ஞா.சுதாகர்
சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்த உலகத் தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனையைச் சமன்செய்தார் உசேன் போல்ட். மீடியாவைச் சந்திக்க போல்ட் வந்தபோது அந்த அறை ஹவுஸ்ஃபுல்.
மறுநாள், அதே 100 மீட்டர் ஓட்டம்... அதே மூன்றாவது முறை தங்கம்... அதே சாதனை. ஆனால், இதைச் சாதித்தது ஒரு வீராங்கனை. மீடியாவிடம் அவர் பேச வந்தபோது, அறையில் பாதிகூட நிரம்பி இருக்கவில்லை. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த அந்த வீராங்கனை ஷெல்லி ஆன் ஃபிரேசர் ப்ரைஸ்.
1986-ம் ஆண்டில் ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டனில் பிறந்தவர் ஷெல்லி. கடும் வறுமைச்சூழலில் இருந்து வெடித்துக்கிளம்பி, ஒலிம்பிக், உலகத் தடகளப் போட்டிகள்... என அனைத்திலும் பதக்க வேட்டையாடியவர். உசேன் போல்ட்டுக்கு நிகராக களத்தில் சாதனைகள் புரிந்தவர். ஆனால், போல்ட்டுக்குக் கிடைத்த புகழ் வெளிச்சம், ஷெல்லிக்கு ஏனோ கிடைக்கவே இல்லை! போல்ட் பெற்ற விளம்பரம், வெளிச்சம், சம்பளம்... என எதுவும் ஷெல்லிக்கு இல்லை. இத்தனைக்கும் உலகின் வேகமான நான்காவது பெண் ஷெல்லி. தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற மூன்றாவது பெண். ஒலிம்பிக் பதக்கம் மற்றும் உலகத் தடகளப் பதக்கம் இரண்டையும் வைத்திருக்கும் இரண்டாவது பெண். கடந்த ஏழு வருடங்களாக 100 மீ. தரவரிசையில் பல முறை நம்பர் 1 இடம் பிடித்தவர். இதனால் ஜமைக்கா நாட்டில் ஷெல்லியை 'பாக்கெட் ராக்கெட்’ என அழைப்பார்கள்.

நாட்டுக் கொடியை முதுகில் கட்டிக்கொண்டு வெற்றிக்குறி போஸ் கொடுப்பார் போல்ட். அதுபோல ஷெல்லியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜமைக்கா கொடியைப் பின்னால் பிடித்தபடி விதவிதமான ஹேர்ஸ்டைலுடன் சிரிப்பது.
மஞ்சள் நிற டெய்சி பூக்கள் ஷெல்லிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அது பலமுறை அவர் கூந்தலை அலங்கரிக்கும். அதோடு பிங்க், மஞ்சள் என வெளிர் நிறங்களில் கூந்தலை கலரிங் செய்துகொள்வார்.
போல்ட் வென்ற மொத்த ஒலிம்பிக் பதக்கங்கள்... 6 தங்கம்; ஷெல்லி வென்றது 4 பதக்கங்கள் (2 தங்கம் 2 வெள்ளி). உலகில் அதிகம் சம்பா திக்கும் தடகள வீரர் உசேன் போல்ட். ஆனால், ஷெல்லிக்கு ஜமைக்கா நாட்டின் சில நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஸ்பான்ஸர்களும் கிடைக்கவில்லை.
ஒருமுறை போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, ஊக்கமருந்து உட்கொண்ட சர்ச்சையில் சிக்கினார் ஷெல்லி. அவருடைய சிறுநீர் மாதிரியில் 'ஆக்சிகோடன்’ இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பல்வலி பாதிப்புக்காக வலிநிவாரணியாக எடுத்துக்கொண்ட மாத்திரைகள் சதிசெய்தன. விசாரணையில் அது தடைசெய்யப்பட்ட மருந்து என்றாலும், ஊக்கம் அளிக்கும் ரகம் அல்ல எனச் சொல்லப்பட்டு, ஆறு மாதத் தடை மட்டுமே கிடைத்தது. இதனால் சில சர்வதேசப் போட்டி வாய்ப்புகள் பறிபோயின. அந்தக் களங்கத்தை லண்டன் ஒலிம்பிக்கில் துடைத்தார் ஷெல்லி. அந்தப் போட்டித்தொடரில் 100 மீட்டரில் தங்கம், 200 மீட்டரில் வெள்ளி எனச் சொல்லியடித்தார். ஆனால் சோகம்... அங்கும், தொடர்ந்து இரண்டு முறை தங்கம் என உசேன் போல்ட் மீண்டும் பத்திரிகை பக்கங்களை ஆக்கிரமித்தார்.
2013-ம் ஆண்டு உலகத் தடகளப் போட்டியில் 100 மீ, 200 மீ, 400 மீ... என மூன்றிலும் தங்கம் வென்றார் ஷெல்லி. நம்புவீர்களா..? போல்ட்டும் மூன்று தங்கம் தட்டி, மீடியா கவனத்தை வளைத்துக்கொண்டார். இதேதான் சமீபத்தில் நடந்த கதையும்.

சீனாவின் பீஜிங்கில் நடந்த உலகத் தடகளப் போட்டியில் 100 மீ மற்றும் 400 மீ இரண்டிலும் தங்கம் வென்றார் ஷெல்லி. ஆனால், போல்ட்டும் மூன்று தங்கம் வென்று அங்கும் ஸ்கோர் செய்தார். ஒபாமா விருந்து, வெற்றி விழா என எது நடந்தாலும் போல்ட், ஷெல்லி இருவருக்கும் அழைப்பு இருக்கும். ஆனால், ஷெல்லியின் முகம் பத்திரிகைகளில் மின்னியது குறைவே. அதைப் பற்றி சின்ன வருத்தத்தையும் பகிர்ந்துகொள்ள மாட்டார் ஷெல்லி.
'உசேன் போல்ட் மட்டும் கொண்டாடப் படுகிறாரே?’ என ஷெல்லியிடம் கேட்டால், 'அவர் 9.6 நொடிகளில் ஓடுகிறார்; நான் 10.7 நொடிகள் எடுத்துக்கொள்கிறேன். அந்தப் புகழ், பாராட்டுகளுக்கு அவர் தகுதியானவர் தான். என்னை ஏன் அவருடன் ஒப்பிடு கிறீர்கள்? என் உழைப்புக்கு ஏற்ற வெற்றி எனக்குக் கிடைக்கிறது அதுவே போதும். ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. இது ஆண்களின் உலகம்’ எனச் சிரிக்கிறார் ஷெல்லி.
உண்மைதான்!