Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 12

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

சு.வெங்கடேசன், ஓவியம்: ஸ்யாம்

வைகை நதியைக் கடக்கும்போது தென்படும் கோட்டை மதில்களின் பிரமாண்டத்தில் இருந்து தொடங்குகிறது கோவலனின் வியப்பு. மூத்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்ட மதுரையை, அப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறான் கோவலன். அவனது பார்வையின் வழியே மதுரையை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் இளங்கோ. கம்பீரமான கோட்டை. அந்தக் கோட்டை மதில்களைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் யவன (கிரேக்க) வீரர்கள். வாள்வீச்சில் மகா கெட்டிக்காரர்களான யவன வீரர்களைப் பார்த்தபடியே, வியப்பு குறையாமல் மதுரை நகருக்குள் நுழைகிறான் கோவலன். 

முழங்கால் வரை குறுகிய பாவாடை போன்ற வட்டுடை அணிந்து, உடம்பில் சட்டை அணிந்து, கையில் ஆயுதத்துடன் அச்சம் தரும் தோற்றத்தை உடைய யவனர்கள், பாண்டியனின் பாசறையில் இருந்ததைப் பற்றி முல்லைப்பாட்டு ஆசிரியர் பேசுகிறார். இளங்கோவடிகளும் நம்பூதனாரும் எழுதிய மதுரையைப் பற்றிய வர்ணனைக்குள் உலகின் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த யவனர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள்? 21 அடி நீள ஈட்டியை உருவாக்கி உலகையே கலக்கியவர்கள், இப்போது கூரிய வாளோடு மதுரைக் கோட்டையைக் காவல்செய்ய வந்தது எப்படி, இதற்கு மட்டும்தான் வந்தார்களா அல்லது வேறு பணிகளும் செய்தார்களா... எனக் கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

இந்தியாவில் வேறு எந்த மன்னனின் கோட்டைக் காவலிலும் பாசறையிலும் படையிலும் கிரேக்க வீரர்கள் இருந்ததாக இலக்கியங்கள் சொல்லவில்லை. அப்படியிருக்க, மதுரையைப் பற்றிய வர்ணனையில் மட்டும் மீண்டும் மீண்டும் இந்தச் செய்தி சொல்லப்படுவது ஏன்? அது மட்டும் அல்ல, இவற்றின் அடுத்தகட்டமாக பாண்டிய மன்னன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், யவனப் பெண்ணை தனது மனைவியாக ஏற்றுக்கொண்டான் என்றும், அவனது அந்தப்புரத்தில் யவனப் பெண்கள் பலர் மெய்க்காவலர்களாக இருந்தனர் என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது.

வைகை நதி நாகரிகம் ! - 12

அதாவது கையில் ரோமானியக் குவளையில் மது, உடன் ரோமானிய மனைவி, காவலுக்கு ரோமானிய வீரர்கள், அவர்கள் தங்கியிருக்க ரோமானியக் குடியிருப்பு (யவனச்சேரி) எல்லாம் மதுரையில் இருந்துள்ளனர். எண்ணற்ற யவனப் பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சுமார் 300 ஆண்டுகளாக கிரேக்கத்துக்கும் தமிழகத்துக்கும் கடல் வணிகம் தீவிரமாக நடந்த காலத்தில்தான். அப்படியென்றால், எதைக் கொடுத்து இவ்வளவையும் பெற்றார்கள்?

கி.பி முதலாம் நூற்றாண்டில் பெயர் அறியப் படாத கிரேக்க மாலுமியால் எழுதப்பட்ட  ‘The Periplus of the Erythraean Sea’ என்ற நூலில், ரோமானியப் பேரரசுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் விவரங்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் முத்து, மிளகு, பட்டு, கற்பூரம், நவரத்தினங்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தமிழகத்தில் இருந்து கிரேக்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதில் பாண்டிய நாட்டு முத்துக்களும், சேர நாட்டின் மிளகும், சோழ நாட்டின் நவரத்தினக் கற்களும் பிரதானமானவை. குறிப்பாக, முத்துக்களின் ஆதிக்கமே அன்று ரோமாபுரியை ஆட்டிப்படைத்திருக்கிறது. ஒரு பெண், முத்து அணிந்து பொது இடத்தில் நடந்து செல்வது என்பது, அவளுக்கு முன்னால் ஒரு படைவீரர் நடந்து செல்வதைப்போல மதிப்பு அளிப்பதாக அவர்கள் கருதினார்கள்.

