Published:Updated:

உயிர் பிழை - 10

உயிர் பிழை
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் பிழை

மருத்துவர் கு.சிவராமன்

டுத்த தலைமுறைக்கான நலவாழ்வுக்கு நாம் மெனக்கெடுவதை நவீனமும் போலி நாகரிகமும் கொஞ்சம் நகர்த்தியதில், கணிசமானவற்றை மறந்துவிட்டோம். மிச்சம் இருந்த எச்சங்களை வேகமாகத் தொலைத்து வருகிறோம். ஆனால், இன்னும் இந்தப் பூவுலகில் மனிதன் மாசுபடுத்தாத மரமும் செடியும் அப்படி அதிகம் நகரவில்லை. கனிகள் அப்படியானவை. ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம், கனியின் சதைப்பற்றுக்குள் சேமிக்கப்பட்டுள்ளது. 20 நாட்கள் அரைக் கீரையோ, 200 வருஷ ஆலமரமோ அதன் விதைக்குள் செருகியிருக்கும் சூட்சுமத்துக்கு, உணவு மட்டும் அல்லாது உயிரும் அளித்துக் காப்பது கனியும் கனிரசமும்தான். கூடவே, தன் கனியைத் தனிச் சுவையாக்கி, இனிப்பாக்கி, மருந்தாக்கி, வண்ணமாக்கி, அழகாக்கி, 'என்னைச் சுவைத்து என் மகவை இந்த நிலத்தில் உமிழ்ந்து விதைத்துப் போ’ என கிளிக்கும் அணிலுக்கும் 'கிலோ என்ன விலை’ எனக் கிரயம் பண்ணும் மனிதர்களுக்கும் பசியாற்றுவது கனி மட்டும்தான். 

உணவாக மட்டும் அல்ல, உயிராகவும் சில கனிகள் இருப்பதை ஆய்வுக் கண்கள் ஆராய்ந்து சொல்கின்றன. அப்படி ஒன்றுதான் முள் சீதாப்பழம். ஆப்பிரிக்காவில், தென் அமெரிக்காவில், கியூபாவில் ஒரு மருத்துவ உணவாக பெரிதும் அறியப்பட்ட முள் சீதா, நம் ஊர் தட்பவெப்பத்திலும் வளரக்கூடியது என்பதால், அது இங்கே இப்போது பரவலாகிவருகிறது. Gravia அல்லது Soursop எனப்படும் இந்த முள் சீதாப்பழமும் நாம் அறிந்த சாதாரண சீதாப்பழக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அந்தப் பழம், இலை, மரத்தின் பட்டை எனப் பலவற்றில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனைக்கூட ஆய்வுகள், இதன் சத்துக்கள் மார்பு நுரையீரல் புற்றுக்கு எதிராகப் பயன்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. மார்பகப் புற்றுநோயில் புற்றுசெல்கள், வேகமாக வளர, உடலில் இருந்து ஆற்றலை உறிஞ்சுவதை இது தடுப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிர் பிழை - 10

ஆனால், உலகின் மிக உயர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனங்களும் பன்னாட்டு புற்றுநோய் அமைப்புகளும், 'இந்த ஆய்வு இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. மனிதர்களில் எந்தவித ஆய்வும் நடத்தப்படவில்லை. இதுவரை முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவோ, உலகத்தரமான மருத்துவ ஆய்வேடுகளில் பலன்கள் ஆராயப்பட்டதாகவோ தெரியவில்லை; கூடவே பார்க்கின்சன் நோய் மாதிரியான நடுக்கத்தை இந்தக் கனி ஏற்படுத்தலாம்’ எனக் கவலை தெரிவித்து,  முள் சீதாவின் முன்வைப்பை மறுத்துவருகின்றன. அவர்கள் சொல்லும் ஆய்வுகள் எல்லாம் முடிவதற்கு இன்னும் பல வருடங்கள் பிடிக்கலாம். ஏற்கெனவே கீமோ வணிகத்தில் கோலோச்சும் நிறுவனங்கள், பணம் காய்க்கும் மருந்துகளைத் தூர ஒதுக்கிவைத்துவிட்டு, மரம் காய்க்கும் மருந்தை முன்வைக்க பெரிதும் தயங்கலாம். முள் சீதாப்பழத்தின் எந்த நுண்ணிய கெமிக்கல், 'உயிரில் ஏற்படும் பிழையை’ எந்த 'ரப்பர்’ வைத்து அழிக்கும் என ஆராய்ந்து, அந்த 'கெமிக்கலை’ தனக்கு மட்டுமே உரிமையாக்க முழுமூச்சாக முயன்றுவரலாம். மரம் தரும் மருந்தை ஆய்வுக்கூடத்தில் அச்சுப்பிசகாமல் தயாரிக்கும் வரை அடக்கிவாசிப்போம் என வணிகக்களம் திட்டமிட்டிருக்கலாம். இவை அனுமானங்கள் அல்ல... அனுபவங்கள்!

