படம்: சி.சுரேஷ்பாபு
அழைக்கும் அழுகுரல்
கூட்டநெரிசலில்
நீண்டு அழுதுகொண்டிருக்கும்
குழந்தையின் அழுகுரலை
அவ்வளவாக யாரும் ரசிப்பதில்லை.
பசி என்று பால் கொடுத்தோ
பொம்மையைக் காட்டியோ
அடக்க முடியாது அவ்வழுகைக்குரலை.
வேடிக்கை காட்டியோ
விளையாட அழைத்தோ
நிறுத்த முடியாத அழுகை அது.
நேர நீட்சியில் அருகிலிருப்போர்
முகம் சுளிக்கும்
அக்குழந்தையின் அழுகையை நிறுத்த
அதை அழைப்பு ஒலியாய் வைத்தவன்
தவிர்க்க வேண்டும் அல்லது
எதிர்முனையில் அழைப்பவன்
நிறுத்த வேண்டும்!
- ந.கன்னியக்குமார்]
தனிமை
மின்சாரம் தடைபட்ட
பெருமழை பெய்யும் ஓர் இரவில்
மரங்களடர்ந்த கானகத்தில்
ஒற்றை மூலையில் சிறு கீற்றைப்போல்
படர்கிறது நிலவின் ஒளி.
பசியாறிய பறவைகள் அடைந்திருக்க
பசியோடிருந்த விலங்குகள் மட்டும்
நடுநிசியிலும் பசியாறிடத் துடிக்கின்றன.
வாகனங்கள் குறைந்திருந்த
சாலைகளில் குற்றங்கள் கூடிக்கொண்டிருக்க
வெளவால்கள் சத்தம்கூடிய
ஓர் அடுக்ககத்தின்
ஒரு விஸ்தாரமான அறையின்
ஒற்றை மெழுகுவத்தியின் வெளிச்சத்தில்
சில ஈசல்களையாவது
எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்!
- ராஜ்குமார் நடராஜ்
கொடிய வகை மிருகங்கள்
அங்கேயொரு ஆறு ஓடியிருக்கலாம்
மீன்கள் நிறைந்த ஏரியோ
சில குளங்களோ இருந்திருக்கலாம்
சுற்றிலும் பச்சையங்களாக
பறவைகள் சூழ்ந்த காடும்
அதற்குள் விலங்குகளும்
அதனதன் போக்கில் வசித்திருக்கலாம்.
வானம் வற்றாமல் பொழிந்த
அவ்விடத்தின் நிலத்தடிகளிலும்
வற்றா நதிகளும் இருந்திருக்கலாம்.
அதற்குப் பெயர் இறந்தகாலம்.
நிகழ்காலத்தில்
வளம்கொழித்த அவ்விடங்களில்
செல்வம்கொழிக்க வளர்ந்து நிற்கின்றன
மணற்கனிமங்களைச் சுரண்டி கட்டப்பட்ட
உயர உயரமான அடுக்ககக் கட்டடங்கள்.
வாங்கும்சம்பளத்தில் பெருந்தொகையை
நெகிழிப்புட்டிகளில் அடைக்கப்பட்ட
தண்ணீருக்காகச் செலவழிக்கும்
அவர்களின் ஒடுக்க ஒடுக்கமான
சில வீடுகளினுள்
வளராமல் நிற்கும் போன்சாய் மரங்களும்
சில வீடுகளில் கூண்டிலடைக்கப்பட்ட
சிறு பறவைகளின் சத்தங்களும்
வெகுசில வீடுகளில்
செவ்வகக் கண்ணாடித் தொட்டிகளுக்குள்
நீந்தும் அலங்கார மீன்களும்!
- வலங்கைமான் நூர்தீன்

செவிட்டு முனியம்மா
வெடுக்கு வாடையில்
மீனின் வகை அறிகிறாள்
கனம்பார்த்து
விலையை நிர்ணயிக்கிறாள்
பரிச்சயமான தெருவில் விற்பனை
இதுவரை யாரும் அழைத்ததில்லை
பாட்டியென்று
குருட்டுக் கிழவியென்றே
அழைக்கிறார்கள்
தப்பித்தவறி பாட்டியென்று
அழைப்பவர்களை மட்டும்
பார்வைக்குள் வைத்துக்கொள்கிறாள்
செவிட்டு முனியம்மா!
- கட்டுமாவடி கவி கண்மணி