
விகடன் டீம், படங்கள்: என்.ஜி.மணிகண்டன் ஓவியம்: ஹாசிப்கான்
2006-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிட்டாமல், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தயவோடு ஆட்சி அமைத்தது தி.மு.க. அதனால், தனது ஒவ்வோர் அறிக்கையிலும் ஜெயலலிதா தி.மு.க ஆட்சியை 'மைனாரிட்டி ஆட்சி’ என வறுத்தெடுத்தார். இதில் கடுப்பான தி.மு.க தரப்பு, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கியது. ஆ.ராசா, மு.க.அழகிரி அந்த 'எம்.எல்.ஏ அமுக்கும்’ வேலையில் தீவிரம் காட்டினர். அதன் பலனாக அ.தி.மு.க-வின் விக்கெட்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் மாறினர். உஷாரான மேலிடம், அன்றைய அ.தி.மு.க சட்டமன்றக் கொறடா செங்கோட்டையனை அழைத்து, 'போகிறவர்கள் போகட்டும்; அவர்களைப் பற்றி கவலை இல்லை. இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறவர்கள் விலைபோகாமல் இருந்தால், அவர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட ஸீட்டும், ஜெயித்தால் மந்திரி பதவியும் உறுதி என்று போய்ச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பியது.
செங்கோட்டையன் உடனடியாகச் சென்று சந்தித்த எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் என்.சுப்ரமணியன். ஏனென்றால், அவர்தான் தி.மு.க அணிக்குச் செல்வதற்கான அல்லாட்டத்துடன் இருந்தாராம். செங்கோட்டையனின் வாக்குறுதிகளைக் கேட்டதும், தி.மு.க-வுக்குத் தாவும் எண்ணத்தைக் கைவிட்டு, நல்லபிள்ளையாக அ.தி.மு.க-விலேயே தன்னை இருத்திக்கொண்டார். அதற்கான பரிசு... 2011-ம் ஆண்டுத் தேர்தலில் எம்.எல்.ஏ ஸீட்; அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் பதவி!
'சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்’ என, சுப்ரமணியன் பற்றி நல்லவிதமாகச் சொல்ல இந்த ஒரு சம்பவம் மட்டுமே இருக்கிறது. மற்றவை எல்லாம்?!
டிராஃப்ட்ஸ்மேனுக்குள் முளைத்த
அரசியல் ஆசை!
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அரசு ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கி, கக்கன், சத்தியவாணி முத்து உள்ளிட்ட அரசியல் ஜாம்பவான்கள் கோலோச்சிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு அமைச்சராகி இருக்கிறார் சுப்ரமணியன்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா நம்பம்பட்டி என்ற கிராமத்தில், ஒரு கூலித் தொழிலாளியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சுப்ரமணியன். உள்ளூரில் பள்ளிக்கூடம் இல்லாததால், மணப்பாறை அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பி சுப்ரமணியனைப் படிக்கவைத்தார் அப்பா நல்லான். தினமும் 8 கி.மீ நடந்தே செல்ல வேண்டும். வீட்டில் வறுமை தாண்டவம் ஆடினாலும், சுப்ரமணியனின் படிப்பைப் பாதியில் நிறுத்தவில்லை. ஆனால் 10-ம் வகுப்பை முடித்த சுப்ரமணியன், மேல்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை; மாறாக, சீக்கிரம் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்துக்கு உதவ வேண்டும் என நினைத்தார். ஐ.டி.ஐ-யில் 'டிப்ளமோ இன் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்’ படிப்பில் சேர்ந்தார். ஏனோ, கவனம் படிப்பில் போகவில்லை. பாதியிலேயே வெளியேறி யவர், வேலை தேடி திருப்பூர், ஓசூர், கோவை எனச் சுற்றியபோதும் ஒன்றும் வேலைக்கு ஆக வில்லை. இறுதியில் 10-ம் வகுப்புத் தகுதியை வைத்து நெடுஞ்சாலைத் துறையில் 'டிராஃப்ட்ஸ் மேன்’ (வரைவாளர்) வேலையில் சேர்ந்தார்.

