மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 24 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

கேபினெட் கேமிராவிகடன் டீம், படம்: ச.வெங்கடேசன், ஓவியம்: ஹாசிப்கான்

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயம். அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏ ஸீட் வாங்கிவிட கரைவேட்டிகள் போயஸ் கார்டனையும் அதிகார மையங்களையும் முட்டிமோதிக்கொண்டிருந்தனர். 10-ம் வகுப்பு மட்டுமே படித்த அந்த வேலூர்க்காரரும் தேர்தல் ஸீட் கேட்டு விருப்ப மனு போட்டிருந்தார். ஆனால், அதில் தன் கல்வித் தகுதியாக 'பி.ஏ’ எனக் குறிப்பிட்டிருந்தார். 'படித்தவர்களுக்கும் பட்டம் வாங்கியவர்களுக்கும் மட்டுமே அம்மா ஸீட் தருவார்’ எனக் கணக்குபோட்டு விருப்ப மனுவில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதை நம்பி ஜெயலலிதாவும் அவருக்கு ஸீட் கொடுத்தார். தேர்தலில் வென்று 'மக்கள் பிரதிநிதி’யும் ஆனார். இவை எல்லாம் விஷயமே அல்ல; படிக்காத படிப்பைப் படித்ததாகக் குறிப்பிட்டு ஸீட் வாங்கிய அவர்தான், இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி! 

'படிக்காத மேதை’கள் ஆண்ட தேசம்தான் இது. ஆனால், 'படிக்காத படிப்பைப் படித்ததாகக் குறிப்பிட்டு, பதவியைப் பிடிக்கலாமா?’ என்பதே வீரமணியிடம் நாம் வைக்கும் கேள்வி! அமைச்சர் பதில் அளிக்காமல் இருக்கும் எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்றாக மாறும். நாம் விஷயத்துக்கு வருவோம்!  

தி.கவில் இருந்து ஒரு தாவல்!

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைதான் வீரமணிக்கு சொந்த ஊர். தந்தை சின்னராஜி, பீடித் தொழில் நடத்தி வந்தார்; சுயமரியாதைக்காரர். திராவிடர் கழகமும் பெரியாரும்தான் அவரின் மூச்சு, பேச்சு எல்லாம். அதனாலேயே தன் மகன்களுக்கு அழகிரி, காமராஜ், வீரமணி எனப் பெயர் சூட்டினார். ஜோலார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்போடு படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு தந்தைக்கு உதவியாகச் செயல்படத் தொடங்கினார் வீரமணி. திராவிடர் கழகத்திலும் இணைந்தார். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஆகும் அளவுக்குத் தீவிரமாகக் களப்பணி ஆற்றினார். ஆனால், ஒருகட்டத்தில் அரசியல் அந்தஸ்து மற்றும் பதவிதான் தன் இலக்கு எனத் தீர்மானித்தார். அதன் பின் திராவிடர் கழகத்தில் இருந்தால், அதிகாரத்தை எப்படிச் சுவைக்க முடியும்?

மந்திரி தந்திரி - 24 !

அ.தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தார். ஆரம்பத்தில் இந்திரகுமாரி மூலமும் பின்னர் 'மீசை’ பாண்டுரங்கன் மூலமும் 'லிஃப்ட்’ பெற்றார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடந்த அதிரடி மாற்றங்களில், இவரை வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆக்கினார்கள். காரணம், அங்கு வலுவாக இருந்த வன்னியர்கள் வாக்கு வங்கி. முன்னாள் அமைச்சர் தம்பிதுரை, வீரமணியின் குடும்ப நண்பர். அவருடைய சிபாரிசும் வீரமணிக்குக் கைகொடுத்தது. அன்று தொடங்கி இன்று வரை, சுமார் ஒன்பது ஆண்டுகளாக வேலூர் மேற்கு 'மா.செ’ பதவியில் அசைக்க முடியாதவராக வலம் வருகிறார் வீரமணி. தொகுதிச் சீரமைப்பில், ஜோலார்பேட்டை புதிய தொகுதியாக உருவானது. அன்றைய தேதியில் அந்தப் பகுதியில், வீரமணிக்கு நிகரான செல்வாக்கு யாருக்கும் இல்லை. இதனால், 2011-ம்  ஆண்டு தேர்தலில் எளிதாக எம்.எல்.ஏ ஸீட் கிடைக்க, வெற்றியும் பெற்றார். தான் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், தேர்தலில் வெற்றி பெற்றால், நேரடியாக அமைச்சர்தான் என்ற கனவில் மிதந்தவருக்கு அதிர்ச்சி. அதே மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் விஜய், சுகாதாரத் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால், தமிழ்நாட்டில் மின்சாரமும் அ.தி.மு.க-வில் அமைச்சர் பதவியும் எப்போது வரும், எப்போது போகும் எனத் தெரியாதே..! டாக்டர் விஜய் மீது புதுப்புது புகார்கள் கிளம்ப, ஒன்றறை வருடத்தில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட, வேலூர் மாவட்டப் பிரதிநிதித்துவத்துக்காக விஜய் வகித்த சுகாதாரத் துறை வீரமணிக்கு வழங்கப்பட்டது. காத்திருந்து காத்திருந்து கிடைத்த பதவி என்பதால், சைரன் காரில் பவ்யமாக வலம்வரத் தொடங்கினார் வீரமணி. பின்னாளில் வீரமணியிடம் இருந்து சுகாதாரத் துறை கை மாறினாலும், பள்ளிக் கல்வித் துறை, விளையாட்டு, இளைஞர் நலன், தமிழ்ப் பண்பாட்டுத் துறை எனப் பொறுப்புகள் தேடிவந்தன!  

