”புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்: உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன் அந்நூலின் முகவுரையின் முதல் வரிகளாக எழுதினார். அவருடைய சொந்த வாழ்க்கை அத்தனை துயர் ததும்பும் ஓர் சோக காவியம்தான்.1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் கடலூர்-திரிப்பாதிரிப்புலியூரில் பிறந்த அவருக்கு அவரது தாத்தாவின் பெயரையே விருத்தாச்சலம் என்று சூட்டினார்கள். அவரது தந்தை சொக்கலிங்கம்பிள்ளை. ஆகவே அவர் சொ.வி. என்றழைக்கப்பட்டார். தாய் பர்வதத்தம்மாள் சொ.வி.க்கு எட்டு வயதாக இருக்கையில் காலமானார். தாயன்பு கிடைக்காமல் வளர்ந்த பையனுக்குத் தந்தை மறுமணம் செய்துகொண்ட, சிற்றன்னையின் புறக்கணிப்பு தாராளமாகக் கிடைத்தது.
12 வயதில் சொக்கலிங்கம்பிள்ளை தாசில்தார் பணியிலிருந்து ஓய்வு பெற்று, பிறந்த ஊரான திருநெல்வேலி சென்று தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த வண்ணார்பேட்டையில் குடியேறினார். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத புதுமைப்பித்தன் ‘ஒவ்வொரு வகுப்பிலும் ஆற அமர இருந்துதான் அடுத்த வகுப்புக்கு பாஸ் வாங்கினார்’. கல்லூரிக்குச் சென்ற காலை அவருக்குத் துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் ‘பித்து’ப் பிடித்தது. இரவெல்லாம் கண் விழித்து நாவல்களை வாசிப்பார். பாடப்புத்தகம்தான் படிக்கிறார் என்று சொக்கலிங்கம்பிள்ளை அக மகிழ்ந்திருப்பார். ரிசல்ட் வரும்போதுதான் உண்மை தெரியும். கல்லூரியில் ஒரு இனக்குழுத்தலைவர் போல புதுமைப்பித்தன் இருந்தார். அவருடைய குழுவுக்கே படிப்புக் கசந்ததால், கல்லூரிக்குப் பின்னால் இருந்த தென்னந்தோப்பில் இளநீர் திருடிக்குடிப்பது, தாமிரபரணி ஆற்று மணல் வெளியில் ராவெல்லாம் சுகநித்திரை செய்வது, ஆற்றுமணல் வெளிக்குப் போகாத நாள்களில் ஆற்றங்கரையிலுள்ள மாந்தோப்புச் சுடுகாட்டுக்குச் சென்று அங்கேயே திருப்பள்ளி கொள்வது என்று தங்கள் வாழ்முறையை அமைத்துக்கொண்டனர். இந்தப் பித்தனைச் சுற்றி, பூத கணங்கள் போல அவருடைய நண்பர்கள் குழாம் சுடலைக்குச் சென்றதாக ரகுநாதன் எழுதுகிறார்.
“ எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு நாள்களாகி விட்டது.
ஊர் ஆசை என்பது கட்குடி மாதிரி ஒரு போதை வஸ்து. அந்த ஆசை வந்து விட்டால் அதற்கு மாற்றுக்கிடையாது. போய்த்தான் தீர வேண்டும். இந்த ஊர்ப்பித்தம் காதலைப்பார்க்கிலும்,தேச பக்தி,கடவுள் பக்திகளைப் பார்க்கினும் மிகக் கொடூரமானது. அதன் ஏகச் சக்ராதிபத்தியம் மனத்தில் என்னென்ன கனவுகளையெல்லாம் எழுப்பும், தெரியுமா?”
என்று தொடங்கும் புதுமைப்பித்தனின் ‘சாயங்காலத்து மயக்கம்’ சிறுகதையில் இந்த அனுபவத்தின் சாயையைக் காணலாம்.
