மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 கேட்டி லெடக்கி - 27

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

2003-ம் ஆண்டு அமெரிக்க நீச்சல் உலகின் புதிய விடிவெள்ளியாக 'மைக்கேல் பெல்ப்ஸ்’ உதித்திருந்த சமயம். ஆறு வயது சிறுமியான கேட்டி லெடக்கி, அப்போதுதான் நீச்சலில் 'அகர முதல...’ கற்கத் தொடங்கியிருந்தாள். அவளுக்கு பெல்ப்ஸைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. குதூகலப் புன்னகையுடன் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டாள்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். அமெரிக்க அளவில் நடந்துகொண்டிருந்த நீச்சல் போட்டி ஒன்றின் 400 மீட்டர் தகுதிச் சுற்றை, 4 நிமிடம் 2 நொடி, 67 மில்லிநொடியில் கடந்தார் பெல்ப்ஸ். சிறிது நேரம் கழித்து நடந்த 400 மீ பெண்கள் தகுதிச் சுற்றுப் போட்டியில், அதே 04:02:67 கால அளவில் கடந்து கரையேறினார் கேட்டி. பெல்ப்ஸ், புன்னகையுடன் கேட்டியிடம் சென்றார்.

'நம்ம ரெண்டு பேருக்கும் போட்டி வெச்சுக்கலாமா?’

'கண்டிப்பா. ஒரு மணி நேரம் கழிச்சு வெச்சுக்கலாம்.’

'இல்லல்ல. இப்போதான் நீ நீச்சலடிச்சுட்டு வந்து களைப்பா இருக்க. இப்பவே போட்டி வெச்சுக்கிட்டாதான், நான் ஜெயிக்க முடியும்.’

நீச்சல் உலகின் ஈடுஇணையற்ற ஹீரோ பெல்ப்ஸ் பட்டெனச் சிரிக்க, 18 வயது கேட்டியின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மூன்றே ஆண்டுகளில் நீச்சல் உலகின் முடிசூடா ராணியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேட்டியை, உலகமே இன்னும் ஆச்சர்யம் விலகாமல்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கேட்டியின் நீச்சல் ராஜ்ஜியத்தை யாராலும் அசைத்துப்பார்க்கவே முடியாது என பெட் கட்டுகிறார்கள் நீச்சல் நிபுணர்கள். அப்படி என்னதான் சாதித்திருக்கிறாள் இந்தச் சின்னப் பெண்?

டேவிட், மேரி தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவள் கேட்டி லெடக்கி. காலை 3:45 மணிக்கு எழுவாள். தந்தையுடன் காரில் கிளம்பி, கிளப்பை அடைந்து, 'வார்ம்அப்’ செய்துவிட்டு, 4:45 மணிக்கு எல்லாம் நீரில் குதித்துவிடுவாள். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தீவிரப் பயிற்சி. பிறகு வீட்டுக்கு வந்து பள்ளிக்குத் தயாராகி ஓட வேண்டும். வகுப்புகள் முடிந்ததும் மாலையில் பள்ளியிலேயே நீச்சல் பயிற்சி.

நம்பர் 1 கேட்டி லெடக்கி - 27

6 மணிக்கு வீடு திரும்பி, உண்டு, படித்து, எழுதி, சிரித்து, களித்து, களைத்து உறங்கும்போது இரவு 9:30.

'மகளே, நீ பெரிய நீச்சல் வீராங்கனையாகி, நம் தேசத்துக்காக நீந்தி, பல புதிய சாதனைகளைப் படைத்து, ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கியே தீர வேண்டும். செய்வாயா... நீ செய்வாயா?’ என கேட்டியின் பெற்றோர் எப்போதும், எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. 'மகளே, உனக்கு நீச்சல் பிடித்திருக்கிறதா? சந்தோஷம்.  நீச்சலில் நீ சாதித்தால், மகிழ்ச்சி. சாதிக்க முடியவில்லை என்றாலும் வருத்தம் வேண்டாம். உன் வாழ்க்கை உன் விருப்பம்!’