துறையில் சாதித்தது என்ன?

பள்ளிக் கல்வியோடு தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு ஆகிய துறைகளையும் கவனிக்கிறார் வீரமணி. அதீதக் கவனம் மற்றும் அக்கறையுடன் கையாளவேண்டிய பள்ளிக் கல்வித் துறை, இன்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதை சுளீர் எனச் சுட்டிக்காட்டும் இரண்டு உதாரணங்கள் இவை.

மந்திரி தந்திரி - 24 !

1) பிற மாநிலம்/தேசம் ஆகியவை பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கிக்கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசு மட்டும் அதற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துக்கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு 62,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 20,936 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2) மாநில அரசு நிதி ஒதுக்காதது போக, மத்திய அரசு ஒதுக்கிய நிதியையும் அந்தத் துறை செலவழிக்கவில்லை. தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளைக் கட்டவும், இருக்கும் பள்ளிகளைச் சீரமைக்கவும் வழங்கப்பட்ட 4,400 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு பயன்படுத்தவில்லை. ஒருங்கிணைந்த தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் தமிழ்நாட்டுக்கான ஆண்டு பணித் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை இறுதிசெய்ய டெல்லியில் நடத்திய கூட்டத்தில் வெளியான தகவல் இது. மற்ற மாநிலங்கள் ஏதோ ஒரு வழியில் நிதி கேட்டு மத்திய அரசை நெருக்கிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட தமிழ்நாடு அரசு செலவழிக்கவில்லை (நிதி செலவின விவரம் வரைபடத்தில்). இதனால் 2012-13 ஆண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளைக் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.  

4,400 கோடி ரூபாய் கையில் கிடைத்தும் அதைக் கண்டுகொள்ளாத ஒரு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரைப் பெற தமிழ்நாடு என்ன பேறு செய்திருக்க வேண்டும்! 'மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசு மிகவும் அலட்சியமாகச் செயல்படுகிறது’ என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 'பாராட்டுப் பத்திரத்தை’ப் பெற அல்லும் பகலும் செயல்படாமல் இருக்கிறார் நம் அமைச்சர்!

உதாசீனப்படுத்தப்படும் கிராமப் பள்ளிகள்!

'தமிழ்நாட்டுக் கிராமங்களில் உள்ள 47.18 சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இரண்டு வகுப்பு அறைகள் மட்டுமே உள்ளன’ என்கிறது கல்விக்கான மாவட்டத் தகவல் அமைப்பு. 'நகர்ப்புறங்களில் உள்ள 18 சதவிகிதப் பள்ளிகளில் இரண்டு வகுப்பு அறைகள் மட்டுமே இருக்கின்றன. இரண்டு வகுப்பு அறைகள் உள்ள பள்ளிகள் உள்பட பெரும்பாலான பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த இரு ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்’... என்றெல்லாம் தகவல்கள் கொட்டுகின்றன. கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் 43.8 சதவிகிதத்தினருக்கு ஆங்கில எழுத்துக்களை அடையாளம் காணத் தெரியவில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 33.1 சதவிகிதத்தினருக்கு ஆங்கில வாக்கியங்களைப் படிக்க முடியவில்லை என அதிர்ச்சி அளித்தன முடிவுகள். இதற்கு எல்லாம் காரணம், கிராமப்புறப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களும் வகுப்பறைகளும் இல்லாததுதான்.

கல்வி உரிமைச் சட்டக் குளறுபடி!

மந்திரி தந்திரி - 24 !

