Published:Updated:

சகோதரர்கள் காத்திருக்கலாம்!

வீயெஸ்வி

ங்கீதத்துக்கும் பூக்களுக்கும் நெருங்கிய உறவு இருக்கும்போல் இருக்கிறது. சென்ற வெள்ளி அன்று மாலை, இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் சார்பில் பதக்கம் வழங்கும் விழா, மியூசிக் அகாடமியில். இது ஆறாவது வருட நவராத்திரி மெகா விழா. முந்தைய வருடங்கள் போலவே வளாகத்தில் டென்ட் அடித்து ஹை டீ உபசரிப்பு... வரவேற்பு உரை... அறக்கட்டளை மற்றும் இந்திரா சிவசைலம் பற்றிய அறிமுக உரை... மாற்றம் மட்டும்தான் மாற்றம் இல்லாதது என்பார்களே! 

முதன்முதலாக தென் சென்னைக்கு வெளியே போய் ஆந்திராவில் இருந்து வித்வான்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். 'மல்லாடி பிரதர்ஸ்’ எனப் பரவலாக அறியப்பட்டிருக்கும் மல்லாடி ஸ்ரீராம பிரசாத், மல்லாடி ரவிகுமார் இருவருக்கும் இந்த முறை மெடல் அணிவிக்கப்பட்டது. விழா முடிந்த பிறகும், பதக்கத்தை அணிந்துகொண்டேதான் இருவரும் பாடினார்கள். வெயிட் கம்மியோ!

சகோதரர்கள் மேடை ஏறி 25 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. மற்ற பலரையும்போல முதலில் தாத்தா மற்றும் அப்பாவிடம் இசை பயின்று, பின்னர் சங்கீத கலாநிதிகள் நேதநூரி கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் பினாகபாணி இருவரிடமும் பட்டைத் தீட்டிக்கொண்டு, இன்று பரபரப்பான இரட்டையர்களாக பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சகோதரர்கள் காத்திருக்கலாம்!

சகோதரர்கள், மற்றவர்களின் கர்னாடக இசையைக் கேட்பதோடு இந்துஸ்தானி இசையையும் இஷ்டப்பட்டுக் கேட்பார்களாம். பாட்டு விஷயத்தில் எப்படியோ, சாப்பாட்டு விஷயத்தில் நிறைய பரிசோதனை செய்யக்கூடியவர்கள். அதுவும், பயணங்களின்போது வீட்டுச் சாப்பாட்டை தயார்செய்து பார்ப்பார்களாம். கோங்குரா ஊறுகாய் உண்டா?

விழா மேடையில் இரண்டு மல்லாடிகளும் தனித்தனியாக ஏற்புரை வழங்கினார்கள் - கச்சேரிகளில் நிரவல், ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் பாடுவதுபோல்! இருவரின் உரையும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருந்ததால் கொஞ்சம் போராகத்தான் இருந்தது.

இதுவரையில் இந்த அறக்கட்டளையின் பதக்கம் பெற்ற ஐவரில், இருவர் (சுதா ரகுநாதன், சஞ்சய் சுப்ரமணியன்) சங்கீத கலாநிதியாகிவிட்டார்கள். ஸோ, சகோதரர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்!

டெயில் பீஸ்: அன்று அகாடமிக்குள் நுழையும் சமயத்தில், சங்கீத கலாநிதி புல்லாங்குழல் என்.ரமணி மறைந்துவிட்ட தகவல் குறுஞ்செய்தியாக வந்தது. புல்லாங்குழல் மாலியின் பிரதம சீடரான ரமணிக்கு, விழா தொடக்கத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்த்தேன். ஏனோ செலுத்தவில்லை!