Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 11

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

சு.வெங்கடேசன், ஓவியம்: ஸ்யாம்

ரலாறு எனும் விசித்திரத்தை, அது விட்டுச்சென்ற காலடித் தடத்தில் இருந்து மட்டுமே நாம் அனுமானிக்க முடியும். அது, நிலத்தில் பதிந்துள்ள காலடித்தடம்கூட அல்ல; காலத்தில் பதிந்துள்ள காலடித் தடம். அதில் உள்ள கூடுதல் சிரமமே அந்தத் தடம் காலடிகளால் ஏற்பட்டது என்பதே ஓர் அனுமானம்தான். அடுத்தவன் ஆய்வுசெய்து மறுக்கும் வரை இந்த அனுமானத்தை உண்மை என வாதிட்டுக்கொண்டு இருக்கலாம். வரலாறும் உண்மையைப்போலவே நிரந்தரமானது அல்ல. 

சங்க இலக்கியக் கவிதைகளையும், வைகைக் கரையின் மீது எழுந்த ஒரு நாகரிகத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், கிரேக்கத்தின் அரசியல் வரலாறு நமக்கு அவசியம் ஆகிறது.

'சுமார் 35 ஆண்டு காலம் (கி.மு 55 முதல் கி.மு 20 வரை) பார்த்தியப் பேரரசோடு ரோமாபுரி நடத்திய யுத்தம், வெற்றி - தோல்வி இல்லாமல் சில சமரசங்களோடு முடிந்ததற்கும் நமக்கும் என்ன தொடர்பு?’ எனக் கேள்வி எழுப்ப முடியாது. பெரும் சங்கிலித் தொடர்போலத்தான் வரலாற்றின் கண்ணிகள் பின்னிக்கிடக்கின்றன.

யுத்தத்தின் முடிவில் யூப்ரட்டீஸ் நதியின் மேற்குக் கரைதான் ரோமானியப் பேரரசின் எல்லை என்பதை அகஸ்டஸ் மன்னன் ஏற்றுக் கொண்டான். நீண்ட காலம் போரிட்ட பகைநாடான பார்த்தியாவின் தரைவழிப் பாதைகள் எதையும் பயன்படுத்தாமல், தனது வணிகத்தையும் தேவைகளையும் சமாளிக்க வேறு பாதையை யோசித்த ரோமானியர்களுக்கு, இந்தியாவுடனான கடல்வழிப் பாதையே பெரும் மார்க்கமாக இருந்தது. எனவே, இந்தக் கடல்வழி வணிகம் மிகவும் போற்றி வளர்க்கப் பட்டது. இந்தக் கடல் வழிப் பாதையைப் பற்றி பல நூல்கள் எழுதப்பட்டன. கரையோரப் பயணம் முடிவுக்கு வந்து, பருவக்காற்றைப் பயன்படுத்தி நடக்கும் பயணம் தொடங்கியது. அது கடல் வணிகத்தில் பாய்ச்சல் வேக முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது. சூறைக்காற்றில் சிக்கியவர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்ததா... ஹிப்பாலஸ் தனது அனுபவ அறிவால் கண்டுபிடித்ததா என்பது விவாதத்துக்கு உரிய ஒன்றுதான். எப்படியோ 40 நாட்களில் கிரேக்கத்தில் இருந்து தமிழகத்தின் கரைக்கு, பருவக்காற்றைப் பயன்படுத்தி கப்பல்கள் வந்து சேர்ந்தன. அதற்கு முன்பு வரை வருடத்துக்கு 20 கப்பல்களே வந்துகொண்டிருந்தன. ஆனால், பருவக்காற்று வழிப் பயணம் தொடங்கிய பிறகு, தினசரி ஒரு கப்பல் கிளம்பிப் போனது.

