மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெநெடுஞ்சாலை வாழ்க்கை - 29

தமிழக லாரிகள் மட்டும் இலக்கு ஏன்?!கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

ர்நாடக மாநிலத்தின் தாவணகரெ கடந்து, ஆர்டிஒ அதிகாரியிடம் இருந்து தப்பிப் போய்க்கொண்டிருந்தோம். வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. அடுத்து ஹூப்ளி. சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்த நகரம். ஹூப்ளியை நெருங்கும்போது, நிலத்தின் தன்மைக் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை உணர முடிந்தது. வைரம் பாய்ந்த மரக்கட்டைபோல, சின்னச் சின்ன குன்றுகளில் வெவ்வேறு நிறத்திலான மண் படிவங்கள் பரவி இருந்தன.

சந்தன நிறம், இளம் சிவப்பு, சிவப்பு, பச்சை என நம்பமுடியாத வண்ணங்களில் இருந்த மண் குன்றுகளைப் பற்றி சேதுராமனிடம் விசாரித்தேன். ‘‘ஹூப்ளியில் இருந்து பெல்காம் வரைக்கும் இந்த மாதிரிதான் நிலம் இருக்கும். இந்த மண்ணை எடுத்து, தனித்தனியாக வண்ணம் பிரித்து டைல்ஸ் தயாரிக்கிறார்கள். நானே பெங்களூருக்கு இங்கிருந்து இந்த மண் லோடு ஏற்றிச் சென்றிருக்கிறேன். மண்ணைப் பொன்னாக்கலாம் என்பதற்கு உதாரணமான ஏரியா இது. ஆனால், அதற்கு நேர் எதிரான செயல்களும் இங்கு நிறைய நடக்கின்றன!’’ என்றவர், தொடர்ந்தார்.

‘‘பெங்களூரு - புனே நெடுஞ்சாலையில் திருட்டுப் பயம் உள்ள பகுதி என்றால், அது ஹூப்ளி பைபாஸ்தான். இரவில் தனியாக வரும் லாரிதான் திருடர்களின் இலக்கு. அதுவும் தமிழகப் பதிவு எண் கொண்ட லாரியாக இருந்தால், கொள்ளையர்களுக்குக் கொண்டாட்டம்.  ஜீப், வேன் என ஏதாவது ஒரு வாகனத்தில் லாரியின் குறுக்கே நிறுத்தி மடக்குவார்கள். இருக்கும் பணம், போன் என எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். கொடுக்க மறுத்தால் அடி விழும். ஆனால், லாரிக்கு வேறு எந்தச் சேதாரமும் இருக்காது. அதனால், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தமிழக லாரிகள் ஹூப்ளி பைபாஸ் சாலையைக் கடக்காது. ஹூப்ளிக்கு முன்பாக, அந்தப் பக்கம் பெல்காம் முன்பு இருக்கும் ஹோட்டலில் லாரியை நிறுத்திவிடுவார்கள்.

நெநெடுஞ்சாலை  வாழ்க்கை - 29

நிறைய தமிழக லாரி டிரைவர்கள் இங்கு பணத்தைப் பறி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போலீஸ் ஒரு வழக்குகூடப் பதிந்ததாகத் தெரியவில்லை. புகார் கொடுக்க தமிழக டிரைவர்கள் சென்றால், புகாரையே வாங்குவது இல்லை. அந்த அளவுக்கு இங்கே திருட்டு கொடி கட்டிப் பறக்கிறது.  எனக்கு, எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பது அத்துப்படி. மிகக் கவனமாகத்தான் இந்த இடத்தைக் கடப்பேன். ஒருமுறை கோலாப்பூரில் இருந்து கோவைக்கு சர்க்கரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். பெல்காம் நெருங்கும்போது இரவு 10 மணியாகிவிட்டது. நிறுத்தலாம் என நினைத்தபோது, முன்னும் பின்னும் தமிழக லாரிகள் இருந்தன. அதனால், இவர்களுடன் சேர்ந்து சென்றுவிடுவோம் என ஓட்டிச் சென்றேன். ஹூப்ளியை நெருங்கும்போது 12 மணி இருக்கும். தடால் என லாரியின் முன் கண்ணாடியில் கல் விழுந்து, கண்ணாடி நொறுங்கிச் சிதறியது. நான் அதிர்ச்சியாகி ஸ்தம்பித்துவிட்டேன்.

சட்டெனச் சுதாரித்து, ஆக்ஸிலரேட்டரை அதிகமாக மிதித்துக்கொண்டே உடன் வந்த மற்ற லாரிகள் எங்கே எனத் தேடிப் பார்த்தால், முன்னால் சென்ற லாரி முந்திப் போய்விட்டிருந்தது. எனக்குப் பின்னால் வந்த லாரியைக் காணவில்லை. அந்த அதிர்ச்சியிலும் லாரியை நிறுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால், வேகவேகமாக ஹூப்ளியைக் கடந்த பிறகுதான் லாரியை ஒரு ஹோட்டலில் நிறுத்தினேன். கண்ணாடியை உடைத்தால், நிறுத்துவேன் என்று திருடர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். அன்றைக்கு 20,000 ரூபாய் வரை கையில் இருந்தது. நல்லவேளை அது தப்பியது. கண்ணாடி மட்டும் நஷ்டம். பின்பு, கண்ணாடி இல்லாததால், குளிரில் நடுங்கிக்கொண்டே கோவை வந்து சேர்ந்தேன். அதன் பின்பு ஹூப்ளியை இரவில் நெருங்குவதே இல்லை’’ என்றவர், ஹூப்ளி பைபாஸில் இருந்த ஹோட்டலில், மதிய உணவுக்காக லாரியை நிறுத்தினார்.

