மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 8

எண்ணம் வண்ணம்:சந்தோஷ் நாராயணன்

டவுளுக்கு அந்த ஃபேஸ்புக் பசங்களைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. இவர்களின் மூளை சாதாரண மூளை அல்ல, எதை யார் எங்கு இருந்து காப்பி அடித்தாலும் கச்சிதமாகக் கண்டுபிடித்துவிடுகிறார்களே! 

'இந்த இசையா..? இது பீட்டில்ஸ் 60-களில் போட்ட 'ப்ளீஸ்... ப்ளீஸ்... மீ’-ல் இருந்து சுட்டுருக்காங்க!’, 'அந்த சினிமாவா... சீன் பை சீன் அந்த ஹாலிவுட் படத்தில் இருந்து அடிச்சிருக்காங்க’, 'போஸ்டர்களைக்கூட போட்டோகாப்பி எடுத்துருக்காங்க’ என ஒரிஜினலைத் தேடி மீமி உருவாக்கி, ஃபேஸ்புக்கில் புட்டுப்புட்டு வைக்கிறார்களே!

''ஃபென்டாஸ்ட்டிக்'' எனக் கத்தியபடி அண்டம் குலுங்க எல்லை இல்லா பேரானந்தத்தில் திளைத்தார். இப்படிப்பட்ட மூளைக்காரர்களைப் படைத்ததற்காக தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார் கடவுள்.

கலைடாஸ்கோப் - 8

அவர்கள் முன்பாகத் தோன்றி அவர்களை அசந்துபோக வைக்கவேண்டும், அவர்களுக்கு வேண்டிய வரத்தை, அது என்னவாக‌ இருந்தாலும் கொடுக்கவேண்டும் என நினைத்தார். சட்டென அவர்கள் முன்பு தோன்றினார்.

''தம்பிகளே... உங்கள் அறிவு கண்டு மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள். நான்தான் கடவுள்!'' என்றார்.

''போங்க சார்... 'புரூஸ் அல்மைட்டி’யில வந்த‌ 'மார்கன் ஃப்ரீமேன்’தானே நீங்க?'' என்று கேட்டுவிட்டு சாவகாசமாக மொபைலில் ஆழ்ந்தார்கள் அவர்கள்! 

சுவாரஸ்யமான அனிமேஷன் குறும்படம். கதையைவிட முக்கியமானது தொழில்நுட்ப நேர்த்தி தரும் அனுபவம். 'ஐந்து நிமிடப் படத்துக்கே இவ்வளவு உழைப்பா?’ எனக் கேட்கவைக்கிறது.

கலைடாஸ்கோப் - 8

இதன் இயக்குநர் கார்லோஸ் ஸ்டீவன்ஸ் நிறைய ஷார்ட் அனிமேஷன் படங்கள் எடுத்து, கேன்ஸ் போன்ற விழாக்களில் பரிசுகள் கொய்திருக்கிறார். மாணவர்க ளுக்கான ஆஸ்கர் விருதுக்குக்கூட நாமினேட் ஆகித் தோற்றாலும், 'விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி’ என ஓடிக்கொண்டிருக்கிறார்.

படச் சுட்டி:  www.youtube.com/watch?v=LgdrQh0pg7w

எனக்குப் பிடித்தமான கலை மேஜிக்; பிடித்த மேஜிக் கலைஞர்களில் ஒருவர் டேவிட் காப்பர்ஃபீல்டு. பிரமாண்ட மேஜிக்குகள் அவர் அடையாளம். அமெரிக்க சுதந்திரதேவிச் சிலையை, பல நூறு பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காற்றில் கரைந்துபோகச் செய்தார். சீனப் பெருஞ்சுவரின் ஒரு பக்கத்துக்குள் புகுந்து, இன்னொரு பக்கம் வெளிப்பட்டார். இன்று வரை உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

