சினிமா
Published:Updated:

இந்திய இளவரசி!

பா.ஜான்ஸன், படங்கள்: ர.சதானந்த்

''நான் 'இந்தியன் ஐடல்’ போட்டியில் கலந்துக்கிட்டேன்... ரன்னர்-அப் வந்தேன்கிறது எல்லாம் சந்தோஷம்தான். ஆனா, அதைவிட பெரிய சந்தோஷம் நிறைய இருக்கு. நான் பாடினதைக் கேட்ட சோனாக்ஷி சின்ஹா, 'சினிமாவுக்குத் தேவையான மூணு விஷயங்கள் பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு... பொழுதுபோக்கு! அந்த மூணு விஷயங்களும் கிடைக்கிற ஒரு வழி கேசட், இன்னொண்ணு சி.டி., இன்னொண்ணு நித்யஸ்ரீ’னு பாராட்டினாங்க. 

 அப்புறம் இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ் சார், 'நித்யஸ்ரீ, நீ பாடுற ஸ்டேஜ் ஷோ எங்கே நடந்தாலும் சரி... டிக்கெட் எவ்வளவு விலை இருந்தாலும் சரி... எனக்குச் சொல். நான் கண்டிப்பா டிக்கெட் வாங்கிட்டு வந்து பார்க்கிறேன்’னு சொன்னார். 'சாத்தியா...’னு ஒரு பாட்டு பாடினப்போ, எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பியிருந்தார். 'அது ரொம்பவே கஷ்டமான பாட்டு. நீ அதை அழகாப் பாடின. நீ பெரிய பாடகிடா செல்லம்’னு அதுல பாராட்டியிருந்தார்.

'இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் யாரைப் பிடிக்கும்?’னு ஸ்ரேயா கோஷல்கிட்ட கேட்டப்போ, அவங்க என் பேரைச் சொன்னாங்க. அப்போல்லாம் 'இதுக்கு மேல என்ன வேணும்?’னு தோணிச்சு. ஆனா, இதுக்கு மேலதான் என் கேரியர் ஆரம்பிக்குதுனு இப்போ தோணுது'' - குழந்தைக் குதூகலத்துடன் பேசுகிறார் நித்யஸ்ரீ.

இந்திய இளவரசி!

இந்தியா முழுக்க இருந்து திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து, பிரமாண்ட பில்ட்-அப்புடன் சோனி டி.வி-யில் நடக்கும் ரியாலிட்டி மியூசிக் ஷோதான் 'இந்தியன் ஐடல் ஜூனியர்’. அதில்தான் பல பாராட்டுக்களைக் குவித்து, இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் நித்யஸ்ரீ. இந்த நிகழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் மும்பையில் வசித்துவிட்டு, அன்றுதான் சென்னை திரும்பியிருந்தார்.  

''அட... மும்பையில இருந்தேன்னுதான் பேரு. ஆனா, நாலு மாசமும் செட்டுக்குள்ள பயிற்சி, ரிக்கார்டிங்னுதான் ஓடுச்சு. நாலு வயசுலேர்ந்தே பாட்டு கத்துட்டிருக்கேன். அம்மா, அப்பா, அக்கா... எல்லாருமே பாடகர்கள்தான். ஷோவில் இந்திப் பாடல்கள் பாடணும்கிறதுதான் ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, பயிற்சியில் சரி பண்ணிக்கிட்டேன்!  

இந்தி 'ராவன்’ படத்துல இருந்து 'கிலிரே...’ பாடலை முதலில் பாடினேன். நான் பாடி முடிச்சதும் 'ஸ்டாண்டிங் ஓவேஷன்’. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. 'சல்கா... சல்கா’னு ஒரு பாட்டை மூணு விதமான குரல்கள்ல பாடினேன். அது 'மிஸ் ரெடிக்குலஸ்’ பட்டம் வாங்கிக் குடுத்தது. 'வசீகரா என் நெஞ்சினிக்க...’ பாட்டின் இந்தி வெர்ஷன் பாடினேன். அதைக் கேட்டு ரசிச்சு சிலாகிச்சுப் பாராட்டின இசையமைப்பாளர் சலீம், 'கண்டிப்பா என் மியூசிக்ல நீ பாடுற’னு சொல்லியிருக்கார். இப்படி இன்னும் நிறையப் பாராட்டுக்கள், வாய்ப்புகள்!''

''ஷோ எப்பவும் சீரியஸாவே இருக்குமா?''

''சீரியஸா இருக்கிறப்ப செம சீரியஸா இருக்கும். மத்த நேரங்கள்ல செம காமெடியா இருக்கும். நிகழ்ச்சியின் நடுவுல, 'அவங்க அவங்க தாய்மொழி இல்லாம இன்னொரு மொழியில ஒரு ரெண்டு வரி பேசக் கத்துக்கணும். ஆனா, அதுக்கு அர்த்தம் சொல்லிக்கொடுக்க மாட்டோம்’னு  சொன்னாங்க. எனக்கு வந்திருந்த மொழி 'பெங்காலி’. எனக்குச் சொல்லிக்கொடுத்த வரிகள்... 'அமி தொமாக்கே கிர்னா கரி’, 'அமி தொமாக்கே பாலபாசி’. நான் ஜாலியா மனப்பாடம் பண்ணிட்டு மேடையில சொல்றேன். எல்லாரும் சிரிசிரினு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம்தான் அந்த வரிகளுக்கு அர்த்தம் சொல்றாங்க. முதல் வரிக்கு 'ஐ ஹேட் யூ’, ரெண்டாவதுக்கு 'ஐ லவ் யூ’... இதுதான் அர்த்தம். இப்படி இன்னும் நிறைய காமெடிகள்!''

இந்திய இளவரசி!

''இப்படி மாசக்கணக்கா வெளியூர்ல இருந்தா படிப்பு பாதிக்குமே!''

''நான் நல்லா படிக்கிற பொண்ணு. இப்போனு இல்லை... ஏழாவதுல இருந்தே நான் ஸ்கூலுக்கு ஒழுங்கா போக முடியலை. அதனால ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது வகுப்பு  ஃபைனல் எக்ஸாம்களை சரியான நேரத்தில் நான் எழுதினதே இல்லை. மத்தவங்க எல்லாம் எழுதி முடிச்சு 10 நாட்கள் கழிச்சு, எனக்காகத் தயாரிச்ச கேள்வித்தாளை வெச்சு எக்ஸாம் எழுதுவேன். அந்தப் பத்து நாள்ல படிச்சுத்தான் எக்ஸாம்ல ஸ்கோர் பண்ணுவேன். அந்த அளவுக்கு என்னை எஸ்.பி.ஓ.ஏ ஸ்கூல்ல உற்சாகப்படுத்துறாங்க. ஆனா, இந்த வருஷம் ப்ளஸ் டூ. ஸ்பெஷல் எக்ஸாம் எழுத முடியாது. ஏற்கெனவே விட்ட போர்ஷன்ஸ் படிக்கணும். ப்ளஸ் டூ பாஸ் பண்ண பிறகு, கோலிவுட், பாலிவுட்னு பறக்க வேண்டியதுதான்!''

ஹீரோயினா நடிச்சுட்டே பாடலாமே நித்யா!