்தார் ராகவேந்திர ராவ். தன் மகனை வைத்தே தயாரிக்க இருந்த அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ராஜமௌலிக்குச் சந்தோஷம். ஆனால், அந்தப் படமும் நின்றுபோனது. 'ஸ்டூடன்ட் நம்பர் 1’ இயக்குநர் நான்தான் என்பதையே இந்த உலகம் நம்ப மறுக்கிறதே? நான் எப்படி என் கனவான 'டைரக்டர் நம்பர் 1’ என்ற ஸ்தானத்தை அடைய முடியும்? இதே இடத்தில் இப்படியே தேங்கி நின்று வாழ்க்கையைத் தொலைத்துவிடுவேனோ? ராஜமௌலிக்குள் துன்பப் பேரலைகள் பெருக்கெடுத்தன.
சினிமாவில் தோல்விகள் என்பது, ராஜமௌலியின் குடும்பத்துக்குப் பழகிய ஒன்றே. அவரது தந்தை விஜயேந்திர பிரசாத், திரைப்படக் கதாசிரியர். ராஜமௌலியும் நல்ல கதைசொல்லியாக, தன் திறமையை வளர்த்துக்கொண்டார். ('நான், கதையை உருவாக்குபவன் அல்ல; நல்ல கதைக்கு உயிரோட்டம் கொடுப்பவன்!’)
கர்நாடகாவின் ரெய்ச்சூரில் பிறந்த ஸ்ரீசைல ஸ்ரீராஜமௌலி படித்தது எல்லாம் ஆந்திராவில். காமிக்ஸ், கதைப் புத்தகங்கள், நாவல்கள் படிப்பதில் அதிக ஆர்வம். சினிமா கனவுகள் ஆக்கிரமிக்க, கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டார். கிடார் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். ஒருநாள் தந்தை கேட்டார்... 'தினமும் எவ்வளவு நேரம் கிடார் பயிற்சி செய்கிறாய்?’ ராஜமௌலி 'மூன்று மணி நேரம்’ என்றார். 'போதவே போதாது. கிடாரிஸ்ட்தான் ஆகப்போகிறாய் என்றால், தினமும் பத்து மணி நேரத்துக்கு மேல் பயிற்சி செய்’ - அழுத்தமாகச் சொன்னார். அப்போதுதான் 'எந்த ஒரு லட்சியத்துக்கும் அளவற்ற பயிற்சி தேவை’ என்பதை உணர்ந்தார் ராஜமௌலி.
எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவிடம் (இன்றைக்கும் ராஜமௌலி படங்களின் எடிட்டர் இவரே) உதவியாளராக வேலைபார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அங்கே ஒரு வருடம். பின் சென்னைக்கு வந்து ஏவி.எம் ஒலிப்பதிவுக்கூடத்தில் சில காலம் வேலைபார்த்தார். அப்போது எல்லாம் ராஜமௌலியின் ஆகப் பெரிய லட்சியம், ரூபாய் 32.50 சம்பாதிப்பதே. வளசரவாக்கம் டு அண்ணாசாலை பேருந்தில் சென்று வர ரூபாய் 2.50. சத்யம் தியேட்டரில் டிக்கெட் ரூபாய் 30. படம் பார்த்தால் பசி தீரும். சத்யம் தியேட்டரே கோயில். திரைப்படங்களே தெய்வம். சினிமாவை ரசிகர்களோடு ரசிகர்களாக அங்கே கற்றுக்கொண்டார் ராஜமௌலி.