ஆகவே எந்த அவசரமும் இல்லாமல் படித்து, தன்னுடைய 25 ஆவது வயதில் பி.ஏ.படிப்பை முடித்தார். அன்றைக்கு 25 வயதாகிவிட்டால் சர்க்கார் வேலை கிடைக்காது. மகனை தாசில்தார் ஆக்கிப்பார்க்க ஆசைப்பட்ட சொக்கலிங்கம்பிள்ளை ஏமாந்தார். சரி,ஒரு வக்கீலாகவாச்சும் ஆக்கிப்பார்க்கலாம் எனத் திட்டமிட்டார். திருவனந்தபுரத்தில் சட்டக்கல்லூரி இருந்ததால்,அங்கேயே ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணங் கட்டிக்கொடுத்து படிக்க வைக்கலாம் என நினைத்தார்.
“திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா சூபர்வைசராக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் குமாரத்தி கமலாம்பாளைப் புதுமைப்பித்தனுக்கு மணம் பேசி முடித்தார் சொக்கலிங்கம்பிள்ளை…..இந்தக் கல்யாணத்தைப் பற்றிப் புதுமைப்பித்தன் ஒருமுறை என்னிடம் ரசமாகச் சொன்னார்.”அந்த வயசிலே நான் ஆற்றுக்குப் போகும்போது( கழிப்பறை செல்வது) சுருட்டுப் பிடிப்பது வழக்கம்.அன்றைக்கு அவசரம். சுருட்டை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு மாடியை விட்டிறங்கி ஆற்றுக்குக் கிளம்பினேன். அப்பா இடைமறித்து, கல்யாண விஷயத்தைச் சொன்னார். எனக்கு நின்று பேச நேரமில்லை. சரி, ஆகட்டும் என்று சொல்லிவிட்டுப் போனேன். கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. பெண்ணைப்பார்த்ததும் அவள் கண்கள் எனக்குப் பிடித்துப்போய்விட்டன. அந்தக் கண்களுக்காகவே அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டது சரி என்று பட்டது. கமலாவை நான் கண்ணா என்றுதான் அழைப்பேன்: கண்ணாள் என்றுதான் கடிதம் எழுதுவேன்” (புதுமைப்பித்தன் வரலாறு-ரகுநாதன்)
” 27.3.41
எனது கட்டிக்கரும்பான கண்ணாளுக்கு,
இன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும் உன் கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தினங்களாகவே எதிர்பார்த்து, எதிர்பார்த்து வந்ததினால் அதில் வாசிக்க ரொம்ப ஆவல். உன் மனச்சுமையையும், சங்கடத்தையும் கண்டு மனம் கலங்கி விட்டது………உனக்கு அங்கு இருக்கும் நிலைமையும்,சுற்றியுள்ளோர் பிடுங்கித் தின்பது போலப் பேசுவதும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக்கொண்டுதான் வருகிறேன்……நீ எதற்கும் கோபப்பட்டுக்கொண்டு (அங்கே) தனி வீடு பார்த்து இருக்க வேண்டியதில்லை.கண்ணா இந்த வார்த்தைகளை எழுதும்போது உனக்கு நேர்ந்த அவமானம் எனக்கும் என்றுதான் நினைத்து எழுதுகிறேன். மனசைச் சஞ்சலப்படுத்திகொள்ளாதே. இதுவரை சுற்றுப்புறக் கடன்கள் இருந்ததைத் தீர்த்து வந்தேன். இங்கு வந்த பிற்பாடாவது கவலை இல்லாமல் நீ இருக்க வேண்டாமா? அதுதான் என் ஆசை, கனவு எல்லாம். உனக்குத் தூக்கம் வராததைப் போலத்தான் எனக்கும். இவ்வளவு வேலைக்கப்புறமும் மனசு உனது கஷ்டத்தில் சுற்றிச் சுற்றி விழுந்து கொண்டே கிடக்கிறது……ஐந்நூறு மைலுக்கு அப்பால் இருந்தாலும் எனது கைத்தாங்குதலில் இருக்கிறோம் என்ற தெம்பு ஏற்பட்டால், உனக்கு இந்த மனச் சங்கடங்கள் ஜாஸ்தியாகாமல் குறைத்துக்கொள்ள முடியும். மறுபடியும் நாளைக்குக் கடிதம் எழுதுகிறேன்.
ஆயிரம் முத்தங்கள்.
இப்படிக்கு,
உனதே உனது
சொ.வி..
