மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 10

எண்ணம், வண்ணம்:சந்தோஷ் நாராயணன்

அஞ்ஞானச் சிறுகதை

யதி

''யதி... கேள்விப்பட்டிருக்கியா?'' எனக் கேட்டார் புரொஃபசர் லாரன்ஸ். 

''ஆமா சார்... 'ஹிமாலயாவில் வாழும் பனிமனிதன்’ என்கிறார்கள். 'நியாண்டர்தால் பரம்பரையில் வந்தவர்கள்’ என ஒரு பேச்சு இருக்கிறதே. நாம் மனிதர்கள்... அதாவது ஹோமோசேபியன்கள். அப்படித்தானே?'' என்றான் அபிரால்... புதிய மாணவன்.

''நியாண்டர்தால்களும் சரி, ஹோமோசேபியன்களும் சரி ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியவர்கள்தான். ஹோமோஹெய்டல்பெர்ஜென்ஸிஸ்... என்ன நாக்கு சுழற்றிக்கொள்கிறதா சொல்லும்போது?'' எனச் சிரித்த லாரன்ஸ், ''ஆனால், பனிமனிதன் நம்பும்படியாக இல்லை; சரடுதான். நியாண்டர்தால்கள் காலநிலை மாற்றத்தால் முற்றிலும் அழிந்துவிட்டார்கள். பிழைத்திருப்பது நாம்தான்'' என்றார் கூடவே.

''ஹா... ஹா... ஹா...'' எனச் சிரித்தான் அபிரால்.

''என்ன சிரிக்கிறாய்?'' என்றார் லாரன்ஸ்.

'' 'மனிதர்கள் தங்களுக்குள் மதம், இனம், சாதி எனப் போரிட்டு அழிவார்கள்’ என்று நியாண்டர்தால்கள் நினைத்திருக்கலாம். அதுவரை மனிதர்களுக்குத் தெரியாமல் ரகசியமாக இந்தப் பூவுலகில் வாழலாம் என அவர்கள் முடிவெடுத்திருக்கலாம் அல்லவா? தீர்க்கதரிசிகள்...' என்றான் அபிரால்.

கலைடாஸ்கோப் - 10

'ஹா... ஹா... இது புது தியரியாக அல்லவா இருக்கிறது. ஒரு தீசிஸ் பண்ணு. உனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நான் சிபாரிசுசெய்றேன்'' எனக் கிண்டலாகச் சிரித்தார் லாரன்ஸ்.

''நீங்கள் நினைப்பதுபோல பனிமனிதனாக அல்ல. மனிதர்களுடன் மனிதர்களாகக் கலந்துகூட அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம். அதைத் திசைதிருப்பவே, இந்தப் பனிமனிதன் கதை எல்லாம் என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்!'' எனப் புன்னகைத்தான் அபிரால்.

''ஹா... அந்த அளவுக்கு மனிதர்களைப்போல நியாண்டர்தால்கள் புத்திசாலிகள் அல்ல. அவர்களின் கதை முடிந்து பல்லாயிரம் வருடங்கள் ஆயிற்று'' என வாய்விட்டுச் சிரித்தார் லாரன்ஸ்.

அபிராலும் சிரித்தபடி, ''ஓ.கே சார்... நான் கிளம்புறேன். நிறைய வேலைகள் இருக்கின்றன'' எனத் திரும்பினான். அவனது நீண்ட பின்னந்தலையை ஒரு கணம் கவனித்த புரொஃபசர், ''ஆமாம்... அது என்ன 'அபிரால்’..? வித்தியாசமான பெயர். இதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?' என்றார்.

''ஆமாம் சார்... இருக்கிறது. Never Ever ending. அதாவது முடிவற்றவன்!''

1975-ம் ஆண்டு. நியூயார்க் நகரின் கிழக்குப் பகுதி. தன் அப்பார்ட்மென்ட்டுக்கு வெளியே சிறுவர்கள் கட்டாந்தரையில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த 'ஆடம் பர்ப்பிள்’ என்கிற ஓவியருக்கு, 'ஒரு பூங்காவை உருவாக்கினால் என்ன?’ எனத் தோன்றியிருக்கிறது.

கலைடாஸ்கோப் - 10

ஆடம் பர்ப்பிள் ஒருவகையில் ஒரு நாடோடிக் கலைஞன். பத்திரிகையாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஊர் ஊராகச் சுற்றி, பிறகு அரசு அளித்த வருவாய் குறைந்தவர்களுக்கான அப்பார்ட்மென்டில் வசித்தார். அங்கேதான் இந்த 'கார்டன் ஆஃப் ஈடன்’ (ஏதேன் தோட்டம் எனலாமா?) எனும் பூங்காவை உருவாக்கினார்.