நெடுஞ்சாலைத் துறையில் ரோடு போடும் வேலைகளுக்கான பில்களைச் சரிபார்க்கும் பணி சுப்ரமணியனுக்கு. அது ஒன்றும் சாதாரண வேலை அல்ல. ஏனென்றால், பில்களைக் கொண்டுவருபவர்கள் 'மலை முழுங்கி மகாதேவன்’களாக இருக்கும் கான்ட்ராக்டர்கள் கம் அரசியல்வாதிகள். அதில் ஏகப்பட்ட வில்லங்கங்கள் இருக்கும். மிகக் கவனமாகக் கையாள வேண்டும். அதே சமயம் அவர்களைப் பகைத்துக்கொள்ளவும் கூடாது. அந்தக் 'கம்பி மேல் நடக்கும்’ வேலையைத் திறமையாகச் செய்தார் சுப்ரமணியன். அதனால், கான்ட்ராக்டர்களுக்குச் செல்லப் பிள்ளையானார். அந்த எமக்கிராதக கான்ட்ராக்டர்கள் மூலம் அரசியலின் ஆள்பலம், அம்புசேனை, அதிகார மமதை, செல்வாக்கு ப்ளஸ் செல்வம் இவை எல்லாம் சுப்ரமணியனின் மூளைக்குள் தந்தியடிக்கத் தொடங்கின. கனவை நனவாக்கும் பொருட்டு, நெருக்கமான சில கான்ட்ராக்டர்கள் மூலம் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார் சுப்ரமணியன்.
அரசியலில் பதவியைப் பிடிக்கும் முதல் காய் நகர்த்தலாக அ.தி.மு.க-வில் இணைந்தார். ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்படும் போதும், 'ரிசர்வ்’ தொகுதிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஸீட் கேட்டு விண்ணப்பம் போடுவார்; ஸீட் கிடைக்காது. ஏமாற்றத்துடன் அரசாங்க ஊழியனாக, சமர்த்தாக வேலைபார்க்கத் தொடங்கிவிடுவார்.
திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் பணியாற்ற வாய்ப்பு வந்தது சுப்ரமணியனுக்கு. அங்கே வேலைபார்த்த சமயம், விராலிமலை அ.தி.மு.க சேர்மன் ராஜேந்திரனுடன் நெருக்கம் ஏற்பட்டது. அந்தத் தொடர்பை வைத்துக்கொண்டு, லாகவமாகக் காய் நகர்த்தி, அன்றைய மீன்வளத் துறை அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான திருமயம் ராதாகிருஷ்ணனுடன் ஒட்டிக்கொண்டார் சுப்ரமணியன். ராதாகிருஷ்ணன் சொன்ன பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாமல் அவர் மனதில் அபிமான இடம்பிடித்தார். அப்படியே அடுத்தடுத்த தொடர்புகள் மூலம் குளத்தூர் தொகுதி ஸீட் பெற்று, 2006-ம் ஆண்டு தேர்தலில் வெற்றியும் பெற்றார். தி.மு.க ஆட்சி என்பதால் அடக்கிவாசித்தார். ஆனாலும், உள்ளூர் அரசியல் காரணமாக வெறுப்பில் இருந்தவர், தி.மு.க முகாமுக்குப் போகலாமா என்ற யோசனையில் இருந்தபோதுதான், செங்கோட்டையனின் சமாதானப் படலம் நடந்தது. 2011-ம் ஆண்டுத் தேர்தல், எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி என்ற எண்ணத்துடன் காத்திருக்கத் தொடங்கினார் சுப்ரமணியன். ஆனால், அதிலும் விழுந்தது இடி!
தாறுமாறு தகராறு!
சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பில் குளத்தூர் தொகுதி குலைந்துபோனது. கந்தர்வக்கோட்டை என்ற புதிய தனித் தொகுதியாக உருவெடுத்தது. 2011-ம் ஆண்டு தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க ஆட்சி மீது கடும் அதிருப்தி நிலவிவந்த நிலையில், அ.தி.மு.க-வில் ஸீட் கிடைத்தாலே போதும்... வெற்றி நிச்சயம் என்ற நிலை. சுதாரித்த சுப்ரமணியன், செங்கோட்டையனைச் சந்தித்து, அவர் முன்னர் தனக்குக் கொடுத்த வாக்குறுதியை ஞாபகப்படுத்தினார். தம்பிதுரையைச் சந்தித்து, 'தம்பியைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார். சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், ராவணன் என அத்தனை கதவுகளையும் தட்டினார். காத்திருந்தார்... அதிர்ச்சியே மிஞ்சியது!
