Published:Updated:

இந்திய வானம் - 7

இந்திய வானம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய வானம்

எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா

நம்பிக்கையின் 

நான்கு கால்கள்

இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள், படுகொலையில் இருந்து தப்பிக்க, அகதிகளாக வெளியேறி பல்வேறு நாடுகளுக்கும் போனார்கள். அப்படி அமெரிக்கா போன  'டோரன்’ என்கிற யூதர், என்ன வேலைசெய்து பிழைப்பது எனத் தெரியாமல் பாஸ்டனில் சுற்றி அலைந்துகொண்டிருந்தார்.

நண்பரின் உதவியால் அவருக்கு ஒரே ஒரு மரமேஜை, இலவசமாகக் கிடைத்தது. அந்த மேஜை துறைமுக சரக்கு ஏஜென்ட் ஒருவரின் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஏஜென்ட் தனது அலுவலகத்தைக் காலிசெய்தபோது தேவையற்றது என, அந்த மேஜையைத் தூக்கி எறிந்துவிட்டார்.

அந்த மேஜையை என்ன செய்வது எனத் தெரியாமல் ஏற்றுக்கொண்டார் டோரன். முதலீடு செய்து தொழில் தொடங்க அவரிடம் பணம் இல்லை. இந்த மேஜையை என்ன செய்வது என யோசித்துக்கொண்டே இருந்தார். திடீரென ஒரு யோசனை உருவானது. அதன்படி அப்போது நகரில் இருந்த தொழிற்சாலை ஒன்றின் நுழைவாயிலில், அந்த மேஜையைப் போட்டு செய்தித்தாள் விற்கத் தொடங்கினார். அது சொற்ப வருமானத்தைத் தருவதாக அமைந்தது.  

மாலை நேரங்களில் அதே மேஜை மீது பூங்கொத்துகளை அடுக்கி விற்க ஆரம்பித்தார். பின்னர் டைப் ரைட்டிங் மெஷின் ஒன்றை வாங்கி, மேஜையில் வைத்து டைப் அடித்துத் தரத் தொடங்கினார். மெழுகுவத்திகள் வாங்கிவந்து அடுக்கி விற்றார். இப்படி அவரது ஓயாத உழைப்பைக் கண்ட வில்லியம்ஸ் என்ற நண்பர், நொடித்துப்போன தனது ரெஸ்டாரன்ட் ஒன்றை அவரிடம் ஒப்படைத்தார். தனது முழுக் கவனத்தையும் உணவகத்தை மேம்படுத்து வதில் டோரன் செலவழித்தார். அங்கே முதலாளி அமர்ந்து கணக்குப் பார்க்கும் மேஜையாக அது உருமாறியது.

அடுத்த 10 ஆண்டுகளில் அந்த உணவகத்தில் இருந்து வளர்ந்து, பல்வேறு புதிய தொழில்களைத் தொடங்கினார் டோரன். பணமும் வசதியும் வந்து சேர்ந்தன. ஆனால், அவரது மேஜை மாறவே இல்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது வருவாயின் ஒரு பகுதியை, மேஜையை தனக்கு இலவசமாகத் தந்தவருக்குக் கொண்டுபோய் கொடுத்து நன்றி செலுத்தினார்.

இந்திய வானம் - 7

'ஒரு மேஜையின் மதிப்பு இத்தனை லட்சம் டாலரா?!’ என வியந்து கேட்டார் ஏஜென்ட். அதற்கு டோரன் சொன்னார்... 'அது, வெறும் மர மேஜை அல்ல. நம்பிக்கையின் நான்கு கால்கள்.’ ஒரு மர மேஜை டோரனின் வாழ்க்கையை உருமாற்றிவிட்டது. பொருட்கள், விலைமதிப்பு இல்லாத இடத்தை அடைவது இதுபோன்ற அனுபவத்தின் வழியேதான்.

நம் ஒவ்வொருவரிடமும் இதுபோல ஏதோ ஒரு பொருள் உள்ளது. அது உலகின் கண்களுக்குச் சாதாரணமானது. நமக்கு மட்டும்தான் அதன் முக்கியத்துவம் தெரியும்.

'பத்து ரூபாயின் மதிப்பு எவ்வளவு?’ என வழக்குரைஞரான என் நண்பரின் அம்மா ஒருமுறை என்னிடம் கேட்டார்.

'இது என்ன கேள்வி... பத்து ரூபாய்தான்’ என்றேன்.

'இல்லை... காலம் சில பொருட்களின் மதிப்பை அதிகப்படுத்திவிடுகிறது. நான் முப்பது வருடங்களாக பத்து ரூபாய் நோட்டு ஒன்றை வைத்திருந்தேன். என் வரையில் அதன் மதிப்பு பல லட்சங்களுக்கும் மேல். அந்தப் பத்து ரூபாய் தந்த நம்பிக்கையை எதனாலும் தந்திருக்க முடியாது’ என்றார்.