பின் தந்தைக்கு உதவியாளராக இருந்து, அவரோடு கதை விவாதங்களில் ஈடுபட ஆரம்பித்தார். தந்தையின் சார்பாக பல இடங்களுக்குச் சென்று கதை சொல்லும் அனுபவத்தையும் வளர்த்துக்கொண்டார். எப்படியாவது இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்ற கனவில் இருந்த ராஜமௌலி, வயிற்றுப் பிழைப்புக்காகவும் குடும்பக்கடனை அடைக்கவும் அங்கும் இங்குமாகக் கிடைத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். பின்பு, ராகவேந்திர ராவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அப்போது சீரியலில் கொடிகட்டிப் பறந்த ராகவேந்திர ராவின் யூனிட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தார். எடுபிடி வேலைகளைக்கூட 'கற்றுக்கொள்ளும் வாய்ப்பு’ என விருப்பத்துடன் செய்தார். அவரது அசுரத்தனமான உழைப்பால், ஒரு சீரியலின் சில எபிசோடுகளை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதற்கு எல்லாம் பிறகே 'ஸ்டூடன்ட் நம்பர் 1’ துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக பட வாய்ப்பு இன்றித் தவித்த ராஜமௌலியின் வாழ்க்கையில் 'இடைவேளை’ அது. விஜயேந்திர பிரசாத், தன் மனதில் தோன்றும் கதைகளை அவ்வப்போது மகனிடம் சொல்வார். அதில் தனக்குப் பிடித்த கதைகளை திரைக்கதைகளாக, காட்சிகளாக மாற்றி உள்ளுக்குள்ளேயே செதுக்கிக்கொண்டிருந்தார் ராஜமௌலி. அதில் பாலகிருஷ்ணாவை மனதில் வைத்து பட்டை தீட்டிய 'சிம்ஹாத்ரி’யும் ஒன்று. இடைப்பட்ட காலகட்டத்தில் மாஸ் ஹீரோவாக உயர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்., ராஜமௌலியை அழைத்தார். தயாரிப்பாளர்களைக் கைகாட்டி கதை சொல்லச் சொன்னார். ராஜமௌலியின் விவரிப்பில் 'சிம்ஹாத்ரி’ கதையைக் கேட்ட தயாரிப்பாளர்கள் குஷியில் கூத்தாடினர். 2003-ம் ஆண்டு படம் வெளிவந்தபோது தியேட்டர்களில் திருவிழா. பாக்ஸ் ஆபீஸ் வசூலும் 30 கோடி ரூபாய் எனத் தாண்டவம் ஆடியது. 'இஸங்களில் சிறந்தது ஹீரோயிஸமே’ என ஆந்திராவே அகம் மகிழ்ந்தது. 'யாரய்யா இந்த ஆளு?’ எனப் பலரும் கேள்வி எழுப்ப, ''ஸ்டூடன்ட் நம்பர் 1’ டைரக்ட் பண்ணாரே, அவரேதான்’ என உணர்ந்து, வியந்தனர். ராஜமௌலி, நிமிர்ந்து உட்கார்ந்தார்.
முதல் படம், வெறும் இயக்கமே. இரண்டாவது படம், பக்கா மாஸ். மூன்றாவது..? 'இந்த ஆளு வெறும் கமர்ஷியல் டைரக்டர் இல்லை. அதுக்கும் மேல!’ என அழுத்தமாக உணர்த்த நினைத்தார். ரசிகர்களுக்குப் பரிச்சயமற்ற ரக்பி விளையாட்டுத்தான் கதைக்களம். ரிஸ்க்தான்; நிதின் என்கிற சிறிய ஹீரோ அதைவிட ரிஸ்க். ஆனால், உலகில் அதிக ரிஸ்க் கொண்ட விளையாட்டுக்களில் ரக்பியும் ஒன்று. ஆக, எதையும் சொல்லும் விதத்தில் கமர்ஷியலாகச் சொன்னால், 10 ரூபாய் டிக்கெட் ரசிகனும் விசிலடித்துக் கொண்டாடுவான் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கினார் ராஜமௌலி. பிரதாப் ராவத் என்கிற படா வில்லனை, படத்தின் பெரும் பலம் ஆக்கினார். (வில்லனுக்கான ஒரு காட்சி: https://www.youtube.com/watch?v=2JyoOhxNpGk எளிமையான ஹீரோவின் அணியும், எருமைக்கடாக்கள் என வில்லன் அணியும் மோதும் ரக்பி காட்சிகளில் ரசிகர்களின் ரத்தம் சூடேறியது. இறுதி நொடியில் ஹீரோ வென்று களிக்க, 8 கோடியில் தயாரான 'ஷை’ 12 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸை வென்றது. (ரக்பி விளையாட்டை முறையாகக் காட்சிப்படுத்திய உலகின் சிறந்த மூன்று படங்களில் 'ஷை’ ஒன்று எனக் கொண்டாடப்படுகிறது.) அந்தப் படத்தின் போஸ்டர்களில் இருந்து ‘An s s rajamouli film’ என முத்திரை குத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
