
எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா
சந்தோஜத்தின் மறுபக்கம்
பழங்குடி இன மக்கள் அதிகம் உள்ள மாநிலம் அருணாச்சலப்பிரதேசம். GS பழங்குடி மக்களைக் காண்பதற்காக இட்டா நகரைச் சுற்றிய பகுதிகளுக்கு, சில ஆண்டுகள் முன்னர் சென்றிருந்தேன்.
அருணாச்சலப்பிரதேசத்தில் காணும் இடங்களில் எல்லாம் வண்ணமயமான ஆர்க்கிட் மலர்கள், ஒளிரும் பனிச்சிகரங்கள், பசுமை ததும்பும் பள்ளத்தாக்குகள், அடர்ந்த மழைக் காடுகள், சிற்றோடைகள்.
சியாங், சுபன்சிரி, கமேங், திரப் மற்றும் லோஹித் என ஐந்து ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளாக இந்த மாநிலம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 26 வகை பழங்குடி இன மக்கள் இங்கே வாழ்கின்றனர்.
பழங்குடி இன மக்களைச் சந்திக்கச் சென்றிருந்த நாளில்தான் எனது பிறந்த நாள் வந்தது. நாங்கள் சந்திக்கச் சென்றிருந்த பழங்குடி இனத் தலைவரிடம் நண்பர் இதைப் பற்றி சொன்னதும், அவர் மிகுந்த சந்தோஷத்துடன் என்னைக் கட்டி அணைத்து, ஆசி தந்ததோடு, பறவை இறகு ஒன்றையும் பரிசாகத் தந்தார்.
'எந்தப் பறவையின் இறகு இது?’ எனக் கேட்டேன்.
'இருவாட்சியின் இறகு’ எனச் சொன்னார் நண்பர்.

இருவாட்சி, அருணாச்சலப்பிரதேசத்தின் மாநிலப் பறவை. மிகவும் உயரமான மரங்களில் வசிக்கக் கூடியது. இந்தப் பறவை உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள விதைகள், மண்ணில் விழுந்து முளைக்கின்றன. ஆகவே காடு பெருகுகிறது; மழைக் காடுகள் இல்லை எனில், இருவாட்சி பறவைகள் கிடையாது.
'இந்தியாவில் ஒன்பது விதமான இருவாட்சி பறவைகள் உள்ளன. இருவாட்சி பறவைகள் ஒரே துணையுடன் வாழும் பழக்கம் கொண்டவை. இணையோடு வாழும் சந்தோஷமான வாழ்க்கையின் குறியீடுதான் இருவாட்சி பறவையின் இறகு’ என நண்பர் விளக்கினார்.
எத்தனையோ பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறேன். ஆனால், அன்று அந்தப் பழங்குடி மனிதர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியது அபூர்வ நிகழ்வாக அமைந்தது.
எனக்காக விசேஷ உணவு தயாரிக்கப்பட்டது.உணவு உண்பதற்காக நாங்கள் ஒன்றுகூடியபோது பழங்குடி இனத் தலைவர், 'இந்த விருந்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு மனிதரை நினைத்துக்கொள்ளுங்கள்’ என்றார்.
'யாரை?’ எனக் கேட்டேன்.
'யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் உங்களோடு இங்கே இருந்து உணவு உண்பதாக மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்’ என்றபடியே என் மனதில் இருந்த மனிதருக்கும் ஒரு கலயத்தில் உணவு படைத்தார்.
அது ஒரு நம்பிக்கை. பிறந்த நாளின்போது நமக்கு விருப்பமான யாரோடு ஒன்றாக உணவைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோமோ, அவர் அரூபமாக நம்மோடு இருப்பார் என நம்புகிறார்கள்.
பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டுக் கிளம்பும்போது, அந்த முதியவர் தனது வீட்டுக்கு முன்னர் உள்ள மரத்துக்கு குவளை நிறையத் தண்ணீர் ஊற்றச் சொன்னார்.
'எதற்காக?’ எனக் கேட்டேன்.
'இந்த மரம் உள்ளவரை இலைகள் உங்களையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். யார்

மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்களோ, அவர்கள் நினைவைத்தான் மரங்கள் முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றன’ என்றார்.
ஆயிரம் ஆயிரமாகச் செலவுசெய்து கொண்டாடும் பிறந்த நாளில் கிடைக்காத ஆத்ம திருப்தி, அந்த எளிய நிகழ்வில் சாத்தியமானது.
பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது நீண்ட வரலாறுகொண்டது. எகிப்து பாரோ மன்னர்கள் முதன்முதலாக பிறந்த நாள் கொண்டாடியதை பைபிள் குறிப்பிடுகிறது. பிறந்த நாளுக்கு கேக் வெட்டுகிற பழக்கம் கிரேக்கத்தில் தோன்றியிருக்கிறது. சந்திரனுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே வட்டவடிவமான கேக் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்ப காலங்களில் பிறந்த நாள் கொண்டாடுவது மன்னர்களுக்கும் உயர்குடி மக்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒன்று. ரோமானியர்கள்தான் பொதுமக்களும் பிறந்த நாள் கொண்டாடலாம் என்ற வழக்கத்தைக் கொண்டுவந்தார்கள்.
ஜெர்மானியர்கள்தான் இன்றுள்ள பிறந்த நாள் கேக்கை முதன்முதலில் உருவாக்கியவர்கள். 'ஹேப்பி பர்த் டே டு யூ’ என்ற பாடலை உருவாக்கியவர்கள் பேட்டி ஹில் மற்றும் மில்ரெட் ஜே ஹில். இவர்களில் பேட்டி ஹில், பள்ளி ஒன்றின் முதல்வர்; மில்ரெட், பியானோ இசைக் கலைஞர். 1912-ம் ஆண்டு இந்தப் பாடல் அச்சில் வெளியானது. அன்று முதல் இன்று வரை உலகில் மிக அதிக முறை பாடப்பட்டு வரும் பாடலாக 'ஹேப்பி பர்த் டே டு யூ’ கின்னஸ் சாதனை பெற்றுள்ளது.
பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என ஒவ்வொருவரும், பல்வேறுவிதமாக யோசனைசெய்கிறார்கள்; நடைமுறைப்படுத்து கிறார்கள். கோயிலுக்குப் போவது, கேக் வெட்டுவது, நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது, குடிப்பது, தானம் அளிப்பது இவைதான் வழக்கம்.
ஆசைத்தம்பி, தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடக்கூடியவர். இதற்காக நிறைய யோசனைகள் செய்வார். ஒவ்வொரு முறையும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் புதிதாக இருக்கும். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவும் செய்வார்.
ஒருமுறை அவரது பிறந்த நாளை ரயிலில் கொண்டாடுவது எனத் தீர்மானித்து, எலெக்ட்ரிக் ட்ரெய்னில் முன்-பின் அறிமுகம் இல்லாத அத்தனை பேருக்கும் பரிசுகள் தந்து கேக் வெட்டி கொண்டாடினார். இன்னொரு முறை எய்ட்ஸ் நோயாளிகளுடன் கொண்டாடினார்; வேறு ஒருமுறை 100 நேபாளி கூர்க்காக்களுக்குப் புத்தாடைகள் வாங்கித் தந்து கொண்டாடினார். இப்படி அவர் ஒவ்வொரு பிறந்த நாளையும் வித்தியாசமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவார்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது இல்லை. 'எதனால் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை நிறுத்திக் கொண்டுவிட்டார்?’ எனப் பலருக்கும் வியப்பாக இருந்தது. 'விதவிதமாகக் கொண்டாடி அலுத்துப்போய்விட்டார்’ எனக் கேலி பேசினார்கள். இதைப் பற்றி ஆசைத்தம்பியிடம் கேட்டபோது, அவர் சிரித்தபடியே சொன்னார், 'இப்பவும் நான் பிறந்த நாளைக் கொண்டாடத்தான் செய்றேன். ஆனா, அது என் பிறந்த நாள் இல்லை. மத்தவங்க பிறந்த நாள்’ என்றார்.
'மற்றவர்கள் பிறந்த நாளை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள்?’ எனப் புரியாமல் கேட்டதற்கு, ஆசைத்தம்பி பதில் சொன்னார்...
'2012-ம் ஆண்டில் என் பிறந்த நாளை பார்வையற்றவர்கள் காப்பகத்துல கொண்டாட ஏற்பாடு பண்ணியிருந்தேன். அது ஒரு தனியார் காப்பகம். படிக்கிற, வேலைபார்க்கிற 120 பார்வையற்றவர்கள் அங்கே இருந்தாங்க. அவங்களுக்கு காலை உணவு கொடுத்து, ஆளுக்கு ஒரு புத்தாடை வாங்கித் தந்து, பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு பண்ணியிருந்தேன்.
