மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்

பிளிறல் சத்தம் கேட்டு சட்டென விழித்த ஜாதவ், வேகமாக எழுந்து சென்று பார்த்தார். ஆம், யானைகள்தான் வந்துகொண்டிருந்தன. 20, 25... அதற்கு அதிகமாகவும் இருக்கலாம். நள்ளிரவு என்பதால், சரியாகத் தெரியவில்லை. ஜாதவின் குடியிருப்புப் பகுதியை நோக்கித்தான் அந்தக் காட்டு யானைகள் வந்துகொண்டிருந்தன. அவர் தன் குடும்பத்தினரை எழுப்பி, குடிலில் இருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக்கொண்டார். யானைகள், ஜாதவின் வசிப்பிடத்தைத் துவம்சம் செய்துவிட்டுக் கடந்துசென்றன. ஜாதவும் அவரது குடும்பத்தினரும் அந்த நிகழ்வுகளை எல்லாம் 'மகிழ்ச்சி’ ததும்பப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

யானைகள்தான் எத்தனை அழகு; என்ன ஒரு கம்பீரம்; யானைகளும் வந்தால்தான், ஒரு காடு முழுமையடையும். இதோ அவற்றின் வருகை, எனது அத்தனை முயற்சிகளுக்கும், 30 வருட அயராத உழைப்புக்கும் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. இது என் காடு... நான் உருவாக்கிய காடு. ஜாதவ் பெருமிதத்தில் நெக்குருகி நின்றார்!

யானைகள் வந்து தன் வீட்டை நாசமாக்கியதை ஒரு மனிதனால் கொண்டாட முடியுமா? நிச்சயம் முடியும்! அதற்கு நாம் ஜாதவாக இருக்க வேண்டும் அல்லது ‘Forest Man of India’ என அழைக்கப்படும் ஜாதவை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஜாதவை உணர்வோம் வாருங்கள்... அசாம், பிரம்மபுத்திரா நதிக்கு இடையே அமைந்துள்ள அந்த மாபெரும் தீவுக்கு!

'மிஸிங்’ என்பது, அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தின் பெயர். அந்த இனத்தில் பிறந்தவர் ஜாதவ் பேயெங். பெற்றோர் லக்கிராமும் அபோலியும் அவரை 'மொலாய்’ என்ற செல்லப்பெயரில் அழைத்தனர். ஜாதவுடன் பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள் உள்பட 12 பேர். பிரம்மபுத்திராவில் வெள்ளோற்சவம் என்பது வருடாந்திர நிகழ்வு. அப்போது வந்த வெள்ளத்தில் ஜாதவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது. பெற்றோர், பிழைப்பு தேடி ஆற்றின் மறுகரையில் அமைந்திருந்த மஜுலி என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தனர். மூன்று வயது ஜாதவை, அனில் போர்தாகூர் என்பவரிடம் ஒப்படைத்தனர். அசாமின் ஜோர்ஹட் மாவட்ட நீதிமன்றப் பணியாளராக இருந்த அனில், ஜாதவை வளர்த்தார்; படிக்கவைத்தார். பிரம்மபுத்திரா நதியோடு விளையாடி, நதியோடு உறவாடி, நதியோடு மல்லுக்கட்டி ஆட்டம்போட்ட பால்ய வாழ்க்கை. ஜாதவின் பதின்ம வயதில், அவரது பெற்றோர் நோயால் பாதிக்கப்பட்டதால், கால்நடைகளைக் கவனித்துக்கொள்வதற்கு என அவன் மீண்டும் கூடு திரும்பினான். இடையில் ஏதோ நினைப்பில் டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் ரயில் ஏறி ஓடிப்போனதும் உண்டு... சில நாட்களே. 'சொந்த ஊரே சொர்க்கம்’ என உணர்ந்து திரும்பி வந்து விழுந்தான் ஜாதவ்!