மதிய உணவுக்குப் பிறகு லாரி மிக நிதானமாகச் செல்ல ஆரம்பித்தது. தமிழக லாரிகளை மட்டும் ஏன் அரசு அதிகாரிகள் முதல் கொள்ளையர்கள் வரை குறிவைத்துச் செயல்படுகிறார்கள் என்று சேதுராமனிடம் கேட்டேன்.

நெநெடுஞ்சாலை  வாழ்க்கை - 29

‘‘நமக்கு மொழி தெரியாதது முக்கியமான பிரச்னை. வட மாநிலங்களில், ஏதாவது ஒரு மாநில லாரிக்குப் பிரச்னை என்றால், அந்த மாநில லாரிகள் ஒன்று சேர்ந்துவிடும். ஆனால், நம் மாநில லாரிகள் அப்படி ஒன்று சேர்ந்ததை நான் பார்த்ததே இல்லை. டிரைவர் தொழிலுக்கு இந்த பேதம் எல்லாம் தேவையில்லைதான். ஆனால், தமிழக லாரி டிரைவர்கள் கொலையாவதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதன் மர்மம்தான் தெரியவில்லை!’’ என்றார்.

பெல்காம் நெருங்கிக் கொண்டிருந்த போது, பிரமாண்டமான அந்தக் கட்டடம் தெரிந்தது. யாருமற்ற அனாதை போலத் தனித்து நின்றது அந்தக் கட்டடம். தோற்றத்தில், கர்நாடக அரசின் சட்டமன்றமான விதான் செளதாவை நினைவுப்படுத்தியது அது. நுழைவு வாயிலின் அருகே இருந்த பெயர்ப் பலகையைப் பார்த்தபோதுதான் விஷயம் புரிந்தது. இந்தக் கட்டடம், ‘ஸ்வர்ண விதான் செளதா.’ கர்நாடக அரசின் வட கர்நாடகாவுக்கான சட்டமன்றம்.

2007-ல் கட்ட ஆரம்பித்து 2012-ல் இயங்கத் தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் ஒரு வரலாறே இருக்கிறது. நெடுங்காலமாக மைசூர் ஸ்டேட் என அழைக்கப்பட்டு கர்நாடகா என உருவானபோது, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை கர்நாடக மாநிலத்துடன் இணைத்தார்கள். பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளில் தமிழர்கள் ஏராளமாக வசித்ததால், பெங்களூருவுக்கு தமிழகத்தால் பின்னால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, மைசூருக்குப் பதிலாக பெங்களூருவை கர்நாடகாவின் தலைநகர் ஆக்கினார்கள். எப்படி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்ததோ, பெல்காம் மாவட்டத்தை கர்நாடகாவுடன் சேர்க்கக் கூடாது; மஹாராஷ்ட்ராவுடன்தான் இணைக்க வேண்டும் என போராட்டங்கள் பல காலம் நடந்துகொண்டிருக்கின்றன. காரணம், பெல்காம் மாவட்டத்தில் மராட்டியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பெல்காமை மஹாராஷ்ட்ராவுடன் இணைக்க வேண்டும் என ஒரு அமைப்பு போராட்டம் நடத்தும்; இன்னொரு அமைப்பு சேர்க்கக் கூடாது என்று போராட்டம் நடத்தும்.

அரசு சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் பெங்களூர் சென்றுவருவது மிகத் தொலைவு. ஆனால், புனே, மும்பை அவர்களுக்குச் சமீபம். மாநில எல்லையில், ‘பெல்காம் யாருக்கு?’ என போராட்டம், கடையடைப்பு, 144 தடை உத்தரவு என சில சமயங்களில் பதற்றமாகும். ‘பெல்காமை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் இப்படி ஒரு சிக்கல் தீராமல் இருக்கிறது’ என்பதும் பரவலான கருத்து.

நெநெடுஞ்சாலை  வாழ்க்கை - 29

பிரச்னை உக்கிரமாக இருந்த சமயத்தில், பெல்காமில் ஸ்வர்ண விதான் செளதா கட்டும் திட்டம் உருவானது. இப்போது ஒவ்வோர் ஆண்டும் கர்நாடக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் 10 தினங்கள் இங்கு நடக்கின்றன. அதற்காக மட்டும் ஆண்டுதோறும் சுமார் 10 கோடி ரூபாய் செலவு ஆகிறது என்றும் சொல்கிறார்கள். சரி, பிரச்னை தீர்ந்துவிட்டதா என்றால், இன்னும் இல்லை. இன்றும் பெல்காம் யாருக்கு என்பதில் குடுமிப்பிடிச் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.. அதனால், பெல்காம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எந்தக் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தாலும், அவருக்கு மந்திரிப் பதவி உறுதி.

கர்நாடகா - மஹாராஷ்ட்ரா எல்லையில் நந்தி சிலைகளும், வீரசிவாஜி உருவம் பொறித்த கொடிகளும் பதற்றத்தின் சின்னங்கள். பிரச்னையான சமயங்களில் சிக்கிக்கொள்ளும் லாரி டிரைவர்களின் பாடுதான் பரிதாபம். ‘‘பாதுகாப்பான இடத்தில் இருந்தால், தப்பித்தோம். இல்லாவிட்டால், கண்ணாடிகளை உடைப்பதும், டயர்களை எரிப்பதுமாக, நரகாசுரனை வென்ற கிருஷ்ணனைப் போல உக்கிர தீபாவளியாக அது இருக்கும்” என்கிறார் சேதுராமன்.

(நெடுஞ்சாலை நீளும்)