(கண்மணி கமலாவுக்கு-புதுமைப்பித்தன் கடிதங்கள் தொகுப்பு-சாந்தி பிரசுரம் –தொகுப்பு-இளையபாரதி)
புதுமைப்பித்தனின் பொருளாதார நிலையையும்,காசில்லாத காரணத்தால் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் அவர் நெல்லையில் உறவினர் வீட்டிலும் இவர் சென்னையிலும் வாழ்ந்த கொடுமையையும்,இதையெல்லாம் மீறிய அவர்களுக்கிடையிலான அளவற்ற காதலையும் சொல்ல இந்த ஒரு கடிதம் போதும்.
1931 ஜூலையில் திருமணம்.1948 ஜூன் 30 இல் புதுமைப்பித்தன் மறைந்தார்.17 ஆண்டுகால மண வாழ்க்கையில் அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட பொருளாதாரக் காரணத்தால் (மட்டுமே) அவர்கள் பிரிந்திருந்த காலமே அதிகம்.தொலைபேசியும் அதிவேக போக்குவரத்தும் இல்லாத அந்த நாள்களில் கடிதங்களே தூரங்களை இணைக்கும் ஒரே வழியாக இருந்தன. கஷ்டம் கஷ்டம் எனக் கஷ்டத்தைத்தவிர வேறெதையும் அனுபவித்திருக்காவிட்டாலும் புதுமைப்பித்தன் மீது அவரது துணைவியாருக்கு எந்தப் புகாரும் இருந்ததில்லை.
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் எழுத்தாளர் சங்க மாநாடு சென்னையில் நடைபெற்றபோது புதுமைப்பித்தன் வீட்டுக்குப் போயிருந்தோம். நடமாட்டம் குறைந்து அடுத்த அறையில் படுத்த படுக்கையாக இருந்த கமலா அவர்கள் ”எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்” என்று அவர்களின் மகள் தினகரி சொன்னதும் தன்னை எழுப்பி நல்ல சேலை உடுத்திவிடச்சொல்லிக் கைத்தாங்கலாக மகள் தோளைப்பிடித்தபடி எங்களைச் சந்திக்க கூடத்துக்கு வந்தார். எங்களை எல்லாம் சந்தித்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. அவங்க இருந்தப்போ எழுத்தாளர் மாநாட்டுக்கு என்னை அழைத்துப்போயிருக்கிறார் என்று பெருமையுடன் கூறினார். அப்போது அவருக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள் எதுவும் அச்சில் வெளியாகியிருக்கவில்லை. 1994இல்தான் கடிதத்தொகுப்பு வந்தது.
ஆனாலும், புதுமைப்பித்தனைப் பற்றிய பேச்சு அவரது முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை நாங்கள் கவனிக்க முடிந்தது. கனிவும் ஏக்கமும் சற்றே நாணமும் பெருமிதமும் பேரானந்தமுமாக மாறி மாறி ஒளிர்ந்த அம்முகம் இன்றைக்கு நினைத்தாலும் மன நடுக்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கிறது எனக்கு.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் உச்சமான கதைகள் என்று ஒரு பத்துக்கதையை எடுத்தால் அதில் நிச்சயம் இடம் பெறும் கதையாக ’செல்லம்மாள்’ இருக்கும்.
”செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது. நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலேயே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்” எனத்துவங்கும் செல்லம்மாள் கதை ஒரு காதல் காவியம். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பெற்ற ஒரு காதல் காவியம்தான். வாசிக்கும் எவரையும் உருக்கி விடும் கதை அது. செல்லம்மாளுக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்லி விடலாம். ஆனால் அதை விடவும் மனதை உருக்கும் காதல் காவியமாக புதுமைப்பித்தன் அவருடைய இணையர் கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன.
தகப்பன் பேச்சைக் கேட்காத பிள்ளையாகத்தான் புதுமைப்பித்தன் வளர்ந்தார். தகப்பனும் சாமானியப்பட்டவரல்ல. சல்லிக்காசு தர முடியாதென்று நள்ளிரவில் புதுமைப்பித்தனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டவர். உண்மையில் நடுத்தெருவில் நின்றார்கள் இருவரும்.