'எப்படி?’ எனக் கேட்டேன். அவர் சிரித்தபடியே சொன்னார்...

'ரூபாய் நோட்டு என்பது செலவு செய்ய மட்டும் அல்ல. நம்பிக்கையை உருவாக்குவதற்கும் தைரியம் கொள்வதற்கும் தேவைப்படுகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு எனக்குக் கல்யாணமானபோது விவரம் தெரியாத கிராமத்துப் பெண். கணவர் குடும்பம் மிகப் பெரியது. கூட்டுக் குடும்பம். அந்த வீடும் அவர்களின் பழக்கவழக்கங்களும் கோபமும் ஏச்சும்-பேச்சும் பயமுறுத்துவதாக இருந்தன.

கல்யாணமாகி வந்த ஒரு மாதத்தில், எனக்கு மூச்சு முட்டிப்போனது. நான் எது செய்தாலும் யாராவது திட்டினார்கள். சினிமாவுக்குப் போவது என்றால் பத்து தடவை சொல்ல வேண்டும். ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிடலாம் என்றால் திட்டுவார்கள். பூ வாங்கக்கூட என்னிடம் காசு கிடையாது. என் கணவர் வீட்டுச் செலவுக்கான பணத்தை அவரது அம்மாவிடம்தான் தருவார். நானாக காசு கேட்டாலும், 'உனக்கு எதுக்கு காசு? வேணும்னா அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கோ’ என்பார். மாமியாரிடம் போய் எப்படி காசு கேட்பது என ஒடுங்கிப்போயிருந்தேன்.

ஆனால், நாளுக்குநாள் இந்த நெருக்கடி அதிகமாகவே என் அப்பாவை வரச்சொல்லி கடிதம் போட்டேன். என் அப்பா பள்ளி ஆசிரியர். கடிதம் போய்ச் சேர்ந்து நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, என்னைப் பார்க்க வந்தார். ஆறுதலாக நிறையப் பேசினார்.

'குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நீதான் புரிந்துகொண்டு அரவணைத்துப் போகவேண்டும். ஒருவேளை ரொம்பக் கஷ்டமாக இருந்தால், ஊருக்குப் புறப்பட்டு வர பஸ் சார்ஜுக்கு, இந்தப் பத்து ரூபாயை வைத்துக்கொள். பஸ் பிடித்து வந்துவிடு. பிறகு நான் பேசிக்கொள்கிறேன்’ எனச் சொல்லி பத்து ரூபாயைக் கையில் கொடுத்தார்.

அது வெறும் பணம் அல்ல... தைரியம். அதை கையில் வாங்கி ஒரு துணியில் முடிந்து வைத்துக்கொண்டேன். அந்தப் பணம் கையில் இருக்கிறது என்ற எண்ணம் என்னை மாற்றத் தொடங்கியது.

பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொள்ளத் தொடங்கினேன்; சமாளித்தேன். பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, படிக்கவைத்து இன்று நல்ல நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த முப்பது வருடங்களில் எவ்வளவோ பணத்தைப் பார்த்துவிட்டேன். ஆனால், அந்தப் பத்து ரூபாயும் அது தந்த நம்பிக்கையும் மறக்கவே முடியாதது.

சில சமயம் அந்தப் பத்து ரூபாயைக் கையில் எடுத்துப் பார்ப்பேன். 'இனி எதற்கு இந்தப் பணம்?’ எனத் தோன்றும். ஆனால், இது வெறும் பத்து ரூபாய் அல்ல; வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்த பொருள் என வைத்துக்கொண்டே இருந்தேன். எங்களின் அறுபதாம் கல்யாணம் நடந்தபோது அந்தப் பத்து ரூபாயை எடுத்து உண்டியலில் போட்டுவிட்டேன்.

'ஏன்?’ எனக் கணவர் கேட்டார்.

'இனி எனக்கு அந்தப் பணம் தேவைப்படாது.

வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது பணமோ பொருளோ ஏதோ ஒன்று நம்பிக்கையூட்ட தேவைப்படுகிறது.’  

நான் குறுக்கிட்டுச் சொன்னேன்...

'தென்மாவட்டங்களில் கிழவிகள் காது வளர்த்து பாம்படம் போட்டிருப்பார்கள். அது வெறும் நகை அல்ல. சாவுச் செலவுக்கான பணத்துக்கானது.’

நண்பனின் அம்மா சொன்னார்...