அடுத்த ஆட்டம் 'சத்ரபதி’. பிரபாஸ் கதாநாயகன். இலங்கையில் இருந்து அகதிபோல விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வரும் 14 வயது சிறுவன் ஒருவன், அந்தத் துறைமுகத்தையே ஆட்டிப்படைக்கும் ராஸ் பீகாரியையே வீழ்த்தி, டான் ஆகும் கதை. கூடவே அம்மா சென்டிமென்ட், அருமைச் சகோதரனின் துரோகம், அல்வா ஹீரோயின், அதிரடிக்கும் ஆக்ஷன், அசரடிக்கும் இன்டர்வெல் என அனைத்தையும் அம்சமாக, அளவோடு அள்ளிப் பரிமாறியதில் ஆந்திரா ரசிகனுக்கு அன்லிமிட்டெட் மீல்ஸ் திருப்தி. 100 நாள் படம்!
'சிம்ஹாத்ரி’, 'சத்ரபதி’ வரிசையில் அடுத்து ரவிதேஜாவுடன் 'விக்ரமாகுடு’ (தமிழில் 'சிறுத்தை’). கிட்டத்தட்ட ஒரே மாதிரி மாஸ் மசாலா படம். ஆனால், அள்ளித் தெளித்த கரம் மசாலாவுடன் பந்தியில் பளிச்செனப் பரிமாறிய விதத்தில் படம், 'ஜிந்தாத்தா... ஜிந்தா ஜிந்தா’ ஹிட். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, ஆரவார வசூல் அள்ளியது. ஆனால், வேறு எந்த மொழியிலும் ராஜமௌலி இயக்கவில்லை. 'ஒரு கதை பிடிச்சதும் அதை அசத்தலா படம் பண்ணி, சுடச்சுடக் கொடுக்கிற திருப்தி ரீமேக்ல வராது. என் சாப்பாட்டை நானே சமைச்சு நானே பரிமாறணும். அது மல்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸுக்கும் பிடிக்கணும்; ராயல சீமா டாக்கீஸ் ரசிகனும் ரசிக்கணும். அது மட்டும்தான் எனக்கு முக்கியம்!’
முதல் ஐந்து படங்களில் கச்சிதமான கமர்ஷியல் இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ராஜமௌலி, ஆறாவது படத்தில் தன் பெருவிருப்பத்துக்கு உரிய புராண, சரித்திர விஷயங்களில் கை வைத்தார். மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர் படம் 'எமதொங்கா’. அதுவரை ஹீரோவின் கெட்அப் மாற்றங்களுக்கு ராஜமௌலி பெரிதாக மெனக்கெட்டது இல்லை. ஆனால், 'எமதொங்கா’வில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ராஜமௌலி இட்ட கட்டளை, 'பத்து கிலோவாவது குறைக்க வேண்டும்’ என்பதுதான். ஏனென்றால், தேவலோக கெட்அப்... கொழுக் மொழுக்கென ஹீரோ இருந்தால் பார்க்கச் சகிக்காதே! சதி ஒன்றில் கொல்லப்படும் சாதாரணன் ஒருவன், எமலோகம் சென்று தன் சாதுர்யத்தால் எமனையே (மோகன்பாபு) வென்று பாசக்கயிற்றைப் பிடுங்கி அழிச்சாட்டியம் செய்கிறான். மீண்டும் பூமிக்கு அனுப்பப்படும் அவன், எதிரிகளைப் பழிவாங்கி காதலியோடு இணையும் 'அதிசயப் பிறவி’த்தனமான பழைய கதை. ஆனால், ராஜமௌலியின் ரகளை ட்ரீட்மென்ட் ரசிகர்களுக்கு தலைவாழை ட்ரீட்டாக அமைந்தது. கூடுதல் சுவாரஸ்யமாக எமலோகத்தில் தாத்தா என்.டி.ஆர்., (உபயம்: கிராபிக்ஸ்) பேரன் என்.டி.ஆருடன் சேர்ந்து ஆட்டம்போட ஆந்திராவே 'தேவுடு’ என கன்னத்தில் போட்டுக்கொண்டு நெக்குருகியது; வசூல் பெருகியது.
