மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200ஓவியங்கள்: ராஜேஷ் ஆர்.வி

வாழ்த்துக்கு என்ன பேதம்..?

ன் தோழி விவாகரத்தான பெண். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். அவளுடன் பணிபுரியும் பெண்கள் அவளிடம் சகஜமாகப் பழகினாலும், சிலர் திருமணம், வளைகாப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் அவளைத் தவிர்க்க நினைக்கின்றனர். இதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டாள் என் தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன!

நமக்குத் தெரிந்தவர்கள் கலந்துகொண்டு, மனம் நிறைய வாழ்த்த வேண்டும் என்பதுதானே சுப நிகழ்ச்சிகளின் தாத்பர்யம்..! கணவருடன் வாழ்ந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்த்து பலிக்கும் என்றில்லை. நல்ல மனதோடு யார் வாழ்த்தினாலும் அது சிறந்த ஆசீர்வாதமே என்பதை இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

- பி.அனிதா, சேலம்

அட்சதை சங்கடம்... அழகான தீர்வு!

அனுபவங்கள் பேசுகின்றன!

பொதுவாக திருமணங்களில், தாலி கட்டும் வைபவம் முடிந்தவுடன், எல்லோரும் மணமக்கள் மீது அட்சதையைத் தூக்கி வீசுகின்றனர். இதில் சிறிதளவு மட்டுமே அவர்கள் மேல் படுகிறது. மீதி எல்லாம் மற்றவர்கள் மேலும், தரையிலும் பட்டுத் தெறிக்கின்றன. இதை பார்க்கும்போதெல்லாம் சற்று சங்கடமாகவே உணர்வேன். ஆனால், சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, `தாலி கட்டிய பிறகு யாரும் அட்சதையைத் தூவ வேண்டாம், மணமக்கள் உங்களிடம் வந்து ஆசி பெற்றுக்கொள்வார்கள்’ என மைக்கில் அறிவித்தனர். அதேபோல, தாலி கட்டும் வைபவம் முடிந்த பிறகு, மணமக்கள் கூப்பிய கரங்களோடு, மணமேடையை விட்டு இறங்கி, மண்டபத்தின் வாசல் வரை சென்று திரும்பினர். அப்போது மணமேடைக்கு கீழே அமர்ந்திருந்த அனைவரும் அட்சதையைத் தூவி ஆசீர்வதித்தனர். மற்ற திருமணங்களைவிட சற்று மகிழ்ச்சி கூடுதலாகவே விருந்தினர்கள் மணமக்களை ஆசீர்வதித்ததாக உணர்ந்தேன்.

- சஞ்ஜலா ராஜன், சேலம்

அசத்தல் `அப்ரோச்’!

அனுபவங்கள் பேசுகின்றன!

நானும் என் தோழியும் எங்கள் ஊரிலிருந்து நாகர்கோவிலுக்குப் பஸ்ஸில் சென்றோம். என் கையில் இருந்த பேக், ஸீட்டின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தவரின் மூக்கைப் பதம் பார்த்தது. அவர் மூக்கு நன்றாக சிவந்துவிட்டது. நான் அவரிடம் ‘ஸாரி’ சொன்னேன். உடனே அவர் தன் மூக்கிடம், ``மூக்கே... மூக்கே! அம்மா `ஸாரி’ கேட்டுட்டாங்க. அதுக்கப்புறம், உனக்கு வலிக்கவும், நீ சிவக்கவும் கூடாது’’ என்று ஒரு `மோனோ ஆக்ட்’ கொடுத்தாரு பாருங்க... பஸ்ஸே சிரிப்பில் மூழ்கியது! நான் என் அஜாக்கிரதையை எண்ணி வருந்தியதோடு, இனிமேல் பஸ் பயணங்களில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன்.

வலியால் அவதிப்படும்போதும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், நகைச்சுவையாக தவற்றை சுட்டிக்காட்டிய அந்தப் பயணியின் `அப்ரோச்’ அசத்தல் தானே..?!

- கே.வைத்தீஸ்வரி, நெல்லை