காலை 7 மணிக்கு நான் போனபோது எல்லோரும் ஒன்றாகக் கூடிநின்று எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, என் கைகளாலேயே இனிப்புகளையும் பரிசுப் பொருட்களையும் கொடுத்தேன். எல்லோரும் வாங்கிக்கொண்டு நன்றி சொன்னார்கள். விருந்து பரிமாறப்பட்டது நிறையப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
அப்போது பார்வையற்றப் பெண் ஒருவர் மட்டும் பரிசுப்பொருட்களை 'வேண்டாம்’ என மறுத்துவிட்டாள் எனக் கேள்விப்பட்டேன். அவளுக்கு என்ன கோபம் என்பதை அறிந்து கொள்வதற்காகச் சந்தித்துப் பேசினேன்
அவள் எரிச்சலான குரலில் கேட்டாள்... 'உங்க பிறந்த நாளை நாங்க ஏன் சார் கொண்டாடணும்? உங்ககிட்ட நிறையப் பணம் இருக்கு. அதனாலே எங்களைப் பிச்சைக்காரங்க மாதிரி நடத்துறீங்க. உங்களுக்கு உண்மையில மனசு இருந்தா, எங்கள்ல யாரோ ஒருத்தரோட பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கணும். எங்களுக்கும் பிறந்த நாள் வருது. ஆனா, நாங்க கொண்டாடுறது இல்லை. ஏன்னா எங்கக்கிட்ட காசு இல்லை. உங்களை மாதிரி பணம் வெச்சிருக்கிற யார் யாரோ இங்க வர்றாங்க. அவங்க பிறந்த நாளை எல்லாம் நாங்க கொண்டாடுறோம். ஆனா, எங்க பிறந்த நாளை யாருமே கொண்டாடுறது இல்லை. யாருக்கு, எப்போ, பிறந்த நாள்னு நாங்க வெளியே சொல்றதுகூடக் கிடையாது. எங்களுக்கும் ஆசை இருக்காதா? கண்ணு தெரியாமப் பிறந்துட்டோம். அதுக்காக பிறந்த நாள் கொண்டாடக் கூடாதா? உங்க கிஃப்ட் எதுவும் எனக்கு வேண்டாம். நீங்களே வெச்சிக்கோங்க!’ எனச் சொன்னார்.
அந்தப் பெண்ணின் மறுப்புக் குரல் என்னை உலுக்கிவிட்டது. நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு எத்தனை ஏற்பாடுகள் செய்கிறோம்; திட்டமிடுகிறோம். ஆனால், இந்தப் பெண்ணைப்போல எத்தனையோ பேர் தங்கள் பிறந்த நாளை வெளியே சொல்வதுகூடக் கிடையாது. அவர்களை யார் சந்தோஷப்படுத்தப்போகிறார்கள்?

அன்று வீடு திரும்பிய பிறகு அதே யோசனையாக இருந்தது. அன்றே 'இனி பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை’ என முடிவுசெய்துவிட்டேன். அதற்காகச் செலவுசெய்யும் மொத்தப் பணத்தையும் அந்தக் காப்பகத்துக்கே கொடுத்துவிட்டேன். இப்போது அங்கு உள்ள ஒவ்வொரு பார்வையற்றவர் பிறந்த நாளையும் இனிப்புகளுடன் புத்தாடைகளுடன் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவருக்குப் பிறந்த நாள் வருகிறது. சந்தோஷம் கொப்புளிக்கும் குரலுடன் எனக்கு நன்றி சொல்கிறார்கள். வருஷம் முழுவதும் பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டே இருப்பதுபோல் இருக்கிறது. இந்த சந்தோஷம் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிடைக்கும் சந்தோஷத்தைவிடவும் பெரியது. இப்போதுதான் முழுமையாக உணர்ந்துகொண்டிருக்கிறேன்.’
அவர் சொன்னதைக் கேட்டபோது 'பிறந்த நாள் என்பது நாம் சந்தோஷம்கொள்ளும் நாளாக மட்டும் ஏன் சுருங்கிப்போனது?’ என்ற எண்ணம் தோன்றியது.
பணத்தைச் செலவுசெய்து நாம் உருவாக்கிக்கொள்ளும் கொண்டாட்டங்கள் ஒரு நாள் கூத்தாக முடிந்துவிடக்கூடியவை. அதிலும் சிலர் கடன் வாங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு, அதை அடைக்க முடியாமல் மாதக்கணக்கில் சிரமப்படுவதைக் காண்கிறேன்.
