எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்
ஆதிஷங்கர், சான்ஃபிரான்சிஸ்கோவில் குளிரும் தன் வீட்டில் இருக்கும் அந்தப் பிரத்யேக அறையின் கதவைத் திறக்கப் போனான். அம்மா கொலு வைத்திருக்கிறாளாம். 'வந்து பார்’ என இரண்டு நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறாள். இன்றுதான் நேரம் கிடைத்தது.
கதவைத் திறந்தவன் அறைக்குள் கொலுவையும் அம்மாவையும் பார்த்து ஒரு கணம் திகைத்தான். நெருங்கிச் சென்று, கட்டி அணைத்து அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டான். அம்மா அவன் தலையை வருடிவிட்டாள். உண்மையில் இதமாக இருந்தது.

'இப்போதாவது நேரம் கிடைச்சுதே' என முனகியபடி தீபத்தை ஏற்றினாள். அதன் ஒளியில் அம்மா இன்னும் துல்லியமாக அசைந்தாள்.
கொலு பொம்மைகளை உற்றுப் பார்த்தான். பளிச்சென இருந்தன. தனக்குப் பிடித்த 'கிரிக்கெட் விளையாட்டு செட்’டைத் தொட்டுப்பார்த்தான். அம்மா கையை விலக்கி, 'பார்த்துடா... தட்டிவிட்டு உடைச்சுடாதே' என்றாள். அதே பழைய செல்லக் கோபம்.
பூஜை முடித்து மென்சோகத்துடன் சிரித்தாள்.
'சரி... பிரசாதம் என்ன வெச்சிருக்கே?' என்றான்.
'உனக்குப் பிடிச்சதுதான்... சுண்டல்' என, தொன்னையை முகத்துக்கு நேராக நீட்டினாள்.
'சரி வர்றேன்மா... வேலை நிறையக் கிடக்குது. புராஜெக்ட் டெட்லைன் நாளைக்கு...' என்றபடி ஒரு பிடி சுண்டலை அள்ளி வாயில் போட்டு மென்றுகொண்டே, கதவைத் திறந்து வெளியே வந்தான். அறைக்குள் லேசர் கற்றைகள் அணையத் தொடங்கின.
வாய்க்குள் போட்ட டிஜிட்டல் ஹோலோகிராம் சுண்டல் காணாமல்போயிருந்தது!
உலகம் முழுக்க வீடற்றவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேபோகிறது. '100 மில்லியனைத் தாண்டிவிட்டது’ என ஒரு பழைய புள்ளிவிவரம் சொல்கிறது. விவசாயம் போன்ற தற்சார்பு கிராம வாழ்க்கையை உலகமயமாக்கல் அழிப்பதும் ஒரு காரணம். மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து அடையாளம் இல்லாமல் தெருக்களில் நாடோடிகள்போல வாழவேண்டிய சூழல். பெரும்பாலான நாடுகளின் கதையும் இதுதான்.

வின்ஃப்ரெய்ட் பாமென் (Winfried Baumann), ஜெர்மன் கட்டடக் கலைஞர்; டிசைனர்; ஓவியர் என மனிதருக்குப் பன்முகங்கள். தன் கலையை வீடற்றவர்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார் அல்லது வீடற்றவர்களின் நிலைமையை தன் கலை வழியாகக் காட்சிப்படுத்துகிறார். நுகர்வுக் கலாசாரத்தின் குறியீடுகளான பொருட்களைக் கொண்டே ஆடைகளை வடிவமைக்கிறார்; நடமாடும் வீடுகளை உருவாக்குகிறார். அவை கண்காட்சிகளாக வைக்கப்பட்டு பார்வையாளர்களின் மனதில் கேள்விகளை நிறைக்கின்றன.
'இவற்றை வெறும் கலைப்பொருட்களாக மட்டும் பார்க்கவில்லை; சமூக விமர்சனமாகவும் பார்க்கிறேன். இந்தப் படைப்புகளில் இருக்கும் சோகத்தை வீடற்றவர்களால் உணர முடியும்’ என்கிறார்.

