மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 25 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம், படங்கள்: கே.குணசீலன் ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

ண்பர்களுடனான அரட்டை ஜமா ஒருவரை என்னவாக்கும்? நம் இந்த வார 'வி.ஐ.பி’ வைத்திலிங்கத்தை அமைச்சர் ஆக்கியது! 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிக்காட்டில் பிறந்த வைத்திலிங்கம், பள்ளிப்படிப்பைச் சுற்றுவட்டாரங்களில் முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் தொடர்ந்தார். ஆனால், 'சிட்டி’ வாழ்க்கை வைத்திலிங்கத்துக்குப் பழகவில்லை. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் வேலை தேடாமல் ஊருக்கே  திரும்பிவிட்டார். விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தவர், தினமும் வேலை முடிந்ததும் ஒரத்தநாட்டுக்கு பஸ் ஏறிவிடுவார். அங்கே இருக்கும் நண்பர் பன்னீரின் சைக்கிள் கடையில் கூடும் ஜமாவில் ஐக்கியமாவார். அரசியல் அரட்டை அங்கே அரங்கேறும். வைத்திலிங் கத்துக்குப் பொழுதுபோக்கு வாசஸ்தலமாக அமைந்த பன்னீர் சைக்கிள் கடைதான் அரசியல் ஆசையை உருவேற்றி, அவரை ஒரு சுபமுகூர்த்த சுபநாளில் அ.தி.மு.க உறுப்பினர் ஆக்கியது.

பின்னர் கட்சி செல்வாக்கில் பள்ளம் விழுந்து சற்றே மனம் ஒடிந்திருந்தபோது, 'அரசியலை விட்டே ஒதுங்கிவிடலாம்’ என நெருக்கமானவர் களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது பன்னீர் சைக்கிள் கடை நண்பர்கள், 'ஒரு ஜோசியரைப் பார்த்து குறி கேட்கலாம். அப்புறம் முடிவுசெய்யலாம்’ என யோசனை சொன்னார்கள். ஜோசியர் வீரகபிலனைச் சந்தித்தபோது, 'உனக்கு மந்திரியாகக்கூடிய யோகம் இருக்கு. அரசியலைவிட்டு விலகாதே’ எனச் சொன்னார். மனசுக்குள் சிரித்துக் கொண்டாலும் அதுவரையிலான சோர்வை மறந்துவிட்டு, 'இனி அரசியல்தான் எல்லாம்’ எனப் பரபரப்பானார்.  

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கத்துக்கு எம்.எல்.ஏ ஸீட் கிடைத்தது. அப்போது ஒன்றியச் செயலாளராக இருந்தவர், 'கையில் காசு இல்லை... கட்சியில் செல்வாக்கு இல்லை. எப்படி தேர்தலைச் சந்திக்கப்போகிறோம்?’ எனத் தயங்கினார். அப்போதும் கைகொடுத்தது சைக்கிள் கடை நண்பர்கள்தான். நண்பனுக்காக உற்சாகமாகக் களத்தில் இறங்கி தேர்தல் வேலை பார்த்தவர்கள், முடிந்தவரை பணம் திரட்டிக்கொடுத்தார்கள். அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த அந்தத் தேர்தலில் நண்பர்கள் உதவியோடு வென்று 'மக்கள் பிரதிநிதி’ ஆனார். கூடவே, அ.தி.மு.க-வின் 'அமைச்சரவை மாற்ற மேளா’வில் அமைச்சரும் ஆனார் வைத்திலிங்கம்!

மந்திரி தந்திரி - 25 !

மீட்டிங்... மீட்டிங்... மீட்டிங்!