பூமத்திய ரேகையை ஒட்டிய, புவியியல் குறியீட்டின்படி Subtropical climate உள்ள நிலப்பகுதியில் வாழும் ஒரு பெரும் இனக்குழு, உலகின் பல மூலைகளில் உணவாக மரபாக முள் சீதாப்பழத்தைப் புசித்துவருகிறது. அதில் கண்டறியப்பட்ட ஒரு முக்கிய அறிவியல் தரவைப் பார்க்கும்போது, உயிர் பிழைக்கு அது உதவக்கூடும். என்ன சிகிச்சை எடுத்தாலும், கூடவே இந்தப் பழத்தைச் சாப்பிடுவதில் கிடைக்கும் சிறு பயனும்கூட, சில வேளையில் கூடுதல் நம்பிக்கையை விதைக்கக்கூடும். அதே சமயம், 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என வாழ்வின் விளிம்பில் நிற்கும் மனிதரின் சட்டைப்பையின் கடைசிக் காசையும் களவாடும் விதமாக, 'இது குலேபகாவலி மருந்து; உன் அத்தனை புற்றையும் துடைத்துப்போடும்’ என்ற மாதிரி விளம்பரம் செய்துவரும் அறம் இல்லாத வியாபாரிகளின் கையில் சிக்கி, பிற மருத்துவத்தை எல்லாம் ஒதுக்கி ஓடவும் வேண்டாம்.

முள் சீதா மாதிரி இப்போது உலகம் உற்றுப்பார்க்கும் இன்னொரு கனி மாதுளை. ஆஃப்கனில் இருந்து வெகுகாலம் முன் உலகம் எங்கும் பரவலாக்கப்பட்ட கனி இது. காந்தாரத் தேசமாக இந்தியாவின் ஒரு பகுதியாக ஆஃப்கன் இருந்தபோதே, நம் தமிழ் மண்ணுக்கும் வந்து நம் சங்க இலக்கிய சமையலறைக் குறிப்பிலும் இடம்பெற்றது மாதுளை. 'கனியாவதற்கு முன்னரே புளிப்பு மாதுளைக்காயில் கறி சமைத்த வரலாறு சிலப்பதிகாரத்திலும் உண்டு’ என்கிறார் தமிழ் தாவரவியலாளர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி. தொன்றுதொட்டு மாதுளையைத் தோலுரிக்கச் சிரமப்பட்டு அதன் பயன் அறியாது பல காலம் நாம் ஒதுக்கிவைத்திருந்தோம். நவீன தாவர அறிவியல், அதன் பயனைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. 250 மில்லி அளவு மாதுளைச் சாறை தினம் அருந்தும், புராஸ்டேட் கோளப் புற்றுநோயருக்கு (இது ஆண்களுக்கு மட்டும் வரும் புற்றுநோய்) அதன் நோய்ப்பெருக்கம் பெருவாரியாகக் குறைவதை ஆராய்ந்து அறிவித்துள்ளது.