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

மஜுலிப் பகுதியில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் சிறு சிறு தீவுகள் உண்டு. அவை மொத்தமாக 'மஜுலி தீவுகள்’ என்றே அழைக்கப்பட்டன. ஒரு நதியின் நடுவில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவும் அங்கேதான் அமைந்திருந்தது. 1979-ம் ஆண்டிலும் பிரம்மபுத்திராவில் குமுகுமுவென வெள்ளம் பொங்கி, பெருகி, புரண்டோடி, பின் வடிந்தது. தீவுகளின் மணற்பரப்பில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஏராளமான பாம்புகள் செத்துக்கிடந்தன. சில பாம்புகள் சுடுமணல் வெப்பம் தாங்க முடியாமல் நீரைத் தேடி தவிப்புடன், உயிர் துடிக்க நெளிந்துகொண்டிருந்தன. பாம்புகளின் பரிதாப நிலையைக் கண்ட ஜாதவ் அதிர்ந்தான். பழங்குடி இதயம் அல்லவா! பதறி ஓடோடிச் சென்று ஊரில் இருந்த பெரியவர்களிடம் கதறினான். 'அங்க நிறையப் பாம்புங்க செத்துக் கிடக்குது.’ அனுபவஸ்தர்கள் சொன்னார்கள், 'தீவுல ஒதுங்க மரம் இல்லை. சூடு தாங்காம அப்படித்தான் செத்துப்போகும். ஒண்ணும் பண்ண முடியாது!’ ஜாதவ், அந்தப் பாம்புகளுக்காக அழுதான். உலகில் மரங்கள் எல்லாம் அழிந்துபோய்விட்டால், ஒருநாள் மனிதர்களும் இப்படித்தானே செத்துக் கிடப்பார்கள். நினைக்கும்போதே உடல் நடுங்கியது. மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் ஜாதவின் மனதில் ஆழமாக வேர் ஊன்றியது. அந்தத் தீவில் மரங்கள் வளர்க்கலாம் என ஊர்க்காரர்களை அழைத்தான். யாரும் கண்டுகொள்ளவே இல்லை. சிரித்தார்கள்; பரிகாசம் செய்தார்கள்.

ஜாதவ், தனக்குக் கிடைத்த மரக்கன்றுகள், அகப்பட்ட விதைகளுடன் அந்தப் பெரிய தீவை நோக்கிக் கிளம்பினான். விதைகளைத் தூவினான். மரக்கன்றுகளை நட்டான். நதியில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றினான். அவை வேர் பிடித்து வளரும் எனக் காத்திருந்தான். நாளடைவில் ஜாதவின் நம்பிக்கை பட்டுப்போனது. அந்தப் பெரிய தீவு ஒரு மரம்கூட இல்லாத வெண்மணல் காடு. என்ன செய்யலாம் என யோசித்த ஜாதவ், தயக்கத்துடன் வனத் துறையினரிடம் ஆலோசனை கேட்டான். 'அந்த மணலில் எல்லா மரங்களும் வளராது; மூங்கில் மட்டுமே வளரும்.’ ஜாதவுக்குள் உற்சாகம். மூங்கில் கன்றுகள் சிலவற்றை வாங்கிக்கொண்டு தீவுக்குச் சென்றான். நட்டான். தினமும் கண்ணும் கருத்துமாகப் பராமரித்தான். 'நான் வளர்கிறேனே ஜாதவ்’ என கன்று ஒவ்வொன்றும் துளிர்விட்டுச் சிரித்த கணத்தில், அவனது மனதில் ஒரு லட்சியம் உருவெடுத்தது. 'இனி இந்தத் தீவில் மரங்கள் வளர்ப்பது மட்டுமே என் வேலை. ஒரு பெரிய காடாக இந்தத் தீவை நான் மாற்றிக் காட்டுவேன்!’

வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. கேலி பேசுவார்கள். 10-வது முடித்திருந்த ஜாதவ், அதோடு படிப்பை நிறுத்திவிட்டு, வருமானத்துக்குக் கால்நடைகளை வளர்த்தார். மற்ற நேரம் எல்லாம் தீவில் மரம் நடுவதை மட்டுமே வேலையாக்கிக்கொண்டார். அந்தச் சமயத்தில் அங்கே தீவுப்பகுதி ஒன்றில், 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தைச்’ செயல்படுத்த அரசாங்கம் ஆள் எடுத்துக்கொண்டிருந்தது. ஜாதவ், முதல் ஆளாக அந்த வேலையில் சேர்ந்தார். வனத் துறையினரிடம் ஆர்வமுடன் வேலைகளைக் கற்றுக்கொண்டார். ஐந்து ஆண்டுத் திட்டம் அது. ஆனால், வனத் துறையினர் மூன்று ஆண்டுகளிலேயே 'நட்டது போதும்’ எனப் போட்டது போட்டபடி  கிளம்பிவிட்டார்கள். ஜாதவ் மட்டும் கிளம்பவில்லை. தனி மனிதனாக அவரது பணிகள் தொடர்ந்தன.