நலிவடைந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிக்க உருவாக்கப்பட்டதுதான் கல்வி பெறும் உரிமைச் சட்டம். ஆனால், அந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசிடம் அத்தனை மெத்தனம். அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனமும் சென்ட்ரல் ஸ்கொயர் அறக்கட்டளையும் இணைந்து, அந்தச் சட்டம் எப்படிச் செயல்படுகிறது என இந்தியா முழுக்க ஆய்வுகள் நடத்தின. ஆய்வு முடிவுகள் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கின. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் 25 சதவிகித மாணவர் சேர்க்கை, நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி 2013-14ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1.43 லட்சம் இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 11 சதவிகிதம் மட்டுமே நிரப்பப்பட்டன என்றது ஆய்வு முடிவு. சட்டம் அமலுக்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலை நிலவுகிறது.

'2014-15ம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் 89,941 இடங்கள் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, அதற்கான கல்விக் கட்டணமாக 26.13 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது’ என அமைச்சர் வீரமணி சொல்கிறார். ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களில் மொத்தம் 2,959 மாணவர்கள் மட்டும்தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 'கல்வி உரிமைச் சட்ட வரையறைபடி நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய இடங்களை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கிவிடுகின்றன பல தனியார் பள்ளிகள். அவர்களை நலிவடைந்த மாணவர்களாகக் குறிப்பிட்டு அரசுக்குக் கணக்கு காட்டிவிடுகிறார்கள். அதற்காக பெற்றோர்களிடம் வசூல் வேட்டையும் நடக்கிறது’ என, கல்வி

உரிமைச் சட்டக் குளறுபடிகள் குறித்து ஏக குமுறல்கள். ஆனால், இதற்கு எல்லாம் நம் அமைச்சர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவே இல்லை!

மந்திரி தந்திரி - 24 !

'கலைமாமணி’... காணவில்லை!

கலையும் பண்பாடும், ஓர் இனத்தின் வாழ்வோடும் கலாசாரத்தோடும் வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டவை. ஆனால், அந்தக் கலைகளை வளர்த்தெடுக்க எந்தப் புதிய முயற்சிகளையும் தமிழ்க் கலாசாரத் துறைக்கும் அமைச்சரான வீரமணி ஊக்குவிக்கவில்லை. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் 'கலைமாமணி’ விருதும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து வழங்கப்படவில்லை.

சொந்தத் தொகுதியிலும் சுணக்கம்!

'அம்மா ஆட்சியில் அரசுப் பள்ளிகள் ஒன்றுகூட மூடப்படவில்லை’ என, சட்டமன்றத்தில் வீரமணி தம்பட்டம் அடித்தார். 'அமைச்சர் சொன்னது உண்மையா?’ என எங்கும் போய் ஆதாரம் தேடத் தேவை இல்லை. அவர் வீட்டுக்கு அருகில் உள்ள ஜோலார்பேட்டை வடக்கு ஆரம்பப் பள்ளியே மிகச் சிறந்த உதாரணம். போதிய மாணவர்கள் இல்லை எனக் காரணம் சொல்லி, அந்தப் பள்ளியை மூடிவிட்டனர். தமிழ்நாட்டுக்கே அமைச்சர் என்பதை கே.சி.வீரமணி சுத்தமாக மறந்துவிட்டு, வேலூரில் மேற்கு மாவட்டத்துக்கு மட்டுமே தான் அமைச்சர் என்ற நினைப்பில் இருக்கிறார். சென்னையில் வாசம். சென்னையைவிட்டால் ஜோலார்பேட்டை மட்டும்தான் அவரது ஏரியா. அதுவும் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு பறந்துவிடுவார். தொகுதி மக்களைச் சந்திப்பது, குறைகளைக் கேட்பது, கோரிக்கை மனுக்களைப் பெறுவது, பள்ளிகளில் ஆய்வு நடத்துவது... என்பது எல்லாம் இதுவரை நடந்ததே இல்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமே, 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. ஜோலார்பேட்டையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால், அதற்காக ஒரு செங்கல்லைக்கூட அமைச்சர் இதுவரை புரட்டவில்லை. வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிகம். ஆனால், அவற்றைத் தவிர, வேறு தொழிற்சாலைகளும் தொழில் முதலீடுகளும் அந்தப் பகுதிக்குக் கொண்டுவரப்படவில்லை. அதனால், அங்கு இருந்து நிறைய இளைஞர்கள் வேலை தேடி பெங்களூருக்குச் செல்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் முக்கியச் சுற்றுலா வாசஸ்தலமான ஏலகிரி மலைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க எந்தப் பணிகளும் திட்டமிடப்படவில்லை. படகு குழாம் ஏலம்விடப்பட்டது. ஆனால், அதில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் தனிக்கதை என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

ஆக, அமைச்சர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? 'சும்மா இருத்தலே சுகம்’ என இருக்கிறாரோ என்னவோ!