ரோமானியப் பெண்கள் தங்களின் விரல்களிலும் காதுகளிலும் மட்டும் அல்ல, கால் செருப்பிலும் முத்துக்களை அணிந்துகொண்டனர். இது, ரோமானிய செனட் சபையில் பெரும் புயலைக் கிளப்பியது. ரோமாபுரியில் இருந்து வருடத்துக்கு மில்லியன் தொகைகள் மதிப்பிலான தங்கம் வீணாவதாக அரசின் கணக்காளர்கள் கண்டித்தார்கள். இதில் பாதி, தமிழகத்துடனான வர்த்தகத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது. ரோமாபுரிப் பெண்கள் முத்துக்களின் மீது கொண்டுள்ள மோகத்தைத்தான் செனட் சபை தீவிரமாகக் கண்டிக்கிறது. இந்த முத்துக்களைக் கொண்டுவர பயங்கரமான கடல் பயணத்தையும், சூரிய வெப்பத்தால் தாக்கப்படும் நிலப்பகுதியையும் கடந்துவர வேண்டியுள்ளது என்பதை கண்டன உரைகள் சுட்டிக்காட்டுகின்றன. ரோமாபுரி, முத்துக்களின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்தது என்பதற்குச் சிறந்த உதாரணம் கிளியோபாட்ரா. அவளின் புகழ்பெற்ற முத்தாலான காது வளையங்கள் 1,15,458 பவுண்டுகள் மதிப்புகொண்டவை. கிளியோபாட்ரா, தான் அருந்தும் மதுவில் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த முத்தைக் கரைத்துக் குடித்தாள் என்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

செருப்புக்கு அலங்காரம் செய்வதில் தொடங்கி, மதுவில் கரைத்துக் குடிப்பது வரை முத்துக்களைப் பயன்படுத்தினால், அப்புறம் தங்கம் கட்டுக்கடங்காமல் கடல் கடக்காதா என்ன? எருக் காட்டூர் தாயங்கண்ணனார் தான் எழுதிய அகப்பாடலில் யவனர்கள் தங்களின் கப்பல்களில் பொன்னைக் கொண்டுவந்து இறக்குவதைப் பற்றி குறிப்பிடுகிறார். ரோமானிய நிர்வாகிகளின் கண்டனமும், எருக்காட்டூராரின் வர்ணனையும், கிளியோபாட்ரா கரைத்துக் குடித்த மதுவும் சொல்லும் செய்தி ஒன்றுதான். பாண்டிய நாட்டு முத்துக்களைப் பெற ரோமாபுரியில் இருந்து கணக்கற்ற பொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக போர் வீரர்களும் பெண்களும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வைகை நதி நாகரிகம் ! - 12

2,000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த எழுத்துக்களில் இருக்கும் உண்மைத்தன்மையை மெய்ப்பிக்கின்றன தற்போதைய ஆய்வுகள். இந்தியாவில் இதுவரை 129 இடங்களில் ரோமானிய நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 90 சதவிகிதம் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மதுரையில் யவனர்கள் தங்கியிருந்த குடியிருப்பான யவனச்சேரி இருந்ததாக இலக்கியங்கள் கூறுவதும், ரோமானிய செனட்டில் முத்துக்களுக்காக கண்டன உரை நிகழ்த்தப்பட்டதற்கும், வைகையின் தொடக்கம் முதல் கடைப் பகுதி வரை ரோமானிய நாணயங்கள் கிடைப்பதற்கும் உள்ள உறவை வரலாறு நமக்குத் தெளிவாகவே விளக்குகிறது.

இலக்கியம் மற்றும் வரலாற்று நூல்கள் கூறும் இந்த விவரங்களுக்கான மற்றொரு வலிமைமிகுந்த ஆதாரத்தைத்தான் அழகன்குளத்து அகழாய்வு நமக்குத் தந்தது. அதுவரை இலக்கியத்தில் மட்டுமே சொல்லப்பட்டுவந்த அழகிய ரோமானிய மதுக்குவளையின் உடைந்த  பகுதி அகழாய்வில் கிடைத்தது. தவிர, ரோமானிய மன்னர்களின் காசுகளும், ரோமானியக் கப்பல் கோட்டோவியமும், ரோமானிய ரௌலட்டட் மண்பாண்ட ஓடுகளும், எகிப்தியப் பிரமிடுகளில் உள்ளது போன்ற அழகியப் பெண் உருவங்களுடன்கூடிய பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளன. கிரேக்கத்துக்கும் தமிழகத்துக்குமான தொடர்புக்கு பல ஆதாரங்களைக் கொடுக்கிறது வைகையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள அழகன்குளம்.

வெம்பூர் குத்துக்கல்லும் புல்லிமான் கோம்பை நடுகல்லும் கோதையும் அந்துவனும் கடற்கரை காக்கையும் மாமூலனார் கவிதையும் அழகன்குளத்து பானையோட்டு ஓவியமும் மதுச்சாடியும் வைகை நதிக்கரையில் உருவான பழம்பெரும் நாகரிகத்தின் அடையாளங்களை தங்களுக்குள் தாங்கி நிற்கின்றன. 'திராவிட நாகரிகத்தின் தாயகமாக வைகை நதிக்கரை நாகரிகம் விளங்கியதா?’ என்ற ஆராய்ச்சியை நோக்கி எதிர்காலம் செல்வதற்கான பல அடிப்படைகளை இந்த ஆதாரங்கள் கொண்டுள்ளன. இத்தகைய ஒரு கருத்தை முன்வைப்பதுகூட வெறும் அனுமானத்தில் இருந்து மட்டும் அல்ல, அடிப்படை சான்றுகளைக்கொண்டுதான்.