ஜாதுநாத் பேஸ்பருவா என்பவர், அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர். சூழலியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் எழுதிக் கொண்டிருந்தார். ஜாதுநாத்துக்கு, ஜாதவை சிறுவயதில் இருந்தே தெரியும். ஜாதவ், மரம் வளர்ப்பு குறித்த தனது சந்தேகங்களை எல்லாம் ஜாதுநாத்திடம் கேட்டுத் தெளிவுபெற்றார். தீவில், மூங்கிலோடு மற்ற மரங்களையும் வளர்க்க வேண்டும் எனில் மண்ணை அதற்குத் தகுந்தாற்போல வளப்படுத்த வேண்டும். மண்புழுவைப்போல், சிவப்பு நிறக் கட்டெறும்புகளுக்கும் மண்ணின் தன்மையை வளப்படுத்தும் தன்மை உண்டு. தெரிந்துகொண்ட ஜாதவ், தினமும் நூற்றுக்கணக்கில் எறும்புகளைச் சேகரித்து தீவுக்கு இடம்பெயர்த்தார். அந்த எறும்புகள் ஊர்ந்து செல்லச் செல்ல, அவை சுரக்கும் சில நொதிகளால் மண்ணின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. அதன் பின் நட்ட, பிற மரக்கன்றுகளும் வேர்பிடித்துத் துளிர்த்தன. ஜாதவ், தன்னைக் கணக்கின்றிக் கடித்த சிவப்பு எறும்புகளுக்கு மனதார நன்றி சொன்னார். வெண்மணல் தீவில் பச்சைப் புள்ளிகள் படர ஆரம்பித்தன!

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புதிய மரக்கன்றுகளை நட்டார் ஜாதவ். அதுவே சரியான பருவம். பின் ஜூலையில் மழை தொடங்கிவிட்டால், பிரச்னை இல்லை. ஆனால், அதுவரை மரக்கன்றுகளுக்குத் தினமும் நீர் ஊற்றுவதுதான் பெரும் சவாலாக இருந்தது. காரணம், ஜாதவ் மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருந்த பகுதியில் இருந்து நதி சில மைல்கள் தள்ளி இருந்தது. தனிமனிதனாக நீர் சுமந்து வந்து ஊற்றுதல் இயலாத காரியம். அதற்கும் வழி ஒன்று செய்தார். மரக்கன்று நட்டு, அதைச் சுற்றி மூங்கில் கம்புகள் ஊன்றி, அதில் பானை ஒன்றைக் கட்டி, நீரை நிரப்பினார். பானையில் நீர் சொட்டும்படி சிறு துளையிட்டார். ஒரு வாரத்துக்குப் பிரச்னை இல்லை. அதற்குப் பின் நீர் நிரப்பிக்கொள்ளலாம். அதற்குள் மழை பெய்துவிட்டால், இயற்கைக்கு நன்றி.

ஜாதவ், தன் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் சாணத்தை கிராம் அளவுக்குக்கூட வீணாக்காமல் சேகரித்தார். இயற்கை உரம் தயாரித்தார். சாணமும் இயற்கை உரமும் தீவின் மண்ணை மேலும் வளமாக்கின. வருடம் முழுக்கக் கிடைத்த விதைகளை எல்லாம் சேகரித்துவைத்தார். ஒரு பழம் சாப்பிட்டால்கூட, அதன் கொட்டையைப் பத்திரப்படுத்தினார். மழை நெருங்கும் காலத்தில் தீவில் சேகரித்த விதைகளைத் தூவினார்; விதைத்தார். ஒரு வருடம் மட்டும் அல்ல. ஒவ்வொரு வருடமும்!

நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நாட்களில் மட்டும் ஜாதவால் தீவுக்குச் செல்ல முடியாது. வெள்ளம் வடிந்து தீவுக்குச் செல்லும்போது, மரங்களின் அடியில் பாம்புகள் நெளியும்; பதுங்கும். புதிதாகத் தாவரங்கள் துளிர்விட்டிருக்கும். மரக்கன்றுகள் இலை பரப்ப ஆரம்பித்திருக்கும். ஆள், அரவமற்ற அந்தத் தீவில் சூரியனும் ஜாதவும் மட்டும் அந்தச் சந்தோஷத்தைக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். மரங்கள் உயர உயர, பறவைகள் அங்கேயே தங்க ஆரம்பித்தன. ஜாதவுக்குச் சிறகு முளைத்ததுபோல் இருந்தது. பறவைகளும் எச்சங்களால், மிச்சங்களால் விதைகளைத் தீவெங்கும் பரப்பின. சிறிது காலம் கழித்து, முயல்களும் மான்களும் அங்கே துள்ள ஆரம்பித்தன. ஜாதவின் மனமும்!

