Published:Updated:

வைகை நதி நாகரிகம் ! - 13

வைகை நதி நாகரிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகை நதி நாகரிகம்

மதுரை மண்ணுக்குள்...ரகசியங்களின் ஆதிநிலம்!சு.வெங்கடேசன், ஓவியம்: ஸ்யாம்

மிழ்ச் சமூகத்தின் கையில் வளமான சங்க இலக்கியம் இருக்கிறது. ஆனால், அதை நிரூபிக்கும் தொல்லியல் சான்றுகள் போதுமானவையாக இல்லை. காரணம், போதுமான தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. முதன்முறையாக கீழடியில் பிரமிக்கத்தக்க வகையில், சங்ககால சமூகம் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நகர நாகரிகத்தின் முழுமையான அடையாளமாக ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளதைப்போல விரிவான கட்டட அமைப்புகள் கிடைத்துள்ளன. வீட்டுச் சுவர்கள், தரைத்தளம், வடிகால்கள், தொட்டிகள், கிணறுகள், இரண்டு அடுக்குச் சுவர்கள் என நகர அமைப்பு முழுமையாகக் கிடைத்துள்ளது. இவற்றில் சுமார் 1,300 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. முத்துக்களில் தொடங்கி, எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி போன்ற பொருட்கள் வரை முதன்முறையாகக் கிடைத்துள்ளன. இவை தவிர 32 தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஓர் ஓட்டில் எழுத்துப்பிழையோடு எழுதப்பட்டிருக்கிறது. அதாவது நன்கு பயின்றவர்கள்தான் எழுதினார்கள் என்பது இல்லாமல், தொடக்க நிலையில் இருந்தவர்கள்கூட எழுதிப் பயின்றதன் அடையாளமாக இது இருக்கிறது. 

விஞ்ஞானபூர்வமாக மண் அடுக்குகளுக்குள் மண்பாண்டங்கள் கிடைப்பது மிக அரிது. அந்த அடுக்குகளை வைத்துத்தான் காலத்தை அளவிட முடியும். தமிழகத்தில் இரும்புக் காலத்தில் இருந்து வரலாற்றுத் தொடக்கக் காலத்துக்கு எவ்வாறு உருமாற்றம் நடந்தது என்பதை அறிய, இந்த ஆய்வு பெரும் பங்களிப்பைச் செய்யும். தமிழகத்தின் தொன்மையான  வரலாற்றுக் காலத்தை அறிய, நமக்குக் கிடைத்துள்ள பெரும் சான்றாக கீழடி அமைந்துள்ளது. சங்ககாலம் என நாம் பொதுவாக வரையறுக்கிற காலத்தின் மூன்று அடுக்குகள் மிகத் தெளிவாகக் கிடைத்துள்ளன. மூன்று படிநிலைகளில் மனிதர்கள் பயன்படுத்தியுள்ள கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேல் அடுக்கில் உள்ள கிணற்று உரையின் அளவு 47 சென்ட்டி மீட்டராக உள்ளது. கீழ் அடுக்கில் உள்ள கிணற்று உரையின் அளவு  32 சென்ட்டிமீட்டராக உள்ளது.

வைகை நதி நாகரிகம் ! - 13

கீழ் அடுக்கில் இருந்து கிடைக்கும் பானை ஓடுகளில் குறியீடுகள் மட்டுமே இருக்கின்றன; எழுத்துக்கள் இல்லை. அதற்கு மேல் அடுக்குக்கு வந்த பின் எழுத்துக்கள் வரத் தொடங்கிவிட்டன. அப்போது எழுத்துக்களுடன் சேர்ந்து குறியீடுகளும் கிடைக்கின்றன. அதன் பின் குறியீடுகள் இல்லாமல் எழுத்துக்கள் மட்டும் (தமிழ் பிராமி) கிடைக்கின்றன. அதாவது எழுத்துக்கள் உருவாகாத காலத்துக்கும், எழுத்துக்கள் உருவான காலத்துக்கும் தெளிவான ஆதாரங்கள்.

இங்கு உள்ள பல குறியீடுகள் ஒவ்வொரு குலத்துக்கும் உள்ள குறியீடாக இருக்கலாம். அந்த அளவுக்கு எண்ணற்ற குறியீடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பாண்டியர்களுக்கு உரிய மீன் சின்னம் நிறையவே தென்படுகிறது. பானை ஓடுகளில் விதவிதமான மீன்கள் கீறி வரையப்பட்டுள்ளன. மக்கள் தங்களின் குலச் சின்னமான மீன் சின்னத்தை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அதேபோல இங்கு கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யப்பட்ட கலை வேலைப்பாடுகள் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன. நுட்பமான கலை வேலைப்பாடுகள் இன்றி எந்த ஒரு பொருளையும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வலிமையான கலை மரபு இங்கு இருந்திருக்கிறது. எத்தனை தலைமுறையாக வளர்க்கப்பட்ட மரபாக அது இருந்திருக்கும் என்பதை யோசித்தால், அந்த எண்ணம் நம்மைத் திகைக்கவைக்கிறது.

