சினிமா
Published:Updated:

விஷ்ணுபிரியாவை வீழ்த்தியது யார்?

ஆ.விஜயானந்த், க.பூபாலன், படங்கள்: பா.காளிமுத்து

ன்று சேலம் அரசு மருத்துவமனை பிணவறைக் கிடங்கின் வெளியே, டி.எஸ்.பி பணி நிமித்தம் பல மணி நேரம் காத்திருந்தார் விஷ்ணுபிரியா. ஆனால், இன்று அதே பிணவறைக் கிடங்கின் உள்ளே ஒரு சடலமாகக் கிடக்கிறார்!     

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவிடம் சில வாரங்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான தகவல்களைக் கேட்க தொடர்புகொண்டேன். அழைப்பின் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பேசியவரின் குரல், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கு என்றதும் களை இழந்தது.

''அதுக்கு நான்தான் விசாரணை அதிகாரி. ஆனா, என்கிட்ட எதுவும் கேட்காதீங்க சார். எதுவா இருந்தாலும் சீனியர்கிட்ட கேட்டுக்கங்க'' என்றார் சுரத்தே இல்லாமல். அந்தக் 'களை இழப்பு’ இன்று 'உயிர் இழப்பு’ வரை கொண்டுசெல்லும் என விஷ்ணுபிரியாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்!  

கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட இன்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பாக,  'சம்பந்தம் இல்லாதவர்கள் மீது எல்லாம் குண்டர் சட்டத்தை ஏவச் சொல்கிறார்கள்’ என்றும், அந்த வழக்குத் தொடர்பாக பல மனஉளைச்சல்களுக்கு ஆளாவதாகவும் தன் நட்பு வட்டாரத்தில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்  விஷ்ணுபிரியா. 'அதுதான் அவருடைய உயிரைப் பறித்ததா என்பதை, யார் ஊர்ஜிதமாகச் சொல்வார்கள்?’ என்பது... சந்தேகம் தொக்கி நிற்கும் கேள்வி!

விஷ்ணுபிரியாவை வீழ்த்தியது யார்?

கடந்த 18-ம் தேதி மதியம் தனது தோழியான கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரியுடன் போனில் பேசிக்கொண்டிருந்த விஷ்ணுபிரியா, 'சீனியர் இன்னொரு லைன்ல வர்றார். நான் அப்புறம் பேசுறேன்’ என இணைப்பைத் துண்டித்தவர் தான்... அதன் பிறகு சீனியரிடம் மட்டுமே விஷ்ணுபிரியா போனில் பேசியிருக்க வேண்டும். ஏனென்றால், அடுத்த சில நிமிடங்களில் அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. தூக்கில் தொங்கிய சடலமாகத்தான் விஷ்ணுபிரியா மீட்டெடுக்கப்பட்டார்.