மண்வெட்டியுடன் தனி ஒருவனாகக் களத்தில் இறங்கி அந்தக் கட்டாந்தரையை மெள்ள மெள்ள ஒரு பூங்காவாக மாற்றியிருக்கிறார். 15,000 சதுரஅடி. 5 வருடங்கள். தான் ஓர் ஓவியரும்கூட என்பதால், அதற்கே உரிய அழகியலுடன் வட்ட வடிவத்தில் விதவிதமான செடிகளைக்கொண்ட பூங்கா. 1975-ம் ஆண்டில் இருந்து 1985-ம் ஆண்டு வரை 10 வருடங்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கிறார். நியூயார்க் நகர மக்கள் முதல் 80-களின் பல கலைஞர்கள் வரை அந்தப் பூங்காவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆனால், 10 வருட உழைப்பில் மலர்ந்த அந்தப் பூங்கா, நீதிமன்றத்தின் ஒரே ஓர் உத்தரவால் 75 நிமிடங்களில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டதுதான் பெரும் சோகம். 'அரசு இடத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் அதை ஆடம் உருவாக்கினார்’ என்பதுதான் குற்றச்சாட்டு. எந்த நாடாக இருந்தாலும் அரசு என்பது ஒரேமாதிரிதான் என எனக்குத் தோன்றுகிறது.

கலைடாஸ்கோப் - 10

ஆனால், இன்றளவும் ஆடமின் அந்தப் பூங்கா பற்றிய ஆவணப்படங்களும் பதிவுகளும் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த 20 வருடங்களாக 'கார்டன் ஆஃப் ஈடனை’ ஞாபகத்தில் சுமந்துகொண்டிருந்த 'ஆடம் பர்ப்பிள்’ என்கிற அந்த இயற்கைக் கலைஞன் கடந்த மாதம் மறைந்தார். மேலே, உண்மையான 'கார்டன் ஆஃப் ஈடன் தேவதைகள்’ அவரை வரவேற்றிருப்பார்கள்!

கலைடாஸ்கோப் - 10

தொழிலதிபர்கள் சில வாசகங்களை தங்கள் பிசினஸ் தாரகமந்திரம் எனச் சொல்வதுபோல, நம் நெட்டிசன்கள் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என திருமூலரைப் பிடித்துக்கொண்டார்கள். இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. கர்ணன், கவசக்குண்டலத்தைக் கழற்றிக் கொடுப்பதுபோல தகவல்களை கண்டமேனிக்கு ஃபார்வேர்டு தானம் பண்ணுகிறார்கள். காசா... பணமா?

தகவல்கள் உண்மைதானா... இந்த ஜோக் உண்மையில் ஹாஸ்யமாக இருக்கிறதா... இதெல்லாம் சாத்தியமா... எதையும் யோசிப்பது இல்லை. அமுக்கு ஃபார்வேர்டை. மொபைல் போன் எஸ்.எம்.எஸ் காலத்தில் ஃபார்வேர்டு பட்டனைப் பந்தாடிய பரம்பரை அல்லவா... வாட்ஸ்அப் வரை வண்டி கட்டி வந்துவிட்டார்கள். வண்டி வண்டியாக ஃபார்வேர்டு மெசேஜ்கள்.

சில ஃபார்வேர்டு மெசேஜ்கள் பயனுள்ளவையாக இருப்பது உண்மைதான். தொலைந்துபோனவர்களை மீட்பது முதல் தேவையானவர்களுக்கு மருத்துவ உதவி வரை அதனால் கிடைக்கிறது. ஆனால், சோடா உடைப்பதுபோல பொங்கிவரும் தகவல் வெள்ளத்தில் இந்த மாதிரி உண்மைத் தகவல்களும் தேர்தல் அறிக்கைகள்போல மறக்கப்படும் சாத்தியம் உண்டு என்பதே கொடுமை.

‘Consumer Psychology in a Social Media World ’  எனும் புத்தகத்தில் ஆராய்ந்து சொல்கிறார்கள்... 'ஒரு தகவலை ஃபார்வர்டு செய்வது ஏன்?’ என்ற கேள்விக்கு 33 சதவிகித மக்கள், 'காரணம் தெரியாது. ஜஸ்ட் ஃபார்வேர்டு பண்ணணும்னு தோணினால் பண்ணுவோம்’ என்றார்களாம். மேலும், ஏழு

சதவிகித மக்கள், 'தகவல்கள் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும் ஃபார்வேர்டு பண்ணுவோம்’ எனச் சொல்லி கிலி ஏற்படுத்துகிறார்கள். அதாவது, 'அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன... கழுதை மேய்ந்தால் என்ன?’ என ஊரில் சொல்வார்களே அதே மனநிலை!

'இருக்கட்டும்... இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ எனக் கேட்கிறீர்களா? எனக்கு நேற்று ஒரு ஃபார்வேர்டு மெசேஜில் வந்தது!

கில்லி என்றால் விஜய் நடித்த சினிமா பெயர்தான் ஞாபகத்துக்கு வரும் என்றாகிவிட்டது. அதிலும் அவர் கபடிதான் ஆடுவார். ஏன் 'கில்லி’ எனப் பெயர் வைத்தார்கள் எனத் தெரியவில்லை.