'சத்ரபதி’யிலேயே பிரபாஸ் கடலுக்கு அடியில் (கிராபிக்ஸ் உதவியுடன்) சுறா ஒன்றுடன் மோதும் காட்சியை வைத்திருந்தார் ராஜமௌலி. அப்போது இருந்த தொழில்நுட்பத்தில் அந்தக் காட்சி கார்ட்டூன்தனமாகப் பல்லிளித்தது. தியேட்டரில் ரசிகன் சிரித்தான். 'எமதொங்கா’வில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம். அதனால் தொழில்நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொண்டு, தன் குழுவினரையும் கற்றுக்கொள்ளச் செய்த பிறகே களத்தில் இறங்கினார் ராஜமௌலி. எங்கும் கிராபிக்ஸ் உறுத்தவில்லை. 'சத்ரபதி’யில் கேலியாகச் சிரித்த அதே ரசிகன், 'எமதொங்கா’வில் சிலிர்த்தான். ஆக, ராஜமௌலியின் கனவுகள் பெரிதாகின. கற்பனைசெய்யும் எதையும் திரையில் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கை பெருகியது.

1995-ம் ஆண்டு வெளிவந்தது 'கரன் அர்ஜுன்’ இந்திப் படம். ஷாருக்கும் சல்மானும் நடித்த அக்மார்க் ரத்தத்துக்கு ரத்த ரிவெஞ்ச் மசாலா. 'அந்தப் படம்தான் என் உணர்வுகளை எல்லாம் தட்டி எழுப்பியது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராஜமௌலி. அவரது படங்களில் 'பழிவாங்கும்’ அம்சம் பிரதானமாக இடம்பெறக் காரணம் 'கரன் அர்ஜுன்’ பாதிப்பே.
ராஜமௌலியின் அடுத்த அடி... இல்லை இல்லை இடி... 'மகதீரா’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் 'சிறுத்தா’வில் அறிமுகமாகி இருந்தார். படம் பப்படம் என்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சொல்லிக்கொண்டார்கள். ஆக, ராம் சரணுக்கு மீசையை கம்பீரமாக முறுக்கிக்கொள்ள ஒரு வெற்றி தேவைப்பட்டது. ராஜமௌலியைத் தேடி வந்தார்கள். ராஜபார்த்திபன் - காலபைரவன் என்ற கனமான இரண்டு கதாபாத்திரங்களுடன் 'மகதீரா’ அமைந்தது. முன்ஜென்மத்தில் ஒரு வில்லனால் பிரிந்த காதல் ஜோடி, நிகழ்ஜென்மத்தில் அதே வில்லனை வீழ்த்தி வெல்லும் மெகா பட்ஜெட் (35 கோடி) கதை. மொத்தமாக 150 கோடி ரூபாய் வசூல். ஆந்திராவில் சில தியேட்டர்களில் 365 நாட்களும், ஒரு தியேட்டரில் 1,000 நாட்களும் ஓடி, ராம் சரணை வெகு உயரத்தில் உட்காரவைத்தது.