உலகில் கல்வெட்டுகள் மிக அதிகம் கிடைக்கும் நாடுகளில் ஒன்று, இந்தியா. இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் மொழி சார்ந்தவை. தமிழ் மொழியில் காலத்தாலான மிகப் பழைமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் 33 இடங்களில் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றில் சுமார் 22 இடங்கள் வைகைப் பகுதியில் அமைந்துள்ளவை. இந்தப் புள்ளிவிவரம் மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிப் பாதையில் தமிழ் மொழியின் பங்களிப்பையும் வைகை நதியின் பங்களிப்பையும் தெளிவாக முன்வைக்கிறது.

வைகை நதி நாகரிகம் ! - 12

அதனால்தான் சங்கப் புலவர்கள் மதுரையை, 'புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்’ (புலமையிலும் போரிலும் தோற்காத கூடல்) எனக் குறிப்பிட்டனர். தமிழுக்கு ஊறு நேராதவாறு வேலி, பயிரைக் காத்தல்போல காத்ததினால் மதுரையை 'தமிழ் வேலி’ எனப் புகழ்ந்தனர். வைகையை 'தமிழ் வைகை’ என அழைத்தனர். மொழியும் பண்பாடும் இறுகப் பின்னிக்கிடந்த ஒரு நகரத்தை, நாகரிகத்தின் குறியீடாகவும் மொழியின் அடையாளமாகவும் மாற்றினர். ஆதிகாலம்தொட்டு இருக்கும் இந்த அடையாளத்தின் மீது சமீபத்தியக் கண்டுபிடிப்பு புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான மத்திய தொல்லியல் ஆய்வுக் குழு கடந்த ஏழு மாதங்களாக அகழாய்வை நடத்தி, வைகைக் கரையில் சுமார் 2,500 ஆண்டுக்கு முந்தைய நகரத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த நகரத்தின் பெயர் என்ன?

1921-ம் ஆண்டில் சிந்து நதியின் மேற்கு கரையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் முட்புதர்கள் நிறைந்திருந்த ஒரு மேட்டில், சிதறிக்கிடந்த செங்கற்களைப் பார்த்த தொல்லியல் நிபுணர் ஆர்.டி.பானர்ஜி, அங்கு விரிவான முறையில் அகழாய்வு நடத்தினார். மண்ணுக்குள் இருந்து பெரும் நகரமைப்பைக் கண்டறிந்தார். இந்த நகரத்துக்கு என்ன பெயர் இருந்தது எனத் தெரியாது. அதனால் இப்போது இருக்கும் அந்தக் கிராமத்தின் பெயரிலேயே 'மொகஞ்சதாரோ’ என அழைத்தார்.

மகாகவி ஹோமர் எழுதிய 'இலியட்’ காவியத்தைப் படித்த ஹென்றிச் ஸ்லீமென், அந்தக் காவியத்தில் வருகிற 'டிராய் நகரம்’ வெறும் கற்பனை அல்ல உண்மை என நம்பினார். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து ஆசியன் மைனரில் உள்ள ஹிசார்லிக் குன்று பகுதியில் அழகாய்வை நடத்தினார். மண்ணுக்குக் கீழ் மூன்றாம் அடுக்கில் டிராய் நகரம் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவை இரண்டும் இரு வகை உதாரணங்கள். பெயர் தெரியாத பழைய நகரத்துக்கு இப்போது உள்ள கிராமத்தின் பெயரில் 'மொகஞ்சதாரோ’ என அழைப்பதும், காவியத்தில் சொல்லப்பட்ட குறிப்புகளை வைத்து மண்ணுக்குள் கண்டறியப்பட்ட நகரத்தை அதன் பூர்வீகப் பெயரில் 'டிராய்’ என அழைப்பதும் இரண்டு வகையான உதாரணங்கள்.

இப்போது நம் முன் உள்ள கேள்வி இதுவே... சிலப்பதிகாரமும் பரிபாடலும் இன்னும் சில  இலக்கியங்களும் சொல்கிற நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் இந்த நகரை 'பழைய மதுரை’ எனச் சொல்லப்போகிறோமா அல்லது மதுரை என்ற பெருநகரத்துக்குப் பக்கத்தில் இருந்த துணை நகரமாக இருந்திருக்கும் இந்த நகரின் பெயர் என்ன என்பது தெரியாததால் இன்று உள்ள கிராமத்தின் பெயரான 'கீழடி’ என்றே அழைக்கப்போகிறோமா?

இந்தக் கேள்வியை 43 அகழாய்வுக் குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள சுமார் 2 லட்சம் பானை ஓடுகள் நம் முன் வைத்துள்ளன. ரகசியங்களின் ஆதிநிலம் முன்வைக்கும் இந்த ஒற்றை வரிக் கேள்விக்கான பதில், ஒரு நகரத்தைப் பற்றியது அல்ல, ஒரு நாகரிகத்தைப் பற்றியது!

- ரகசியம் விரியும்