வைகை நதி நாகரிகம் ! - 11

அலையலையாக கப்பல்கள் கரைக்கு வந்தது போலவே, இலக்கியத்திலும் அவை வந்து சேர்ந்தன. பொதுவாக ஆரம்பகால இந்திய இலக்கியங்களில் கப்பல் பற்றிய பதிவுகள் மிகக் குறைவே. அதற்குக் காரணம், வட இந்தியாவில் உருவான பெரும் அரசுகளின் தலைமை இடங்கள் எல்லாம், கடலைவிட்டு நெடுந் தொலைவு தள்ளி உள்நிலப்பரப்பில் அமைந்திருந்ததுதான். அதனால், கப்பல் பற்றி ஓர் அளவுக்கே தெரிந்துவைத்திருந்தனர். 'உலகின் முதல் பொருளாதார நூல்’ என வர்ணிக்கப்படும் 'அர்த்தசாஸ்திரம்’கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்திய இலக்கியங்களில் கப்பல்கள் பற்றியும் துறைமுகங்கள் பற்றியும் துறைமுக நகரங்கள் பற்றியும் கடல்கடந்த வணிகம் பற்றியும் மிக விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள இலக்கியம் என்றால், அது தமிழர்களின் சங்க இலக்கியம் மட்டுமே!

பௌத்த, சமண இலக்கிய ஆய்வுகளில் தன்னிகரற்றவர் எனப் போற்றப்படும் மோதி சந்திரர் பின்வருமாறு கூறுகிறார்...

'தமிழ் இலக்கியத்தில் கடல் வணிகத்தைப் பற்றி பல விவரங்கள் கிடைக்கின்றன. உண்மையில், 'சிலப்பதிகாரம்’ என்ற மாபெரும் காப்பியத்தில் காவிரிப்பூம்பட்டினம் என்ற துறைமுகம், அதன் கடற்கரையில் இருந்த கிடங்குகள், வெளிநாட்டு வணிகர்கள், கடைத்தெருக்கள் ஆகியவை பற்றி வர்ணிக்கப்பட்டிருப்பதுபோல... இந்திய மொழியில் எந்த இலக்கியத்திலும் வர்ணிக்கப்படவில்லை’ எனச் சொல்லிவிட்டு, தமிழகத்தின் பழைமையான கடற்கரை நகரங்களை, துறைமுகங்களை, அங்கு நடைபெற்ற வணிகச் சிறப்புகளைப் பட்டியல் போடுகிறார். தமிழ் இலக்கியங்கள் இந்த வணிகத்தைப் பற்றி வர்ணித்தவை எல்லாம் மிகைக் கற்பனை என ஒருகாலத்தில் சொல்லிக்கொண்டிருந்தவர்களின் கூற்றைத் தகர்த்தது, தமிழ் வணிகனுக்கும் கிரேக்க வணிகனுக்கும் இடையில் நடைபெற்ற வணிக ஒப்பந்தம் சொல்லும் செய்தி.

இந்த ஒப்பந்தத்தை ஆய்வுசெய்த வரலாற்றாளர் தூர், பல்வேறு விவரங்களைக் கொடுக்கிறார். அந்த ஒப்பந்தத்தின் அளவைப் பற்றி தொல்லியலாளர் கா.ராஜன், 'ஏற்றுமதி செய்யப்பட்ட ஆறு பொதிகளைப் பற்றி குறிப்பு இருந்தாலும் மூன்று பொதிகளில் காணப்படும் பொருட்களின் தன்மை குறித்தே செய்திகள் கிடைக்கின்றன. இந்தப் பொருட்கள் 'ஹெர்மபோலன்’ எனப் பெயரிடப்பட்ட கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களின் மதிப்பு அலெக்ஸாண்டிரியாவில்