சிவந்த நிறம் கொண்ட இதன் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பெண்களின் மார்பகப் புற்றுசெல்கள் பெருக்கத்தைத் தடுக்கும் பேராற்றலையும் கொண்டுள்ளதாம். ஆனால், இதை எல்லாம் சொல்லாமல், 'ஒயின் நல்லதாம்’ என மருத்துவ ஒப்பனையுடன் மது அருந்த வைக்கிறார்கள் வணிக வியாபாரிகள். ஒயினைக் காட்டிலும் கிரீன் டீயைக் காட்டிலும் மாதுளைச் சாறில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். முள் சீதாவைப் பார்த்து முனகுவதுபோல மாதுளையைப் பற்றியும் சத்தமாகப் பாராட்ட, அதன் பயனைச் சீராட்ட இன்னும் மேற்கத்திய நவீன மருத்துவ வணிக அறிவியல் உலகம் தயாராகவில்லை. 'ஏதோ சொல்றாங்கப்பா. சரியாத் தெரியலை’ என்றுதான் முகத்தைத் திருப்புகின்றன. தக்காளி, தர்பூசணி என ரத்தச் சிவப்பாக இருக்கும் அத்தனை கனிகளும், கருநீலவண்ணனாகக் காட்சி தரும் ஐரோப்பிய புளூபெர்ரியோ, நாங்குநேரி நாவல் பழமோ, பொத்தாம்பொதுவாக புற்றாட்டத்தைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டவை. அவற்றின் நிறம் தரும் தாவரப் பொருளான லைக்கோபீன்களும் பீனால்களும் உணவை மட்டும் அல்ல, உயிரையும் வண்ணமாக்கும் என்கின்றன மைக்ரோஸ்கோப் ஆவணங்கள்.

'தூய்மையின் அடையாளம்; அதனால் இந்த இழைகளால் ஆன ஆடையையே அணிவேன்’ எனப் பல்லாயிரம் ஆண்டுகளாக ரோம, எகிப்திய மன்னரும் மத குருமார்களும் அணிந்த நாரிழை ஆடையில் இருந்துதான், இப்போது அதிகம் பேசப்படும் Flaxseed Oil  எடுக்கப்படுகிறது. 'நான் சைவம்தான் சாப்பிடுவேன்.  ஆனா, மீன் தரும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் பெற எங்கே செல்வது?’ எனக் கேட்போருக்கு, இந்த ஃப்ளேக்ஸ் எண்ணெய்தான் ஒரே வழி. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 செறிவுடன் உள்ள ஒரே எண்ணெய் இது மட்டும்தான். ‘Linseed oil’  என்றும் அழைக்கப்படும் இந்த எண்ணெய், புற்றுசெல் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய உணவுப்பொருள். பழ சாலடுக்கு சீஸனிங்காக, எள்ளுப்பொடிபோல பிற பருப்புகளுடன் விதைப்பொடியாக, கம்பு சோள தோசைக்குத் தானியங்களை ஊறவைக்கும் கூடவே ஒரு கைப்பிடி ஃப்ளேக்ஸையும் போட்டு மாவாட்டிப் புளிக்கவைத்து தோசையாக என ஃப்ளேக்ஸ் விதையை/எண்ணெயைப் பயன்படுத்த முடியும்.