அதன்பிறகுதான் புதுமைப்பித்தன் தன் மனதுக்குப் பிடித்த பத்திரிகை/எழுத்துப்பணி தேடி சென்னைக்குக் கிளம்பியது.
மணிக்கொடி, தினமணி இதழ்களில் முதலில் பணியாற்றினார். பாரதியின் சரித்திரத்தை எழுதிய வ.ரா அவர்களும் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களும் கை கொடுத்து உதவினர். போதாத வருமானத்தில் நிறைவான எழுத்து வாழ்க்கையை நடத்தினார் புதுமைப்பித்தன்.
ஒருநாள் கழிந்தது
"நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.
"கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம்.
கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.
தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்.
"ஏது அவசரம்!"
"சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது…திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!"
"அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இதுதான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.
"இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.
"அப்பொ…" என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.
"பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார்.
முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
"அங்கே என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!
"நீதான் இங்கே வாயேன்!"
கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.
"சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"
"உங்களுக்கும்… வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக்கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.
"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"
"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"
"அதற்கென்ன இப்பொழுது!"
"போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"
"திங்கட்கிழமைக்கு?"
"திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"
புதுமைப்பித்தன் தன் கதையைத்தான் ’ஒரு நாள் கழிந்தது’ என்று எழுதியிருப்பார் போலும். நாளை மற்றொரு நாளே என்று ஜி.நாகராஜன் எழுதியதைப்போல அன்றன்றையப் பொழுதைக் கழிப்பதே போராட்டமாக இருந்த வாழ்வே அவருக்கு லபித்தது.
ஆனால் தமிழ்ச் சிறுகதைக்கு உருவமும் உள்ளடக்கமும் கொடுத்து மூச்சுக்காற்றை வாய் வைத்து ஊதி உயிர் கொடுத்தவர் புதுமைப்பித்தன் தான் என்பதை எத்தரப்புச் சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் மறுக்கவில்லை. புதுமைப்பித்தன் தீவிரமாக சிறுகதையில் இயங்கிய 1930-40 கால கட்டத்தில் தமிழ் இலக்கியச் சூழலில் எது இலக்கியம்? எது கதை?எது கலை- எது பிரசாரம்? என்கிற அனல் பறக்கும் விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்றவர் புதுமைப்பித்தன். இலக்கியத்தின் நோக்கம் சமூகத்தைச் சீர்திருத்துவது அல்லது உய்விப்பது அல்ல என்கிற அணியில் நின்றவர் அவர். மணிக்கொடி இலக்கியவாதிகளின் பொதுவான சார்பு இதுவாகத்தான் அன்று இருந்தது . ”அவனவனுடைய ஆத்ம திருப்திக்காக எழுதிக்கொள்வதை விட விவேகமான காரியம் வேறு எதுவும் கிடையாது” என்று ஒரு கடிதத்தில் புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளதாக ஆய்வாளர் ராஜ்கவுதமன் எழுதுகிறார்.மற்றவகை எழுத்துக்களைப்போல இலக்கியத்தை ஒரு தர்க்கத்துக்குள் அடக்க முடியாது என்கிற பார்வையும் அவருக்குண்டு.
“கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை….பத்துத்தலை ராவணனும், ஆறுதலை சுப்பிரமணியனும் உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம்: ஆனால் ஒரு கொள்கையை, இலட்சியத்தை உணர்த்தக்கூடியது. அதுதான் கலையின் லட்சியம்” என்றார் அவர்.
எந்த இஸத்திற்குள்ளும் தன் மனதைப் பதியனிடாமல் சுத்தமான இலக்கியவாதியாகத்தான் அவர் இருக்க விரும்பினார்.
“கொள்கை என்பது உயரத் தூரத்தில் தூக்கிப்பிடித்த தீபந்தம் போல் எட்ட இருப்பதாலேயே வெளிச்சம் விழுகிறது.அது எட்ட இருப்பது அவசியம்” என்று தெளிவான பார்வை கொண்டிருந்தார்.ஆனாலும் தன் சமகாலத்து நிகழ்வுப்போக்குகளுக்குத் தன் படைப்புகளில் முகம் கொடுக்க அவர் தயங்கியதில்லை.