படிப்பில் கணிதமும் அதில் கால்குலஸும்தான் கேட்டிக்குச் சவாலாக இருந்ததே தவிர, நீச்சல் எப்போதும் கேட்டிக்கு க்ரீம் கேக் சாப்பிடும் சுகத்தையே அளித்தது. தண்ணீருக்கு வெளியே கேட்டி வெட்டிக்கதைகள் பேசி, வெறுமனே 'களுக்’ எனச் சிரித்து, பருவக்குறும்புகளில் திளைக்கும் இயல்பான பெண். ஆனால், தண்ணீருக்குள் குதித்துவிட்டால், அவள் சீறிப்பாயும் நீர் ஏவுகணை. அத்தனைத் துடிப்பு, வேகம், நேர்த்தி, அர்ப்பணிப்பு!

நீச்சல் போட்டிகளில் நான்கு வகைகள் உண்டு. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (இரண்டு கைகளையும் ஒரே சமயத்தில் பக்கவாட்டில் சுழற்றி, நீருக்கு மேல் எம்பி எம்பி, கால்களாலும் நீரை பின்னுக்குத் தள்ளி நீச்சல் அடிப்பது), பேக் ஸ்ட்ரோக் (மல்லாக்கக் கிடந்து ஒரு கை மாற்றி ஒரு கை சுழற்றி நீச்சல் அடிப்பது), ஃப்ரீஸ்டைல் (ஒரு கை மாற்றி ஒரு கை வட்டமாகச் சுழற்றி, நீரைப் பின்னுக்குத் தள்ளி, கால்களையும் மேலும் கீழும் அசைத்து நீச்சல் அடிப்பது), பட்டர்ஃப்ளை (இரண்டு கைகளையும் ஒரே சமயத்தில் பக்கவாட்டில் சுழற்றி, நீருக்கு மேலே எம்பி நீச்சல் அடிப்பது). இதில் கேட்டி கவனம் செலுத்தியது ஃப்ரீஸ்டைலில் மட்டுமே. அதில் 200 மீ, 400 மீ, 800 மீ என வெவ்வேறு பிரிவுகளில் பயிற்சிபெற்றார்.

2012-ம் ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் ஒலிம்பிக்குக்கான அமெரிக்க நீச்சல் அணித் தேர்வுப் போட்டிகள் நடந்தன. 200 மீ போட்டியில் கேட்டிக்குக் கிடைத்த இடம் 9. மனம் தளரவில்லை. அடுத்ததாக 400 மீ போட்டியில் கேட்டி மூன்றாவதாக வந்தார். நம்பிக்கை வளர்ந்தது. அடுத்து நடந்த 800 மீ போட்டியில் முதலில் வந்து கவனம் ஈர்த்தார். ஆக, 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்காகக் கிளம்பிய 532 பேர் கொண்ட அமெரிக்கக் குழுவின் மிக இளைய வீராங்கனையாக (15 வயது 4 மாதங்கள்) கேட்டி கெட்டியாக இடம்பிடித்தார்.

2012-ம் ஆண்டு லண்டன். 'நானும் ஒலிம்பிக்கில் தான் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்’ என கேட்டி அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டார். அவ்வப்போது ஏதோ ஒரு பயம் எட்டிப்பார்த்தது. 'உன் தேசத்தின் பிரதிநிதியாக இங்கே நீ நீந்தப்போகிறாய். நடப்பது நடக்கட்டும். பதறாமல் முழுத்திறமையையும் காட்டு. இன்னொரு முறை ஒலிம்பிக் வாய்ப்பு கிட்டுமா எனத் தெரியவில்லை. ஆகவே, இந்தத் தருணங்களை அனுபவி. சந்தோஷமாக நீந்து.’ கேட்டி தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொண்டார். 800 மீ தகுதிச் சுற்றில் 08:23:84 நிமிடங்களில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து, ஃபைனலுக்குத் தகுதி பெற்றார்.