அது 1997-ம் ஆண்டு. 'மரம்தான்... மரம்தான்... எல்லாம் மரம்தான்’ என தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டிருந்த ஜாதவ், மறந்தார், மறந்தார் மற்றதை எல்லாம் மறந்தார். '34 வயசாகுது. சும்மா காடு, மரம்னு திரியாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோ’ ஊர்ப் பெரியவர்கள் வற்புறுத்தினார்கள். அவருக்கும் ஆசை இருந்தது...

ஒரு பெண் மீது. பெயர் பினிட்டா. ஜாதவைவிட 14 வயது இளையவள். கண்களால் பேசியே சில ஆண்டுகள் காதலித்தார்கள். விஷயம் தெரிந்ததும் பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை. 'காட்டுவாசிக்கு என் பொண்ணைத் தர முடியாது!’ பினிட்டா, ஜாதவுக்காக வீட்டைவிட்டு ஓடிவரவும் தயாராக இருந்தார். அப்படியே செய்தார். ஜாதவ், தன் வீட்டார் சம்மதத்துடன் பினிட்டாவைத் திருமணம் செய்துகொண்டார். மனைவி வந்த பின் ஜாதவின் கால்நடைகள் பெருகின. இரண்டு மகன்கள், ஒரு மகள்.

ஒருகட்டத்தில் ஜாதவ், தன் குடும்பத்துடன் தீவுக்கே இடம்பெயர்ந்தார். மிஸிங் பழங்குடியினர் பாணியில் மூங்கில்களாலும், விழுந்த மரங்களின் கட்டைகளாலும் தன் வீட்டை, பண்ணையைக் கட்டினார். கால்நடைகளை வளர்த்தார். வருமானத்துக்கு பால் வியாபாரம். மற்ற நேரங்களில் காடும் காடு சார்ந்த பணிகளும். வெறும் மணல் திட்டுக்களாக இருந்த அந்தத் தீவு வனமாக விரிய ஆரம்பித்தது. விவசாயம் செய்து பிழைக்கும் அளவுக்கு மண்ணின் தன்மை மாறியிருந்தது. ஆகவே, அந்தப் பெரிய தீவின் ஒரு பகுதியில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடியேறத் தொடங்கினார்கள். பயிர்த் தொழில் பெருகியது. மான், முயல் தவிர, காட்டெருமைகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், காண்டாமிருகங்கள், பல்வேறு பறவையினங்கள், கழுகுகள், பாம்பினங்கள் அந்தத் தீவில் செழித்து வாழ ஆரம்பித்தன. (இந்த உயிரினங்கள் எல்லாம் அந்தக் காட்டில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள காஸிரங்கா தேசியப் பூங்காவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவை)!

பின் புலிகளும் அங்கே வந்தன. வங்கப் புலிகள். ஆபத்தான புலியோடு மனிதன் வாழ முடியுமா? மான்களும் காட்டெருமைகளும் உள்ள இடத்தில் புலிகளும் இருக்க வேண்டும் அல்லவா? அப்போதுதான் இயற்கையின் உணவுச் சங்கிலி முழுமை பெறும். ஜாதவ், புலிகளை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாதபடி தன் பாதைகளை, நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டார்.