கட்சிக்கு வெளியே நண்பர்கள் ஆதரவு இருந்தாலும், மன்னார்குடி திவாகரன் உதவியோடுதான் கேபினெட்டில் இடம்பிடித்தார் வைத்திலிங்கம். முதலில் தொழில் துறையையும் அடுத்து ஊரகத் தொழில் துறையையும் கவனித்தார். ஆசைப்பட்டு அமைச்சர் ஆனவரால், அந்தப் பதவி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. ஒருகட்டத்தில், 'எனக்கு மந்திரி பதவியே வேண்டாம். அதிகாரிகள் 'மீட்டிங்... மீட்டிங்...’ எனச் சொல்லி வறுத்தெடுக்கிறார்கள். அங்கு போனால், அவர்கள் பேசுவது, எனக்கு எதுவும் புரியவில்லை’ எனப் புலம்பினார். அது அவருடைய செயல்பாடுகளிலும் வெளிப்பட்டதால், மந்திரி பதவி பணால் ஆனது. ஆனாலும், திவாகரன் செல்வாக்கு வைத்திலிங்கத்தை சில மாதங்களிலேயே வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு மந்திரி ஆக்கியது. நெகிழ்ந்துபோன வைத்திலிங்கம், திவாகரன் பெயரை காயத்ரி மந்திரம்போல தினமும் உச்சரிக்க ஆரம்பித்தார். வாராவாரம் திவாகரன் இருக்கும் இடத்துக்குச் சென்று விசுவாசத்தையும் சேர்த்துக் கொட்ட ஆரம்பித்தார். அம்மா கேபினெட்டில் மாற்றங்கள் நடந்தபோதும் வைத்திலிங்கத்தை அசைக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆக்கப்பட்டார்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்றவருக்கு, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வாய்ப்பு கிடைத்தது. வென்று எளிதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆனார். அதன் பிறகு தென் மண்டலப் பொறுப்பாளர், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், கூடுதலாக வேளாண்மைத் துறை பொறுப்பு என அடுத்தடுத்து வைத்திலிங்கத்தைத் தேடித் தேடி பதவிகள் வந்தன.

துறையில் சாதித்தது என்ன?

வீடு, விவசாயம் என முக்கியத் துறைகளை தன் வசம் வைத்திருக்கும் வைத்திலிங்கம், இந்தத் துறைகளில் சாதித்ததைவிட சறுக்கியதுதான் அதிகம். முதலில் வீட்டுவசதித் துறை நிலவரம் பார்ப்போம்!

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 53 இந்தியப் பெருநகரங்களில் நான்கு நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகியவை தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் மிகவும் நகர்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், அந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் வீட்டுவசதிகளுக்கான அடிப்படைக் கட்டுமானங்கள் இருக்கின்றனவா? 'இல்லை’ என்றே சொல்ல வேண்டும்! 'விஷன் 2023’ அறிக்கையை 2012-ம் ஆண்டில் ஜெயலலிதா வெளியிட்டபோது அதில் வீட்டுவசதி குறித்த செய்திகள் அதிகம் இடம்பிடித்தன. 'தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வாங்கக்கூடிய விலையில் வீட்டுவசதியை அளிப்பதும், நகர்ப்புறங்களுக்கு உலகத்தரத்திலான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவதும் விஷன் 2023-ன் மையக்கருத்து’ என்றார் முதலமைச்சர் ஜெயலலிதா. 'அடுத்த 11 ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாயில் பொருளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவினருக்கு என 2.5 மில்லியன் குடியிருப்புகள் கட்டுதல், குடிசைப் பகுதிகள் அல்லாத நிலையை உருவாக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் வீட்டுவசதியை ஏற்படுத்துதல், 2023-ம் ஆண்டுக்கு முன்னர் வீட்டுவசதி வழங்கி, குடிசைப்பகுதிகள் அல்லாத நகரங்களாக மேம்படுத்துதல், அதற்கு என 65,000 கோடி செலவில் வீட்டு வசதி மற்றும் அது தொடர்புடைய மேம்பாட்டு வசதிகளை உருவாக்குதல்’ எனப் பல விஷயங்களைப் பட்டியல் போட்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கான எந்த முயற்சியுமே முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்காக சென்னை, நெற்குன்றத்தில் 1,016 வீடுகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு 544.50 கோடியில் கட்டப்படும் என கடந்த தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு வேலைகளும் தொடங்கின. ஆனால், அ.தி.மு.க ஆட்சி முடியும் நிலையில் இந்தப் பணிகள் முடிவடைய வில்லை. தனியார் அடுக்குமாடிக் கட்டடங்கள் மின்னல் வேகத்தில் முடிக்கப்படும்போது, இந்தத் திட்டம் மட்டும் கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது ஏன்? சென்னை கோயம்பேடு தெற்கு ஆசிய விளையாட்டுக் கிராமத்தில் 4.28 ஏக்கர் நிலப்பரப்பில் வணிக வளாகத்துக்குப் பதிலாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும். அதே கிராமத்தில் 1.32 ஏக்கரில் 49.14 கோடி ரூபாயில் சுயநிதித் திட்டத்தின் கீழ் 136 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான அறிவிப்புகள் எல்லாம், எப்போது செயல்வடிவத்துக்கு வரும் எனத் தெரியவில்லை!