இந்தப் படைப்புகளை மொத்தமாகப் பார்க்கும்போது, வீடற்றவர்களின் நடைபாதைத் தனிமை நமக்குள்ளும் ஒரு வலியாக எஞ்சுவதை உணர முடிகிறது!
'பூனைகள் துறவிகள் போன்றவை’ என்பான் என் நண்பன் ஒருவன். சில பூனைகளைக் கவனித்தால், 'உண்மையோ?’ எனத் தோன்றும். 'தாமரை இலை தண்ணீர்’போல முகத்தில் ஒரு பற்றற்றத் தன்மை. பூனைகளிடம் நாய்களைப் போல கவலை, சந்தோஷ மிகுதி, நன்றி உணர்ச்சி போன்ற பாவனைகளை அவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியாது. ஒருவித ஆழமான அமைதி. நிதானமான மிதக்கும் உடல் அசைவுகள். தன் வாழ்வின் மூன்றில் இரண்டு பங்கைத் தூங்கியே கழிக்குமாம். அதாவது ஒரு பூனை ஒன்பது ஆண்டுகள் உயிரோடு இருந்தால், அதில் ஆறு வருடங்கள் தூக்கம்.

எகிப்தில் பூனையை வழிபாட்டு விலங்காக வளர்த்து, வணங்கியிருக்கிறார்கள். எலியைக்கூட பிள்ளையாரின் வாகனமாக வணங்கிய நாம், எனக்குத் தெரிந்தவரையில் பூனைகளை வணங்கவோ, வாகனமாகக் கொள்ளவோ இல்லை என்பதன் இந்திய உளவியல் என்ன?
திருவல்லிக்கேணியின் நெருக்கமான வீட்டுச் சந்து-பொந்துகளில்கூட, 'காங்கிரீட் வனராஜா’க்களாகத் திரியும் பூனைகளை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன். பூனைகளின் முன்னங்கால் எலும்புகளுடன், அதன் விலா எலும்புகள் பிரத்யேகமான நெகிழும் தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளதாம். அதனால்தான் அவற்றால் தன் தலை நுழைந்துவிட முடிகிற இடுக்கில்கூட, முழு உடலையும் நுழைத்துவிட முடிகிறது.
கிராமத்தில் எங்கள் வீட்டில் வளர்க்கும் பூனைகள், நாங்கள் சாப்பிடும்போது பக்கத்திலேயே காத்திருக்கும். மீன் முள், மாமிசத்தின் மிஞ்சும் எலும்புகள் போன்றவற்றைத் தூக்கிப்போட்டால், உடனுக்குடன் கடித்துக் காலி செய்யும். ஆனால் பெரும்பாலும் நகரத்தில் எஞ்சியவை, பாலித்தீன் பைகள் வழியாக பெரிய பச்சை குப்பைக்கூடைக்குப் போய்விடுகின்றன. விளம்பரங்களில் வருவதுபோல வீட்டைவிட்டு வெளியே சென்று சாகும்படி, எலிகளுக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிடுகிறோம். இந்த நகரத்தில் பூனைகள் எதைத் தின்று பிழைத்திருக்கின்றன எனத் தெரியவில்லை.
எங்கள் வீட்டில் மீன் சமைத்தால், எனக்கு முன்பே தெருக்கோடிப் பூனை அதைக் கண்டுபிடித்து சமையல் அறை ஜன்னலையே சுற்றிவருகிறது. காரணம், மனிதனைவிட பூனைக்கு 14 மடங்கு அளவுக்கு மோப்ப சக்தி அதிகம். பூனைகள் இனிப்புகளை விரும்புவது இல்லை தெரியுமா? அதன் நாவின் இனிப்பு அறியும் சுவைமொட்டுக்களை, பரிணாம வளர்ச்சியில் எப்படியோ அது இழந்திருக்கிறது. டார்வினுக்கே வெளிச்சம்!

