மருதன், ஓவியம்: ஹாசிப்கான்
'நான் இருக்கிறேனா, இல்லையா என்பது முக்கியம் அல்ல; ஜிஹாத் எப்போதும் இருக்கும். அதுதான் முக்கியம்!’ - 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், ஒரு பாகிஸ்தான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஒசாமா பின் லேடன் சொன்னது இது.
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின்னர், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்வைத்த போர் முழக்கத்திலும், உலக நாடுகளுக்கான மிரட்டலே விஞ்சியிருந்தது. 'நடக்க இருக்கும் போரில் நீங்கள் ஒன்று எங்களுடன் இருக்க வேண்டும் அல்லது அவர்களுடன்!’
ஒசாமாவின் வாழ்நாளும் புஷ்ஷின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தாயிற்று. ஆனால், இன்றும் போர் தொடர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது இருவருமே படுதோல்வி அடைந்துவிட்டது தெரிகிறது. ஏனெனில், இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடவில்லை. இருவரும் இணைந்து உலகின் மீது போர் பிரகடனம் செய்திருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான், லெபனான், உஸ்பெகிஸ்தான், செசன்யா, துருக்கி, ஏமன், எகிப்து ஆகியவை அதற்கான ரத்த சாட்சியங்கள்.
அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் இயங்க ஆரம்பித்த அல் கொய்தா, ஒருகட்டத்துக்குப் பிறகு தவிர்க்க இயலாதபடி அமெரிக்காவை தன் முதல் பெரும் எதிரியாக அறிவித்து, போரிடத் தொடங்கியது. அதன் செழிப்பான நிதி ஆதாரம், அசாத்தியமான ஆயுத பலம், ஆள் பலம் ஆகியவற்றைக் கண்டு உதிரி ஜிஹாத் அமைப்புகள் மட்டும் அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடுகளும்கூட நடுங்கத் தொடங்கின. உச்சக்கட்டமாக நடைபெற்ற 'செப்டம்பர் - 11 தாக்குதல்கள்’, அல் கொய்தாவை அமெரிக்காவின் நம்பர் 1 அச்சுறுத்தலாக மாற்றி அமைத்தன. பதிலுக்கு ஜார்ஜ் புஷ், ஆஃப்கானிஸ்தானைக் குறிவைத்து போர் தொடுத்தார். அல் கொய்தாவின் சர்வதேச நிதி நெட்வொர்க் நொறுக்கப்பட்டு, ஒசாமா பின் லேடன் கொல்லப்படும்வரை நடவடிக்கைகள் நீண்டன. தாலிபனின் கட்டுமானம் குலைக்கப்பட்டு, அமெரிக்காவின் பொம்மை ஆட்சி ஆஃப்கானிஸ்தானில் நிறுவப்பட்டது. ஈராக்கிலும் இதே மாடலைப் பின்பற்றிய அமெரிக்கா, சதாம் உசேன் ஆட்சியைக் கவிழ்த்து, அங்கு ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியதோடு சதாமையும் தூக்கிலிட்டு முடித்தது.

'அல் கொய்தா, தாலிபன் இரண்டும் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஒசாமா, ஓமர் இருவரும் கொல்லப்பட்டுவிட்டனர். மொத்தத்தில், சர்வதேச பயங்கரவாதத்தின் கதை முடிந்துவிட்டது. ரத்தத்துக்கு ரத்தம், பழிக்குப் பழி, சுபம்!’ என அமெரிக்கா சாய்ந்து உட்கார்ந்த தருணத்தில், ஆன்ட்டி க்ளைமாக்ஸாக ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா) முளைத்து எழுந்தது. அல் கொய்தா, தாலிபன் இரண்டும் கொண்டிருந்த அதே அரசியல் நோக்கங்களைத்தான் இந்தப் புதிய அமைப்பும் கொண்டிருந்தது. எனினும், முந்தைய இரு அமைப்புகளைக் காட்டிலும் தீவிரமாகவும் கொடூரமாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் இருக்கிறது. அதிர அதிரக் கொல்வதன் மூலம் மிகக் குறைந்த காலத்தில் மிகப் பெரிய கவனஈர்ப்பை இந்த அமைப்பால் பெற முடிந்தது.
அமெரிக்காவை அதிரவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் வளர்ச்சியைக் கண்டு, அல் கொய்தா தொடக்கத்தில் உத்வேகம்பெற்றது என்னவோ நிஜம்தான். ஒசாமா இல்லாமல் பலவீனம் அடைந்திருந்த நிலையில், அமெரிக்காவுக்குச் சவால்விட இப்படி ஒரு சக்தி தேவை என்றே அல் கொய்தா கருதியது. ஆனால், விரைவில் அது ஓர் உண்மையை அறிந்துகொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, அல் கொய்தாவுக்கும்கூட ஓர் அச்சுறுத்தல்தான். இதை ஊர்ஜிதப்படுத்தும்வகையில், அல் கொய்தாவின் தலைமைத்துவத்தை வெளிப்படையாகக் கேள்விக்கு உட்படுத்தினார் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபு பகர் அல் பாக்தாதி.
ஈராக், சிரியாவில் பெரிய அளவிலும், லிபியா, நைஜீரியா, கிழக்கு ஆஃப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலுமாக, மொத்தத்தில் 10 மில்லியன் மக்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். 'நாங்களே மெய்யான இஸ்லாமிய அரசை அமைக்கிறோம்; நாங்களே உண்மையான ஜிஹாத் போரைத் தொடுக்கிறோம்’ என்றும் அது பிரகடனம் செய்தது. மற்றொரு பக்கம், ஒசாமாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அய்மான் அல் ஜவாஹிரியால், அல் கொய்தாவின் சரிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சரிந்துகொண்டிருந்த அல் கொய்தா எழுச்சிப்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்க்கத் தொடங்கியது. அந்த எதிர்ப்பில் பொறாமை, கோபம், ஆற்றாமை அனைத்தும் பொங்கி வழிந்தன.