ஆகஸ்ட் 3. 800மீ ஃப்ரீஸ்டைல் ஃபைனல் போட்டியைக் காண, கேட்டியின் பெற்றோரும் சகோதரனும் மிகவும் பிரயத்தனப்பட்டு டிக்கெட் எடுத்து வந்து உட்கார்ந்தார்கள். கேட்டி வார்ம்-அப் செய்துகொண்டிருந்தார். டி.வி-யில் பிற நீச்சல் போட்டிகள் ஒளிபரப்பாகிக்

கொண்டிருந்தன. சக வீராங்கனை மிஸ்ஸி, 200 மீ பேக் ஸ்ட்ரோக்கில் உலக சாதனை, பெல்ப்ஸ் 100 மீ பட்டர்ஃப்ளையில் தங்கம் என அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து வெற்றிகள். சந்தோஷக் கூச்சலிட்டு குத்தாட்டம் ஆட கேட்டியின் மனம் துடித்தது. ஆனால், 'உன் சக்தியை விரயமாக்காதே!’ என மூளை கட்டளையிட்டது.

போட்டி தொடங்க ஒருசில நிமிடங்களே இருந்தன. நீச்சல் குளத்தின் முன் வந்து நின்றார் கேட்டி. மைதானம் எங்கும் ரெபெக்காவுக்கு ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ரெபெக்கா பிரிட்டிஷ் வீராங்கனை. 800 மீ ஃப்ரீஸ்டைலில் முந்தைய ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். உலக சாதனையும் (08:14:10) வைத்திருப்பவர். கேட்டியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவரது பெற்றோரும் மைக்கேலும் பலமாகக் கைதட்டினாலும் அவர்களுக்குள் படபடப்பு. போட்டியில் தோற்றுவிட்டால், தங்கள் மகள் மனம் உடைந்துபோய்விடக் கூடாதே. அவளை எப்படியாவது தேற்றி, அரவணைத்து அழைத்துச் சென்றுவிட வேண்டும். தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இளங்கன்றான கேட்டி, எந்தப் பயமும் படபடப்பும் இன்றி, தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாவது லேனில் வந்து நின்றார். அதுதான் அவருக்கு முதல் சர்வதேச ஃபைனல் அனுபவம். அதுவும் ஒலிம்பிக்! ரெஃப்ரியின் நீண்ட விசில் ஒலிக்க, நீரில் குதிப்பதற்கான சிறு மேடையில் ஏறினார். ஒருகால் முன்னிருக்க, இன்னொரு கால் உந்திக் குதிக்க வசதியாகப் பின்னிருக்க... Take your marks... ஒலித்தது. அனைவரும் குதிக்கத் தயார் ஆனார்கள். போட்டி தொடங்குவதற்கான சிக்னல் கிடைக்க, எம்பி டைவ் அடித்தார் கேட்டி.

நீச்சல் குளத்தின் நீளம் 50 மீ. ஒருமுறை சென்றுவிட்டுத் திரும்பினால், 100 மீ. 800 மீட்டருக்கு எட்டு முறை சென்று திரும்பவேண்டும். முதல் 50 மீட்டரை முதலாவதாகக் கடந்தார் கேட்டி. எதிர்முனையை நெருங்கும் நேரத்தில் நீருக்குள்ளேயே 180 டிகிரி கடிகாரத் திசையில் உடலைச் சுழற்றி, கால்களால் சுவரை எட்டித் தள்ளி மீண்டும் வந்த வழியிலேயே வேகம் குறையாமல் திரும்பிச் செல்ல வேண்டும். 100மீ கடந்தபோது டென்மார்க் வீராங்கனை முன்னிலை பெற்றிருந்தார். கேட்டி இரண்டாவது, ரெபெக்கா மூன்றாவது. 200 மீட்டரைக் கடந்தபோது கேட்டி மீண்டும் முதல் இடம். 300 மீட்டரில் இரண்டாவது வந்த ரெபாக்காவைவிட, ஒரு நொடி முன்னிலை பெற்றார் கேட்டி. 400, 500, 600 மீட்டர்கள் கடந்தபோது, கிட்டத்தட்ட இரண்டரை நொடிகள் முன்னிலையில் கேட்டி முதல் இடத்தில் நீந்திக்கொண்டிருந்தார். 700 மீ முடித்தபோது, இன்னும் 100 மீ மட்டுமே பாக்கியிருக்கிறது எனச் சொல்லும்படியாக மணி அடித்தார்கள். 'என் கடன் வேகம் குறையாமல் நீந்துவதே’ என கவனம் சிதறாமல் நீந்திக்கொண்டிருந்த கேட்டிக்குள்ளும் ஒரு மணி அடித்தது. 'நீ நீந்திக்கொண்டிருப்பது ஒலிம்பிக் ஃபைனல். யாரையும் உன்னைத் தொட விட்டுவிடாதே. இதே வேகத்தில் போ!’ அரங்கம் எங்கும் ஆரவாரக் கூச்சல். புதிய உலக சாதனை நிகழலாம் என வர்ணனையாளர்கள் வார்த்தைகளில் விளையாடிக்கொண்டிருந்தனர். 08:14:63 நிமிடங்களில் 15 வயது கேட்டி, 800 மீ ஃப்ரீஸ்டைலில் முதல் இடம் வென்றார். (சில மில்லி நொடிகள் வித்தியாசத்தில் உலக சாதனை நழுவியது.) கேட்டியின் முதல் சர்வதேச வெற்றி... அதுவும் ஒலிம்பிக்கில் தங்கம்! (போட்டியைக் காண: https://www.youtube.com/watch?v=JHbNKX3VkIM)