அ.தி.மு.க வேட்பாளர் தேர்வுக்கு, சுப்ரமணியன் அழைக்கப்படவில்லை. மாறாக, நார்த்தாமலை ஆறுமுகத்துக்கும், கந்தர்வக்கோட்டை உத்திராபதிக்கும் அழைப்பு வந்திருந்தன. இருவரையும் சந்தித்துப் பேசிய ஜெயலலிதா, தொகுதியில் வெற்றிவாய்ப்புகள், அவர்கள் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். கந்தர்வக்கோட்டை தொகுதிக்கும் சுப்ரமணியனுக்கும் சம்பந்தம் இல்லையே என்பது தலைமையின் எண்ணம். இதனால், 'சுப்ரமணியனுக்கு ஸீட் இல்லை’ என்பது கிட்டத்தட்ட உறுதியானது. வெறுத்துப்போனாலும் அசரவில்லை சுப்ரமணியன். செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோரை மீண்டும் மீண்டும் சந்தித்து, 'உங்கள் வார்த்தையை நம்பித்தான் இருந்தேன். உங்களுக்கு உண்மையாக இருப்பேன்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் உருகினார். என்ன செய்வது என அறியாமல் தவித்தவரை ராவணனிடம் அழைத்துச் சென்று நிலைமையை விளக்கினார் செங்கோட்டையன். ஒரே இரவில் நிலைமை மாறியது. மறுநாள் ஜெயா டி.வி-யில் வெளியான, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான வேட்பாளர் பட்டியலில் சுப்ரமணியன் பெயர் இருந்தது. தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது என நிம்மதியான சுப்ரமணியன், தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதே சமயம் அவர் கந்தர்வக்கோட்டை தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாதவர்; அதனால் அவர் வெற்றி பாதிக்கப்படும் என்ற பேச்சு பரவலாக இருந்ததால், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்துதான் ஜெயலலிதா தொடங்கினார்.
அந்தப் பிரசாரத்தில், 'கந்தர்வக்கோட்டை தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பேருந்து நிலையமும், கந்தர்வக்கோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கிவந்த கால்ஸ் மதுபான ஆலையை நிரந்தரமாக மூடச்செய்வதும் உடனடியாகச் செயல்படுத்தப் படும்’ என உறுதியளித்தார். ஜெயலலிதாவின் வாக்குறுதியும், தி.மு.க மீதான அதிருப்தியும் சுப்ரமணியனை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தன. மீண்டும் மன்னார்குடி ரூட்டைப் பிடித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராகவும் ஆனார் சுப்ரமணியன். அவர் திட்டமிட்ட அரசியல் அந்தஸ்து கிடைத்தது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறினவா? அதற்கு சுப்ரமணியனே வைத்தார் மெகா ஆப்பு!
தொகுதியின் 'செல்லமில்லா’ பிள்ளை!
கந்தர்வக்கோட்டையில் பேருந்து நிலையம் என்பதுதான் தொகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பு. சுப்ரமணியனும் பேருந்து நிலையத்தை அமைக்க அதீத ஆதரவுதான் காட்டினார். ஆனால், அது உள்ளூர் மக்களை ஏகத்துக்கும் எரிச்சலுக்கு ஆளாக்கியது! ஏன்?