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

2008-ம் ஆண்டு. ஜிட்டு கலிட்டா என்கிற வனவிலங்கு ஆர்வலர், இந்தத் தீவில் பெரிய வனப்பகுதி இருப்பதாகக் கேள்விப்பட்டார். நம்பவே முடியாமல் தீவில் வந்து இறங்கினார். சில மைல்களுக்கு எதுவும் பசுமையாகத் தெரியவில்லை. பின்னர் தூரத்தில் மரங்கள் புலப்பட்டன. நடக்க நடக்க மாபெரும் வனப்பகுதி கண்கொள்ளாமல் விரிந்துகொண்டே சென்றது. விதவிதமான பறவைகள், பிற உயிரினங்கள். ஜிட்டு, அதிர்ச்சியுடன் நிற்க, சற்று தள்ளி ஒரு மனிதர் தென்பட்டார். ஜாதவ்தான். அந்தச் சமயத்தில் ஜாதவ் கையில் பெரிய கத்தியுடன் வேகமாக வர, ஜிட்டு பதறினார். 'நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்’ என அலறினார். 'முட்டாள்... உனக்குப் பின்னால பாரு...’ என ஜாதவ் கத்தினார். ஜிட்டு திரும்பிப் பார்க்க, காட்டு எருமைகள் நின்றிருந்தன. ஜிட்டு, பீதியுடன் ஜாதவை நோக்கி ஓடிவந்தார். ஜாதவ், சாதுர்யமாகக் காட்டு எருமைகளை விரட்டினார். ஜாதவின் குடிலில் அவரோடு பேசப் பேச, ஜிட்டுவால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை. தான் பல நூறு ஏக்கர் பரப்பளவில் காடு உருவாக்கிய கதையை ஜிட்டுவிடம் சொன்னார் ஜாதவ். அந்தப் பகுதி மக்கள், ஜாதவின் செல்லப்பெயரை வைத்தே 'மொலாய் காடுகள்’ என அதை அழைப்பதையும் புரிந்துகொண்டார்.

ஊர் திரும்பிய ஜிட்டு, மொலாய் காடுகள் குறித்து கட்டுரை எழுதி, அசாமிய தினசரி பத்திரிகை ஒன்றில் கொடுத்தார். எடிட்டர் செய்தியை நம்பாமல், 'கதை எல்லாம் நாங்க போடுவது இல்லை’ என மறுத்தார். அந்தச் சமயத்தில்தான் முதன்முதலாக யானைக் கூட்டம் அந்தத் தீவுக்குள் நுழைந்தது. யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தபடியே பின்தொடந்து வந்த வனத் துறையினரும் மொலாய் காடுகளை அடைந்தனர். அதிர்ச்சியில் உறைந்து அசந்து நின்றனர். தங்கள் வரைபடங்களை மீண்டும் மீண்டும் பார்த்துத் தலையைப் பிய்த்துக் கொண்டனர். ஆம், அசாமிய வனத் துறையினரே அறியாமல் அவர்கள் எல்லைக்குள் புத்தம் புதிதாக ஒரு வனம். அதுவும் வனவிலங்குகள் பல்கிப்பெருகி வாழும் வளமான வனம். அப்போதுதான் ஜாதவ் என்கிற ஒற்றை மனிதனின் செயற்கரிய செயல் வனத் துறையினருக்கு உறைத்தது. ஜிட்டுவின் கட்டுரை, எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒருவழியாக அந்தச் செய்தித்தாளில் அச்சானது. பின் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளிவந்தது. ஜாதவ் தேசிய அளவில் கவனம் பெற, மொலாய் காடுகளும் உலகின் வரைபடத்தில் அப்போது இணைந்தன.

தீவுக்குள் முதன்முதலாக யானைக் கூட்டம் வந்த மகிழ்ச்சி ஜாதவுக்கு அதிக காலம் நீடிக்கவில்லை. ஒருநாள் காலையில் தீவு மக்கள் ஜாதவின் வீடு முன் திகுதிகுவெனத் திரண்டனர். 'யானைங்க எங்க பயிரை எல்லாம் நாசமாக்கிருச்சு. எங்க வீட்டை எல்லாம் சிதைச்சிருச்சு. இங்க மூங்கில் காடு இருக்கிறதுனாலதான் யானைங்க வருது. அதெல்லாம் வெட்டிப் போடப்போறோம்.  தீ வெச்சுக் கொளுத்தப்போறோம்!’ ஜாதவ் துடித்துப்போனார். வார்த்தைகள் தடித்தன. அவருக்கு தர்ம அடி விழுந்தது. 'இங்க இருக்கிற ஒவ்வொரு மரமும் எனக்கு உயிர். மரத்தை வெட்டுறதுக்கு முன்னாடி என்னைத் துண்டுதுண்டா வெட்டிக் கொன்னுட்டுப் போங்க’ - ஜாதவ் போராடினார். இறுதியில் வனத் துறையினர் வந்து பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர். நஷ்டஈடு தருவதாக உறுதி அளித்தனர்.

