எண்ணம், வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

''இது, ரொம்ப அருமையா இருக்கு; சுவையா இருக்கு' என்றான் சுவாமிநாதன்... பூமியில் இருந்து உத்தேசமாக 240 மைல்கள் தூரத்தில் மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்தபடி.
சக ஆஸ்ட்ரோநட்களான கென்னியும் கியூவும் புன்னகைத்து, அந்தச் சிவப்புக் கீரையின் சில இதழ்களை மென்றபடியே ஆமோதித்தார்கள்.
''மனிதகுலம் ஆற்றங்கரைகளில் பயிர்செய்ய ஆரம்பித்து பல்லாயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. இதுதான் விண்வெளியில் செய்த முதல் பயிர்; இது ஒரு சாதனை. இனி விண்வெளியிலேயே டிராக்டர் ஓட்டலாம்'' என்றான் சுவாமிநாதன்... கர்வக் குரலில்!
''உடனே பூமியில் இருக்கும் தலைமையகத்துக்குச் சொல்லி ஆகணும்... தலைவரிடம் பேசணும்'' என்றான் கியூ.

பூமியில் தலைமையகத்தின் ஒளிரும் திரையில், ''ஸ்பேஸ் கல்ட்டிவேஷன் வெற்றி. தலைவர் எங்கே? பேசணும்...'' என எல்.சி.டி பிக்ஸல்களாகத் தோன்றிக் கேட்டார்கள்.
''தலைவர் இஸ் நாட் வெல். ஹாஸ்பிட்டல்ல இருக்கார்'' என்றான் உதவியாளன்.
''என்னாச்சு?'' என்றது சுவாமிநாதனின் குரல்.
'ஃபுட் பாய்சன்!''
''என்ன சாப்பிட்டாராம்?'' - கென்னியின் குரல்.
'ஃபாமாக்ஸடோன், டைல்டிரின், ஆக்ஸிடமெடான், க்லோர்பிரிபோஸ்!''
'இதெல்லாமா சாப்பிட்டாரு?'' என்றான் சுவாமிநாதன்.
''இல்ல... சாதாரண கீரைதான்!''
'அப்போ நீ முதல்ல சொன்ன லிஸ்ட்' என்றான் கென்னி.
''அந்தக் கீரையில இருந்த பூச்சிக்கொல்லி கன்டென்ட்ஸ்!''

நானோ ஹிஸ்டரி

இன்றைய தலைமுறையின் தலையாயப் பிரச்னையில் ஒன்று ஸ்மார்ட்போனில் பேட்டரி சார்ஜ் இறங்குவது. பல வடிவங்களில், நுட்பங்களில் பேட்டரிகள் இன்று நம்மைச் சுற்றி இருக்கின்றன. அந்த பேட்டரி கண்டுபிடிக்கக் காரணம் ஒரு தவளையின் கால் என்பது, மனதை ஒரு நொடி தாவிக்குதிக்க வைக்கிறது அல்லவா!
லூய்கி கல்வானி (Luigi Galvani), இத்தாலிய உயிரியலாளர். இறந்துபோன தவளையின் துண்டிக்கப்பட்ட காலைவைத்து ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்போது தவறுதலாக தவளைக் காலின் மேல் பாகத்தில் இணைத்திருந்த பித்தளை ஊக்கு, காலின் கீழ்பாகத்தில் செருகியிருந்த இரும்புக் கத்தியுடன் உரசியிருக்கிறது. சட்டென இறந்த தவளையின் கால்கள் துடித்துத் தூக்கிக்கொள்ள, முதலில் புரியாமல் விழித்திருக்கிறார் கல்வானி. பிறகு அதை 'உயிருள்ளவற்றில் இருந்து உற்பத்தியாகும் அனிமல் எலெக்ட்ரிசிட்டி’ என அழைத்தார்.
ஆனால், அவருடைய பணித்தோழர் அலெக்ஸாண்ட்ரோ வோல்டா, தவளைக் கால்களை வைத்து மேலும் ஆய்வுகள்செய்து கல்வானியின் அனிமல் எலெக்ட்ரிசிட்டி எனும் கான்செப்டை மறுத்தார். 'இரண்டு வெவ்வேறு உலோகங்கள்தான் மின்சாரம் உருவாகக் காரணம்; தவளையின் கால்கள் அல்ல... அது மின்னாற்றலை உணர்த்தும் (கடத்தும்) காரணி மட்டுமே’ எனச் சொன்னார். 'பேட்டரியைக் கண்டுபிடித்தவர்’ என்ற பெருமையைத் தட்டிச்சென்றார்.
தன் கான்செப்ட்டுக்காக விவாதம் செய்வதிலேயே காலம் கழித்ததால், தன் வாழ்வின் 'சார்ஜ்’ இறங்கிய நிலையில் வறுமையில் வாடி இறந்தார் கல்வானி!