மெகா டைரக்டராக உயர்ந்த ராஜமௌலி, அடுத்து என்ன பிரமாண்டப் படம் தரப்போகிறார் என, சகல திரையுலகமும் உற்று நோக்கிக்கொண்டிருக்க, அவரோ 'மகதீரா’வின் காமெடியனான சுனில் கதாநாயகனாக நடிக்க, 'மரியாத ராமண்ணா’வை அறிவித்தார். (தமிழில் சந்தானத்தின் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’). 'இந்த ஆளுக்குக் கிறுக்குத்தான் பிடிச்சிருக்கு’ என எழுந்த விமர்சனங்களுக்குக் குறைவில்லை. ஆனால், ராஜமௌலி தன் கனவு 'ஈ’யின் இடத்தில், சுனிலை வைத்து எடுத்த சின்ன ரிஸ்க் அது. நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஒருவரை ஹீரோவாக்கி, தன்னால் ஜெயிக்க முடியுமா என்ற பரிசோதனை முயற்சி. 2010-ம் ஆண்டு 'மரியாத ராமண்ணா’ மரியாதைக்குரிய வெற்றி. சொற்ப பட்ஜெட். ஆனால், பாக்ஸ் ஆபீஸ்... 30 கோடி ரூபாய். 'என் அடுத்த படத்தில் 'ஈ’தான் ஹீரோ’ என்றார் ராஜமௌலி.
'தன்னைக் கொன்ற வில்லனை, ஈயாக மறுஜென்மம் எடுத்துப் பழிவாங்குகிறான் ஒருவன்’ என, அப்பா விஜயேந்திர பிரசாத் சொன்ன ஒரு வரிக் கதையை, முதலில் 30 நிமிடக் குறும்படமாக எடுக்கத்தான் ராஜமௌலி திட்டமிட்டு இருந்தார். அதற்காக ஒரு ஈயை கிராபிக்ஸில் வடிவமைக்கச் சொல்லியிருந்தார். பெரும் செலவை இழுத்துவிட்ட அந்த ஈயின் உருவம் ராஜமௌலிக்குப் பிடிக்கவே இல்லை. 'ஹாலிவுட்டில் உயிரற்றப் பொருட்களையே உணர்வுபூர்வமாக கிராபிக்ஸ் செய்து அனிமேஷன் படங்களாக வெளியிடுகிறார்கள். எனில், உயிருள்ள ஈயைக்கொண்டு நம்மால் ஒரு முழு நீளப் படம் எடுக்க முடியாதா என்ன?’ - எழுந்த கேள்வியைச் சவாலாக எடுத்துக்கொண்டு முழுமூச்சுடன் களம் இறங்கினார்.
ஈயை ஹீரோவாக ரசிகன் ஏற்றுக்கொள்வானா? நிச்சயமாக. என் திரைக்கதை ஏற்றுக்கொள்ள வைக்கும். அதற்கான மெனக்கெடல்களை ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்துப் பார்த்துச் செய்தார் ராஜமௌலி. ஒரு நிமிடத்தில் 2,000 ஃபிரேம்களைச் சுட்டுத்தள்ளும் GoPro HD கேமராவைக்கொண்டு காட்சிகளைப் படமாக்கினார்கள். ஈயோடு ரசிகனும் பறந்து செல்லும் உணர்வை அள்ளித் தந்தன காட்சிகள். இல்லாத ஈயை இருப்பதாக நினைத்துக்கொண்டு பிற நடிகர்கள் நவரசம் காட்டினார்கள். கிராபிக்ஸ் ஈ, அந்தப் பெரிய சிவப்புக் கண்களால் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி என நவரச நாயகனாக வாழ்ந்து திரையை ஆண்டது. ('ஈகா’ மேக்கிங் குறித்த வீடியோ: https://www.youtube.com/watch?v=6Ig6hsfQkII) சில படங்கள் வெளியானால் தியேட்டரில் ஈ ஓட்டுவார்கள். ஆனால், தெலுங்கில் 'ஈகா’வாகவும், தமிழில் 'நான் ஈ’-யாகவும் இறக்கை விரித்த 'ஈ’யை, தியேட்டர்களில் ரசிகர்களின் பேராதரவோடு ஓட்டோ ஓட்டு என ஓட்டினார்கள். (பட்ஜெட் 26.5 கோடி ரூபாய், பாக்ஸ் ஆபீஸ் 125 கோடி ரூபாய்).