ஜாதவ், சுயநலமிக்க மக்களின் மூடச்செயல்களுக்காக மனம் வருந்தி முடங்கவில்லை. யானைகள் ஏன் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன? உணவு தேடித்தானே. யானைகளுக்கு என மூங்கில்கள், வாழை, கரும்பு, அவை விரும்பி உண்ணும் புற்கள் என வனப்பகுதியில் பயிரிட ஆரம்பித்தார் (இப்போது வருடம்தோறும் 150-க்கும் அதிகமான யானைகள் இங்கே வந்து ஆறு மாதங்கள் தங்கி குட்டிகள் ஈன்று செல்கின்றன)! அதேபோல காண்டாமிருகங்களுக்கு என தனியே ஒரு வகைப் புற்களைப் பயிரிட்டார். அடுத்து புலிகளால்

பஞ்சாயத்து வந்தது. 'புலி, என் மாட்டை அடிச்சிக் கொன்னுருச்சு. நாளைக்கு மனுஷனையும் அடிக்கும். அதைச் சுட்டுக் கொல்லணும்’. ஜாதவ் பொறுமையாகப் பதில் சொன்னார். 'மனுஷன்தான் எல்லாத்துக்கும் மேலே என நினைக்கக் கூடாது. இந்தப் பூமியில விலங்குகளுக்கும் வாழுறதுக்கு சம உரிமை இருக்கு. என் பண்ணையிலயும்தான் 85 பசு, 95 எருமை, 10 பன்றிங்களை புலிங்க கொன்னுருக்கு. அதுக்காக நான் வருத்தப்படலை. அவை புலியோட உணவு. புலிகளுக்கு விவசாயம் தெரியாது இல்லையா?’ ஒவ்வொரு முறையும் மக்களோடு போராடுவது ஜாதவுக்கு வாடிக்கையாகிப்போனது.

2012-ம் ஆண்டில் ஓர் இரவில் காட்டினுள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுப் பதறி எழுந்தார் ஜாதவ். மனம் படபடத்தது. காட்டுக்குள் சென்று தேடினார். ஒன்றும் புலப்படவில்லை. மழை கடுமையாக இருந்ததால் வனத் துறையினரும் உதவிக்கு வரவில்லை. மூன்று நாட்கள் கழித்து, ஜாதவும் அவரது மகனும் காட்டில் தோட்டா பாய்ந்த ஒரு காண்டாமிருகத்தின் உடலைக் கண்டனர்; கதறி அழுதனர். அதன் ஒற்றைக் கொம்பை, நகங்களை, வாலை வேட்டைக்காரர்கள் அறுத்து எடுத்துச் சென்றிருந்தார்கள்.

அந்தப் பெரிய தீவில் 35 ஆண்டுகள் தனி ஆளாக முதுகெலும்பு தேய உழைத்து, ஜாதவ்

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

உருவாக்கிய காட்டின் பரப்பளவு சுமார் 1,360 ஏக்கர். அதற்காகப் பட்ட கஷ்டங்களைவிட, இப்போது காட்டையும் விலங்குகளையும் காப்பாற்ற ஜாதவ் அனுபவிக்கும் துன்பங்களே அதிகம். வேட்டைக்காரர்களின், மரம் கடத்தும் கும்பலின் அட்டூழியங்கள். வனவிலங்குகள் தொல்லை தருகின்றன என எதிராகத் திரளும் மக்கள்... இவை எல்லாவற்றையும் மீறி தனி ஒருவனாக தன் வனத்தைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருக்கிறார். 'இதைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, வனத் துறையினரே பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் அரசிடம் சில ஆண்டுகளாகப் போராடிவருகிறார் ஜாதவ். 'இதை 'ஜாதவ் வனவிலங்குகள் சரணாலயம்’ என அறிவிக்க வேண்டும்’ என்றும் சில ஆர்வலர்கள் அரசிடம் கோரிவருகின்றனர். எதற்கும் அசாம் அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை!

இது இந்தியா அல்லவா? இங்கே இயற்கையைப் பாதுகாக்கப் போராடுபவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள். சம்பிரதாயத்துக்கு மரக்கன்று நடும் விழாவில் கையில் மண் படாமல் புகைப்படத்துக்குச் சிரிக்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மதிப்பு உண்டு. ஜாதவ் ஒருபோதும் மனிதர்களை நம்புவது இல்லை. அவர் நம்புவது இயற்கையை மட்டும்தான். எதற்கும் மனம் தளராமல், இப்போது தனது அடுத்த திட்டத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார். தீவின் இன்னொரு பகுதியில் புதிய காட்டை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார். 'பெரிய சவால்தான். ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் இங்கேயும் ஒரு காட்டை உருவாக்கிவிடுவேன். என்னால் முடியும். என் மகன்கள் உதவுவார்கள்!’