தற்போது தஞ்சாவூர் தொகுதி எம்.பி-யாக உள்ள பரசுராமன், இதற்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீலகிரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். அப்போது கந்தர்வக்கோட்டை பொது சுடுகாட்டுக்கு அருகில் 20 ஏக்கர் நிலத்தை மலிவு விலைக்கு வாங்கிப்போட்டார். சுடுகாட்டுக்கு அருகில் இருந்ததால், அந்த இடத்துக்கு மார்க்கெட் மதிப்பும் எகிறவில்லை. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய நினைத்த பரசுராமன், அமைச்சர் சுப்ரமணியனிடம் தஞ்சம் அடைந்தார். 'என் நிலத்தில் இரண்டு ஏக்கர் பேருந்து நிலையம் கட்ட இலவசமாகத் தருகிறேன். கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தை எனது இடத்துக்குக் கொண்டு வாருங்கள்’ என, சுப்ரமணியனிடம் பரசுராமன் கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். அதனால் ஏற்கெனவே பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த, ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்த இடத்தில் இருந்து பேருந்து நிலையம் மாற்றப்பட்டு, பரசுராமனின் இடத்தில் அமைப்பதற்கான வேலைகள் துரிதம் எடுத்தன. அதற்காக அரசாங்கச் செலவில் பரசுராமனின் இடத்துக்கு தார்ச்சாலைகள் பளபளவென போடப்பட்டன.
கொதித்துப்போன கந்தர்வக்கோட்டை பொதுமக்கள், அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தலைமையில் போராட்டத்தில் குதித்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் ஒன்றிணைந்தன. சுப்ரமணியனுக்கு எதிராகப் போராட்டம் மாதக்கணக்கில் நீடித்தது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கவிதா சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பேருந்து நிலைய இடமாற்றத்துக்குத் தடை ஆணை வழங்கி, ஆய்வு அறிக்கைக்குப் பிறகு முடிவு எடுக்கலாம் எனச் சொன்னது நீதிமன்றம். அந்தத் தீர்ப்பாணையை வாங்கிக்கொண்டு, மதுரையில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு வரும் வழியில் நடந்த எதிர்பாராத விபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதாவின் கணவர் சிவாவும் அவரது நண்பரும் இறந்துவிட, அதுவும் சர்ச்சையைக் கிளம்பியது. ஆய்வு அறிக்கைக்குப் பிறகு கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் சுடுகாட்டுப் பகுதியில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இடையில் பேருந்து நிலைய பிரச்னைக்காகப் போராடிய கவிதாவின் செக் பவரைப் பறித்து, அவரை முடக்கிவிட்டார்கள்.
கந்தர்வக்கோட்டையில் அமையவிருந்த ஆர்.டி.ஓ அலுவலகத்தை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதிக்கும், ஆதிதிராவிடர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தை திருநெல்வேலிக்கும் விட்டுக்கொடுத்துவிட்டார் சுப்ரமணியன் என்ற அதிருப்தியும் நிலவுகிறது. அரசு அறிவித்த பாலிடெக்னிக் கல்லூரி, அரசுக் கல்லூரிகளை தன் தொகுதிக்குக் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டாமல் கோட்டைவிட்டுவிட்டார் அமைச்சர் என்றும் புலம்புகிறார்கள் உள்ளூர் மக்கள். இப்படியான தொடர் சர்ச்சைகள் மற்றும் அதிருப்திகளால் கந்தர்வக்கோட்டை மட்டும் அல்லாமல் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் சுப்ரமணியன் மீது கடும் கோபத்துடன் இருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் கந்தர்வக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி மற்றும் சைக்கிள் கொடுக்க வந்த சுப்ரமணியனை மறித்துவிட்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்தான், தொகுதிக்குள் நடக்கும் அரசு விழாக்களில் கலந்துகொள்கிறார் அமைச்சர்.
துறையில் சாதித்தது என்ன?
ஆதிதிராவிடர் நலத் துறை என்பது, மிக முக்கியமான பொறுப்புகள் நிறைந்த துறை. தமிழ்நாடு முழுவதும் இந்தத் துறையின் கீழ் பல ஆதிதிராவிடர் பள்ளிகள் பராமரிக்கப் படுகின்றன. இவை தவிர்த்து, தமிழ்நாடு முழுக்க உள்ள ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளின் பராமரிப்பும் இந்தத் துறையின் கீழ்தான் இருக்கின்றன. அவற்றின் பராமரிப்பு, அங்கு வழங்கப்படும் தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற சூழ்நிலை, பல நூறு மாணவர்களுக்கு ஒரு கழிவறை அல்லது கழிவறையே இல்லாத மாணவியர் விடுதிகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த அவலங்களை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தேர்தல் நேரத்தில் பெரும் மாணவர் போராட்டம் வெடிக்கக் காத்திருக்கிறது.