ஒரு நீர்வழிச் சாலையை அமைப்பதற்கு ஈடானது என்ற குறிப்பு வருவதால், இதன் மதிப்பு ஏழு மில்லியன் திரமம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. காரணம், இத்தகைய ஒரு நீர்வழிச் சாலையை அமைக்க ஹைரோடஸ் அதிகஸ் 4 மில்லியன் திரமங்களும், ஹட்ரியன் 3 மில்லியன் திரமங்களும் அளித்துள்ளது மூலம் புலன் ஆகிறது. ஒரு திரமம் என்பது 65 குன்றிமணிகளுக்கு ஈடானது. ஒரு குன்றிமணி என்பது 0.0648 கிராம் வெள்ளிக்கு ஈடானது. எனவே 7 மில்லியன் திரமம் என்றால் 2,94,84,000 கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது (70,00,000 ஜ் 4.212 = 2,94,84,000). ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 ரூபாய் எனக் கணக்கிட்டால், தற்போதைய நிலவரப்படி சுமார் 30 கோடி ரூபாய்க்கு ஈடானது ஹெர்மபோலன் என்ற சாதாரணக் கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு. இதைவிட பெரிய ரோமானியக் கப்பல்கள் வந்துபோயுள்ளன. தவிரவும் மேற்கூறிய தொகை, ஒரு கப்பலில் ஒரு வணிகனுக்குச் சொந்தமான பொருட்களுக்கு உரியது. இதுபோல் பல வணிகர்களுக்கு உரிய பொருட்கள் ஒரு கப்பலில் ஏற்றப்படும். ஒரு கப்பலில் ஏற்றப்படும் அனைத்து வணிகர்களின் ஒட்டுமொத்தப் பொருட்களின் மதிப்பைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது மலைப்பாக உள்ளது’ என்கிறார்.

இவை யாவும் கற்பனை விவரங்கள் அல்ல; இலக்கிய வர்ணனைகள் அல்ல; மாறாக இலக்கியங்களில் எழுதப்பட்ட கற்பனைகளைவிட வலிமையானது உண்மை என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய வணிக ஒப்பந்தங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதுவரை வணிகர்களும் வணிகப் பொருட்களும் போய் வந்த கடல்வழித் தடத்தில் அதன் அடுத்தகட்டமாக அரசியல் செயல்பாடுகள் பயணப்படத் தொடங்கின. வணிகத்தை அரசியலும், அரசியலை வணிகமும் தீர்மானிக்கும் ஆரம்பகட்ட செயல்பாடுகள் அரங்கேறின.

வைகை நதி நாகரிகம் ! - 11

பார்த்தியாவுடன் யுத்தம் நடத்தி இறுதியில் சமரசம் செய்துகொண்ட மன்னன் அகஸ்டஸின் (இவன் பெயரில்தான் 'ஆகஸ்ட்’ என ஓர்ஆங்கில மாதத்துக்கு பெயரிடப்பட்டது) ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து ஒரு தூதுக் குழு கிரேக்கத்துக்குச் சென்று அவனைச் சந்தித்துள்ளது. அகஸ்டஸ் காலத்தைப் பற்றி துல்லியமான விவரத்தைத் தரும் எழுத்தாளன் ஸ்ட்ராபோ, இந்தத் தூதுக் குழுவைப் பற்றி குறிப்பிடும்போது, 'இந்திய ராஜ்ஜியங்களுள் ஒன்றில் இருந்து ஒரு தூதுக் குழு அகஸ்டஸ் சீஸரின் அவைக்கு வந்தது. இந்தத் தூதுக் குழுவை அனுப்பிய அரசன் பாண்டியன் என்பவன் ஆவான். சிலர் அந்த அரசன் 'போரஸ்’ எனச் சொல்கின்றனர். அந்தக் குழு, அரசனுக்கு அளிக்க பரிசுகள் சிலவற்றைக் கொண்டுவந்தது!’ என்கிறார்.