சரி, சமகாலப் படங்களில் சாதித்துவிட்டோம்; சரித்திரத்தையும் தொட்டு சாகசம் செய்துவிட்டோம். முழு கிராபிக்ஸ் படத்திலும் முழுமையான வெற்றி பெற்றுவிட்டோம். இனி? முழுநீள சரித்திரப் படம். பட்ஜெட் மிகப் பெரியது. படம் முடிய சில வருடங்கள் ஆகலாம். கிராபிக்ஸ் வேலைகள் எக்கச்சக்கம். கதை? 10 வருடங்களுக்கு முன்பு விஜயேந்திர பிரசாத், ராஜமௌலியிடம் 'சிவகாமி’ கதாபாத்திரம் (ரம்யா கிருஷ்ணன்) குறித்த சிறு சம்பவம் ஒன்றைச் சொல்லியிருந்தார். சில வருடங்கள் கழித்து, விசுவாச அடிமை கட்டப்பா (சத்யராஜ்) குறித்த ஒன்லைனைச் சொல்லியிருந்தார். அதற்குப் பிறகு ஒருநாள் பல்லால தேவா (ராணா) என்பவனின் கதை பேசினார். ராஜமௌலி இந்தக் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து, 'பாகுபலி’யை (பிரபாஸ்) உள்ளே புகுத்தி, மகா சரித்திரக் கதை ஒன்றைப் புடம்போட்டார்.
படத்தின் முன் தயாரிப்புகளுக்கே மாதக்கணக்கில் செலவிடவேண்டி இருந்தது. ராணா 126 கிலோவுக்கு உடல் ஏற்ற, பிரபாஸ் குதிரையேற்றம், மலையேற்றம் எனப் பயிற்சிகளில் மிளிர, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான கம்பீரத் தோற்றம், உடைகள், ஷூட்டிங் திட்டமிடல், துணைப் பாத்திரங்களுக்கான பயிற்சி, தொழில்நுட்பக் குழுவினருடன் மெனக்கெடல்... இன்னும் இன்னும். சொல்லப்போனால் ஷூட்டிங் ஆரம்பமாகும் முன்பே ராஜமௌலிக்குக் கண்ணைக் கட்டியது. ஒருகட்டத்தில் விட்டுவிடலாமா என்றுகூடத் தளர்ந்தார். பின் வற்றிய நம்பிக்கையை எல்லாம் மீண்டும் தளும்பத் தளும்ப நிரப்பிக்கொண்டு முழு மூச்சுடன் களம் இறங்கினார்.
மூன்று ஆண்டுகள் கடும் உழைப்பு. இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படமாக (125 கோடி ரூபாய்), நான்கு மொழிகளில் வெளியானது 'பாகுபலி: The Beginning’. வெளியான 50 நாட்களில் உத்தேசமாக இதுவரை 600 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. 'உச்ச நட்சத்திரங்களைவிட ஓர் இயக்குநரே என்றும் உயர்ந்தவர்’ என்பதை ஆணித்தரமாக மீண்டும் நிரூபித்துவிட்டு, அர்ப்பணிப்புடன் 'பாகுபலி: The Conclusion’ என இரண்டாம் பாக வேலைகளில் மும்முரமாகிவிட்டார் ராஜமௌலி.