உலகமே அதிர்ச்சியில் உறைந்து நின்றது. போட்டிக்கு முன்பு வரை, கேட்டி யாரோ ஒரு அமெரிக்க நீச்சல் வீராங்கனை. தங்கம் வென்ற சில நிமிடங்களில் ட்விட்டர் டிரெண்டிங், 'கேட்டி... கேட்டி...’ எனக் கதறியது. 'நான் அவளுக்கு சிஸ்டர்’ என அருகில் இருந்த பார்வையாளரிடம் அன்லிமிடெட் சந்தோஷத்தில் உளறினார் சகோதரர் மைக்கேல். பெற்றோர் கண்ணீருடன் ஆனந்தக் கூத்தாடினர். கேட்டியும் 'நடந்தது எல்லாம் நிஜமா?’ எனப் புரியாமல் நீரிலேயே தத்தளித்துக்கொண்டிருந்தார். கழுத்தில் விழுந்த அந்த முதல் தங்கப் பதக்கத்தை எடுத்து, முத்தமிட்ட நொடியில் உள்ளுக்குள் சிலிர்த்தது.

ஒரே ஒரு வெற்றியால், அமெரிக்காவின் நம்பிக்கையாக உயர்ந்த கேட்டிக்கு, நாடு திரும்பியபோது கோலாகல வரவேற்பு. வாழ்த்துக் குவியல். பள்ளியின் சூப்பர் ஹீரோயின். மீடியாவின் புகழ்மாலை. சலிக்கச் சலிக்கப் பேட்டிகள். பத்திரிகைகள் எங்கும் கேட்டி புராணம். ஒபாமாவும் சந்தித்து உள்ளம் குளிரப் பாராட்டினார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் நீச்சலுக்காக வழங்கப்படும் ‘Golden Goggle’  விருது (மிகச் சிறந்த வீராங்கனை) கேட்டிக்கு வழங்கப்பட்டது. அடுத்து? 'அய்யோ, காலையில்

பயிற்சிக்குப் போக வேண்டும். படிக்க வேண்டியவை நிறைய பாக்கி இருக்கின்றன’ என இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாள் கேட்டி.

