ஓவியங்கள்: செந்தில்

தன்வினை
கொலை செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, அன்று இரவு எந்தவித ஆதாரங்களும் இன்றி கொலை செய்யப்பட்டிருந்தார்!
- மாதேஸ்வரன்

ஆசி
தம்பி கல்யாணத்துக்கு, நியூயார்க்கில் வசிக்கும் நித்யாவால் வர முடியவில்லை. திடீரென, ''நித்யா வந்துட்டா... நித்யா வந்துட்டா...'' என்று அம்மா கத்தினாள். ''எல்லோரும் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க. அவ, தம்பி தாலி கட்டுறதைப் பார்க்கட்டும்!'' என்றாள். ஸ்கைப்பில் சிரித்தபடி வந்த நித்யா, கை தூக்கி தம்பியை ஆசீர்வதித்தாள்!
- ஜெயா சம்பத்

புறம்போக்கு
தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆறுமுகத்தைப் பார்த்து, பென்ஸ் காரில் வந்த ஒருவன், ''எப்படிப் போறான் பாரு பொறம்போக்குப் பய!'' என்றான், அவன் பட்டா நிலத்தைப் பிடுங்கித்தான் இந்தச் சாலை போடப்பட்டுள்ளது என்பதை அறியாமல்!
- எழில்

சந்தோஷம்
அப்பா: எதுக்குடா அழற?
மகன்: என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டாப்பா!
அப்பா: போனா என்னடா... நானும் உன் அம்மாவும் இப்ப சந்தோஷமா இருக்கோம்தானே?
- ஆஷிக் கிராமத்தான்

எல்லாமுமாக
'எல்லாமுமாக இருந்து பின் இல்லாமல்போன உன்னையே நினைத்து உருகும் கணவன் மற்றும் குழந்தைகள்!’ மனைவியின் முதல் ஆண்டு நினைவு தினத்துக்கு விளம்பரம் கொடுப்பதற்கான வாசகத்தை எழுதிவிட்டு, 'எப்படியிருக்கு?' என்றான் சுதாகர். 'நல்லாயிருக்குங்க'' என்றாள் இரண்டாம் மனைவி!
- அஜித்

நட்பு
'ஃபேஸ்புக்ல 5,000 ஃப்ரெண்ட்ஸ் கடந்தாச்சு!’ பெருமையாக நினைத்த கணேஷ் மயங்கி விழுந்தான். ''பி.பி., டென்ஷன்தான் காரணம். எந்தப் பிரச்னையா இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணிக்கங்க...'' என்ற டாக்டரிடம், ''எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் கிடையாது டாக்டர்'' என்றான்!
கே.ஆனந்தன்

குறை
தொண்டனின் சைக்கிளை வாங்கிக்கொண்டு மக்கள் குறைகளைத் தெரிந்துகொள்ளக் கிளம்பினார் பென்ஸ் காரில் வந்த எங்கள் தலைவர்!
- நாகர்ஜுன்

லைக்ஸ்
இந்தியாவில் நிகழ்ந்த தந்தையின் மரணத்துக்குச் செல்ல லீவு கிடைக்காததால், 'மிஸ்ஸிங் யூ டாட் ஃபார் எவர்’ என்ற ஆதியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு 10,000 லைக்ஸ் கிடைத்தன!
- காதம்பரி

கவனம்
மல்லிகாவைக் கட்டிப்போட்டு, பீரோவை உடைத்து, திருடிவிட்டுக்
கிளம்பியவனிடம்
அவள் கெஞ்சினாள்... ''கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம்... கொஞ்சம் பார்த்துச் செலவு பண்ணு தம்பி!''
- லதா ரவிச்சந்திரன்
ஊடுருவல்

காட்டை வெட்டி மாளிகை கட்டினான் செல்வந்தன். சுவர் இடுக்குகளில் பறவைகள் இட்ட விதைகள் எல்லாம் விருட்சங்களாகி மாளிகையை வெட்டிக்கொண்டிருந்தன!
- நீச்சல்காரன்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய 'நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ.500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!