துணைக்கோள் நகரம்!

2006-11 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின்போது, 'கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும்’ என கருணாநிதி சட்ட மன்றத்தில் அறிவித்தார். மறுநாளே ஜெயலலிதா விடம் இருந்து காட்டமான அறிக்கை வெளியானது. 'சென்னை மாநகரத்தின் இடநெருக்கத்தைக் குறைப்பதற்காக இந்தத் துணை நகரம் ஏற்படுத்தப்படும் என கருணாநிதி சொல்கிறார். அவர் வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள், ஏற்படுத்திக்கொண்ட துணைவியின் வழி வந்த உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தைவிட்டும், சி.ஐ.டி காலனியை விட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தைக் குறைக்கட்டும். கருணாநிதிக்கு 'துணை’ என்றால் மிகவும் பிடிக்கும் போலும். அதனால்தான் சென்னை மாநகருக்கும் ஒரு 'துணை’யைத் தேடுகின்றார்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் வசைபாடினார்.

அதே ஜெயலலிதாதான் 2011-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததும் சில மாதங்களிலேயே, 'சென்னை திருமழிசையில் 311 ஏக்கரில் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் செலவில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளுடன்கூடிய துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என அறிவித்தார். தி.மு.க ஆட்சிக் காலத்தில் தேவை ஏற்படாத நகரத்துக்கு, அப்போது என்ன தேவை உண்டானது என ஆச்சர்யம் விலகவில்லை.  ஜெயலலிதா அறிவித்த விநாடி சட்டமன்றத்தில் அறிவிப்புக்கு உரிய துறையின் அமைச்சர் வைத்திலிங்கமும் சபாநாயகரும் நன்றியையும் வாழ்த்தையும் இணைத்துக்கொண்டார்கள். ஆனால், திட்டம் அறிவித்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அது சம்பந்தமாக இன்னும் உருப்படியாக ஒரு வேலையும் நடக்கவில்லை.

குத்தம்பாக்கம் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டுவதும் மனை வரைபடம் தயாரிப்பதுமாக, ஆரம்பக்கட்டப் பணிகளைத்தான் தொடங்கியிருக்கிறார்கள்.

மந்திரி தந்திரி - 25 !

இதேபோல, 'மதுரை மாவட்டத்தில், பெருகிவரும் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தை அறிவித்தார்கள். 'மதுரையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையத்துக்கு அருகில் மதுரை திருநெல்வேலி நான்கு வழிப் பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் 586.86 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார் ஜெயலலிதா. 'இந்தத் துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்படும்’ எனவும் சொன்னார்கள். பொழுதுபோக்கு, விளையாட்டு, சமுதாயக்கூடம், என அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விசாலமான சாலைகள், நடைபாதை, பேருந்து நிலையம் என உலகத்தரம் வாய்ந்த நகரமாக உருவாக்கப்போவதாக கலர் கலர் மத்தாப்புகளைக் கொளுத்திப்போட்டார்கள். ஆனால், வரைபடம் தயாரிக்கும் பணிகூட முடியவில்லை.