துறையில் அமைச்சர் சுப்ரமணியனின் தலைமையில் என்னவெல்லாம் நடைபெற்றன எனப் பட்டியலிட்டால், அது மிக சொற்பமாகவே இருக்கும். 'என்னவெல்லாம் நடைபெறவில்லை?’ என்ற பட்டியல் மிக நீளமானது. அவற்றைப் பார்ப்போம்!
இந்தியாவிலேயே முதன்முதலாக போடப்பட்ட கமிஷன், 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கமிஷன்’தான். இந்த கமிஷன், மற்ற மாநிலங்களில் பெயரளவுக்காவது இயங்குகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அந்தக் கமிஷனே அமைக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், அரசின் இந்த அலட்சியப் போக்குக்கு எதிராக பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, அதில் பல தீர்ப்புகள் வந்துவிட்டன. ஆனால், இதுவரை அதற்காக தமிழ்நாடு அரசு ஒரு சிறு அடியைக்கூட எடுத்துவைக்கவில்லை.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மாமல்லபுரம் அருகே தலித் கலைஞர்களுக்கான ஓவியக் கிராமம், தஞ்சாவூரில் நாட்டுப்புறக் கலைகளுக்கான பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட 10 திட்டங்களுக்கு மேல் அறிவித்தார்கள். ஆனால், அப்போதும் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பும் இப்போதும் அதற்காக அ.தி.மு.க அரசு ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்கவில்லை.
மற்ற மாநிலங்களில் சாதி கலவரங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் விஜிலன்ஸ் கமிட்டி அமைக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை ஆய்வுசெய்து வன்கொடுமைகளைத் தடுக்க வழிவகை செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இத்தகைய விஜிலன்ஸ் கமிட்டி இயங்கவே இல்லை. இது ஆதிதிராவிடர் நலத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இது தொடர்பான கவனஈர்ப்புகளுக்கு அமைச்சர் வாய் திறப்பதே இல்லை.
மத்திய அரசாங்கம் சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலித் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கிய
500 கோடி ரூபாயைப் பயன்படுத்தாமல், மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்படும் பல்வேறு திட்டங்களுக்கான கோடிக்கணக்கான நிதியை முறையாக வழங்காமல் தொடர்ந்து அலட்சியம் செய்துள்ளது. சமயங்களில் அதைப் பயன்படுத்தி, இலவச வண்ணத் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், பொதுப்பட்டியலில் உள்ள ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கு உதவித்தொகை, இலவச அரிசித் திட்டம் என பொதுவான திட்டங்களுக்குப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இது பெரிய புகாராகக் கிளம்பியபோது, 'இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான அநீதி’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட, அதற்கும் துறை அமைச்சர் அலட்டிக்கொள்ளவில்லை!
அ.தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம், சேஷசமுத்திரம் என தலித்களுக்கு எதிராக பல கலவரங்கள் நடந்ததோடு, கோகுல்ராஜ் கொலை வரை வந்து நிற்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களை அமைச்சர் நேரில் சந்திக்கவில்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், அரசு ஆணை 92-ன்படி தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் தலித் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என உத்தரவிட்டது. இதை நம்பி தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தார்கள். ஆனால், அரசு பலமுறை உத்தரவிட்டும் பல தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டாயக் கட்டண வசூல் நடத்திவருகின்றன. அதைக் கட்டாத மாணவர்களை, தேர்வு எழுதவிடாமல் அனுமதி மறுக்கும் அத்துமீறலும் நடைபெறுகிறது. இந்த நெருக்கடிகளுக்குப் பயந்து பல மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்ட கொடுமையும் நிகழ்ந்தது. அமைச்சர் சுப்ரமணியனின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் இயங்கிவரும் பல கல்லூரிகளிலேயே இந்த நிலை இன்னும் தொடர்கிறது. ஆனால், அவற்றை முடக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.