'சிந்துசமவெளி நாகரிகம், ஒரு திராவிடப் பண்பாடு... திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புகொண்டது’ என்ற ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்ற இந்தக் காலத்தில், அத்தகைய கருத்துக்களை மேலும் வலுப்படுத்தும் சான்றாக கீழடியில் கிடைத்துள்ள குறியீடுகளும் பிற கண்டுபிடிப்புகளும் அமையும். இனி தமிழகத்தின் வரலாற்றுக் காலக் கணக்கை நிர்ணயிக்கும் ஆவணமாக கீழடியில் உள்ள ஆதாரங்களே இருக்கப்போகின்றன. 'இவ்வளவு முக்கியமான இந்த இடத்தின் எதிர்காலம் என்ன?’ என்ற கேள்வி எல்லோரையும் கலக்கமுறவைக்கிறது.

மத்திய தொல்பொருள் துறை, கடந்த 60 ஆண்டுகளாக வட இந்தியாவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை தென் இந்திய ஆய்வுகளுக்குத் தரவில்லை என்பது வெளிப்படையான உண்மை. தனது அகழாய்வுப் பிரிவு ஐந்தை வட இந்தியாவிலும் (டெல்லி, பரோடா, நாக்பூர், பாட்னா, புவனேஸ்வர்), ஒன்றை மட்டும் தென் இந்தியாவிலும் (பெங்களூரு) வைத்துள்ள துறை இது. பெங்களூரில் உள்ள அந்த ஓர் அலுவலகம்கூட கடந்த 50 ஆண்டுகளில் கர்நாடகத்தில் நடத்திய தொல்லியல் ஆய்வுகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லை. இந்தியா முழுவதும் 45 இடங்களில் கள அருங்காட்சியகத்தை (Site Museum) மத்திய அரசு நிறுவியுள்ளது. தமிழகத்தில் சென்னைக் கோட்டைக்குள் இருக்கும் ஓர் அருங்காட்சியகம் தவிர, வேறு எந்தக் கள அருங்காட்சியகமும் மத்திய அரசால் உருவாக்கப்படவில்லை.

இந்தியாவின் முதல் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்ட இடம், தமிழகம். 1876-ம் ஆண்டு முதல் 1905-ம் ஆண்டு வரை ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்கள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளன. அதற்கு 20 வருடங்களுக்குப் பின்னர்தான் சிந்துசமவெளிப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக மத்திய தொல்பொருள் துறை தமிழகத்துக்கான முக்கியத்துவத்தை சிறிதும் தரவில்லை. 1973-ம் ஆண்டில் பூம்புகாரில் நடத்தப்பட்ட அகழாய்வுக்குப் பின்னர், சுமார் 40 ஆண்டுகள் கழித்து பெரிய ஓர் ஆய்வு இப்போதுதான் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. இடையில் 2005-ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் சிறிய அளவில் நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகள்கூட, 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்னும் வெளியிடப்படவில்லை.

மாநில அரசோ காக்காவுக்குச் சோறு வைப்பதுபோலத்தான் தொல்லியல் துறைக்கு நிதி ஒதுக்குகிறது. வளமான தொல்லியல் ஆதாரங்களைக்கொண்ட அழகன்குளத்தில் மாநில அரசு கடந்த ஏழு வருடங்களில் 19 அகழாய்வுக் குழிகளை மட்டுமே தோண்டியுள்ளது. ஆனால், மத்திய தொல்லியல் துறையோ கீழடியில் கடந்த ஏழு மாதங்களில் 43 அகழாய்வுக் குழிகளைத் தோண்டி ஆய்வை நடத்தியுள்ளது. 40 வருடங்கள் வராமல் இருந்த மத்திய அரசைக் குறைபட்டுக்கொள்வதா அல்லது நத்தை வேகத்தில் நகரும் மாநில அரசை எண்ணி நொந்துகொள்வதா?

இந்தத் தலைப்பில் விவாதிக்கத் தொடங்கினால், அது பக்கங்களுக்குள் அடங்காது. டெல்லியில் இருக்கும் மத்திய அருங்காட்சியகத்தைப் பார்க்கும் ஒருவனால், தென் இந்தியாவில் மனித நாகரிகம் ஒன்று இருந்துள்ளது என்பதற்கான தடயத்தைக் கண்டுபிடிப்பதே கடினம். மாநில அரசோ, கீழடியில் இப்படி ஓர் ஆய்வு நடப்பதையே இன்னும் உணராமல்தான் இருக்கிறது.

கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு, சுமார் 120 ஏக்கர் பரப்பில் ஐந்து கி.மீ சுற்றளவைக் கொண்டது. இந்த ஆண்டு இங்கு நடைபெற்ற ஆய்வு, ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இடத்திலேதான் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தக் குறுகிய இடத்திலேயே இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த இடத்தில் இனி குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. குஜராத்தில் உள்ள தொழவீராவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான ஆய்வைச் செய்துகொண்டிருக்கும் மத்திய அரசு அதைப்போல கீழடியில் ஆய்வைத் தொடர்ந்து நடத்துமா?

மாநில அரசு என்ன செய்யப்போகிறது? இவ்வளவு முக்கியமான ஒரு தொல்லியல் ஆய்வு தமிழகத்தின் எல்லைக்குள்தான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை மாநில அரசின் கவனத்துக்கு எப்படிக் கொண்டுசெல்வது என்பதுதான் இப்போது பெரும் சவால்.  

வைகை நதி நாகரிகம் ! - 13

மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தான் எல்லைக்குள் போய்விட்டதால், இந்தச் செழுமைமிகுந்த நாகரிகத்தின் அடையாளங்களை இந்திய பகுதிக்குள் கண்டறியப்பட வேண்டும் என, அன்றைய பிரதமர் நேரு மிகுந்த ஆர்வத்துடன், அக்கறையுடன் இருந்தார். அதன் விளைவாக மத்திய தொல்லியல் துறை தொடர்ந்து கவனம் செலுத்தி, மேற்குப் பகுதியில் சிந்துசமவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்த எண்ணற்ற அமைவிடங்களைக் கண்டறிந்தது.

'இச்சவாகு’ அரசின் தலைநகர் அமைந்த இடம் நாகார்ஜுனகொண்டா. அங்கு புதிய அணைக்கட்டு (நாகார்ஜுன சாகர்) உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை அப்படியே பெயர்த்தெடுத்து வேறு இடத்துக்கு மாற்றினார்கள். பிரதமர் நேருவின் நேரடிப் பார்வையில் இந்தப் பணிகள் நடந்தன எனக் கூறுவார்கள். ஆனால், இன்றோ கீழடி ஆய்வுகளைப் பார்வையிட இன்னும் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்கூட வந்துசேரவில்லை.

இந்த ஆய்வுப்பணியை மேற்கொள்ளும் குழுவின் பொறுப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கூறுவதுபோல, 'அகழாய்வுக்கான ஒரு பொக்கிஷம், கீழடி!’ இந்த இடத்தை நாம் பாதுகாப்பதும் தொடர்ந்து இங்கு அகழாய்வுப் பணிகள் நடப்பதை உறுதிசெய்வதும் இன்று தமிழக அறிவுச் சமூகம் முன்னெடுக்கவேண்டிய கடமை. இங்கு நடத்தவேண்டிய ஆய்வுக்கான ஒரு நீண்டகாலத் திட்டத்தை, தொல்லியல் துறை உருவாக்க வேண்டும் என்ற நிர்பந்தம் எல்லா தரப்பினராலும் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், இங்கு புதிதாக உருவாகும் ஒரு செங்கல் சூளை, ஆதி வரலாற்றின் தடயங்களை எல்லாம் பெயர்த்தெடுத்து அரைப்பாடி லாரியில் ஏற்றி அனுப்பிவிடும்.

உடனடியாக கீழடிப் பகுதியில் ஒரு கள அருங்காட்சியகம் அமைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கு கண்டறியப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் மக்களின் பார்வையில் இருக்கும். இல்லையெனில், ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் பெர்லினுக்குப் போய்ச் சேர்ந்ததைப்போல, கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரில் பூட்டப்பட்ட அறைக்குள் போய்ச் சேர்ந்துவிடும்.

அகழாய்வு செய்வதற்கு முன்னர் மண்ணுக்குள் புதைந்துள்ள பொருட்கள், அகழாய்வுக்குப் பின் அரசாங்கக் கட்டடங்களின் இருட்குகைக்குள் புதைந்துவிடுகின்றன. அது மக்களின் பண்பாட்டுச் சொத்து; அரசு ஆவணங்களுக்குள் புதைந்துபோகும் ஜடப்பொருள் அல்ல. எதிர்காலத் தலைமுறையினரிடம் உரையாடும் ஆற்றல்கொண்ட மானுட எச்சம். மூதாதையர்களின்  வாழ்வையும் வரலாற்றையும் ஒருங்கே சுமந்து நிற்கும் சாட்சி. நாகரிகத்தின் பிடிமண்.

அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையின் கையில் சேர்க்கப்போகிறோமா அல்லது அரைபாடி லாரியில் ஏற்றிச் செல்லப்படப்போவதை அனுமதிக்கப்போகிறோமா? தமிழ் மொழியின் மீதும், வரலாற்றின் மீதும், பண்பாட்டின் மீதும் அக்கறைகொண்ட எல்லோரும் ஒருங்கிணைந்து பதில் தேட வேண்டிய கேள்விகள் இவை!

- நிறைந்தது