விஷ்ணுபிரியாவின் கல்லூரித் தோழி ஒருவர் அழுதுகொண்டே பேசியபோது... ''பி.எஸ்ஸி மேத்ஸ் படிச்ச கேர்ள்ஸ் எல்லாரும் சேர்ந்து வாட்ஸ்அப்ல ஒரு குரூப் ஆரம்பிச்சோம். விஷ்ணுபிரியா அந்த குரூப்ல 'லவ்லி கேர்ள், பியூட்டிஃபுல் கேர்ள்’ங்கிற மாதிரியான பேர்லதான் இருப்பார். எஸ்.பி.பி பாட்டுன்னா அவளுக்கு உயிர். மெலடி பாட்டு  கேட்டுட்டே இருப்பா. சமயங்கள்ல அவளே பாடி அதைப் பதிஞ்சு வாட்ஸ்அப்ல அனுப்புவா. ஆஞ்சநேயர் பக்தை.  ஆஞ்சநேயர் படம் நிறைய வரைஞ்சிருக்கா. அவளுக்கு கலெக்டராகி, மக்கள் சேவை செய்யணும்னு ஆசை. அதுக்காகப் படிச்சுட்டு இருக்கிறப்போதான் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதி இந்த வேலைக்கு வந்தா. இப்பவும் யு.பி.எஸ்.சி எக்ஸாம்ல முதல்கட்டத் தேர்வில் பாஸ் பண்ணிட்டா. மெயின் தேர்வுகளுக்குத் தயாராகிட்டு இருந்தா. ஏன்னா, போலீஸ் வேலை அவளை அவ்ளோ கஷ்டப்படுத்திருச்சு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேதனையைச் சொல்லி அழுவா. லீவுல வீட்டுக்கு வந்தா டி.வி-யில் ரஜினி படம் பார்த்துட்டே இருப்பா. ரஜினியை அவளுக்கு அவ்ளோ பிடிக்கும். யாராவது சேனல் மாத்திட்டா, ரொம்பக் கோபம் வந்துரும். 'ரஜினி படம் முடிஞ்ச பிறகு வேற எதையாவது பாருங்க. நானே அங்க வேலை டார்ச்சர் தாங்க முடியாம ரிலாக்ஸா இருக்கத்தான் இங்கே வந்திருக்கேன்’னு கோவிச்சுக்குவா. அவளுக்குக் கல்யாணம் முடிச்சிடணும்னு மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. அவளும் ஆர்வமா இருந்தா. ஆனா, இப்போ ஏற்கெனவே ரெண்டு தடவை தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கானு சொல்றது முழுப் பொய்'' எனக் கதறி அழுதார் அந்தத் தோழி.

விஷ்ணுபிரியாவை வீழ்த்தியது யார்?

நாம் விசாரித்தவரையில் ஒரு தொலைபேசி உரையாடலுக்கே மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு விஷ்ணுபிரியா இளகிய மனம் கொண்டவர் என்பதை நம்ப முடியவில்லை. சிவகங்கையில் நடந்த போலீஸ் பயிற்சி முகாமில் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்திருக்கிறார் விஷ்ணுபிரியா. அந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட பெண்களிலேயே மிக தைரியசாலி என விஷ்ணுபிரியாவைத்தான் குறிப்பிடுகிறார்கள். 'சரியான விஷயம் செய்கிறோம்’ என்றால் யாருக்கும் பயப்பட மாட்டார். சைபர் கிரைம், கணினித் தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் விஷ்ணுபிரியாவுக்கு ஆர்வம் அதிகம். கோகுல்ராஜ் மரணத்தின் புலனாய்வு அதிகாரியாக விஷ்ணுபிரியா நியமிக்கப்பட, பரபரவென விசாரணையில் இறங்கியிருக்கிறார். அந்தக் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் யுவராஜ் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி காவல் துறை அதிகாரிகளை மிரட்டிக்கொண்டிருந்தார். அந்த வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் மூலம் யுவராஜின் இருப்பிடத்தை நெருங்கிவிட்டாராம் விஷ்ணுபிரியா. ஆனால், 'யுவராஜைக் கைதுசெய்தால் தேவையற்ற விளைவுகள் ஏற்படும். கைதுசெய்யக் கூடாது’ என மேலிடத்தில் இருந்து கண்டிப்பான தகவல் வந்துவிட்டதாம். தினமும் விஷ்ணுபிரியாவைத் தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்துவதை உயர் அதிகாரி ஒருவர் வாடிக்கை யாகவே வைத்திருந்தாராம். 'நீ ஒரு யூஸ்லெஸ். போலீஸ் வேலைக்கு லாயக்கே இல்லை’ என்று எல்லாம் காயப்படுத்தியிருக்கிறார். யுவராஜைக் கைதுசெய்ய முயற்சி எடுக்கும்போது எல்லாம் மேலும் அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார்.  வழக்கில் இதுநாள் வரை மூன்று பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அவர்கள் தவிர மேலும் ஒரு பெண் உள்பட இருவர் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என நெருக்குதல் கொடுத்திருக்கிறார்கள். அது தொடர் பான வாக்குவாதம்தான் விஷ்ணு பிரியாவின் இறப்புக்குக் காரணமாக இருக்கும் என்கிறது கள நிலவரம்.