'ஓர் உண்மையான முஜாஹிதினாக இருப்பது என்றால் என்ன என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள். விடுதலை வீரர்களாக இருந்திருக்கவேண்டியவர்கள், ஒரு மாஃபியா கும்பலாகச் சுருங்கிவிட்டார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸை யாரும் நம்ப வேண்டாம்’ எனக் குமுறியது அல் கொய்தா.
அல் கொய்தாவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் இல்லாததால், ஐ.எஸ்.ஐ.எஸ் தன் இலக்கை நோக்கி நடைபோடத் தொடங்கியது. அல் கொய்தாவின் மாடலைக் கடைப்பிடிக்கும் அதேவேளையில் பிரத்யேகமான தனி வழியையும் ஐ.எஸ்.ஐ.எஸ் வகுத்துக்கொண்டது. உதாரணத்துக்கு, தொலைவில் உள்ள அமெரிக்காவை தன் முதன்மை எதிரியாகக் கருதி மோதாமல், ஈராக், சிரியா என அருகில் உள்ள எதிரிகளைப் பலவீனப்படுத்தி, பிரதேச ஆக்கிரமிப்பை விரிவாக்கிக்கொள்வதில் ஐ.எஸ்.ஐ.எஸ் முனைப்பு காட்டியது.
மற்றொரு பக்கம், அல் கொய்தாவைப் போலவே தேய்ந்துகிடந்த தாலிபன், எதிர்பாராத தருணத்தில் சட்டென எழுந்து நின்று தன் பலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தங்கள் தலைவர் முல்லா ஓமர் கொல்லப்பட்டுவிட்டதை (ஏப்ரல்-2013) கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு வெளியில் சொல்லாமல் அமைதிகாத்த இந்த இயக்கம், முல்லா அக்தர் மன்சூர் என்பவரைப் புதிய தலைவராக நியமித்து, தன்னைப் புதுப்பித்துக்கொள்ள ஆரம்பித்தது. தாலிபன் அமைப்பின் நிறுவனர்களில் மன்சூரும் ஒருவர். முல்லா ஓமர், ஒசாமா இருவரிடமும் தனிப்பட்ட முறையில் நட்புறவுகொண்டிருந்தவர்.
புதிய தலைவர் மன்சூர் மிதமான போக்குக் கொண்டவராக அறியப்படுபவர் என்பதால், ஆஃப்கானிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார் எனச் சிலர் எதிர்பார்த்திருந்த நிலையில், 'நான் அப்படிப்பட்ட தப்பைச் செய்ய மாட்டேன்’ என சென்ற வாரம் தெளிவுபடுத்தியிருக்கிறார். வடக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் என்னும் நகரத்துக்குள் நுழைந்து, அரசு அலுவலகக் கட்டடங்களை அழித்து, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்து, அந்த நகரைக் கைப்பற்றியிருக்கிறது தாலிபன்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் எழுச்சியை எதிர்த்த அல் கொய்தா, தாலிபனுக்குப் புன்னகையுடன் நட்புக்கரம் நீட்டியிருக்கிறது. 'புதிய தலைவர் மன்சூரை நாங்கள் வரவேற்கிறோம்; அவருக்கு கடவுள் துணையிருப்பாராக’ என வாழ்த்தினார் ஜவாஹிரி. பதிலுக்கு தாலிபனும் அல் கொய்தாவுடன் கைகுலுக்கிக்கொண்டது. அல் கொய்தா வழியில்,
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்க்கவும் கண்டிக்கவும்கூட தாலிபன் முன்வந்தது. ஆக, தாலிபனும் அல் கொய்தாவும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் கூட்டணி எதுவும் தேவைப்படாத நிலையில் தனித்து மிரட்டிக்கொண்டிருக்கிறது.
தாலிபன்-2 அடுத்து என்ன செய்ய இருக்கிறது? அல் கொய்தா-2 அடுத்து வந்துவிடுமா? இந்த இரண்டும் எவ்வளவோ தேவலாம் எனச் சொல்லும்படியாக
ஐ.எஸ்.ஐ.எஸ் கண் முன்னால் எப்படி இவ்வளவு பூதாகாரமாக வளர்ச்சி பெற்றது? அல் கொய்தா தொடங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் வரை வளர்ந்திருக்கும் பயங்கரவாதம் எனும் மாய வலையை எப்படி அறுத்து எறிவது?
அமெரிக்காவுக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும். அதையே இப்போதும் கையில் எடுத்திருக்கிறது. போர்! அதே ஆஃப்கானிஸ்தான்; அதே ஈராக். இந்த முறை புதிதாக சிரியா. தாலிபனுக்கு எதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ்- ஸுக்கு எதிராக, அல் கொய்தாவுக்கு எதிராக இன்னொரு போர் தொடங்கப்பட்டிருக்கிறது. 'ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸை வீழ்த்த சிரியாவுக்கு உதவப்போகிறேன்’ எனச் சொல்லி, ரஷ்யாவும் கோதாவில் இறங்கியிருக்கிறது.
வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. நாம் எதுவுமே வரலாற்றிடம் இருந்து கற்பது இல்லை என்பதால், மீண்டும் அது ஆரம்பத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. நாம் கற்கும் வரை அது ஓயாது!