Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 10

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்சு.வெங்கடேசன், ஓவியம்: ஸ்யாம்

கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர், வட இந்தியாவில் பல்வேறு விவசாயக் குடியிருப்புகளைக்கொண்ட 16 பெரும் அரசுகள் (மகா ஜனபதங்கள்) இருந்ததாக பாரம்பர்ய இலக்கியம் கூறுகிறது. 'காந்தாரம்’, 'காம்போஜம்’ தொடங்கி 'கோசலம்’, 'மகதம்’ என 16 மகா ஜனபதங்களின் பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன.

இவை ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்து, இணைந்து மேலெழுந்து வந்தன. இந்த அனைத்து ஜனபதங்களிலும் முக்கியத்துவம் பெற்றது மகதம்.

வைகை நதி நாகரிகம் ! - 10

அது, மற்ற பல ஜனபதங்களை வென்று, அந்த நிலப்பரப்பை தன்னுடன் இணைத்துக்கொண்டு சக்திமிக்க அரசாக மேலெழுந்தது. இந்த மகதத்தைத்தான் யுத்தக்களத்தில் எதிர்கொள்ளாமல் அலெக்ஸாண்டர் திரும்பிச் சென்றான். நாடு திரும்பிய அவன், தனது கனவு நகரமாக அலெக்ஸாண்டிரியாவை உருவாக்கினான். உலகத்தையே கட்டி ஆளப்போகிறவர்களுக்கான கட்டடங்களை தன் கண் முன்னால் கட்டிக்கொண்டிருந்தான். ஆனாலும், இந்திய நிலப்பரப்பை வெல்லும் தனது கனவை அவன் கைவிட்டுவிடவில்லை. அது நிறைவேறும் நாளை தனது மனதுக்குள் எழுதிவைத்திருந்தான். ஆனால், வாழ்வின் அடுத்த திருப்பம் அவனுக்குப் பெரும் ஆச்சர்யத்தைப் பரிசளித்தது; அது மரணம். சற்றும் எதிர்பாராத கணத்தில் அது அவனைக் கட்டி அணைத்துக்கொண்டது.

பிரமாண்டமான கடல் அலையைப்போல லட்சக்கணக்கான வீரர்களைக்கொண்டு நகரும் படையெடுப்புகளை ஒரு மரணம் முடித்துவைத்தது. அதன் பின்னர் எல்லோருக்குமான விதியையே அவனுக்கும் எழுதியது காலம். அவனது பேரரசு நிலைகுலைந்தது.

இந்த நிலையில்தான் சந்திரகுப்தனின் தலைமையிலான மௌரிய அரசு வலிமை பெற்று வந்தது. நந்தர்களை எதிர்க்க, தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தான் சந்திரகுப்தன். அலெக்ஸாண்டர், இந்தியப் பகுதியில் நிலைநிறுத்திச்சென்ற காவல் படைகளை முதலில் வென்று முடித்தான். பின்னர் தன்னுடைய முதல் போட்டியாளனாகக் கருதப்பட்ட நந்தர்களின் மீது போர் தொடுத்தான். இந்திய வரலாற்றின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த மிகப் பெரும் யுத்தமாக வர்ணிக்கப்படும் இந்த யுத்தத்தின் முடிவில், நந்தவம்சம் அழிக்கப்பட்டு சந்திரகுப்தன் அரியணை ஏறினான். மௌரியர்களின் ஆட்சி தொடங்கியது. இதுகுறித்து பௌத்த, சமண சமயத்தின் மூல நூல்களும், கிரேக்க-ரோமானிய மூல நூல்களும் தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்தச் சரித்திர நிகழ்வுகள், சாமானியர்களின் வாழ்வின் வழியே பதிவுசெய்யப்பட்டுக்கொண்டிருந்த விசித்திரம் இந்தியாவின் தென்கோடியில் நிகழ்ந்துகொண்டிருந்தது.

வாழ்வை சிறந்த முறையில் நடத்த, பொருள் அடிப்படையாக இருக்கிறது. எனவே, பொருளீட்டும் பொருட்டு தலைவன் வட திசையில் பயணம் சென்றுள்ளான். அவன் பிரிவால் வாடும் தலைவிக்கு, தோழி ஆறுதல் கூறுகிறாள். அப்படி ஆறுதல் கூறும்போது அவன் சென்ற பாதை எவ்வளவு கொடியது என்பதை விளக்குகிறாள். அந்தப் பாதையின் தன்மையை வர்ணிக்கும் பாடல்களின் ஊடே வரலாறும் சமகால அரசியலும் படிந்து கிடக்கின்றன. வலிமைவாய்ந்த படை நடத்திய மௌரியர்கள், தங்களின் தேர்கள் செல்வதற்கு ஏற்ப மலைகளில் பெரும் பாறைகளை உடைத்து பாதை அமைத்தனர் என்றும், அந்தப் பாதையில் அவர்களின் தேர்கள் விடாது சென்றுகொண்டிருந்தன என்றும், தென் திசையில் படையெடுத்து வந்தனர் என்றும், செல்வச்செழிப்புடன் இருந்தனர் என்றும் சங்கக் கவிதைகள் பேசுகின்றன.

