
ஆண் பெண் ஊஞ்சல் தொடர்
அவன் அப்ப்டித்தான்!
##~## |
பெண்கள், காலையில் இருந்து மாலை வரை வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பதும், முகங்களைப்பார்த்தே உள் உணர்வுகளைக் கண்டுபிடிப்பதும், ஒரே சமயத்தில் பல வேலைகளை அநாயாசமாகச் செய்வதுமாக இருந்தார்கள். பிள்ளைகளைப் பாட்டிகளிடம் விட்டுவிட்டு, குகையைச் சுற்றி இருக்கும் செடிகளை ஆராய்ந்து, இனிப்பான பழங்களையும், சுவையான விதைகளை யும் திரட்டிக்கொண்டு வருவதும், கதைகள் பேசிக்கொண்டே, கை வேலைகள் செய்வதும் பெண்களின் பொழுதுபோக்குகளாக இருந்தன. அதனால்தான் இன்று வரை பெண்களுக்கு இதே பழக்கங்கள் நீடித்து வருகின்றன. போரடித்தால், தித்திப்பாக எதையாவது சாப்பிடுவது, யாருக்காவது போன் போட்டு அரட்டை அடிப்பது, கையில் காசே இல்லை என்றாலும், சும்மாவாவது கடைத் தெருவுக்குப் போய் வேடிக்கை பார்த்து விண்டோ ஷாப்பிங் செய்துவிட்டு வருவது... என்று இன்றும் பெண்கள் இருப்பது இதனால்தான்.

பெண்கள் இப்படி என்றால், ஆண்கள் இதற்கு நேர் எதிர். வேட்டையே குறி என்று எப்போதும் திரிந்ததால், ஆண்கள் அவ்வளவாகப் பேசுவதே இல்லை. இவர்கள் மூளையில் மொழி மையத்தின் சைஸும் சின்னதாகிவிட்டதால், நிஜமான ஆண்களுக்குச் சமய சந்தர்ப்பம் அறிந்து, சாமர்த்தியமாகப் பேசவே வருவதில்லை. முகக் குறிப்புகளையும் இவர்களால் துல்லியமாகக் கணிக்க முடிவது இல்லை. ஒரே சமயத்தில், பல வேலைகளையும் ஆண்கள் செய்வது இல்லை. ஒரே இலக்காக, எதையாவது தொடர்ந்து துரத்திக்கொண்டே சென்று, அது கிடைக்கும் வரை சளைக்காமல் முயன்று, அது கிடைத்துவிட்டால், எல்லோரிடமும் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டு, குகைக்குத் திரும்பி, 'அப்பாடா’ என்று இளைப் பாற ஆரம்பித்துவிடுவான். பிற ஆண்களைச் சந்தித்தால், வேட்டை நுணுக்கங்கள், ஆயுதங்கள், கருவிகள், ஆணின அரசியல், சாகசங்கள், காமம் மாதிரியான தலைப்புக்களில் பேசிக்கொண்டு இருப்பான். அப்போதும், 'எனக்குத் தான் எல்லாம் தெரியும், நான்தான் இங்கே ஆல்ஃபா!’ என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே இருப்பான். காரணம், ஆண்களுக்கு இடையில் எப்போதும் 'யார் இங்கே ஆல்ஃபா?’ என்ற போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. இதனால், தமாஷாகப் பேசினாலும்கூட ஆண்கள் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக்கொண்டும், காலை வாரிக்கொண்டும் இருப்பார்கள். அதுவும், ஆண்கள் பேசும்போது, ஒருவர் முகத்தை அடுத்தவர் உற்றுப்பார்த்துப் பேச மாட்டார்கள். சுற்று வட்டாரத்தை விழிகளால் ஸ்கேன் செய்துகொண்டே பேசுவார் கள். அந்த அளவுக்கு அவர்களது மூளையில் வேட்டை வெறி ஊறி உள்ளது.

இதே வழக்கம்தான் ஆண்களுக்கு இன்றும் இருந்து வருகிறது. ஒரே வித்தியாசம், அந்தக் காலப் பெண், 'ஆண் என்றால் இப்படித்தான் இருப்பான்!’ என்று ஏற்றுக்கொண்டாள். 'ஏன், என்கிட்ட முகம் கொடுத்துப் பேச மாட்டேங்கிறீங்க? உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? ஏன் என்கூட ஷாப்பிங் வர மாட்டேங்கிறீங்க?’ என்றெல்லாம் தொணதொணக்கவில்லை. 'நான்தான் குகை வேலையை எல்லாம் செய்யணுமா? ஏன், இவனும் கொஞ்சம் செய்தால் குறைந்தா போய்விடுவான்?’ என்று குறைகூறவும் இல்லை. 'அப்ப ஏன் இந்தக் காலப் பெண்கள் மட்டும் இதை எல்லாம் எதிர்பார்த்து, இம்சைப்படுத்துகிறார்களாம்!’ என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். இதற்கும் ஒரு சுவாரஸ்ய மான பதில் இருக்கிறது. ஆனால், அதற்கு முன் காட்டுவாசி நிலையில் இருந்து மனிதர்கள் நாடோடிகளாக மாறிய கதையை முடித்துவிடுவோம்.
கொடும் பனிக் காலம் முழுக்க மனிதர்கள் குகைகளில் பதுங்கி வாழ்ந்து வந்தார்கள். பத்துப் பதினைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தக் கொடும் பனி விலகி, உலகில் உஷ்ணம் பரவ ஆரம்பித்தது. அதுவரை வெறும் பனிப் பாறைகளும், ஊசி இலை மரங்களுமாக இருந்த பூமியில், நதிகள் உருவாகி ஓட ஆரம்பித்தன. பல நிறங்களில் பூக்கும் செடிகள் தோன்றின. வழக்கம்போலப் பெண்கள் இந்த இலை, கனி, காய்களைச் சேகரித்து குகைக்குக் கொண்டுவர, வழியில் சிதறிய விதைகள் புதுச் செடிகளாக உயிர் பெற, பெண்கள் தோட்டக் கலையைக் கண்டுபிடித்தார்கள். வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு, விதவிதமான செடிகளை நட்டுவைத்து, அன்றாடத் தேவைக்கான உணவு வகைகளை வளர்த்து, சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் செடிகளைச் சூறையாட கால்நடைகள் வந்தபோது,

அவற்றையும் குட்டியில் இருந்தே எடுத்து வளர்த்து, வீட்டுப் பிராணிகளாக மாற்றிவைத்தார்கள் பெண்கள்.
இந்தக் கால்நடைகளை மோப்பம் பிடித்துக்கொண்டு வேட்டுவ விலங்குகள் வந்தபோது, அவற்றை விரட்டி அடிப்பது ஆண்களின் வேலையானது. வீட்டைச் சுற்றியே சைவ, அசைவ உணவுகள் ஆயத்தமாகக் காத்திருக்க... வேட்டைக்குப் போக வேண்டிய அவசியம் அதற்கு மேல் ஆண்களுக்கு இருக்கவில்லை. அதனால் வேட்டுவ வீரியத்தைவைத்து, ஆண்களைத் தரம் பிரித்துத் தேர்ந்தெடுத்துக் கலவிகொள்ளும் வழக்கத்தை மாற்றிக்கொண்டார்கள் பெண்கள்.
அது எப்படி?
(காத்திருங்கள்...)