கலைடாஸ்கோப் - 8

அபாயகரமான பல மேஜிக்குகள் செய்து 'செத்துச் செத்து விளையாடுவது’ அன்னாரின் பொழுதுபோக்குகளில் ஒன்று. இவை ஒருபுறம் இருக்க, அவர் செய்துகொண்டிருக்கும் இன்னொரு காரியம் பலரை தன்னம்பிக்கையுடன் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. விபத்துகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தவும், தங்களின் வேதனையை மறக்கவும் அவர்களுக்கு மேஜிக் செய்துகாட்ட ஆரம்பித்தார் காப்பர்ஃபீல்டு. தன் வழக்கமான பரபர பணிகளுக்கு இடையிலும் இந்த வேலைகளை அவர் தவறவிடுவது இல்லை. இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களே அவர்களின் உடல் திறனுக்கு ஏற்றவாறு மேஜிக்குகளைச் செய்யக் கற்றும் கொடுக்கிறார். 'அது அவர்களை உற்சாகப்படுத்தவும், தங்கள் உடல் பற்றிய தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவுகிறது’ என்கிறார் காப்பர். 'புராஜெக்ட் மேஜிக்’ என்பது திட்டத்தின் பெயர். நோயாளிகளுக்கான ஒரு வகை சிகிச்சை போல் ஆகிவிட்டது இது.

நம் ஊரிலும் சிலர் நோயாளிகளிடம் மேஜிக் செய்கிறார்கள். 10 நிமிடங்களில் ’பாக்கெட் அபேஸ்’ ஆகிறது அல்லவா!

கலைடாஸ்கோப் - 8

மரப்பாச்சி

ரப்பாச்சி பொம்மைகள் இன்று மியூசியம் வஸ்துபோல ஆகிவிட்டன. ஆன் பண்ணினால், ஆல் இன் ஆல் வேலைகள் காட்டும் சீனப் பொம்மைகளின் எலெக்ட்ரானிக் யுகத்தில் மரப்பாச்சி எல்லாம் மறந்தாச்சு!

அதைச் சீராட்டி, தாலாட்டி, பொட்டு வைத்து விளையாடும் அக்கா சிறுமிகள் எனக்கு முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள். பார்பி பொம்மைகளின் இந்த கான்செப்ட் நம்மவர்களிடம் இருந்து காப்பி செய்யப்பட்டதோ என்றே தோன்றுகிறது.

கலைடாஸ்கோப் - 8

ஆனால், மரப்பாச்சிகள் வெறும் வேடிக்கை  விளையாட்டுப் பொருட்கள் மட்டும் அல்ல; மருத்துவக் குணம் உள்ள ஈட்டி மரத்தில் இருந்து செதுக்கப்படுவதால், அதன் மகத்துவம் பெரிது என விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். அதைக் கடிப்பதும் (குழந்தைகள் மட்டும்) விளையாடுவதும் அதன் வாசனையை நுகர்வதும் குழந்தைகளின் கை மேல் நலன்.

குழந்தைகள் வளர்ந்துவிட்ட வீடுகளில் அந்தக் காலத்தில் மரப்பாச்சி பொம்மைகள் பரண்களிலாவது கிடந்தன. இன்று பரண்களைப் பற்றியே ஒரு நாஸ்டால்ஜியா நோட் எழுதவேண்டும்போல!

அன்பிற்கும் உண்டோ...

இனம், தேசம், எல்லை என உலகின் ஒரு பக்கம் வெறுப்பினால் வேட்டையாடப்படும்போது, அதற்கு எதிரான குரல் வழக்கம்போல கலைஞர்களிடம் இருந்து வருவது வரலாறு. அலெக்ஸாண்டர் மிலோ, உக்ரேனியன் நாட்டுச் சிற்பி. வருடம்தோறும் அமெரிக்காவில் நடக்கும் 'Burning man’ என்னும் மிகப் பெரிய கலைக் கண்காட்சியில் இவரின் 'அன்பு’ (Love) என்னும் சிற்பம் இடம்பெற்றது. கடந்த 30 வருடங்களில் உக்ரேனியன் நாட்டுக் கலைஞன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை.

