சினிமா
Published:Updated:

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

விகடன் டீம்படங்கள்: சு.குமரேசன், தி.விஜய், வீ.சிவக்குமார், ப.சரவணகுமார், தே.தீட்ஷித், தி.ஹரிஹரன், தி.குமரகுருபரன்

'அறம் செய விரும்பு’ திட்டத்துக்கு என ஐந்தாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தன்னார்வலர்கள் பற்றிய அறிமுகம் இங்கே... 

எழிலரசன்  

சமூக ஆர்வலர்

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த எழிலரசன், சமூகவியல் பட்டதாரி. ஒரு விபத்தில் தன் வலது கையை இழந்த மாற்றுத்திறனாளி. 'அல்பினிசம்’ எனும் மரபணு சார்ந்த பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவரைப்போன்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, 'ட்ரீம்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் அரசாங்க உதவிகளைப் பெற்றுத்தர, முனைப் பாகச் செயல்படுபவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''சூரிய வெளிச்சத்தில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவுவது மெலனின் நிறமி. அல்பினிசத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் சருமம் மெலனியை உருவாக்கும் திறனை இழந்திருக்கும்; அவர்களுக்குக் பார்வையும் முழுமையாகத் தெரியாது. அல்பினிச சிகிச்சைக்கான விழிப்புஉணர்வை உண்டாக்க முயற்சிப்பேன்'' என்கிறார் எழிலரசன்!

அ.கரீம்  

வழக்குரைஞர்

இவர், அகில இந்திய வழக்குரைஞர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு உறுப்பினர்; த.மு.எ.க.ச-வின் கோவை மாநகரச் செயலாளர்; சிறுகதையாளர்; விளிம்புநிலை சமூக மாணவர்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைப்பவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''தமிழ்ச் சமூகத்தில் கல்வியில் அதிகமாகப் பின்தங்கி இருப்பவர்கள் அருந்ததியர் மற்றும் தலித் முஸ்லீம் மாணவர்கள்தான். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு சம்பந்தமான விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதன் மூலமே, அந்தச் சமூகங்களின் அடுத்த தலைமுறையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முடியும்'' என்கிறார் கரீம்!

நந்தினி  

பண்பலைத் தொகுப்பாளர்

சென்னை ரேடியோ மிர்ச்சியின் ஆர்.ஜே. சொந்த ஊர் ஊட்டி. மலைவாழ் ஆதிவாசிகளில் படுகர் இனத்தில் இருந்து மீடியாவில் தடம் பதித்த முதல் பெண். 'சிறந்த ஆர்.ஜே’ என விகடன் விருது பெற்றவர்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''பாதை, சாலை என, நாம் தினமும் பயன்படுத்தும் இடங்கள் சுகாதாரக் குறைபாட்டோடு இருக்கும். மனம் இருந்தால் ஒரே நாளில் அந்தப் பகுதியில் சுகாதாரத்தைக் கொண்டுவந்துவிட முடியும். படித்த இளைஞர் களை இணைத்துக்கொண்டு அந்தப் பணியை மேற்கொள்ள ஆசை'' என்கிறார் நந்தினி!

 செந்தில்குமார்  

சமூக ஆர்வலர்

பெரம்பலூர் மாவட்டம் தேனூர்க்காரர். அடிப்படையில் மெக்கானிக்கல் இன்ஜினீயர். ஆனால், ஆர்வம் முழுக்க கிராமப்புற சேவையில். அதனால் வருடத்துக்கு 90 ஆயிரம் டாலர் சம்பளம் கொடுத்த அமெரிக்க வேலையை உதறிவிட்டு, 'பயிர்’ என்ற அமைப்பின் மூலம் கிராமப்புற சுகாதார மேம்பாடு, மருத்துவ முகாம்கள், மின்வழிக் கற்றல் மையம், 'வாய்மை’ இயற்கைப் பண்ணை, மாற்றுவழிக் கற்றல் மையம் எனப் பல கிராமநலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறார்.  

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''குடிநீர்த் தேவைக்கும் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும் நமது முன்னோர்கள் நம்பி இருந்தது ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைத்தான். அவை இப்போது சீரழிந்துகிடக்கின்றன. அவற்றைப் புனரமைத்துப் பராமரிக்கத் திட்டம்'' என்கிறார் செந்தில்குமார்!

வானதி பாலசுப்பிரமணியம்  

சிறப்புக் குழந்தைகள் ஆசிரியர்

இவர், அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டும்கூட. சிறப்புக் குழந்தைகளுக்கான பேச்சுப் பயிற்சி, இயற்கை விவசாயம், ஆர்கானிக் உணவுப்பொருள் விழிப்புஉணர்வு, குழந்தைகளுக்கான மரபு சார்ந்த விளையாட்டு... எனப் பல தளங்களில் செயல்பட்டுவருகிறார்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''தமிழ்நாட்டில் நூற்றுக்கு நான்கு குழந்தைகள் சிறப்புக் குழந்தைக்கான அறிகுறிகளோடு பிறக்கின்றனர். சிறப்புக் குழந்தைகளுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், அவர்களுக்குப் பேச்சுப் பயிற்சி தரவும் பல சாஃப்ட்வேர்கள் வந்திருக்கின்றன. அவற்றை முடிந்தவரை தேவைப்படும் இடங்களுக்குக் கொண்டுசேர்ப்பேன்'' என்கிறார் வானதி!