இந்திய வானம் - 7

'கரெக்ட் தம்பி. யாரையும் எதிர்பார்க்காமல் நம் தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றால் பணம் முக்கியம். ஓர் ஆள் அவமானப்படாமல் வாழ வேண்டும் என்றால் பணம் இல்லாமல் முடியாது. எவ்வளவு பணம் வேணும்கிறது அவரவர் எண்ணத்தையும் விருப்பத்தையும் பொறுத்த விஷயம். ஆனால், யார் பணத்தைப் போதும் எனச் சொல்லப்போகிறார்கள்? வாழ்க்கை முழுவதும் பணத்தைச் செலவழித்து, ஓர் உண்மையை உணர்ந்துகொண்டேன். அது என்ன தெரியுமா?

எல்லா விஷயங்களையும் பணத்தால் வாங்கிவிடவோ, சரிசெய்துவிடவோ முடியாது. பணத்தைவிட மனசு முக்கியமானது. அது இல்லாமல் பணம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்? பணம்கூடப் போராடி, கஷ்டப்பட்டால் திரும்பக் கிடைத்துவிடும். முறிந்த உறவுகளும் அறுத்து எறிந்த நட்பும் திரும்பக் கிடைப்பது எளிதே இல்லை!’ என்றார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை.

யோசித்துப்பார்த்தால், உறவுகள் ஒன்று சேர்வதற்குப் பதிலாகத் துண்டித்துப்போவதற்கு பணம் அதிகம் காரணமாக இருந்திருக்கிறது. பணத்தால் எல்லோரையும் சந்தோஷப்படுத்திவிட முடியாது. பணத்தையும்  'நாணயம்’ என்கிறோம். சத்தியத்தையும் 'நாணயம்’ என்கிறோம். ஒரே சொல்தான்.

ஒருகாலத்தில் இரண்டும் மதிப்புமிக்கதாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு இரண்டுக்கும் மதிப்பு இல்லாமல்போய்விட்டது.

பணம் இல்லாமல் வாழ முடியாது. பணமே இன்றைய அளவுகோல். பணத்தை எப்படிச் சம்பாதிப்பது, எப்படிச் செலவுசெய்வது என்பதுதான் இன்றைய பிரச்னை. நாம் தேடும் பணம் தீதின்றி வந்ததாக இருக்க வேண்டும் என்கிறது திருக்குறள்.  

பழைய நாணயங்களை வாங்குகிறவர்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்த காசு என்பதற்கேற்ப அதன் விலையை மதிப்பிடுகிறார்கள். அந்த நாணயம் அதன் பழைய மதிப்பைப்போல பல நூறு மடங்கு இன்று அதிகமானதாக மாறிவிடுகிறது. இன்னொரு பக்கம் சில நாணயங்கள் செல்லாக்காசு ஆகிவிடுகின்றன. அவை - இன்று வெறும் உலோகப்பொருட்கள்; காகிதங்கள். மனித வாழ்க்கையும் அப்படியானதே. சிலரது வாழ்க்கை மதிப்புமிக்கதாக ஆகிவிடுகிறது; சிலரது வாழ்க்கை அர்த்தமற்றதாக முடிந்துவிடுகிறது!

காலம்தான் பொருளின் மதிப்பை தீர்மானிக்கிறது. எதை முக்கியம் என நினைக்கிறோமோ, அது காலத்தில் அர்த்தமற்றதாகிப்போகிறது. எதைத் தேவையற்றது என நினைக்கிறோமோ அதை மதிப்புமிக்கதாக்கிவிடுகிறது. காலத்தின் இந்த ரசவாதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிவதே இல்லை.

தனக்குக் கிடைத்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறோம் என்பதற்கு டோரன் ஓர் உதாரணம் என்றால், பார்வையற்றவரான ஹெலன் கெல்லர், தானே முயன்று கல்வி பயின்றதோடு பார்வையற்றோருக்கான

வழிகாட்டியாக உருமாறியது வரலாற்றுச் சாதனை. கண் பார்வை இல்லாமல், காது கேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றவர் ஹெலன் கெல்லர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

அவரது புகழ்பெற்ற உரைகள் தனி நூலாக வெளிவந்துள்ளன. கெல்லரின் குரல் கரடுமுரடானது. அவருக்கு தன் உரையை யார் கேட்கப்போகிறார்கள் எனத் தெரியாது. ஆனால், அவரது பேச்சில் உண்மை இருந்தது. சத்திய ஆவேசம் இருந்தது. தன்னை ஒரு சோஷலிசவாதியாக அறிவித்துக்கொண்ட கெல்லர், பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு ஆதரவாகத் தனது குரலை எழுப்பினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றிய உரையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் வலிமையானவை.

'பேச்சின் வலிமையை உலகுக்கு உணர்த்தியவர் சாக்ரடீஸ். அவர் சொல்லை ஓர் அஸ்திரம்போல பயன்படுத்தினார். அவரது ஒவ்வொரு சொல்லும் கேட்பவர் மனதைத் துளைத்து, ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.   உரையாடல்களின் மூலம் அவர் சொற்களின் உண்மையான பொருளை நமக்கு விளங்கச் செய்தார்.