பிறந்த நாளைக் கொண்டாடும் சிறுவர்கள்தான் பரிசுக்கும் இனிப்புக்கும் ஆசைப்படுவார்கள். ஆனால், வயது வளர வளர சந்தோஷம் என்பது பொதுவில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியது. அதிலும் பெறுவதைவிடவும் கொடுப்பதில் இன்பம் அதிகம் என்பதை உணர வேண்டும் அல்லவா?
வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்வது நமது செயல்களில்தான் இருக்கிறது. அதற்கு நாம் வாழ்வின் நோக்கம் குறித்து, சற்று சிந்தக்க வேண்டும். எது உண்மையான சந்தோஷம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
சிந்தனையாளர் எமர்சன், சிறந்த பேச்சாளர்; இயற்கை ஆர்வலர். அவரது உரையில் அழகு என நாம் எதைக் கருதுகிறோம், ஏன் அதை ரசிக்கிறோம், உண்மையில் அந்த அழகு சிறப்பானதா என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்.
எமர்சனின் கணிப்புப்படி அழகு மூன்று விதமானது. முதல் வகை, கண்ணால் பார்ப்பது, ரசிப்பதன் காரணமாக அறியப்படும் புற அழகு. ஓடும் நீரிலும் கடலின் அலைகளிலும் ஒளிரும் மேகங்களின் வழியாகவும் உணரும் அழகு என அதைச் சொல்லலாம்.
இந்தக் காட்சிகள் நாளடைவில் பழகிப்போய்விடும். பிறகு, மனது புதிய அனுபவத்தைத் தேடத் தொடங்கிவிடும்.
இரண்டாவது வகை, காணும் இயற்கையின் ஊடாக நம் அகம்கொள்ளும் மன எழுச்சியை அறிந்துகொள்வது, இயற்கை அழகில் தெய்வீகத்தைக் காண்பது இந்த ரசனை, இதில் புறப்பொருட்கள் நம் அகத்தை எப்படி மாற்றுகின்றன என ஒருவன் ஆழ்ந்து அறிந்துகொள்கிறான்.
மூன்றாவது வகை, இயற்கையில் வெளிப்படும் அழகை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு அதைச் சிறந்த கலைப் படைப்பாக வெளிப்படுத்துவது. கலையின் வழியாக உருப்பெறும் இயற்கை எப்போதும் பேரழகாக உள்ளது.
மனிதன் பயன்படுத்தும் சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஒன்றில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. நாம் எந்தச் சொல்லின் மூலத்தைத் தேடிச் சென்றாலும் இயற்கையில் காணக்கிடைக்கும் ஒரு பொருளையே சென்று சேரக்கூடும்.
தன் எண்ணங்களை வெளிப்படுத்த இயற்கையைத் துணைகொள்பவன் அதற்கு என இயல்பான மொழியை உருவாக்கிக்கொள்கிறான். இயற்கையை முன்வைத்து தனது அனுபவங்களைப் பேச ஆரம்பிக்கிறான். அதுதான் விவசாயிகளின் இயல்பு. எளிமையான அந்தச் சொற்கள் உண்மையின் வடிவங்களாக வெளிப்படுகின்றன.
எமர்சனைப் போன்றவர்கள், மனித வாழ்வின் அர்த்தத்தை நமக்கு உணர்த்துகிறார்கள்; வழிகாட்டுகிறார்கள். பின்பற்றவேண்டியது நமது கடமை.

இன்று ஆசைத்தம்பியைப் போல எத்தனையோ பேர் தங்களது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறுவிதமான நற்செயல்களைச் செய்துவருகிறார்கள். ஒருவர் தான் படித்த பள்ளிக்கு தனது பிறந்த நாளின்போது சூரியஒளி, மின்சார வசதி அமைத்துத் தந்திருக்கிறார். இன்னொருவர் தனது தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஆயிரம் பேருக்கும் ஒரு புத்தகம் பரிசு தந்திருக்கிறார். ஒரு பள்ளி மாணவன் தனது பிறந்த நாளில் தனக்குக் கிடைத்த பணம் முழுவதையும், புற்றுநோய் சிகிச்சைக்கான அன்பளிப்பாகத் தந்திருக்கிறான்.
இப்படி எத்தனையோ பேர் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் வழியை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது சிறிய தொடக்கம்தான். இது தொடருமானால், அதன் விளைவு நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்கும்!
- சிறகடிக்கலாம்...