வட்டார மொழியில் 'கதை’ என்பது நவீன இலக்கியத்தின் ஒரு முகம். எங்களூர் விளவங்கோடு தமிழ், தக்கலையைத் தாண்டி வந்தால், சரியாகத் தெரியாதவர்கள் மலையாளம் எனச் சொல்லக்கூடிய அபாயம் உண்டு. ஆனால், இலக்கியத்தின் உள்ளே இருக்கும் ஓர் ஆதார உணர்ச்சி வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்களையும் உள்ளே இழுத்துக்கொள்ளும். சில சொற்பிரயோகங்கள், சொலவடைகள் மாறினாலும் ஆழத்தில் தமிழ் ஒன்றுதான் அல்லவா!
எழுத்தாளர் இமையத்தின் 'எங்கதெ’ ஒரு நெடுங்கதை. குறுநாவல்போல குட்டிப் புத்தகமாக வந்திருக்கிறது. க்ரியா பதிப்பகத்தின் அழகான பதிப்பு. கடலூர் வட்டார மொழி. அதிலும் முழுக்கதையும் விநாயகம் (110 பக்க நாவலில் கதைநாயகனின் பெயர் ஒரு முறைதான் வருகிறது) எனும் ஆணின் பேச்சுமொழியில் விரிகிறது. இமையத்தின் கதைகள் எப்போதும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பேசுபவை. இலக்கியமாக்க வேண்டும் என்ற மயக்கம் எல்லாம் இல்லாமல், அசால்ட்டாக அதேநேரம் அடர்த்தியாகவும் எழுதுபவர் இமையம். அதனாலேயே அது உண்மைத் தன்மையுடன் இருக்கும்.
அதிலும் இந்த, 'எங்கதெ’ ஆண்-பெண் உறவுகளின் நுட்பமான கண்ணிகளை வாசிக்கும் நமக்குள் கோக்கிறது. செல்போன் போன்ற நவீன நுகர்வு கருவிகள், இன்றைய மனித மனங்களில் செலுத்தும் பதைபதைப்பு, கதை நெடுக இருப்பதைப் பார்க்கிறேன். இதெல்லாம் ஒரு கருவிதான்... ஆனால், இதெல்லாம் இல்லாவிட்டாலும் புரிதல் இல்லாத மனித மனம் இப்படித்தான் இயங்கும்போல!