வீரம், நீதி, தைரியம்... போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், அதன் அர்த்தம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது; தேவைக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆனால், இதன் உண்மைப்பொருள் என்ன, எப்படி அதை வரையறை செய்வது... சாக்ரடீஸ் அதை நமக்கு விளங்கச் செய்கிறார்.

தைரியம் என்ற ஒற்றைச் சொல்லை முன்வைத்து அந்தச் சொல்லின் பல்வேறு சாத்தியங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறார். நாம் உச்சரிக்கும் சொற்களின் உண்மைப்பொருளை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். பேச்சின் வழியே உரத்தச் சிந்தனைகளை முன்வைத்து மாற்றங்களை உருவாக்க முயன்றார் சாக்ரடீஸ்.

சிந்தனையில் மாற்றத்தை உருவாக்குவதற்கு புத்தகங்கள் முக்கியமானவை. புத்தகங்களே எனது சிறந்த நண்பர்கள். புத்தகங்கள், மனிதர்களைப்போல சலிப்பு ஏற்படுத்துவது இல்லை; தொல்லை தருவது இல்லை; மோசமாக நடந்துகொள்வது இல்லை. அறிவை விருத்தி செய்துகொள்வது என்பது அளப்பரிய சந்தோஷம். அதற்கு புத்தகங்களே பெரிதும் துணை செய்கின்றன.

கல்வி, பார்வையற்றவர்களுக்குள் புது வெளிச்சத்தை உருவாக்குகிறது. வழிகாட்டுதலைத் தருகிறது. பார்வையற்றவர்கள் உங்களிடம் கருணையை வேண்டுவது இல்லை. மாறாக தங்களுக்கான சுதந்திரமான நடவடிக்கையை, வேலையை, சமஉரிமையை யாசிக்கிறார்கள்.  ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் இரண்டுவிதங்களில் வேதனைப்படுகிறார். ஒன்று உடல்ரீதியான குறை; மற்றது மனரீதியான பாதிப்பு. இந்த இரண்டில் மனரீதியான பாதிப்புகளில் இருந்து விடுபட கல்வியும் உலக அறிவும் முக்கியம்.

மாற்றுத்திறனாளிகளில் பலர் தங்களின் இயலாமையை நினைத்து முடங்கிப்போய்விடுகிறார்கள். அது தவறானது. தங்களின் குறைபாடுகளைத் தாண்டி சாதனைகள் செய்வதற்கு அவர்கள் கல்வியைத் துணைகொள்ள வேண்டும். 'பார்வையற்றுப்போய் இருட்டில் இருப்பவர்களைவிட அறியாமை இருட்டில் இருக்கும் மனிதர்கள் பரிதாபமானவர்கள்’ என்கிறார் ஹெலன் கெல்லர்.

சாவியும் சுத்தியலும் பேசிக்கொண்டதாக ஒரு கதை இருக்கிறது. சுத்தியல் சாவியிடம் கேட்டது... 'நான் பலசாலி. பூட்டை உடைத்துத் திறக்க பலத்தை உபயோகிக்கிறேன். நீயோ பலமற்றவன். ஆனால் எளிதாக பூட்டைத் திறந்துவிடுகிறாய். அது எப்படி?’

அதற்கு சாவி பதில் சொன்னது... 'நீ அடித்துத் திறக்கப்பார்க்கிறாய். நானோ பூட்டின் இதயத்தைத் தொட்டுத் திறக்க முயற்சிக்கிறேன். ஒன்றை உடைத்துத் திறப்பதைவிட இதயத்தைத் தொட்டுத் திறக்கவைப்பதுதானே சிறந்தது.’

இந்தக் கதையின் மாறுபட்ட வடிவங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. கற்பனைக் கதை என்றாலும் அது வலியுறுத்தும் உண்மை முக்கியமானது. இதயத்தைத் தொட்டுத் திறப்பது என்பது நாம் அனைவரும் மேற்கொள்ளவேண்டிய பணி. அதைச் சாத்தியப்படுத்துவது எளிதானது அல்ல. பூட்டுக்காவது திறப்பு எங்கே இருக்கிறது எனத் தெரியும். அதில் சாவியைப் பொருத்தினால் திறந்துவிடலாம். மனிதர்கள் விசித்திரமானவர்கள். அவர்களின் இதயத்தை எப்படித் திறப்பது என யாருக்கும் தெரியாது. அன்புதான் மனதைத் திறக்கும் ஒரே சாவி. அது எப்போது, எப்படி ஓர் இதயத்தைத் திறந்து தன்வசப்படுத்தும் என்பது விந்தையே!

- சிறகடிக்கலாம்...