கலைடாஸ்கோப் - 8

சிற்பத்தைப் பாருங்கள்... புறம் திரும்பி இருக்கும் இரண்டு ஆண் பெண் உருவங்கள், அதற்குள்ளே இருக்கும் குழந்தைகள் அந்தக் கம்பிகளைத் தாண்டி கைகளைக் கோத்துக்கொள்கிறார்கள். வெறுப்பைத் தாண்டி நீளும் அன்பின் கரங்கள். நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் குழந்தைகளைத்தானே இந்தச் சிற்பம் காட்சிப்படுத்துகிறது!

வெளிப்பகுதியான ஆண்-பெண் உருவங்கள் இரும்பினால் செய்யப்பட்டவை. உள்ளே இருக்கும் குழந்தைகளின் சிற்பங்களில் ஃபைபருக்குள் ஒளிரும்படி உள்ளே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கலைஞன் சொல்ல விரும்பும் செய்திக்கு ஏற்றவாறு, கலைக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதுகூட ஒரு நுட்பம்தான்.

'இது முழுக்க முழுக்க உங்கள் ஐடியாவா?’ எனச் செய்தியாளர் கேட்டபோது, 'என் ஐடியாதான். ஆனால், கடவுளுக்கும் பாதிப் பங்கு உண்டு’ என்றார் அலெக்ஸாண்டர். 'ஆண்டவன் சொல்றார்... அலெக்ஸாண்டர் செய்கிறார்!’

சீப்பு, சோப்பு, கண்ணாடி... என்பவை நம் பண்பாட்டில் ஒரு சொற்றொடராகத் தங்கிவிட்ட அளவுக்கு சீப்புக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மொபைல் வருவதற்கு முந்தைய(?) காலத்தில் பேன்ட் பாக்கெட்டில் கர்ச்சீஃப், குட்டியாக போன்/அட்ரஸ் புக் மற்றும் ஒரு சீப்பு கட்டாயம். இன்று தலையைக் கலைத்துவிடுவதே ஸ்டைல் என்றான பிறகு, சீப்பை பாக்கெட்டில் வைத்திருப்பவர்களை 'அங்கிள்’ என்கிறது சமூகம்.

சீப்பின் வரலாறு, ஸ்வீடனில் கிடைத்த கி.மு 2500 வருடங்களுக்கு முந்தைய தடயங்களில் இருந்து தொடங்குகிறது. அதுவரை பரட்டையாக, 'இது எப்டி இருக்கு?’ என்றே அலைந்திருக்கிறது மானுடச் சமூகம். சீப்பு வெறுமனே தலைவார மட்டுமே பயன்படுத்தப்படவில்லையாம். வாரிவிட்டு அப்படியே கூந்தலில் எங்காவது மாட்டி வைத்துக்கொள்ளும் டெக்கரேட்டிவ் சாதனமாகத்தான் (சி)கையாண்டிருக்கிறார்கள்.

கலைடாஸ்கோப் - 8

வழக்கம்போல ஆதியில் விலங்குகளின் எலும்புகள், யானைத் தந்தம், ஆமை போன்றவற்றின் ஓடுகளைத்தான் (இந்த ஆமை ஓடு சீப்புகள் 19-ம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்திருக்கின்றன) சீப்பு செய்ய பயன்படுத்தி இருக்கிறார்கள். பிற்காலத்தில் உலோகங்கள்.

19-ம் நூற்றாண்டில் இசையாஹ் மற்றும் ஜானி ஹயாத் என்கிற சகோதரர்களின் ஒரு கண்டுபிடிப்புதான் மகத்தான இரண்டு விஷயங்களை மாற்றி இருக்கிறது. ஒன்று சீப்பு... இன்னொன்று சினிமா. ஆம், அவர்கள் கண்டுபிடித்த பொருளின் பெயர் 'செல்லுலாய்டு’. ஒரு வகையான பிளாஸ்டிக். தந்தம், ஆமை ஓடு போன்றவை விலையேறிப்போன காரணத்தால், அதற்கு மாற்றாக ஒன்றைக் கண்டறியும் ஆர்வமே செல்லுலாய்டு உருவாகக் காரணம். செல்லுலாய்டுதான் சீப்பின் தயாரிப்பைப் பரவலாக்கியிருக்கிறது. இன்று பெரும்பாலும் சுத்த பிளாஸ்டிக்!