மவுலிவாக்கம் மரணங்கள்!

முந்தைய தி.மு.க ஆட்சியில் கோவை உக்கடம் ஏரியாவில் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 144 அடுக்குமாடி வீடுகள் மண்ணில் இறங்கின. இந்த விவகாரம் பற்றி சட்டமன்றத்தில் பேசிய வைத்திலிங்கம், 'தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளின் தரம் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை அம்மா விட மாட்டார். பிடித்து சிறையில் அடைப்பார்’ என்றார். அவரே அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பல உயிர்களைப் பலிவாங்கிய மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டட விபத்துக்கு 'அரசு பொறுப்பேற்க முடியாது’ என்றார்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அலட்சியச் செயல்பாடுகளுக்கு அவல சாட்சி மவுலிவாக்கம் கட்டட விபத்து. அரசு இயந்திரத்தின் அசட்டை மனோபாவத்துக்கு சப்பைக்கட்டுகட்ட முதலமைச்சர் முதல் கடைக்கோடி அதிகாரிகள் வரை வரிந்துகொண்டு வந்தார்கள்.  'சி.எம்.டி.ஏ அனுமதி கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. முறையான அனுமதிதான் வழங்கப்பட்டிருக்கிறது. கட்டடம் கட்டிய நிறுவனம்தான் விதிகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது’ என்றார் முதலமைச்சர் ஜெயலலிதா. விபத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி கமிஷன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும், வெளியிடப்படாமல் இருந்தது. நீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகே அறிக்கை வெளியிடப்பட்டது. 'சி.எம்.டி.ஏ-வின் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியதே விபத்துக்குக் காரணம். விபத்துக்கு முழுமுதற்காரணம் சிருஷ்டி ஹவுஸிங் நிர்வாகத்தினர்தான்’ என அரசுக்கு ஆதரவாக செய்தி சொல்லியது அந்த அறிக்கை.

கட்டட உரிமையாளரால் தரப்பட்ட வரைபடம், அரசு அனுமதி அளித்த வரைபடம், மண் பரிசோதனைச் சான்று, துறைரீதியாகப் பெறப்பட்ட கடிதங்கள், சி.எம்.டி.ஏ-வில் எத்தனை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டார்கள்,  அவர்கள் தாக்கல்செய்த ஆவணங்கள் என்னென்ன என்பன எல்லாம் அறிக்கையில் இல்லவே இல்லை. கட்டட உறுதித்தன்மையை அவ்வப்போது கண்காணிக்கவேண்டிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கட்டடத்தைப் பார்வையிட்டு குறிப்புகள் எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதப்பட்ட குறிப்புகளும் இல்லை.

விசாரணை கமிஷன் அறிக்கை வருவதற்கு முன்பு சட்டமன்றத்தில் வைத்திலிங்கம் இந்த விவகாரம் பற்றி பேசினார். 'தனியார் கட்டடத்தில் ஏற்படும் சம்பவத்துக்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது. நடந்த விபத்துக்கு அரசு காரணம் அல்ல. அது அரசுக் கட்டடமும் அல்ல. ஆனாலும் அங்கு அசம்பாவித சம்பவம் நடந்துவிட்ட காரணத்தால், மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் உடனே நேரில் சென்று பார்வையிட்டார்’ என்றார். அதாவது முதலமைச்சர் சம்பவ இடத்துக்குச் சென்றதே பாக்கியம் என்பதுபோல போற்றிப் புகழ்ந்தார். ஆனால் அந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர், விபத்து நடந்த மவுலிவாக்கம் ஏரியாவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை!