அவர் இயங்கிய 1930-40 காலம் என்பது உலக அளவில் முதலாளித்துவம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்த காலகட்டம். உலகப் பொருளாதாரப் பெரு மந்தம் எனப்பட்ட The Great Depression காலகட்டம் அது. ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் சுமையை மூன்றாம் உலக நாடுகளின் மீது இறக்கி வைக்க, அது எளிய மக்களை மேலும் வறியவராக்கி மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்த காலம். நகரங்கள் எனும் பெரும் சந்தைகள் எழுந்துகொண்டிருந்த காலம். முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோவியத் நாடு ’திட்டமிட்ட பொருளாதாரம், இயற்கை வளங்கள் பொதுவுடைமையில்’ என்கிற நடப்பை முன்வைத்து முன்னேறிக்கொண்டிருந்த காலமாகவும் இருந்தது.
” பட்டணத்திலே மாவிலைகூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.”என்ன,மாவிலைக்குமா விலை?”என்று பிரமித்துப்போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால்,மரத்தில் ஏறிப்பறித்து,வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும்.இதுதான் விலை என்பது”
என்று புதுமைப்பித்தன் தன்னுடைய விநாயக சதுர்த்தி என்கிற சிறுகதையில் எழுதுகிறார். கூலி, விலை, லாபம் போன்றவற்றின் அடிப்படைகளை விளக்கும் மார்க்ஸியப் பார்வையை உள் வாங்கியவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.
குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளிகளை வைத்து அதிக நேரம் வேலை வாங்கி அந்த உபரி உழைப்பில் உருவாகும் சொத்தைத் தனக்கான லாபமாக முதலாளி எடுத்துச் செல்லும் முதலாளித்துவப் பொருளாதார அடிப்படைகளைப்பற்றிக்கூட வெளிப்படையாகத் தன் கதைகளில் எழுதினார். ’தியாக மூர்த்தி’ சிறுகதைக்கு உள்ளேயே அதை வைத்து எழுதுகிறார்:
“ பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்திப் பத்தியாக நுணுக்கமாக எழுதத்தெரியும்:பேசவும் தெரியும்.ராமனுஜலு நாயுடுவுக்குத் தெரிந்தது போல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரியாது…..அவருடைய சிக்கனக்கத்தி விழுந்தது. பத்துப்பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப்பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்: கூத்தாடினார்கள். பத்துரூபாய்-பாதிச் சம்பளம்-கொடுத்தால்கூடப் போதும் என்றார்கள். ராமானுஜுலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!” என்று எழுதும் புதுமைப்பித்தன் நல்ல பால் கறக்கும் மாட்டை கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதும் மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் தோல் விலைக்கு வந்தால் சரிதான் என்று தள்ளி விடுவதையும்போலத்தான் முதலாளி தொழிலாளியை நடத்துவான் என அக்கதையில் விளக்குவார். வேலையிழந்த தொழிலாளியான ராமசாமி பத்தர் கதையின் முடிவில் முதலாளி தனியாக இருக்கும்போது பணத்தைப் பறிக்க முயன்று கைதாகிச் சிறை செல்கிறார். அதைப்பற்றி எழுதும்போது தொழிற்சங்கத்தையும் ஒரு இடி இடிக்கிறார் புதுமைப்பித்தன்.
“பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறு மாசக் கடுங்காவல். பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு இந்த மாதிரி உதவி செய்ய முடியும்?நியாயமான உலகமல்லவா?”
பொருளாதாரப்பார்வை போல சாதியம்,பெண்ணடிமைத்தனம் குறித்தும் புதுமைப்பித்தனின் கதைகள் மிகக்கூர்மையான மொழியில் பேசுகின்றன. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை, வாழ்வின் முரண்பாடுகளை, சமூகத்தின் கையாலாகத்தனத்தை, தமிழ்ச்சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையை புதுமைப்பித்தன் அளவுக்குச் சிறுகதைகளில் உரித்துத் தொங்கப்போட்டவர்கள் யாருமில்லை.
”கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா பொன்னகரம் ” என்று பொன்னகரம் கதையை முடிக்கிற தொனி.
” அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித்தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு,உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸூக்காகக் கண்ணை மூட வேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்” என்று வாசகரின் மூஞ்சியிலறையும் தொனி.(கவுந்தனும் காமனும் –சிறுகதை) இதுதான் புதுமைப்பித்தனின் தனித்த முத்திரை.
புராணக்கதைகளை மறுவாசிப்புச் செய்து மறு படைப்பாக்குவதில் ஆர்வம் காட்டிய புதுமைப்பித்தன் பல கதைகளில் காவியப்பாத்திரங்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கும்போதும் இதே தொனியில்தான் சவட்டி அடிப்பார்..கௌதம முனிவரின் மனைவி அகல்யையை ஏமாற்றிப் பாலியல் வன்முறை செய்யும் இந்திரன் கதையை அகல்யை என்கிற சிறுகதையில் சொல்லும்போது பக்கத்தில் கிடந்த தடியால் இந்திரன் மண்டையை அடித்து அகல்யை அவனை உதறித்தள்ளுவதாக எழுதுகிறார்.கௌதமர் வந்து எல்லாம் கை மீறி விட்டதைப் பார்த்து ”அப்பா இந்திரா! உலகத்துப்பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?” என்று நேருக்கு நேர் கேட்கிறார்.
சாப விமோசனம் என்கிற கதையில் சீதையை ராமன் தீக்குளிக்கச் சொன்ன கதையை அகலிகையிடம் சீதை சொல்லிக்கொண்டிருக்கும்போது அகலிகை,
“அவர் கேட்டாரா?நீ ஏன் செய்தாய்? என்று கேட்டாள்.
அவர் கேட்டார்.நான் செய்தேன்” என்றாள் சீதை,அமைதியாக.
“அவன் கேட்டானா?என்று கத்தினாள் அகலிகை.அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.
அகலிகைக்கு ஒரு நீதி. அவனுக்கு ஒரு நீதியா?”
ராமனை அவர் என விளித்த அகலிகை அவன் என விளிக்கும் அளவுக்குப் படைத்துக்காட்டுகிறார் புதுமைப்பித்தன்.
சுந்தரராமசாமி குறிப்பிடுவது போல,” தனக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் தந்த அனுபவங்களைப் படைப்புக்குள் கொண்டுபோகும்போது மொழியில் ஓலமிடுபவர் அல்ல புதுமைப்பித்தன்.தான் நன்கு அறிந்திருக்கும் விஷயங்களை வாசகர், தம் சுரணை கெட்ட தனத்தால், இன்னும் புரிந்து கொள்ளாதிருக்கும் நிலை தன் பொறுமையைச் சோதிப்பது போன்ற பாவனையை அவர் பல கதைகளிலும் மேற்கொண்டிருக்கிறார். குத்தலும் கிண்டலும்தான் அவரது சொல்முறைகள்…அனைத்து விமர்சன அதிர்வுகளையும் வாசகனின் தார்மிக ரோஷத்தைத் தூண்டும் வகையில் செலுத்திக்கொண்டிருப்பதே படைப்பாளியின் பணி”
புதிய நந்தன் சிறுகதையில் நந்தன் பிறந்த ஊரான ஆதனூரின் பறைச்சேரி பற்றி அவர் விவரிக்கும் தொனி வாசகனை தொந்தரவுக்குள்ளாக்கும் :
“நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப் புடம் போட்ட பின்னர்வெகு காலம் சென்றது. அந்தப் பெருமையிலேயே ஆதனூர் சந்தோஷ அல்லது துக்க சாகரத்தில் மூழ்கி அப்படியே மெய்மறந்தது. இங்கிலீஷ் சாம்ராஜ்யம் வந்த சங்கதி கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நெடுந்தூக்கம். இப்பொழுது ஆதனூரிலே ரயில்வே ஸ்டேஷன்,வெற்றிலை பாக்குக் கட என்ர ஷப்பு.காப்பி ஹோட்டல் என்ற இத்யாதி சின்னங்கள் வந்துவிட்டன.எப்படி வந்தன என்ர சமாசாரம் யாருக்கும் தெரியாது.