அடுத்து தேசிய அளவில் நடந்த போட்டிகளில் கேட்டிக்குச் சிறிய சறுக்கல்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண் என அவள் மீது குவிந்த கவனம், அதீத எதிர்பார்ப்பு. வருத்தக் குளத்தில் நீந்திய கேட்டியை, புரூஸ் என்கிற புதிய பயிற்சியாளர் நம்பிக்'கை’ நீட்டிக் கரையேற்றினார். குறைந்த தூரப் போட்டிகளைவிட அதிக தூரப் போட்டிகளில் (800 மீ, 1,500 மீ) ஆரம்பித்த வேகம் குறையாமல் இறுதி மீட்டர் வரை நீந்துவது கேட்டியின் ப்ளஸ். அதேபோல குறைந்த தூரத்திலும் ஆரம்ப வேகத்தை அதிகரித்து, அதே ரிதத்தில் நீந்தினால் கேட்டியால் 200 மீ, 400 மீ பிரிவுகளிலும் சாதிக்க முடியும் எனக் கூர்தீட்டினார் புரூஸ்.

நம்பர் 1 கேட்டி லெடக்கி - 27

2013-ம் ஆண்டு ஸ்பெயினின் பார்சிலோனாவில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. ஃப்ரீஸ்டைலில் ஐந்து பிரிவுகளில் (200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ, 4ஜ்200 மீ ரிலே) விளையாட கேட்டி தகுதி பெற்றிருந்தார். 'புதிய நட்சத்திரம் கேட்டி புதிய சாதனைகள் படைப்பாரா?’ எனப் பலரும் உற்று நோக்கிக்கொண்டிருக்க, 'ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஒலிம்பிக்ல ஜெயிச்சது குருட்டு அதிர்ஷ்டம். வேணா பாருங்க, கேட்டி எல்லாம் ஒன் டைம் வொண்டர்தான்’  முரட்டு விமர்சனங்களும் அலைபாய்ந்தன.

400 மீ ஃப்ரீஸ்டைல் ஃபைனல். நீருக்குள் டைவ் அடித்த கேட்டி, 03:59:82 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து மூச்சுவாங்க நிமிர்ந்தபோது அரங்கம் அதிர்ந்தது. முதல் இடம். அடுத்து 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல். கேட்டிக்கு அந்தப் பிரிவில் அதுவே முதல் சர்வதேச ஃபைனல். முதல் 300 மீ வரை முதல் இடத்தில் சென்றுகொண்டிருந்த கேட்டி, பின் அதை நழுவவிட்டார். மீட்டர்கள் கரைந்துகொண்டே இருக்க, மீண்டும் முன்னிலை கிடைக்கவே இல்லை. ஆனால், கடைசி 100 மீட்டரில் டென்மார்க்கின் லோட்டியைப் பின்னுக்குத் தள்ளி இலக்கை எட்டியபோது, கேட்டி 1500மீ பிரிவில் புதிய உலக சாதனை படைத்திருந்தார் (15:36:53). அது கேட்டியின் முதல் உலக சாதனை!

அடுத்து 4ஜ்200 மீ. மற்ற வீராங்கனைகளுடன் சேர்ந்து கேட்டியின் முதல் ரிலே அனுபவம். அதிலும் அமெரிக்காவுக்குத் தங்கம். கடைசியாக 800 மீ ஃப்ரீஸ்டைல். ஒலிம்பிக்கில் கேட்டி சாதித்த பிரிவு. இதிலும் டென்மார்க்கின் லோட்டியே முதல் 650 மீட்டர் வரை கடும் போட்டியாக இருக்க, கடைசி 150 மீட்டரில் நீரையும் லோட்டியையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடம் தொட்டார் கேட்டி. அதுவும் ரெபெக்காவின் சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனையுடன் (08:13:86). அந்தத் தொடரில் நான்கு தங்கம், அதில் இரண்டு உலக சாதனை!

2013-ம் ஆண்டில் சிறந்த நீச்சல் வீராங்கனை, உலகின் சிறந்த நீச்சல் வீரர், அமெரிக்காவின் சிறந்த நீச்சல் வீரர் என்ற பெருமைகள் கேட்டியை நாடி வந்தன. நீச்சல் நிபுணர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். 'இனி கேட்டியின் சாதனைகளை முறியடிப்பதற்காகத்தான் மற்றவர்கள் உழைக்கவேண்டி இருக்கும்’ என்றனர் அழுத்தமாக. கேட்டியும் அதை மனதில் ஏற்றிக்கொண்டார். தன் சாதனைகளைத் தானே முறியடிக்கப் பயிற்சியைத் தீவிரமாக்கினார். 'மற்றவர்களது எதிர்பார்ப்புகளோ அழுத்தங்களோ என்னை பாதிக்காமல் பார்த்துக்கொள்வேன். எனக்கு நானே சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறேன். அதை முறியடிக்கும் நோக்கத்தில் நீந்துகிறேன். அவ்வளவுதான்’!