தவிர, இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளில் பசுமையாக மாற்ற ஒரு திட்டத்தையும் ஜாதவ் முன் வைக்கிறார். 'ஒவ்வொரு மாணவனும் இரண்டு மரக்கன்றுகளையாவது நட்டு, முறையாகப் பராமரித்து வளர்க்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் வருட இறுதியில் தேர்ச்சி எனக் கட்டாயமாக அறிவிக்க வேண்டும். இது கடுமையானதாகத் தோன்றலாம். ஆனால், வருங்கால சந்ததியினர் சுவாசிக்க ஆக்சிஜன் வேண்டும் அல்லவா!’

முதலமைச்சருக்கு ஒரு பளார்!

இன்றைய இந்தியாவின் நம்பர் ஒன் சூழலியல் பாதுகாப்பாளர் ஜாதவ் பேயெங். 2012-ம் ஆண்டில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாதவுக்கு ‘Forest Man Of India’ என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கியது. அதே ஆண்டு அப்துல் கலாமும் ஒரு விழாவில் ஜாதவுக்குப் பரிசு அளித்தார். 2015-ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியுள்ளது. கௌஹாத்தி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.  Forest Man of India(https://www.youtube.com/watch? v=7vPFF03JC20), Forest Man  (வீடியோ: https://www.youtube.com/watch?v=HkZDSqyE1do)   ஜாதவ் குறித்த இந்த ஆவணப் படங்கள் முக்கியமானவை. 2012-ம் ஆண்டு செப்டம்பரில், ஜிட்டுவின் உதவியுடன், பிரான்ஸ் சென்ற ஜாதவ், அங்கே நடந்த உலக வெப்பமயமாதல் குறித்த சர்வதேச மாநாட்டில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டு தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

யாராவது பாராட்டி பணம் கொடுத்தால் அந்தத் தொகை முழுவதையும் காட்டை உருவாக்கவே செலவிடுகிறார் ஜாதவ். அந்தப் பணத்தில் நான்கைந்து பேருக்குக் கூலி கொடுத்து கூடுதல் வேலைகள் செய்கிறார். தவிர ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தன் மரம் நடும் பணி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விழாக்களைத் தவிர்க்கிறார். 'என்னைப் பாராட்ட நினைத்தால் வாருங்கள், என்னோடு வந்து மரம் நடுங்கள்’ என்பதே ஜாதவின் வேண்டுகோள். ஒருமுறை அசாம் முதலமைச்சர் தருண் கோகய், ஏதோ பாராட்டுப் பத்திரம் வழங்குவதற்காக ஜாதவை வரச்சொல்லி, நீண்ட நேரம் காக்கவைத்தார். முதலமைச்சரைச் சந்தித்தபோது ஜாதவ் சொன்ன வார்த்தைகள், 'இங்கே காத்திருக்கும் வேளையில் நான் சில மரக்கன்றுகளையாவது நட்டிருப்பேன். என் நேரத்தை வீணடிப்பவர்களை எனக்குப் பிடிக்காது!’

தேவை தென்னை!

மஜுலி தீவு, பரப்பளவில் சுருங்கிக்கொண்டே வருகிறது. காரணம், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளம், மண் அரிப்பு. இப்படியே சென்றால் இந்தத் தீவு சில 10 ஆண்டுகளில் நீரில் மூழ்கிப்போய்விடும் அபாயம் உண்டு. அதற்காக ஜாதவ் முன் வைக்கும் யோசனை, 'மண் அரிப்பு அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் தென்னை மரங்களை நடுவோம். அவை தீவையும் பாதுகாக்கும்; பிற்காலத்தில் அரசுக்குப் பொருளாதார ரீதியாகவும் பலன் கொடுக்கும்.’

நம்பர் 1 ஜாதவ் பேயங் - 28

'என்னுடன் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்த நண்பர்கள் இன்று இன்ஜினீயர்களாக, அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள். பெரிய வீடு கட்டி வசதியாக இருக்கிறார்கள். நானும் அப்படி ஆகவில்லையே என நான் எப்போதும் வருத்தப்பட்டது இல்லை. இந்தக் காடுதான் எனது மிகப் பெரிய வீடு. இங்கே நான் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்கிறேன்!’