கள்ளில் ஆத்திரையனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், மாமூலனார் ஆகியோர் இயற்றிய அகநானூறு, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் உள்ள கவிதைகளில் இந்த வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியவை மாமூலனாரின் கவிதைகள். அவர் நந்தர்களின் செல்வக் குவியலைப் பற்றி பேசுகிறார்; பின்னர் சிறப்பு மிகுந்த பாடலிபுரத்தில், குவித்துவைத்திருந்த செல்வத்தை, கங்கை ஆற்றின் கரையில் கொண்டுபோய் மறைத்துவைத்ததைப் பற்றி பேசுகிறார்; அதன் பின் மௌரியர்களின் தேர்ச் சக்கரங்களையும், அவர்கள் அமைத்த மலைப்பாதைகளைப் பற்றியும் பேசுகிறார். இது வரலாற்றில் முக்கியமான மூன்று புள்ளிகளைப் பதிவுசெய்கிறது. செல்வச்செழிப்போடு நந்த வம்சம் இருந்த காலம், மௌரியப் படையெடுப்பால் அவர்களின் செல்வங்கள் கங்கை ஆற்றில் மறைக்கவேண்டிய தேவை உருவான நிகழ்வு, பின்னர் மௌரியர்கள் ஆளத் தொடங்கிய காலம். ஒரு வரலாற்றுப் பதிவாளன், தேதி போட்டு குறித்துவைத்ததைப் போன்று அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களின் பதிவு இது. இவற்றைத் தனது கவிதைகளில் போகிறபோக்கில் பேசிச் சென்றிருக்கிறார் மாமூலனார். வட இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட சம்பவங்கள், தலைவிக்குக் கூறும் ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையில் அடக்கமாகப் புதைந்துகிடக்கின்றன. ஆனால், அடக்கம் செய்யப்பட்ட அலெக்ஸாண்டரின் கனவு, அதோடு முடிந்துவிடவில்லை. மீண்டும் உயிர்பெற்று வலம்வரத் தொடங்கியது.

அவனது தளபதிகளிலேயே மிகவும் துணிவும் ஆற்றலும்மிக்கவன் செல்யூகஸ். அவன், பெரும் திட்டத்தோடு யுத்தக்களம் புகுந்தான்; பெர்சியப் பேரரசைக் கைப்பற்றினான்; சிரியாவின் அரசனான்; பின்னர் இந்தியப் பகுதியை நோக்கித் திரும்பினான். இந்தியப் பகுதியை வெல்வதன் மூலம் கிடைக்கக்கூடிய வணிக லாபத்தை நன்கு அறிந்தவன் அவன். அவனது மாபெரும் படை, இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்தது. இப்போது வலிமை பொருந்திய சந்திரகுப்தன் அவனை எதிர்நோக்கி தயார்நிலையில் இருந்தான்.

இரு பெரும் படைகளும் மோதிக்கொண்டன. வெற்றி-தோல்வி இன்றி நீடித்த பெரும் யுத்தத்துக்குப் பின் சமாதானம் கையெழுத்தானது. தான் கைப்பற்றிய இந்திய நிலப்பரப்பின் பகுதிகளை செல்யூகஸ் விட்டுக்கொடுத்தான். அதற்குப் பதில் 500 யானைகளை அவன் சந்திரகுப்தனிடம் இருந்து பெற்றுக்கொண்டான். செல்யூகஸ் நிகோடாரின் தூதுவனாக சந்திரகுப்தனின் அவைக்கு மெகஸ்தனிஸ் அனுப்பிவைக்கப்பட்டான். யுத்தம் முடிந்து சமாதானத்தின் காலம் தொடங்கியது. நாகரிகத்தின் அடையாள மாகக் கருதப்படும் ஒரு பேரரசின் தூதுவனாக மெகஸ்தனிஸ், மௌரிய அரசவைக்குள் நுழையும்போது, அங்கு ஒளிபாய்ச்சி மின்னிக் கொண்டிருந்தன பாண்டிய நாட்டு முத்துக்கள்.