சிக்கிச் சின்னாபின்னம் ஆகும் சென்னை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாதவரம் பேருந்து மற்றும் சரக்குந்து வளாகத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துணைப் புறநகர் பேருந்து முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.  வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இந்த முனையத்தில் நிறுத்தப்படும். இதற்கான வரைவு சாத்தியக்கூறு மற்றும் வரைவுத் திட்ட அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை. 'தமிழ்நாட்டின் தென்பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்’ என சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார் ஜெயலலிதா. 65 ஏக்கரில் 376 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட திட்டத்துக்கு என நிலம் எடுப்பதற்கான வழிகளை இப்போதுதான் ஆராய்ந்துவருகிறது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் முழுமை அடையவில்லை!

இப்படி சென்னையில் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் இடைநிலைப் போக்குவரத்து அமைப்புகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாமல் இருக்கின்றன. இது பயணிகளை ஏக அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறது!

வேளாண்மை மல்லுக்கட்டு!

'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து வேளாண் துறை வைத்திலிங்கத்துக்குக் கை மாறியது. அதற்கு முன்பும் சரி... பின்பும் சரி... விவசாய நலனுக்கு எனச் சிறப்புத் திட்டங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி தொடங்கப்படவில்லை. விவசாயத் துறை அமைச்சர் யார் என்பதே பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கே  வைத்திலிங்கத்தின் 'செயல்பாடுகள்’ இருக்கின்றன. விவசாயத் துறை சார்ந்த அனைத்து முடிவுகளையும் அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறார். வேளாண் துறைச் செயலாளர்தான் உண்மையில் விவசாயத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பைக் கவனித்துவருகிறார் எனக் கிசுகிசுக்கிறார்கள் வேளாண் துறை அதிகாரிகள்.

விதைப்பு காலத்தில் விதைகள் கிடைக்காமல் விவசாயிகள் அல்லாடுகிறார்கள். வட்டார வேளாண் அலுவலகங்களில் போதுமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள் கையிருப்பு இல்லை. இவை பற்றி அமைச்சர் அலட்டிக்கொண்டதே இல்லை. இதனால் மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை ஊழல் புரையோடிக் கிடக்கிறது. ஆண்டுதோறும் விலைவாசி அதிகரித்தாலும், வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையில் பெரிய வித்தியாசம் இல்லை. நீடித்த நிலைத்த விவசாயத்துக்கான எந்த வழிமுறைகளையும் முன்னெடுப்பது இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவைத்தொகையைப் பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக நீர்நிலைகளைப் பாதுகாக்க, பலப்படுத்த விவசாயத் துறை அக்கறை காட்டவே இல்லை. பெயர் அளவில் சில இடங்களில் தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள் அமைத்துவிட்டு, அதையே சாதனையாகக் கொண்டாடித் திரிகிறார்கள்.  

மந்திரி தந்திரி - 25 !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதிய ரகங்களை வெளியிடுவார்கள். உழவர் தின விழாவில் விவசாயிகளை அழைத்து, புதிய ரகங்களை அறிமுகப்படுத்துவார்கள். ஆனால், சில ஆண்டுகளாக அதிலும் சொல்லிக்கொள்ளும்படி அறிமுகங்கள் இல்லை. அண்டை மாநிலமான கேரளா, தம் மக்கள் நலனில் கவனம்செலுத்தி நச்சு கலந்த காய்கறிகளைத் தடைசெய்கிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே விவசாயிகளிடம் பிரபலமாகத் தொடங்கிவிட்ட இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது.  வெங்காய விலை உயர்வு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மீம்ஸ் என வைரல் கிளப்பியது. ஆனால், நம் அமைச்சரோ, 'வெங்காய விலை உயர்வு எதிர்க்கட்சிகள் செய்த சதி’ என்கிற ரேஞ்சில் ஒதுங்கிக்கொண்டார்.