தமிழ்நாடு முழுக்க தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை சரிவர வழங்கப்படுவது இல்லை. காரணம் கேட்டால், 'அரசிடம் நிதி இல்லை’ எனக் கை விரிக்கின்றனர். இந்த விவகாரத்தை அமைச்சரின் அலுவலகம் எப்படிக் கையாள்கிறது என்பதற்கான உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
கடந்த ஆண்டு சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்கிற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மருந்தியல் ஆராய்ச்சி மாணவருக்கு, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பங்கெடுக்க லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இந்த மனு அப்போதைய துறை இயக்குநர் கண்ணகி பாக்கியநாதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஒப்புதல் கிடைக்காமல் ஏகத்துக்கும் இழுத்தடித்திருக்கிறார்கள். என்ன காரணத்துக்காக அமைச்சரின் அலுவலகம் அந்த விண்ணப்பத்தை இழுத்தடித்தது என்பது தெரியாதா என்ன?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான மானியக் கோரிக்கையின்போது, 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள 1,408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா, சில மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டு ஓர் அறிக்கை அளித்தார். அவருடைய அறிக்கையில், தமிழ்நாட்டில் எஸ்.சி பிரிவில் 20.01 சதவிகிதம் மக்கள் உள்ளனர். இடஒதுக்கீட்டில் 18 சதவிகிதம் பேர் பயன் அடைந்ததாக இருந்தாலும், பொருளாதாரத்தில் அவர்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். தலித் மக்களில் 33 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, அரசின் பொதுத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி அதிக அளவில் புகார்கள் அளிக்கப்பட்டாலும், மிகக் குறைந்த அளவே புகார்கள் பதிவுசெய்யப் படுகின்றன. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலங்கள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் சென்னையை மட்டுமே மையப்படுத்தியுள்ளது. கிராமங்களையும் உள்ளடக்கி இந்தப் புள்ளிவிவரங்களைத் திரட்ட வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கான பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
14 சதவிகித ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 2,000 பேர் ஆதிதிராவிடர் என, போலிச் சான்றிதழ்கள் கொடுத்து வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கல்விக் கட்டணம் முறையாக மாணவர்களுக்குச் சென்று சேர்வது இல்லை என்றெல்லாம் பல பகீர் குற்றச்சாட்டுகளைப் புட்டுப்புட்டு வைத்தார். ஆனால், அதற்கெல்லாம் அமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல வேண்டுமே... ம்ஹூம்!
2016-ம் ஆண்டு தேர்தல் நெருங்கிவிட்டது. கந்தர்வக்கோட்டையில் ஏக அதிருப்தி நிலவுவதால், இந்த முறை எந்தத் தொகுதியில் போட்டியிடலாம், ஸீட் பெற யார் யாரிடம் சிபாரிசுக்குச் செல்லலாம் என்பதிலேயே அமைச்சரின் முழு முனைப்பும் நினைப்பும் இருக்கின்றன. என்னத்தைச் சொல்ல?
கட்சிக்குள்ள கலாட்டா பண்ணு!
புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது கோலோச்சும் விஜயபாஸ்கருக்கு முன்பே அமைச்சரானவர் சுப்ரமணியன். ஆனால், விஜயபாஸ்கருக்கு இருக்கும் செல்வாக்கும் மரியாதையும் சுப்ரமணியனுக்கு தொகுதிக்குள் கிடையாது. 'லோக்கல் விசிட்’ என்றாலும் சுப்ரமணியன் தனியாளாக வருகிறார். அவருடன் போலீஸ்காரர்களைத் தவிர வேறு யாரும் வருவது இல்லை. இதில் கடுப்பாகிப்போய், 'நானும்தான் அமைச்சர். என்னை ஏன் யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க?’ என வெளிப்படையாகவே புலம்புகிறார்.

