சினிமா
Published:Updated:

களங்கம் களையுமா காவல் துறை?

களங்கம் களையுமா காவல் துறை?

களங்கம் களையுமா காவல் துறை?

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மரணம், மாநிலம் எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 'சர்ச்சைக்குரிய கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுபிரியா திடீரெனத் தற்கொலை செய்துகொள்வதற்கு, காவல் துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடிகள்தான் காரணம்’ என வெளிவரும் செய்திகள், இந்தப் பரபரப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன. பணியில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம்கூட முடிவடையாத நிலையில், ஓர் இளம் பெண் காவல் அதிகாரி, தன் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன?

விஷ்ணுபிரியாவின் நண்பர்களும் குடும்பத்தாரும் மற்ற அரசியல் இயக்கங்களும் சொல்லும் காரணம், கோகுல்ராஜ் கொலை வழக்கு. ஓமலூரைச் சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ், சில மாதங்களுக்கு முன்னர் ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். 'சாதி வெறியர்களால் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார்’ எனக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான யுவராஜ் என்பவர் இதுவரை

கைதுசெய்யப்படவில்லை. கோகுல்ராஜ் வழக்கின் குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல் இருக்கவும், போலியாக சிலரைக் கைதுசெய்து குண்டாஸ் வழக்குப் பதிவுசெய்யும்படியும் காவல் துறை உயர் அதிகாரிகள் விஷ்ணுபிரியாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், அதைத் தாங்க முடியாமல்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்லப்படுகின்றன.

ஒரு வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்வதுதான் காவல் துறையின் பணி. அதற்கு எதிர்மாறாகச் செயல்படும்படி ஓர் அதிகாரி பணிக்கப்படுகிறார் என்றால், காவல் துறையின் மொத்த செயல்பாடுகளும் சீழ்பிடித்திருக்கின்றன என்றே பொருள். குற்றவாளி பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் கைதுசெய்தால் எதிர்வரும் தேர்தலில் வாக்குவங்கி பாதிக்கப்படும் எனக் கருதி நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒருவேளை மேலே உள்ளவர்கள் அறிவுறுத்தியிருந்தால், அது மிகப் பெரிய ஜனநாயகத் தலைக்குனிவு; நமது மொத்த அரசு நிர்வாகமும் மக்கள் விரோதமாக மாறிக்கிடப்பதன் எடுத்துக்காட்டு. மேலும், தன் ஆளுகையின் கீழ் செயல்படும் ஊழியர்களை அரசே குற்றவாளிகளுக்குத் துணைபோகச் சொல்வது மிகப் பெரிய அசிங்கம்.

கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாடு காவல் துறையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 216. இவர்கள் அனைவருமே பணிசார்ந்த காரணங்களால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூற முடியாது என்றாலும், கணிசமானோர் அந்த வகையிலும் உண்டு. வழக்குகளில் ஒருசார்பு நடவடிக்கை எடுக்க, நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பொய்வழக்கு பதிவுசெய்ய, வழக்கை இழுத்தடிக்க... என நெருக்கடிக்கான காரணங்கள் பல. இதை ஏற்றுக்கொள்வோர் சீழ்பிடித்த நிர்வாகத்தின் அங்கமாகின்றனர்; மறுத்து நேர்மையின் பக்கம் நிற்க முயல்வோர், மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். விஷ்ணுபிரியாவுக்கு அதுதான் நடந்திருக்கிறது.

சில காலம் முன்பு நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமிக்கு அதுதான் நடந்தது. எனில், இங்கே 'நேர்மையின் சம்பளம் மரணம்’தானா?

இந்த அவநம்பிக்கையான சூழலை உடனடியாக மாற்றுவதற்கு அரசு விரைந்து செயல்பட வேண்டும். விஷ்ணுபிரியாவின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். அவரது தற்கொலைக்கு காவல் அதிகாரிகளின் நெருக்கடி மட்டும்தான் காரணமா, கோகுல்ராஜ் கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுத்த மிரட்டலும் காரணமா என்பது இணைத்து விசாரிக்கப்பட வேண்டும். இவற்றை விரைந்து செய்வதன் வழியேதான் தமிழ்நாடு காவல் துறை தன் மீதான நன்மதிப்பை மீட்டெடுக்க முடியும்!