சிவங்கை பயிற்சி முகாம் நிறைவில் மேடையில் பேசிய விஷ்ணுபிரியா, 'நாம் மிக உன்னதமாக, மக்களைக் காக்கும் பணிக்காகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறோம். எந்த நேரத்திலும் நேர்மை தவறாமல், எவ்வளவு தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டும்’ என மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.

அந்த அப்பாவிப் பெண்ணின் தன்னம்பிக்கையைத் தகர்க்கும் ஆற்றல் சிலரது நாக்குகளுக்கு

விஷ்ணுபிரியாவை வீழ்த்தியது யார்?

இருந்திருக்கிறது!

''எந்த நெருக்கடியும் இல்லை!''

விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாகச் சர்ச்சை வட்டமிடும் நாமக்கல் எஸ்.பி செந்தில்குமாரிடம் பேசினோம்... ''விஷ்ணுபிரியா ரொம்ப சின்சியர் ஆபீஸர். அவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்னு தெரியலை. துறை சார்பில் எந்த நெருக்குதலும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. என் மூலமாகவும் எந்த நெருக்கடியும் அவருக்கு இல்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணையும் தீவிரமாக நடந்து வந்தது. இப்போது சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியிருக்கிறது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்!''  என்றதோடு முடித்துக்கொண்டார்.

தோழிக்கும் சிக்கல்!

விஷ்ணுபிரியாவை வீழ்த்தியது யார்?

''என் வேலையே போனாலும் பரவாயில்லை. விஷ்ணுபிரியா எறும்புக்குக்கூடத் தீங்கு நினைக்காதவர். அவரது உயர் அதிகாரி கொடுத்த டார்ச்சர்தான் சாவுக்குக் காரணம்'' எனப் பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தார் விஷ்ணுபிரியாவின் தோழியான கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி. ஆனால் இப்போது, ''என் செல்போன் ஒட்டுக்கேட்கப்படலாம். நான் எது பேசினாலும் எனக்கு எதிராகத்தான் முடியும்'' என துக்கத்தை மறைத்து அமைதியாகிவிட்டார். மகேஸ்வரியின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படுமா?

சில சந்தேகங்கள்!

• விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த 15 பக்கக் கடிதம் எனச் சொன்னார்கள் காவல் அதிகாரிகள். பின்னர், அது 9 பக்கங்கள் என்றார்கள். அந்தக் குழப்பம் ஏன்?

•  தற்கொலை செய்துகொள்ளும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி, தனது கடிதத்தில் கோகுல்ராஜ் கொலைக்கும் தனது சாவுக்கும் சம்பந்தம் இல்லை எனக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன்?

•  நல்ல ஆங்கிலப் புலமைகொண்ட அதிகாரி ஒருவர், தமிழும் ஆங்கிலமும் அல்லாத

விஷ்ணுபிரியாவை வீழ்த்தியது யார்?

'தங்கிலீஷ்’ மொழியில் கடிதம் எழுதுவாரா?

'தனது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டாம்’ என ஒரு போலீஸ் அதிகாரி எப்படிக் கூறுவார்? சந்தேக மரணங்களுக்கு உடற்கூறு நடக்கும் என்ற நிதர்சனம் புரியாதவரா அவர்?

•  'மனசாட்சிக்கு விரோதமாக நடக்கச் சொல்கிறார். சம்பந்தம் இல்லாதவர்கள் மீது குண்டர் சட்டம் போடச் சொல்கிறார்’ என விஷ்ணுபிரியாவின் சீனியர் மீது சக போலீஸ் அதிகாரியே குற்றம்சாட்டுகிறார் எனில் அந்த சீனியர் மீதான நடவடிக்கை என்ன?

•  விஷ்ணுபிரியாவின் இரண்டு செல்போன்கள், லேப்டாப், கேமரா போன்றவற்றை யார் கண்ணிலும் காட்டவில்லை அதிகாரிகள். மேலதிகாரியைக் காப்பாற்ற தடயங்களை அழிக்கும் வேலை நடக்கிறதா?