முதல்முறை மந்திரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது, எப்படிச் செயல்படுவது என பதறி பதற்றத்தில் இருந்தார் வைத்திலிங்கம். ஆனால், பின்னர் அரசியலில் அவர் கற்றுக் கொண்ட பாடங்கள் அவருக்கு அந்தப் பதற்றத்தைப் போக்கிவிட்டன. அது என்ன  பாடம்?

'நீ எதற்கும் அலட்டிக்கொள்ளாதே. நடப்பது நடக்காமல் இருக்காது. நடக்காமல் இருப்பது நடக்காது’. சரிதானே அமைச்சரே!  

'மன்னார்குடி’க்கு ரகசிய லைக்ஸ்!

மந்திரி தந்திரி - 25 !

மன்னார்குடி துணை இல்லாமல் வைத்திலிங்கத்தால் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது. திவாகரனின் செல்வாக்கே வைத்திலிங்கத்தை அமைச்சர் ஆக்கியது. ஆனால், 2011-ம் ஆண்டு மன்னார்குடி குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, 'அம்மாவுக்கு வேண்டாதவங்க எனக்கும் வேண்டாதவங்கதான். அவங்களுங்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என அந்தர்பல்டி அடித்தார். அதை உண்மை என நம்பி அவரை மந்திரிப் பதவியில் இருந்து தூக்கவில்லை. ஆனால், என்ன நடந்தாலும் மன்னார்குடி மக்களோடு கை குலுக்கிக்கொண்டுதான் இருக்கிறாராம் வைத்திலிங்கம்!  

ஷோதிடருக்கு ஆப்பு!

மந்திரி தந்திரி - 25 !

'நீங்கள் மந்திரி ஆவீர்கள்’ என சொன்ன ஜோதிடர் வீரகபிலனுக்கு, பதில் மரியாதை செய்தார் வைத்திலிங்கம். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் ஸீட் வாங்கிக் கொடுத்து வெற்றி பெறவைத்து அழகு பார்த்தார். மேடைப்பேச்சில் வீரகபிலன் கில்லி. கூட்டத்தைக் கட்டிப்போட்டதால் அப்செட் ஆனார் வைத்திலிங்கம். கதை சொல்லியும் கவிதை பாடியும் மந்திரி ஆகிவிடக்கூடிய கட்சியில், வீரகபிலனை வளர்த்தால் தன் இடம் காணாமல்போகும் எனத் தொலைநோக்குக் கணக்கு போட்டு, அவரை அப்படியே ஓரம்கட்டினார். இப்போது ஜோசியர் இருக்கும் இடம் தெரியவில்லை!

சங்கரலிங்கம் டு பூங்குன்றன்!

மந்திரி தந்திரி - 25 !

தெலுங்கன் குடிக்காடு அருகே இருக்கிறது குறுமன் தெரு. அங்கு இருந்து போயஸ் கார்டனுக்குள் வந்தவர்தான் புலவர் சங்கரலிங்கம். ஒருகாலத்தில் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தவர். 'நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழின் ஆசிரியராக இருந்தவர். இவருடைய மகன் பூங்குன்றன்தான் ஜெயலலிதாவின் தனிச்செயலாளர். புலவர் சங்கரலிங்கம் வகையறாக் களுடன் வைத்திலிங்கம் ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம் இன்றும் தொடர்கிறது!

டெல்டாவின் ஒன்மேன் ஆர்மி!

மந்திரி தந்திரி - 25 !