டாப்னேயின் அருகில் ஆன்டியோக் எனும் இடத்தில் அகஸ்டஸின் அவைக்குச் சென்றுகொண்டிருந்த இந்தியத் தூதுக் குழு ஒன்றை, தாம் நேரில் கண்டதாக நிக்கலஸ் டெமாஸ்கனாஸ் பதிவுசெய்கிறார். அந்தக் குழுவில் மூன்று உறுப்பினர்கள் இருந்ததாக அவர் சொல்கிறார். ஆனால், அந்தக் குழுவினர் எடுத்துச் சென்ற கடிதத்தைப் பார்த்தால், இன்னும் பலர் அந்தக் குழுவில் இருந்தனர் என்பதும், அவர்கள் பயண வழியில் இறந்துபோனார்கள் என்பதும் நமக்குத் தெரியும். நீண்ட பயணமே அவர்கள் இறப்புக்குக் காரணமாக இருந்தது என அவர் எழுதிச்செல்கிறார்.

அகஸ்டஸ் சீஸரின் ஆட்சிக் காலத்தில், ரோம் நகரம் வணிகத்தொடர்பு வைத்துள்ள நகரங்களைப் பற்றிய ஒரு வரைபடத்தை தயாரிக்கச் சொன்னான். அவனது ஆணைப்படி, கல்லிலே பொறிக்கப்பட்ட ஒரு வரைபடம் தயாரிக்கப்பட்டது. 'பியூட்டிங்கர் டேபிள்’ என அழைக்கப்படும் அந்த வரைபடத்தில் பாண்டிய துறைமுகம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ரோமானிய மன்னன் அகஸ்டஸ் சீஸரின் உத்தரவின் பேரில் கல்லிலே ஒரு வரைபடம் உருவாக்கப்பட்டபோது, மதுரையை ஆட்சி செய்த நன்மாறனைப் பற்றி நக்கீரன் என்கிற புலவன் கவியிலே ஒரு வரைபடத்தை வரைந்து காட்டியுள்ளான். அரண்மனையில் மன்னனின் அன்றாட வாழ்வைப் பற்றிய ஒரு வரைபடமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

'உயர்த்திய வாளையுடைய மாறனே, இரப்போருக்குக் கிடைப்பதற்கு அரிய அணிகலன்களைக் குறையாமல் கொடுப்பாயாக; யவனர்கள் சிறந்த கப்பல்களில் கொண்டுவந்த குளிர்ந்த நறுமணத்தை உடைய மதுவை, பொன்னாலாகிய அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட கலத்தில் ஏந்தி, ஒளிமிக்க வளையல்கள் அணிந்த பெண்கள் ஊட்ட, அதை அருந்தி மகிழ்வாயாக; வானத்தில் இருளை அகற்றும் கதிரவனைப்போலவும் மேற்குத் திசையில் குளிர்ந்த கதிர்களைப் பரப்பும் மதியைப் போலவும் உலகத்துடன் நீயும் நின்று நிலைபெற்று வாழ்க!’ என வாழ்த்துகிறார்.

அதாவது, உலகின் மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து கிரேக்கக் கப்பல்களால் கொண்டுவரப்பட்ட மதுவை அருந்தி மகிழும் நன்மாறனைப் பற்றிய இந்தச் சித்திரம், அகஸ்டஸ் மன்னன் உருவாக்கிய 'பியூட்டிங்கர் டேபிள்’ எனும் வணிக வரைபடத்தின் இன்னொரு வடிவத்தினாலான சாட்சியை நமக்கு வழங்குகிறது. வணிகம், ரோமானிய மதுவை வைகைக் கரை வரை கொண்டுவந்து சேர்த்துள்ளது. அரசனின் செழிப்புமிக்க வாழ்வின் அடையாளமாக, அழகிய வேலைப்பாடுடைய கலத்தில் மதுவை உயர்த்திப் பிடிக்கும் காட்சி அரங்கேறுகிறது. ரோமானிய மன்னன் அகஸ்டஸ் சீஸரும், மதுரை மன்னன் நன்மாறனும் நீண்ட நெடிய கடல்பாதையின் இரு முனைகளில் நின்றுகொண்டிருந்தனர். எல்லா காலத்திலும் பண்பாடு, வணிகத்தைப் பின்தொடர்ந்து வந்துசேரும். அப்படித்தான் எண்ணற்றவை வந்துசேர்ந்தன!

- ரகசியம் விரியும்