கட்சிக்காரர்களை இவர் உதாசீனப்படுத்துவதால், இவரையும் அவர்கள் ஒதுக்குகிறார்கள். மாவட்டத்தில் ஒரே அமைச்சராக வலம்வந்துகொண்டிருந்த தனக்குப் போட்டியாக, விஜயபாஸ்கரும் அமைச்சரானதில் சுப்ரமணியனுக்குக் கடும் அதிர்ச்சி. அன்று முதல், ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றிக் குழிபறித்துக்கொண்டிருக்கின்றனர். விஜயபாஸ்கரைப் பிடிக்காத சிலர் அல்லது விஜயபாஸ்கருக்குப் பிடிக்காத சிலர் சுப்ரமணியன் பக்கம் இருக்கிறார்கள். திருமயம் தொகுதி எம்.எல்.ஏ வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ
நெடுஞ்செழியன், நகரச் செயலாளர் பாஸ்கர் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். இவர்களை அழைத்துக்கொண்டு ஏற்காடு இடைத்தேர்தல் பணிக்குச் சென்றார் அமைச்சர் சுப்ரமணியன். அங்கு விஜயபாஸ்கர் பக்கமே மாவட்ட நிர்வாகிகள் நிறையப் பேர் வட்டமிட, நொந்துபோன சுப்ரமணியன் ஓ.பி.எஸ்-ஸிடம் போய் முறையிட்டார். அதன் பிறகுதான் ஓ.பி.எஸ் இருவருக்கும் தனித்தனியாக 'டீம்’ பிரித்துக் கொடுத்தார். விஜயபாஸ்கரோடு ஒட்டாமல் இருக்கிறார் என்ற காரணத்தால்தான், கட்சியில் ஒருசிலர் இவரோடு
ஒட்டிக்கொண்டிருந்தனர். ஆனால், பெரிய அளவில் பலன் இருக்கும் என்றால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் அனுசரித்துக்கொள்வதும் நடக்குமாம். இந்த ரகசிய உடன்பாடு தெரியவந்ததும் சுற்றி இருந்த சிலரும் சுப்ரமணியனை விட்டு விலகிவிட்டனர்!
பூட்டு... இனி கிடைக்குமா ஓட்டு!

அமைச்சரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நிரந்தரமாகவே பூட்டிக்கிடந்தால், தொகுதி மக்கள் குற்றம் குறைகளை எங்கேதான் சென்று சொல்வார்கள்? அமைச்சரான கையோடு தன் ஜாகையை சென்னைக்கு மாற்றிவிட்டார் சுப்ரமணியன். கந்தர்வக்கோட்டை வந்து போனால் தங்க புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்குப் பின்னால், பெரியார் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு பிடித்துக்கொண்டார். தொகுதியில் நடக்கும் விழாக்களுக்கு மட்டும் தலை காட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார். இதனால், அமைச்சர் எப்போது தொகுதிக்குள் வருகிறார்... எப்போது சென்னைக்குப் போகிறார் எனக் கட்சிக்காரர்களுக்கே தெரியாது. புதிதாகக் கட்டப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24ஜ்7 பூட்டியே கிடக்கிறது. 'பூட்டா போட்டு வெச்சிருக்கீங்க... ஓட்டுக் கேட்டு வருவீங்கள்ல... அப்போ வெக்கிறோம் வேட்டு’ எனக் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் உள்ளூர் வாக்காளர்கள்!
நையாண்டி தர்பார்!
மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருகிறார்களோ இல்லையோ, அதைக் கொண்டுபோகிறவர்களிடம் குதர்க்கமாகப் பேச மாட்டார்கள். ஆனால், சுப்ரமணியன் பாணி அதிலும் விவகாரமானது. கோரிக்கையோடு வருபவர்களிடம் குதர்க்கமாகப் பேசி, கடுப்பேற்றித்தான் அனுப்புவாராம். கந்தர்வக்கோட்டை மக்களின் நீண்டகாலக் கோரிக்கை, தங்கள் ஊரில் இருந்து சென்னைக்கு ரூட் பஸ் விடவேண்டும் என்பது. தங்கள் தொகுதி எம்.எல்.ஏ அமைச்சராகிவிட்டதால், அந்தக் கனவு விரைவில் நனவாகிவிடும் என நம்பியவர்கள், இது தொடர்பாக சுப்ரமணியனைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்டுக்கொண்டவர், 'ஏம்ப்பா... நீங்கள் எல்லாம் உங்க ஊருக்கு பஸ் வந்தாதான் சென்னைக்குப் போவீங்களா? இந்த புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிக்கு எல்லாம் போயி, அங்கே இருந்து பஸ் புடிச்சு சென்னைக்குப் போனா தேய்ஞ்சு போயிடுவீங்களா?’ எனக் கிண்டலாகக் கேட்டாராம். வேதனையும் அவமானமுமாக வெந்து நொந்து திரும்பியிருக்கிறார்கள் பரிதாப மக்கள்!