மருதமுத்து - இயற்கை விவசாயி

மென்பொருள் பொறியாளர். இப்போது சிறுமலைப் பகுதியில் பண்ணை அமைத்து, லாபகரமாக விவசாயம் செய்யும் இயற்கை விவசாயி. 'ஒரு மாதம்... ஒரு ஏக்கர்... ஒரு லட்சம்...’ என்பதே விவசாயத்தில் இவரது லட்சியம்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''நமது மண்ணின் ஆணிவேரே விவசாயம்தான். ஆனால், நடைமுறை சிக்கல்களால் அதில் லாபம் கிடைப்பது இல்லை. ஆனால், அதை லாபகரமாகச் செயல்படுத்த மாற்றுத் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை இலவசமாகச் சொல்லித்தருவேன். அதன் மூலம் நஷ்டம் இல்லா விவசாயம், பொருளாதாரத் தற்சார்புள்ள விவசாயிகளை உருவாக்க எனக்கு விருப்பம்'' என்கிறார் மருதமுத்து!

யாழன் ஆதி  - ஆசிரியர்

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

ஆம்பூர் அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர்; கவிஞர். கவிதை, கட்டுரை என எட்டுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். விளிம்புநிலை மக்களுக்கான 'மானுடப் பண்ணை’ என்ற அமைப்பை நிறுவி, தலைவராக பல்வேறு உதவிகளை முன்னெடுத்தவர். 'மானுட விடுதலையே உண்மையான விடுதலை’ என்ற கொள்கையில் நம்பிக்கைகொண்டவர். ''படித்த விளிம்புநிலை மாணவர்கள் அதிகம் உள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த மாணவர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தி தர நினைக்கிறேன். அது, ஒரே தலைமுறையிலேயே மாற்றங்களை உண்டாக்கும்!''

செந்தில் ஆறுமுகம்  

சமூகச் செயற்பாட்டாளர்

எம்.சி.ஏ பட்டதாரி. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர். மது மற்றும் லஞ்ச ஒழிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்படுபவர். மது ஒழிப்புப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய சசிபெருமாளுடன் இணைந்து களத்தில் போராடியவர். இந்த இயக்கத்தின் போராட்டம் மூலம் 13 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''இளைஞர்களைச் சீரழிப்பதில் முக்கியப் பங்கு மதுவுக்கும் புகையிலைக்கும்தான். அதற்கு எதிரான விழிப்புஉணர்வுப் பிரசாரக் குறும்படங்களை, கல்லூரி மாணவர்களை வைத்தே எடுக்க விரும்புகிறேன். அதற்கு இந்தத் திட்டம் நல்ல களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது'' என்கிறார் செந்தில் ஆறுமுகம்!

உமாநாத் செல்வன்  

கணினி தொழில்நுட்ப வல்லுநர்  

எம்.டெக் பட்டதாரி. 10-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கியப் புத்தகங்களின் ஆசிரியர். சிறுவர் இலக்கியப் பங்களிப்புக்காக சேஷன் சம்மான் விருது, விகடன் விருது, த.மு.எ.க.ச விருது ஆகியவற்றைப் பெற்றவர். பயணப் புகைப்படங்களை எடுப்பதிலும் ஆர்வம் உள்ளவர். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு, பெற்றோர் கதை சொல்லும் அவசியத்தை உணர்த்த, சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்களுக்கு தினமும் இரவு நேரக் கதைகளை வாட்ஸ்அப்பில் அனுப்பிவருகிறார்.

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''சிறுவர்களுக்கான புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவு. அவையும் சரிவரக் கிடைப்பது இல்லை. இது ஒரு மோசமான சூழல். குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை, இரவு நேரக் கதை சொல்லும் பழக்கத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இந்தத் திட்டம் மூலம் சிறுவர்களிடம்  கதை கேட்கும்/சொல்லும்/வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்ட ஆவல்'' என்கிறார் உமாநாத்!

உமாதேவி  

திரைப்படப் பாடலாசிரியர்

அடிப்படையில் கவிஞர். சென்னை சர் தியாகராயா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். 'மெட்ராஸ்’ படத்தில் வரும், 'நான்... நீ... நாம் வாழவே...’ பாடல் இவருடைய பிரபல அடை யாளம். 'திசைகளைப் பருகியவள்’ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்.  

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

''ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள தலித் குடும்பத்தின் கல்லூரி மாணவர்களுக்கு அரசே கட்டணம் செலுத்தும் என்கிறது அரசாணை-92. ஆனால், நடைமுறையில் அதை எந்தக் கல்லூரியும் பின்பற்றுவது இல்லை. ஆர்வம் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து, இது பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்த விருப்பம்'' என்கிறார் உமாதேவி!

கலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்

'அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்துதல், சானிட்டரி நாப்கின் டிஸ்போஸல் இயந்திரம் பொருத்துதல் உள்பட பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இன்னும் சில பெரும் திட்டங்களுக்கான ஆலோசனைகளும் ஆய்வுசெய்யும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. விவரங்கள் விரைவில்...