கலைடாஸ்கோப் - 10

'கில்லி’ என்ற கிட்டிப்புள் விளையாட்டுக்கு ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு பெயர். எங்கள் மார்த்தாண்டம் பகுதிகளில் தள்ளும் புள்ளும் (தள்ளையும் பிள்ளையும் என்பது மருவி இருக்கலாம். தள்ளை என்றால் அம்மா)!  

வெவ்வேறு பெயர்கள்போல ஆடும் முறைகளும் மாறும். புறங்கை முதல் மூடிய கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் வரை உடலின் வெவ்வேறு பாகங்களில் கிட்டிப்புள்ளை வைத்து, தட்டிவிட்டு, தூக்கி அடிப்பது எங்கள் ஊரில் இருந்த ஒரு ஸ்டைல். சாக்குட்டான், சாத்தியாம்புறம், முறுமுட்டி, நாக்கோணி, ஐத்துக்கோணி, ஆரஞ்சு, கீலேஸ் என ஒவ்வொரு பாகங்களில் அடிக்கும்போது ஒவ்வொரு பெயர். இவை ஏதோ ஜிப்ரிஸ் மொழிபோல புரியாமல் இருந்தாலும், வரலாற்றில் பதிவாகாமல்போகும் ஆபத்து இருப்பதால் இங்கே எழுதிவைக்கிறேன்!

மனிதர்கள் தோன்றியதாக நம்பப்படும் ஆப்பிரிக்காவின் பெருங்காடுகளைக் கடந்து மனித இனம் இன்று உலகெங்கும் பரவ, நெருப்பும் உதவி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கலைடாஸ்கோப் - 10

சிக்கிமுக்கிக் கற்கள், காய்ந்த மூங்கில் போன்ற மரத்துண்டுகள் இவைதான் நெருப்பை உருவாக்கும் உபகரணங்கள் என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவை எல்லாம் அவ்வளவு எளிது அல்ல. மழை, பனி, புயல் காலங்களில் படாதபாடுதான். எளிதாக நெருப்பை உருவாக்க பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் போராடிக்கொண்டுதான் இருந்தது. வேதியியல் பற்றிய தெளிவின்மை ஒரு காரணம்.

5-ம் நூற்றாண்டில், சீனாவில்தான் முறையாக சல்பர் தேய்க்கப்பட்ட குச்சிகளைக்கொண்டு நெருப்பை உருவாக்கலாம் எனக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், அந்த வடிவம்கூட சிக்கலானதாக இருந்திருக்கிறது. 17-ம் நூற்றாண்டில்தான் மேற்கில் ஹென்னிங் பிராண்ட் எனும் ரசவாதி அரைகுறையாக தீக்குச்சி போன்ற ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அதுவும் தீக்குச்சியைக் கண்டுபிடிப்பது அவர் நோக்கம் அல்ல. நம் ஊர் சித்தர்களின் ரசவாதம்போல உலோகங்களை தங்கமாக உருமாற்றும் வேட்கையில் ஹென்னிங் ஓயாமல் ஈடுபட்டிருந்தபோது, பாஸ்பரஸை தீக்குச்சிபோலப் பயன்படுத்த முனைந்திருக்கிறார். அதுவே பிறகு தீக்குச்சி ஆராய்ச்சியில் ஈடுபட்ட கண்டுபிடிப்பாளர்களுக்கு வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.

பிறகு, 1805-ம் ஆண்டில் பாரீஸைச் சேர்ந்த ஜீன் சேன்சல் என்பவர் பொட்டாசியம் குளோரைடு, சல்பர், சீனி, ரப்பர் என சகட்டுமேனிக்கு கலவையாக்கி அதில் குச்சியில் தேய்த்து, அந்தக் குச்சியை ஒரு சல்ஃபாரிக் ஆசிட் இருக்கும் குப்பியில் விட்டு எடுத்தால் நாராசமான துர்நாற்றத்துடன் குச்சியில் நெருப்பு எரியும் (அப்பாடா என்றிருக்கிறதா) எனக் கண்டுபிடித்தார். இப்படி ஒலிம்பிக் தீபம்போல பல கைகளுக்கு மாறி மாறி கடைசியில் நாம் இப்போது பார்க்கும் எளிய தீக்குச்சியின் கிட்டத்தட்ட வடிவத்தைக் கண்டுபிடித்தவர் ஜான் வால்க்கர். இருந்தாலும், கைகளில் நெருப்புப் படாமல் உரசுவது கஷ்டமாகத்தான் இருந்திருக்கிறதுபோல. பிறகு சார்லஸ் சவுரியா, குஸ்டஃப் எரிக், எட்வர்ட் லண்ட்ஸ்டோர்ம் போன்றவர்கள் அதை இன்றைய பாதுகாப்பான வடிவத்துக்குக் கொண்டுவந்தார்கள். ஏன் 'சேஃப்டி’ மேட்ச்சஸ்’ எனச் சொல்கிறார்கள் தெரிகிறதா?