எடுத்த 10 படங்களும் வெற்றி. தவிர, ராஜமௌலியின் 'ஈகா’, 'பாகுபலி’ போன்றவை சர்வதேச அளவில் இந்தியத் திரை உலகுக்கே பெருமை தேடித்தந்திருக்கின்றன. அதற்காக ராஜமௌலி, தன் தலைக்கு மேல் ஒளிவட்டத்தை ஏற்றிக்கொள்ளவில்லை. கூடுதல் அர்ப்பணிப்புடன் அடுத்தடுத்த கனவுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். 'எந்த சினிமா ஜெயிக்கும், எது ஜெயிக்காதுன்னு இங்கே யாருக்குமே தெரியாது; எனக்கும் தெரியாது. என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுறார். படம் ஜெயிக்கணும்னு என்னோட உச்சபட்ச உழைப்பைக் கொடுக்கிறேன். அவ்வளவுதான் விஷயம். வேறு எந்த சக்சஸ் ஃபார்முலாவும் என்கிட்ட இல்லை!’ என்கிறார் ராஜமௌலி சிம்பிளாக!

** ராஜமௌலி படங்களில் கதைக்கரு, அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கொடுப்பதே. தந்தை என்பதற்காக, கதை விவாதங்களில் ராஜமௌலி சமரசம் செய்துகொள்வதே கிடையாது. உறவுகள் எல்லாம் வேலைக்கு அப்பாற்பட்டவை. அப்படித்தான் இசையமைப்பாளர் கீரவாணியிடமும் காஸ்ட்யூம் டிசைனர் (மனைவி) ரமாவிடமும் வேலைவாங்குகிறார். கார்த்திகேயாவும் ராஜமௌலியுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவருகிறார். எல்லோருக்குமே ராஜமௌலிதான் 'பாஸ்’!
** ராஜமௌலியின் ஆஸ்தான கேமராமேன் செந்தில்குமார் ('ஷை’ முதல்). புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில், அறிமுகப்படுத்துவதில் வல்லவர். இன்றைக்கு இந்தியாவில் VFX நுட்பத்தில் எடுக்கப்படும் படங்களின் மோஸ்ட் வான்டட் கேமராமேன் இவரே. அதேபோல கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்தான் எப்போதும் எடிட்டர். பீட்டர்ஹெய்ன்தான் ஸ்டன்ட் மாஸ்டர். ராஜமௌலியின் உறவினர்கள் பலரும் டீமில் இருக்கிறார்கள். இந்தக் குழுவும் குழு உணர்வும் ராஜமௌலியின் அசுர பலம்.
** ஷூட்டிங் செல்வதற்கு முன்பே காட்சிகள், வசனம், ஷாட் ரீதியாக ஸ்டோரிபோர்டு, கனகச்சிதமான முன்தயாரிப்புகள் எல்லாம் திருப்தியான பிறகே கேமராவை முடுக்குவார். அதேபோல எந்தக் காட்சியானாலும், எந்தப் பாத்திரமானாலும் தான் நடித்துக் காண்பித்த பிறகே நடிகர்களிடம் வேலைவாங்குவார்.
** அசத்தல் ஹீரோ, அடிபட்டு வீழ்ந்து மீண்டும் அதிரடியாக எழுந்து வரும் பாணி ராஜமௌலியின் படங்களில் தவறாமல் இருக்கும். அதேபோல வில்லனை பயங்கரமான, வலிமையான பாத்திரமாக உருவாக்குவார். ரத்தம் தெறிக்கும் ரணகள சண்டைக் காட்சிகளில் புதுமாதிரியான ஆயுதங்களை உபயோகிப்பது ராஜமௌலி ஸ்டைல்.
** 'அடுத்தவர்கள் மீது பழிபோடுவதிலும் உடன்பாடு கிடையாது. எங்கே தவறு நடந்தாலும் அதன் விளைவுகளுக்கு நானே முழுப் பொறுப்பு. அதிர்ஷ்டம் என்ற போலியான வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது. நான் என்ன செய்கிறேனோ, அதன் பலனே எனக்குத் திரும்பக் கிடைக்கும்’ என்பது ராஜமௌலியின் அழுத்தமான நம்பிக்கை!