மண்ணெண்ணெய் விளக்கான ஹரிக்கேன் விளக்கு (Hurricane lamp), இன்றும் நமது ஞாபகங்களில் சுடர்விடும் ஒன்று. மின்சாரம் மூலைமுடுக்குகள் எல்லாம் பரவாத காலத்தில், கிராமங்களின் இருளைத் துரத்திக்கொண்டிருந்தவை மண்ணெண்ணெய் விளக்குகள். 'மண்ணெண்ணெய் விளக்கில் படித்துதான் நான் இந்த அளவுக்கு முன்னுக்கு வந்தேன்’ என்கிற டயலாக் உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கும். அதிலும் சற்றே வசதியானவர்கள் வீட்டில்தான் இந்த ஹரிக்கேன் விளக்குகள் இருக்கும். மாட்டுவண்டிக்கு அதுதான் ஹெட்லைட்.
அதன் மெக்கானிஸம் சுவாரஸ்யமானது. மற்ற விளக்குகளைப்போல இதன் திரிக்காக பழைய துணிகளைக் கிழித்து, தொடையில் வைத்து உருட்டி, சுருட்ட முடியாது. இதன் திரி, நாடாபோல தட்டையாக இருக்கும். கடையில்தான் வாங்க வேண்டும். ஒரு சின்ன கொக்கிபோன்ற சிஸ்டத்தை மேல் நோக்கித் தூக்கினால், அதன் கண்ணாடி அமைப்பைக் கழற்றி எடுத்துவிடலாம். சுடரைப் பற்றவைத்த பின்னர், மீண்டும் அதைப் பொருத்தி ஒருவிதமாக லாக் செய்து, பழைய அமைப்புக்குக் கொண்டுவந்துவிடலாம். புயலே அடித்தாலும் சுடர் அசையாது. பெயர்க் காரணம் புரிகிறதா?

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரப் பற்றாக்குறையைப் பார்த்து, கிராமத்துப் பரண்களில் தூசி படிந்து, துருப்பிடித்த, கண்ணாடி உடைந்த ஹரிக்கேன் விளக்குகள் புன்னகைத்தபடி கிடக்கின்றன!
ஜிப் போட மறப்பது அனைவருக்கும் வாழ்வில் ஒரு முறையேனும் நடந்திருக்கும். பிரெஞ்சு ஃபேஷன் டிசைனர்கள் ஜிப்பை உடைகளில் பயன்படுத்தியபோது எஸ்கொயர் இதழ், 'ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பில் ஒரு புதிய ஐடியா’ எனக் கொண்டாடியது. 'குழந்தைகள் இனி தாங்களே டிரெஸ் பண்ணிக்கொள்வார்கள்’ என பெற்றோர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள். பிறகு, எல்லோருக்குமான ஆடைகளில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக, கடந்த நூற்றாண்டில் ஜிப்பின் வளர்ச்சி 'சர்ர்ர்’ என மேல்நோக்கி எகிறியிருக்கிறது.

உண்மையில் ஜிப்பைக் கண்டுபிடித்தது யார்?
19-ம் நூற்றாண்டு 'எலியாஸ் ஹவே’ முதல் 20-ம் நூற்றாண்டு 'கிடியோன் சண்ட்பேக்’ வரை பல பெயர்களின் லிஸ்ட், ஜிப்பின் பற்களைப்போலவே நீள்கிறது. 1851-ம் ஆண்டில் எலியாஸ் கண்டுபிடித்த கிட்டத்தட்ட ஜிப் போலவே துணிகளை இணைக்கும் சாதனத்தை, 40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1893-ம் ஆண்டில் 'விட்காம்ப் ஜட்சன்’ என்பவர் மேலும் மெருகேற்றி பேட்டன்ட் வாங்கியிருக்கிறார். ஆனாலும் அது எண்ணிக்கை குறைவான பெரிய பற்களுடன் கரடுமுரடாக இருந்திருக்கிறது. 1913-ம் ஆண்டில் கிடியோன் சண்ட்பேக் என்கிற ஸ்வீடிஷ் டிசைனர்தான் நிறையப் பற்கள் உள்ள, சரியாக இணைக்கும் விதத்தில், நாம் இப்போது உபயோகிக்கும் ஜிப்பை உருவாக்கினார். இன்று உடைகளில் மட்டும் அல்லாது காலணி, பைகள் என ஜிப்பின் பயன்பாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.
ஜிப்கள் ஃபேஷன் ஸ்டைலில் ஓர் அங்கமாக இருந்திருக்கின்றன; இருக்கின்றன. 80-களின் சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோக்கள் நீளமான ஷூ மற்றும் லெதர் ஜெர்கினின் ஜிப்பை இழுத்துத் தயாராகும் க்ளோஸ்-அப் காட்சிகள் வந்தால், வில்லனைத் துவம்சம் செய்யப்போகிறார்கள் என நாம் கொண்டாடியது ஞாபகம் வருகிறதா?