புற்றுநோய்க்கான முதல் எதிர் மருந்தான மீத்தோட்ரெக்சேட்டுக்கான ஆய்வுக்குப் பின்னால் 'சுப்பாராவ் என்கிற ஒரு சுதேசி இந்திய விஞ்ஞானி இருந்தார்’ என எழுதியிருந்தோம். அந்த மீத்தோட்ரெக்சேட் கருத்து உருவாக்கத்துக்கும்கூட இந்தியாதான் களம் அமைத்தது என்பது கூடுதல் தகவல். சிவப்பு அணுக்களையும் இரும்புச் சத்தையும் நம் ரத்தத்தில் நிலைநிறுத்த ஃபோலிக் அமிலம் அவசியமான ஒன்று. 1920-களில் மும்பையில் ஏராளமான ஏழைப் பெண் கர்ப்பிணிகள் ஒருவித சோகையிலும், அதனால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கிலும் மரணம் அடைந்தார்கள். அது குறித்து ஆராய வில்ஸ் என்கிற பெண் விஞ்ஞானி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியா வந்தார். அவரது ஆராய்ச்சியின் முடிவில்தான், இங்கு உள்ள ஏழைப் பெண்களுக்கு ஒருவித ஊட்டச்சத்து குறைவதால் சோகை வருவதைக் கண்டறிந்தார். பின்னாட்களில் அந்த ஊட்டச்சத்துக்கு 'ஃபோலிக் அமிலம்’ எனப் பெயரிடப்பட்டு அதற்கு இன்னொரு பெயராக 'வில்ஸ் ஃபேக்டர்’ என்ற அந்த விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டது. 'செல் பெருக்கத்துக்கு ஃபோலிக் அமிலம் உதவுகிறது என்றால், செல் அழிவுக்கு அதன் மாற்றுப் பொருளை யோசித்தால் என்ன?’ என புற்றுநோய்க்குத் தேவையான செல் அழிவுக்கு ஃபோலிக் அமிலத்தின் நேர் எதிர்மறையான ஆன்ட்டிஃபோலேட்டைக் கண்டறிந்தார்கள் சுப்பாராவும் ஃபேபரும். இப்படித்தான் இந்திய ஏழைகளின் மரணத்தில் உலகின் ஒரு முக்கிய அறிவியல் புரிதல் அன்று பிறந்தது. உயிர்ச்சத்துகளின் அவசியம் பெருவாரியாகப் புரியப்பட்டது அதன் பின்தான்.

ஆனால், ஏதோ பாற்கடல் அமிர்தம்போல இன்றைக்கு பலர் தினம் வகைக்கு ஒரு வைட்டமினைச் சுவைக்கும் போக்கு பெருகிவருகிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில், 'மதியம் ஒரு மாத்திரை; ராத்திரி ஒரு மாத்திரை’ என தேவை இல்லாமல் ஒரு பெரும் கூட்டம் வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டுவருகிறது. 'இதனால் அவசியம் இல்லாமல் செல்பெருக்கம் ஏற்பட்டு, இது காசு கொடுத்து, ஐ.சி.யூ-வில் படுக்கையை முன்பதிவு செய்வதுபோல’ என எச்சரிக்கிறது அறம் சார்ந்த அறிவியல்.

எல்லா உயிர்ச்சத்தும் இரு பக்கங்களும் கூராக உள்ள ஆயுதமே. ஒரு பக்கம் நோயை ஓட்டிவிட்டு, இன்னொரு பக்கம் பேயை பேயிங் கெஸ்ட் ஆக்கிவிடும் என்பதை மறக்கக் கூடாது. 'உயிர்ச்சத்தைத் தன்னுள் இயல்பாகச் சேமித்து வைத்திருக்கும் கீரையோ, கனியோ, விதையோ, இலையோ எப்போதும் ஆபத்து இல்லாதவை’ என்ற பேராசிரியர் ராபர்ட் வெர்வெர்க்கின் அறிவியல்பூர்வமான விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

உயிர் பிழை - 10

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசில் ஒரு விசேஷம். மரபு அறிவியலில் இருந்து பிறந்த நவீன மருந்துக்கு எனக் கிடைத்த முதல் நோபல் இது. சத்தோஷி ஒமுரா என்கிற ஜப்பானிய நுண்ணுயிரியல் பேராசிரியருடன் இதைப் பகிர்ந்தது யூ யூ தூ என்கிற சீனப் பெண் விஞ்ஞானி. சீனப் பாரம்பர்ய மருத்துவத்தில் இருந்து உலகைக் காக்கும் ஓர் உன்னத மருந்தைக் கண்டுபிடித்ததற்குத்தான் இந்த முறை நோபல். உலகின் 200 மில்லியனுக்கு மேலான மலேரிய நோயாளிகளைக் காப்பாற்றும் அர்டிமைசினின் மருந்தை யூ யூ தூ பாரம்பர்ய சீன மருத்துவத்தில் இருந்து பெற்றார். அதையும் பாரம்பர்ய உத்திகளைக்கொண்டே செறிவூட்டியதாகச் சொல்லும் அந்த விஞ்ஞானி நமக்குச் சொல்வதெல்லாம், 'மரபை உதாசீனப்படுத்தாதீர்கள். அதன் மூலமே உலகைக் காக்கவும் ஆளவும் முடியும்’ என்பதுதான்!

'எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப’ என அறிவியலை எழுத்துக்கும் மேலாக முன்நிறுத்திய சமூகம் இது.  நிலத்தில் அறம்சார் வேளாண்மை, கடலில் காற்றை ஆளும் நாவாய்த் திறன், வானில் செவ்வாய்க்கோளின் சிவந்த நிறம் காணும் நுட்பம், மருத்துவத்தில் அறுவைசிகிச்சையின் உச்சம், கணிதத்தில் சுழியத்தின் பயன் என நாம் உலகுக்குத் தந்தது ஏராளம். உலகம் எங்கும் சத்தம் இல்லாமல் பெருகும் உயிர் பிழைக்கும்கூட நம்மால் விடை தர முடியும். விடைக்கான சூத்திரங்கள் மரபில் ஏராளமாக உறைந்தும் ஒளிந்தும் இருக்கக்கூடும். உற்றுநோக்க, நவீன அறிவியலின் துணைகொண்டு உலகுக்கு அதன் அறிவியல் மொழியில் உரைக்க,  யூ யூ தூ-கள் மட்டுமே இங்கு இப்போதைய அவசரத் தேவை!

- உயிர்ப்போம்...

உயிர் பிழையைத் தவிர்க்கும் உயிர்ச்சத்துகள்!

வைட்டமின் பி6 (ஃபோலிக் அமிலம்),வைட்டமின் பி12, வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) என் இந்த மூன்று உயிர்ச்சத்துகளும் அளவாக இருந்தால் மட்டுமே ரத்தத்தில் இரும்புச்சத்து சீராக இருக்கும். கூடவே உடலில் உயிர் பிழை நிகழாது காக்கவும் உதவக்கூடும். இந்த மூன்றையுமே உணவில் இருந்தே பெற முடியும்.

பி6 - கீரை, பீன்ஸ், எள், ஃப்ளேக்ஸ் விதை, பூசணி விதை, சிறுதானியங்கள், நிலக்கடலை, பாதாம் பருப்பு... போன்றவற்றில் கிடைக்கிறது.  

பி12- தாவரங்களில் இல்லை. கோழி ஈரல், மீன், முட்டை ஆகியவற்றில் இருக்கிறது.

வைட்டமின் சி - நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சுகளில் கொட்டிக் கிடக்கிறது.

புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க இந்த மூன்று சத்துக்களும் மிக அவசியம் என மருத்துவர் சொன்னால் தவிர, இவற்றை மருந்தாக எடுப்பது தவறு. இயல்பான அதன் இருப்பான கனி, கீரை காய்களில் இருந்து பெறுவதுதான் சரி!

ஒரு நாள் பழச்சாறு டயட்!

கோடிக்கணக்கான தொழிற்சாலைகளை வைத்து பல்லாயிரக்கணக்கான தொழில் செய்துகொண்டிருக்கிறது நம் உடம்பு. அந்த உடம்புக்கு வாரம் ஒரு நாள் சிறப்பு ஊக்கம் அளிப்பது... அவசியம். அந்தச் சிறப்பு ஊக்கத்தை 'ஒரு நாள் பழச்சாறு டயட்’  மூலம் பெற முடியும். எப்படி..?

உயிர் பிழை - 10

வாரம் ஒரு நாள் இப்படி பழச்சாறு வெள்ளம் பொழிந்தால், உடல் உற்சாக மோடுக்கு மாறும். பக்கவிளைவாக தொப்பை குறையும். ஏனெனில், அத்தனையும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் மற்றும் நற்கனிமங்கள் நிறைந்த கலவை. ஆனால், இந்தப் பழச்சாறுகளை சர்க்கரை, பால், ஐஸ்கட்டி என எவையும் போடாமல் பழங்களின் அசல் சுவையோடு பருக வேண்டும். இந்த நாளில் வழக்கமான உணவைத் தவிர்த்துவிட வேண்டும்!