2014-ம் ஆண்டு. ஆஸ்திரேலியாவில் Pan Pacific Swimming Championship போட்டிகள் நடந்தன. கேட்டி ஃப்ரீஸ்டைலில் ஐந்து பிரிவுகளில் (200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீ, 4ஜ்200 மீ ரிலே) கலந்துகொண்டார். ஐந்திலும் தங்கப் பதக்கத்தில் கேட்டியின் பெயர் வெர்ச்சுவலாகப் பொறிக்கப்பட்டிருந்தது. 200 மீ நீந்தி வென்றுவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் 800 மீட்டரில் ஜெயித்தார். அடுத்த நாள் ரிலேவில் வெற்றி. அதற்கடுத்த நாள் 400 மீ தகுதிச் சுற்றில் 04:03:09 நிமிடங்களில் கடந்து ஆச்சர்யப்படுத்திய கேட்டி, அன்று இரவே ஃபைனலில் 03:58:37 நிமிடங்களில் புதிய உலக சாதனை படைத்தார். (வீடியோ:
https://www.youtube.com/watch?v=xE7Wz4-r3t4)  இறுதி நாளில் மீண்டும் 1,500 மீ. தன் உலக சாதனையை தானே முறியடித்த தானைத்தலைவியாக புன்னகை சிந்தினார் கேட்டி. 2014-லிலும் உலகின் சிறந்த நீச்சல் வீரர் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

2015. ரஷ்யாவின் காஸன் நகரில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து முடிந்தன. போட்டிகளுக்குப் பின் கேட்டியை ஒரு டி.வி நிருபர் பேட்டி எடுத்தார். 'நான் சில கேள்விகள் கேட்பேன். யோசிக்காமல் டக் டக்கென பதில் சொல்ல வேண்டும்’ என்று அந்தப் பெண் நிருபர் கடுமையான தொனியில் பேட்டியை ஆரம்பிக்க, கேட்டி எச்சில் விழுங்கினார். கேள்விகள் ஆரம்பமாகின. '200 மீ ஃப்ரீஸ்டைலில் என்ன பதக்கம் ஜெயித்தாய்?’ கேட்டியின் பதில்  'தங்கம்’. '400 மீ ஃப்ரீஸ்டைலில்?’  'தங்கம்’. '800 மீ ஃப்ரீஸ்டைலில்?’ 'தங்கம்’. '1,500 மீட்டரில்?’ 'தங்கம்’. '4ஜ்200 மீ ரிலேயில்?’  'தங்கம்’. அந்தக் கேள்விகளுக்குப் பிறகு இருவருமே கலகலவெனச் சிரித்தனர். நிஜம்தான். கேட்டி கலந்துகொள்ளும் போட்டிகளில் தங்கத்தை அவருக்கு ஒதுக்கிவைத்துவிட்டு, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக மட்டும் போட்டி நடத்தலாம் என்று சொல்லும் அளவுக்கு நீச்சல் சர்வாதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார் கேட்டி.

'நீரினில் கேட்டியின் வேகம், நிலத்தில் ஒரு தடகள வீரரின் வேகத்தைப்போல அசாத்தியமானதாக இருக்கிறது’ எனக் கொண்டாடுகிறார்கள் விமர்சகர்கள். 400 மீ, 800 மீ, 1,500 மீ என மூன்று ஃப்ரீஸ்டைல் பிரிவுகளிலும் கேட்டிதான் உலக சாதனையைத் தக்கவைத்திருக்கிறார். தன் சாதனையைத் தானே முறியடித்த விதத்தில், அதுவும் மூன்று வருடங்களில் 10 முறை உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் நீச்சலில் கேட்டிதான் ஆதிக்கம் செலுத்தப்போகிறார். அமெரிக்காவுக்கு கேட்டியால் 4 தங்கம் உறுதி என்று இப்போதே உறுதியாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தன் மீது குவியும் அதீத எதிர்பார்ப்புகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், தெளிவான சிந்தனையுடன் வார்த்தைகளை உதிர்க்கிறார் கேட்டி.