அதுவரை வட இந்திய அரசியல் நிகழ்வுகள், வணிகத்துக்குப் போன தலைவனின் பிரிவின் வழியே சங்க இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டுக் கொண்டிருந்தைப் பார்த்தோம். ஆனால், இந்த வணிகம் எவ்வளவு சிறப்பானதாக நடந்துள்ளது என்பதை கிரேக்கத் தூதுவனின் எழுத்து முதன்முதலில் பதிவுசெய்தது. வரலாறு எனும் பெருநதியின் இக்கரையில் அமர்ந்து மாமூலன் எழுதியதற்கான விளக்கத்தை அக்கரையில் உட்கார்ந்து மெகஸ்தனிஸ் எழுதிக்கொண்டிருந்தான். தூதுவனாக இருந்த காலத்தைப் பற்றி மெகஸ்தனிஸ் கிரேக்கத்தில் 'இண்டிகா’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினான். அந்த நூல் முழுமையும் கிடைக்கவில்லை; அழிந்துவிட்டது. அவனுக்குப் பின்னால் வந்த வரலாற்றாளர்கள் இண்டிகா நூலை மேற்கோள் காட்டும் பகுதிகள்தான் கிடைத்துள்ளன. அந்தச் சிறு பகுதிகளிலேயே பாண்டிய நாட்டைப் பற்றியும், அங்கு விளையும் முத்துக்களைப் பற்றியும், அந்தப் பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி ஆட்சிசெய்வது பற்றியும் அவன் பதிவுசெய்துள்ளான்.

இந்தியாவை பற்றி வெளிநாட்டினர் எழுதிய முதல் நூல் 'இண்டிகா’. அதில் பாண்டிய நாட்டின் செல்வச் சிறப்பும் ஆட்சி சிறப்பும் மிகுந்த முக்கியத்துவத்தோடு பதிவுசெய்யப் பட்டன. மெகஸ்தனிஸின் நூலின் வழியே தமிழ் நிலத்தின் புகழ் கிரேக்கத்துக்குப் போய்ச் சேர்ந்துள்ளது எனக் கருதலாம்; அல்லது அதற்கு முன்பேயும் போயிருக்கலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் வட இந்தியாவுக்கும் கிரேக்கத்துக்குமான தரைவழிப் பாதை துண்டிக்கப்பட்டது. எதிரும் புதிருமான வெவ்வேறு அரசுகள் அமைந்ததால், நாடுகளைக் கடந்து வணிகப்பொருட்கள் செல்வது சாத்தியமற்றுப்போனது. வழித்தடங்கள் அழிக்கப்பட்டதால், போக்குவரத்து முடங்கியது. நிலப்பரப்பின் வழியிலான பரிமாற்றம் முடிவுக்கு வந்தது. மீதம் இருப்பது கடல்வழிப் பயணம் மட்டுமே. வணிகத்தின் லாபமும் வாழ்வின் தேவையும் கடலை நோக்கி வர்த்தகர்களைத் தள்ளின. கிரேக்கக் கப்பல்கள் கீழ்த்திசை நாடுகளை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கின. அப்போது இந்திய நிலப்பரப்பின் சிறப்புமிகு வணிக மையங்களாக விளங்கியது வட இந்திய நிலப்பகுதி அல்ல. முதல் சகாப்தத்தில் சிந்துநதியின் முகத்துவாரத்தில் இருந்து கப்பல்கள் கடலுக்குள் நுழைந்தன. மறுமுனையான எகிப்திய வளைகுடாவில் இருந்து கப்பல்கள் திரும்பி வந்தன.

ஆனால், இரண்டாவது சகாப்தத்தில் கங்கை நதியின் முகத்துவாரத்தில் இருந்தோ அல்லது மகாநதியின் முகத்துவாரத்தில் இருந்தோ கப்பல்கள் கடலுக்குள் நுழையவில்லை. மாறாக அழகன்குளமும் பூம்புகாரும் முசிறியும் கொற்கையும்தான் அந்தப் பெரும் வணிகத்தின் வாசற்கதவுகளாக இருந்தன. இந்த வாயிலைக் கடந்து சென்ற வர்த்தகம் இரு பெரும் நிலப்பகுதிகளை இணைத்தது. கிரேக்கத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே இடைவிடாத கடல் போக்குவரத்துகள் தொடர்ந்தன. அடுத்து வந்த 500 ஆண்டுகளுக்கு உலகின் மிக முக்கிய வணிக மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றமாக இந்த வழித்தடமே அமைந்தது. அழகன்குளமும் அலெக்ஸாண்டிரியாவும் அரிக்கமேடும் இவற்றின் முகவரிகளாக மாறின. அலெக்ஸாண்டர் உருவாக்கிய கனவு நகரம், தமிழகத்துக் கடற்கரை நகரங்களோடு இடைவிடாமல் வர்த்தகத்தை நடத்திக்கொண்டிருந்தது.

ஆனால், மெகஸ்தனிஸ் எனும் தூதுவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான், தான் எந்தப் பாண்டிய நாட்டு முத்துக்களை வியந்து எழுதுகிறோமோ, அந்த முத்துக்களால் அடுத்த 100 வருடங்களுக்குள் கிரேக்கத்தின் கஜானாவே காலியாகப்போகிறது என்று!

- ரகசியம் விரியும்