இன்று, அங்கொன்றும் இங்கொன்றுமாக யாராவது அம்மியைப் பயன்படுத்தலாம். அதுவும் ஆணாதிக்கத்தால்தான் சில அம்மிகள் பிழைத்திருக்கின்றன என்பேன். 'எனக்கு அம்மியில அரைச்சுத்தான் குழம்பு வைக்கணும். இந்த எளவு மிக்ஸியில அரைச்சா ருசியே இல்ல’ எனச் சொல்லும் ஊரில் இருக்கும் எங்கள் சித்தப்பா போன்றவர்கள் ஆதிக்க உதாரணம்.
சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். முன்மதியத்தில் குழவியை மேல்கீழாகத் தடதடவென ஆட்டி தேங்காயை நசுக்கி, பிறகு தேவையான இடுபொருட்களைச் சேர்த்து முன்னும் பின்னுமாக இழுத்து, அம்மியில் இருந்தும் குழவியை நிற்கவைத்தும் அரைப்பை வழித்து அழகாக உருட்டி எடுப்பார்கள். அரைப்பின் வாசனை லேசாகக் காற்றில் பரவும். பிறகு தண்ணீரால் கழுவி அதையும் பாத்திரத்தில் சேந்தி எடுத்துக்கொள்வார்கள். குளித்த பிறகு அம்மாவின் மடியில் உறங்கும் குழந்தைபோல, குழவி அம்மி மீது அமைதியாகக் கிடக்கும். பெயர்க் காரணம் பொருத்தம். உரலும் அதுபோலவே.
தமிழர்களின் ஞாபகத்தில் இழைந்து கொண்டிருக்கும் ஒரு காட்சி வடிவமாகத்தான் இவற்றைப் பார்க்கிறேன். தொழில்நுட்ப வளர்ச்சி பல நவீன கருவிகளை சமையலறைக்குள் கொண்டுவந்து நமது சுவையை மாற்றிவிட்டது. என்றாலும், என் சித்தப்பாவின் நாவைப்போல அது கடந்த காலத்தில் 'சப்புக்கொட்டி’ கிடக்கிறது என்பதையும் நான் அறிவேன்.
'கிரைண்டர் கொத்தணுமா... கிரைண்டர்’ என தெருமுனையில் ஒரு குரல் காற்றில் பரிதாபமாக எழுந்துவருகிறது!
'மகரமஞ்ஞு’- இயக்குநர் லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த ரவிவர்மா பற்றிய படம். அதில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. பெண் கடவுளர்களை வரைய அவர் தேர்ந்தெடுத்த 'மாடல் பெண்’ ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; மற்றொன்று, எல்லா சாதியினரும் கோயிலில் நுழைய முடியாத காலம். ஆனால், ரவிவர்மாவின் கடவுள்கள் கோயிலில் நுழைய முடியாதவர்களின் வீடுகளுக்குள்ளும் நுழைகின்றனர். இந்த இரண்டும் ஆதிக்கச் சாதியினரைக் கோபம் கொள்ளச்செய்கிறது. இதுதான் கலையின் மகத்துவம்.

அவருடைய ஓவியப் பெண்களில் உறைந்து நிற்கும் அழகு, மதிமயக்கும் ஒரு கனவுபோலத் தெரிகிறது. குழந்தைக்கு முலையூட்டும் அம்மா, காலில் முள்ளெடுக்கும் சகுந்தலா, கண்ணனைக் கொஞ்சும் யசோதா, சிந்தனைவயப்பட்ட ஹம்ச தமயந்தி, புருரவாசை விட்டுப் பிரியும் ஊர்வசி... என அழகிய பெண்களால் நிறைந்த உலகம் ரவிவர்மாவுடையது. அதுவரைக்கும் கோயில் சிற்பங்களிலும் கதைகளிலும் இருந்த உருவங்களுக்கு வடிவம் கொடுத்து, பாமரர்களின் வீடுகளுக்கும் அதை எடுத்துச் சென்றார். கடவுள்களுக்கு ஒரு ஜனநாயகத்தன்மையைக் கொண்டுவந்தார் என்றே நினைக்கிறேன்.
லித்தோ கிராஃப் பிரின்டிங் தொழில்நுட்பம் வந்ததும் அதற்கு ஒரு காரணம். போஸ்டர்கள், காலண்டர் ஆர்ட்டுகள் என எக்கச்சக்கமாகப் பிரதியெடுக்கப்பட்டு அங்காடிகளுக்கு வந்தன. பிற்காலத்தில் கொண்டைய ராஜு முதல் மாதவன் வரையான ஓவியர்களின் பங்களிப்புகளும் அபாரமானவை.
ஆனால், இவர்கள் எல்லாருடைய ஓவியங்களிலும் அந்தக் கால நாடகங்களின் பாணி இருந்தது. அது பார்சி நாடகங்களில் இருந்து வந்தது. பார்சி நாடகங்கள் மேற்கத்திய நாடகங்களின் பாணியைப் பிரதியெடுத்தவை. ஆகவே, இவர்களின் ஓவியங்களில் உடைகள், பின்னணி, திரைச்சீலைகள்... என அவை பிரதிபலித்தன. நவீன வடிவில் நமது மரபையும் கடவுள்களையும் மறுபடி உருவாக்கினார்கள். ஜனநாயகத்தன்மையை நோக்கி நகரும் கலைகளுக்கு இந்த மாதிரியான கலவைகள் ஏற்படுவது இயல்புதான்.

இன்று காலண்டர்களின் வடிவங்கள் மாறிவிட்டன. ஆனாலும், இந்த வகையான காலண்டர் பிரின்ட்கள் கிளாசிக்குகளாக சாஸ்வதம் பெற்றுவிட்டன!