'என் நம்பிக்கை மட்டுமே என்னை மேலும் மேலும் இயக்கிக்கொண்டிருக்கிறது. சரியாக வரும் வரை நான் பயிற்சி செய்வது இல்லை; இனி தவறே நேராது என்ற நேர்த்தி அமையும் வரை நான் பயிற்சி செய்கிறேன். நேற்று சுவரை முதலில் தொட்டது விஷயமே அல்ல. இன்றும் உன்னால் சுவரை முதலில் தொட முடிகிறதா என்பதுதான் சவால். நான் நேற்றைய சாதனைகளை நினைப்பது இல்லை. இன்றைய இலக்குகளை நோக்கி மட்டுமே நீந்திக்கொண்டிருக்கிறேன்’!

நீச்சல் டெக்னிக்!

நம்பர் 1 கேட்டி லெடக்கி - 27

5 அடி 11 அங்குல உயரமும் நீண்ட கால்களும் கேட்டியின் பெரிய ப்ளஸ். நீருக்குள் டைவ் அடித்த அதே உந்து சக்தியுடனேயே, நீரின் அடியில் வேகமாக அதிக தூரத்தை நீந்தி முன்னிலை பெறுவதில் கேட்டி வல்லவர். பொதுவாக, மற்றவர்கள் 50 மீட்டரைக் கடக்க கைகளைச் சுழற்றி 42 முதல் 45 ஸ்ட்ரோக்குகள் எடுத்துக்கொள்கிறார்கள். கேட்டி 38 முதல் 40 ஸ்ட்ரோக்குகளிலேயே அந்தத் தொலைவைக் கடக்கும் திறன் பெற்றிருப்பதால் முன்னிலை பெறுவது எளிதாகிறது. தவிர, நீண்ட தூரப் போட்டிகளில் முதல் 50 மீட்டரில் காட்டும் வேகத்தை, களைப்படையாமல் கடைசி 50 மீட்டர் வரை தக்கவைத்து நீந்தும் உடல் வலு கேட்டிக்கு இருக்கிறது. அதிக தூரப் பிரிவுகளில் கேட்டி கில்லியாக இருந்தாலும், குறைந்த தூரப் பிரிவுகளில் (50 மீ, 100 மீ) ஆர்வம் காட்டாததும், ஃப்ரீஸ்டைல் தவிர மற்ற வகை நீச்சல்களை முயற்சி செய்யாமல் ஒதுங்குவதும் கேட்டியின் மைனஸ்!

சந்தேக போதை!

நம்பர் 1 கேட்டி லெடக்கி - 27

அசாத்திய சாதனைகளை நிகழ்த்தும் வீரர்கள் மீது 'ஊக்க மருந்து’ சந்தேகங்கள் அதிகமாக எழுவது இயல்பு. அவை சிலமுறை நிரூபிக்கப்பட்டிருப்பது நீச்சல் உலகின் கறுப்பு வரலாறே. அந்த வகையில் தற்சமயம் நீச்சல் வீராங்கனைகளில் கேட்டி மீதுதான் அதிக அளவு ஊக்க மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் கேட்டி உலக சாதனைகள் நிகழ்த்தும்போது எல்லாம் பரிசோதனைப் படுத்தல்கள் அதிகம். 'கேட்டி இயற்கையான திறமையுடன் நீந்துவதற்காகவே பிறந்தவள். அவளுக்கு ஊக்க மருந்துகளின் பெயர்கள்கூடத் தெரியாது’ என்பது அவரது பயிற்சியாளர் கூற்று. ஊக்க மருந்து விஷயங்களில் கேட்டியின் எளிமையான, வலிமையான பதில்... 'உழைக்கிறேன்... ஜெயிக்கிறேன்!’