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் அல்ல, டெல்டா ஏரியா முழுவதும் வைத்திலிங்கத்தின் கைதான் ஓங்கியிருக்கிறது. ஐவர் அணியில் இடம்பெற்று இருப்பதால், கட்சியை வளர்த்தவர்களையும் தன்னை வளர்த்தவர்களையும் ஓரம்கட்டிவிட்டார் வைத்திலிங்கம். இன்று அவர்தான் டெல்டாவில் 'ஒன் மேன் ஆர்மி’. 'மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு எல்லாம் பதவிகள் வாங்கிக்கொடுக்கிறார். சீனியர்கள் எல்லாம் குறிவைத்து ஓரம்கட்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தும்  தி.மு.க-வினர் சிபாரிக்கு வந்தால், அவர்களை அமைச்சர் நெருங்கவிடுவது இல்லை. ஆனால், சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் இருந்து தி.மு.க-வினர் வந்தால், அவர்கள் மீது மட்டும் தனிப் பாசம் காட்டுவார். அவர்கள் கேட்டதைச் செய்துகொடுக்கிறார். பரம்பரை தி.மு.க பொறுப்பாளர் ஒருவரின் மனைவிக்கு பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியர் வேலை வாங்கிக்கொடுத்திருக்கிறார்’ என ஏகப் புலம்பல்கள் டெல்டாவில் எதிரொலிக்கின்றன!

நிழல்கள்!

மந்திரி தந்திரி - 25 !
மந்திரி தந்திரி - 25 !

அமைச்சர் மாவட்டத்தில் இல்லாத நாட்களில் அமைச்சரின் நண்பர் காந்திதான் நிழல் அமைச்சர். கட்சி பொறுப்பாளர்களை நியமிப்பது முதல் கான்ட்ராக்ட்டுகளை யாருக்கு அளிப்பது என்பது வரையில் காந்தி சொல்வதே வேதவாக்கு. அரசு அலுவலகங்களில் காந்தியின் போன் வந்தால், அதிகாரிகளின் பல்ஸ் எகிறும். அந்த அளவுக்கு அதட்டலுடன் அதிகாரிகளை வேலைவாங்குவது இவரது ஸ்டைல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காந்தி புதிய வீடு கட்டிக் குடியேறினார். அந்த வீட்டைப் பார்த்து வாய் பிளந்தவர்களைவிட, அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்துக்கு வந்த வி.ஐ.பி-களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதுதான் அதிகம். கலெக்டர் முதல் லோக்கல் கட்சி நிர்வாகிகள் வரை அந்த நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் தவமணி, வைத்திலிங்கத்தின் மைத்துனர். அமைச்சரைப் பற்றி பாசிட்டிவ் தகவல்கள் மட்டுமே மேலிடத்துக்குச் செல்லும் வகையில் காக்கிகளிடம் செல்வாக்கு படைத்தவர். அமைச்சர் வைத்திலிங்கத்தின் நெருங்கிய நண்பர் பரசுராமன், மூன்றாவது முறையாக நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர்; இவர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகவும் இருக்கிறார். வல்லம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில்களைக் கவனித்துக்கொள்கிறார். வைத்திலிங்கத்தின் மனைவி தங்கம் பெயரில் வல்லம் ஆலக்குடி சாலையில் 'தங்கம் நகர்’ என்ற பெயரில் ஒரு வீட்டுமனைப் பிரிவையே உருவாக்கி இருக்கிறார். தகுதி இல்லாத ஒருவருக்கு துணவேந்தர் பதவி வாங்கித் தர இவர் மும்முரமாகச் செயல்பட்டதும் சர்ச்சைக்குரியதாக இருந்தது!

சொந்த ஊரில் செல்வாக்கு நஹி!

மந்திரி தந்திரி - 25 !

வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில்கூட உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறவில்லை. ஒன்றிய கவுன்சிலர் பதவியை தி.மு.க-தான் கைப்பற்றியது. இதேபோல் தெலுங்கன்குடிக்காட்டில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் மணிவண்ணனின் மனைவி போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வைச் சேர்ந்த ஜெயா ரெங்கராஜன்தான் ஜெயித்தார். காரணம், அவர் வைத்திலிங்கத்தின் உறவினர். 'அமைச்சரவையில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழும் வைத்திலிங்கத்தின் ஊரிலேயே கட்சி வளரவில்லையே’ எனப் புலம்புகிறார்கள்!