ஆனால் நந்தன் பறைச்சேரியில் விடைபெற்றுக் கொண்ட பிறகு பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்….சேரிப்பறையர்கள் ஆண்டையின் அடிமைகள், அத்துடன் அவர்களுக்குத் தெரியாத வெள்ளைத்துரையின் அடிமைகள்”
முதலாளித்துவமும் ,அதன் நுகர்வுக்கலாச்சாரமும்,நகரங்களின் எழுச்சியும் காந்தியமும்,தேசியமும் பகுத்தறிவும் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் தனித்து நின்று தம் படைப்புகள் வழியாக அவற்றை விமர்சிக்கின்ற திராணி பெற்றிருந்தார் எனத் தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரான ராஜ்கவுதமன் கணிக்கிறார்.
புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் அவரது மேதமையின் வெளிச்சம் பெற்ற கதைதான். ஆனாலும் தமிழராகப் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மனுஷியும் அவசியம் வாசித்தே ஆக வேண்டிய கதைகள் என செல்லம்மாள், துன்பக்கேணி, சிற்பியின் நரகம், கோபாலய்யங்காரின் மனைவி, பால்வண்ணம் பிள்ளை, கலியாணி, ஒருநாள் கழிந்தது, காலனும் கிழவியும், மகாமசானம், காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், கயிற்றரவு போன்ற கதைகளைக் குறிப்பிடுவேன்.
புதுமைப்பித்தனின் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டம் இல்லாமல் வசந்தம் வீசியது 1946 என்கிற ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான்.அந்த ஆண்டில் அவர் சினிமாவுக்கு வசனம் எழுதப்போனார். அவ்வையார் படத்தில் தொடங்கி பாகவதரின் ராக முக்தி வரை அது தொடர்ந்தது.ஆனால் அது ஒரு பேயைப்போல அவரை ஆட்டுவித்து அலைக்கழித்தது.சொந்தச் சினிமாக்கம்பெனி ஆரம்பிக்கும் பித்துப் பிடித்து கையில் சேர்ந்த பணத்தையும் அதில் இழந்து மீண்டும் ஓட்டாண்டி ஆனதோடு காசநோயின் கரங்களில் நிரந்தரமாகச் சிக்கிக்கொண்டார்.புனே நகரத்தில் வியாதியோடு தனிமையில் சீரழிந்து நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு சாவதற்காகவே மனைவியும் மகளும் வாழ்ந்துகொண்டிருந்த திருவனந்தபுரம் திரும்பினார்.
அவரே எழுதிய மகா மசானம் கதையில் வருவதுபோல ,
” அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
சாவதற்கு நல்ல இடம். சுகமான மர நிழல். வெக்கை தணிந்து அஸ்தமனமாகிவரும் சூரியன். "ஜே ஜே" என்ற ஜன இயக்கம். ராஜ கோலாகலம் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்பொழுது அவன் செத்துக் கொண்டிருந்தான்; சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.
ஜனங்கள் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது; சிலர் தெரிந்துகொள்ள விரும்பவில்லை”
தன்னைக் காப்பாற்றப் பொருளுதவி செய்யும்படி தமிழ்ச் சமூகத்தை நோக்கி கரம் உயர்த்திய புதுமைப்பித்தனை அன்று தமிழ்ச்சமூகம் கண்டுகொள்ளவில்லை.அவன் குரலைச் செவிமடுக்கவில்லை.
பரங்கிப்புண்ணைப் பரிசாகப் பெற்றுத் ”துன்பகேணி”யில் சிதைந்துபோன மருதியைப்போலப் புதுமைப்பித்தன் மனம் சிதைந்து மடிந்தார்.
பிரேதமாகக் கிடந்த புதுமைப்பித்தனின் நெற்றியை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார் கமலா. எழுதி எழுதி வீங்கிப்போன புதுமைப்பித்தனின் வலது கையைத் தன் நெஞ்சோடு அணைத்து மாறி மாறி முத்தமிட்டார்.காலமெல்லாம் கடிதங்களிலேயே வாழ்ந்து முடித்த தன் அருமைக் கண்ணாளின் ஆசை முத்தத்துடன் நம்மிடமிருந்து விடைபெற்றார் புதுமைப்பித்தன்.