'பி.ஏ’ படித்தாரா?

ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நேரத்தில் வீரமணி பெயருக்குப் பின்னால் 'பி.ஏ’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், வீரமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது 'பி.ஏ’ இல்லை. ஜோலார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1980-81ம் ஆண்டில் 10-ம் வகுப்பு முடித்தாகச் சொல்லியிருந்தார். ஆனால், சட்டமன்றத்திலோ 'பி.ஏ’ எனச் சொல்லியிருக்கிறார். ஆக, அமைச்சர் என்னதான் படித்திருக்கிறார்?!

ஐவர் அணி ஆசீர்வாதம்!

அமைச்சரைப் பற்றி எந்தப் புகாரும் மேலிடத்தை எட்டாமல் பார்த்துக்கொள்வதில், கட்சியின் ஐவர் அணிக்குப் பெரும்பங்கு உண்டாம்!

வீரமணியின் பள்ளித் தோழர் சீனுவாசன். அவர்தான் தற்போது அமைச்சருக்கு 'ஆல் இன் ஆல்’.

அமைச்சருக்கு சாதி சனம் மீது பாசம் அதிகம். அதனால், எதிர்க்கட்சிகளை வசை பாடுவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவாராம். சமீபத்தில் வேலூரில் நடந்த நான்கு ஆண்டு சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் பழனியப்பன், நத்தம் விசுவநாதன் போன்றோர், வேலூரில் நடந்த பா.ம.க வடக்கு மண்டல மாநாட்டைக் கடுமையாக விமர்சித்துப் பேசினர். ஆனால், அமைச்சர் வீரமணி வாயே திறக்கவில்லை!

அண்ணன் என்னடா... தம்பி என்னடா..!

மந்திரி தந்திரி - 24 !

அமைச்சரின் அண்ணன் அழகிரி, தற்போது ஜோலார்பேட்டை அ.தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர். அதனால், அண்ணனுக்கு எதிராகவே அரசியல் செய்துகொண்டிருக்கிறார் வீரமணி. இன்னோர் அண்ணன் காமராஜ், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர். அவர் அடிக்கடி கட்சி மாறியது, சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிட்டது போன்ற காரணங்களால், அவருக்கு வீரமணியால் கட்சிக்குள் பெரிய பதவி எதையும் வாங்கிக்கொடுக்க முடியவில்லை!

'அம்மா’ பக்தி மட்டும் உண்டு!

திராவிடர் கழகம் பின்னணியில் இருந்ததால் அதன் தாக்கம் இப்போதும் அமைச்சரிடம் உண்டு. பெரியார் கொள்கைகளில் ஒன்றான கடவுள் மறுப்பை அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு இப்போதும் கடைப்பிடிக்கிறார். அது மற்ற அமைச்சர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் ஆச்சர்யம். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டதும், தமிழ்நாடு முழுவதும் கரகம் எடுப்பது, காவடி எடுப்பது, அக்னிச் சட்டி சுமப்பது என எல்லா அமைச்சர்களும் அதகளம் செய்தனர். ஆனால், அப்போதும் வீரமணி 'அமைதி’ காட்டினார். கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அழைத்தபோது, 'அட்டெண்டன்ஸ்’ மட்டும் போட்டுச் சென்றார்!

சொந்தக் காசில் சூனியம்!

கட்சிக்காரர்களை அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தியபோது நடந்த சம்பவம் இது. சென்னை          வானகரத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துப்போனார் வீரமணி. கூட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக எழுந்து பேசினார்கள். வீரமணியின் முறை வந்தது. எழுந்து நின்றார். உடனே நிகழ்ச்சிக்கு கே.சி.வீரமணியால் அழைத்துவரப்பட்டவர்கள் கைதட்டல், விசில் சத்தம் எனத் தூள் பறத்தினார்கள். அதைக் கவனித்த ஜெயலலிதாவின் கண்கள் கோபத்தால் சிவந்தன. அதற்குமேல் வீரமணியை ஒரு வார்த்தைகூடப் பேசவிடாமல் உட்காரவைத்துவிட்டனர். அவரும் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறினார். அதன் பிறகு, தனியாக அழைத்து ஜெயலலிதாவிட்ட டோஸில் ஆடிப்போய்விட்டார் வீரமணி!