மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மந்திரி தந்திரி - 26 !

மந்திரி தந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
மந்திரி தந்திரி ( விகடன் டீம் )

விகடன் டீம், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார் ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

ன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம். அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர். அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி!

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் கடைக்குட்டி பழனிசாமி. கல்லூரியில் படிக்கப் பிடிக்காமல் மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தவர். காடு காடாக அலைந்துதிரிந்து வெல்ல மூட்டைகளைக் கொண்டு வருவதால் 'வெல்ல மூட்டை’, 'சர்க்கரை மூட்டை’ என ஊருக்குள் பழனிசாமிக்கு அடைமொழிவைத்தார்கள். ஆனால், 'அதற்கு எல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகுமா?’ எனச் சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, வேலையில் கண்ணும்கருத்துமாக இருந்தார். அந்த வட்டாரத்தில் 'பங்காளிச் சண்டை’ மிகப் பிரசித்தம். அப்படி பழனிசாமி குடும்பத்தின் பங்காளி வகையறாவுக்குள் 10 அடி நிலத்துக்காக மூண்ட மோதல், எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூவர் கொலையாகும் வரை சென்றது. அந்த வழக்கில் சிக்கிய பழனிசாமியோடு சேர்ந்து சிலர் மீது நீதிமன்றத்தில் வருடக்கணக்கில் வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அரங்கேற, வழக்கு தள்ளுபடி ஆனது. சமரச உடன்படிக்கை எல்லாம் ஏற்பட்டு ஒருவழியாக மீண்டார்கள் பழனிசாமி தரப்பினர். அதன் பின்னர் ஆவேசத்தை அடக்கியேவாசித்தார் பழனிசாமி.

மந்திரி தந்திரி - 26 !

சமூகப் பெரியவர்கள் மூலம் செங்கோட்டையனுடன் கிடைத்த அறிமுகம், பழனிசாமியின் அரசியல் தாயமாக அமைந்தது. 1991-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பழனிசாமி, அதன் பிறகு அரசியலில் ஏற்ற இறக்கங்களுடனேயே பயணித்தார். 'வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை’யாக செங்கோட்டையனைப் புறம்தள்ளி வளர்ந்தார்; ஏக உட்கட்சி எதிரிகளைச் சம்பாதித்தார்; தேர்தல்களில் தோற்றார்; கட்சிப் பதவிகளை இழந்தார் என பல தகராறுகளுக்குப் பிறகு 'மன்னார்குடி’ ராவணன் நிழலில் பதுங்கினார். 2011-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 'இந்த முறை அமைச்சராக இல்லாவிட்டால், தன்னைக் கட்சியில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்’ எனக் கணித்தார். மன்னார்குடி சேனலிடமே சரணடைந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஒருவழியாக மந்திரி பதவியைப் பிடித்தார்.

துறையில் சாதித்தது என்ன?

தமிழ்நாடு முழுக்க 62,294 கி.மீட்டருக்கு நீளும் சாலையைப் பராமரித்துவருகிறது நெடுஞ்சாலைத் துறை. இதில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 11,752 கி.மீ. அந்தச் சாலைகளின் அவலங்களை வாகன ஓட்டிகளிடம் கேட்டால், கதைகதையாகச் சொல்வார்கள். பல்லாங்குழிகளாக அல்ல.... நவீன மழைநீர் சேகரிப்புக் குட்டைகளாக அவை பல் இளிக்கின்றன. ஓர் அமைச்சர் எதையெல்லாம் சாதித்தார் என்றுதானே ஒரு பட்டியல் இருக்க வேண்டும். ஆனால், நம் அமைச்சருக்கு எதையெல்லாம் சாதிக்கவில்லை என்ற பட்டியல்தான் நீளம்.  

இதோ நீள்கிறது!

• சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைக்கும் திருவான்மியூரில் ஏக போக்குவரத்து நெரிசல். அதைத் தவிர்ப்பதற்காக ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை, நீலாங்கரையில் இணைக்கும் வகையில் இரண்டு கி.மீ தூரத்துக்குப் புதிய சாலை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க, 204.20 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்ட திட்டம் அந்தரத்தில் நிற்கிறது.

• 2,160 கோடி ரூபாய் செலவில், சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் முடியவில்லை.  

•  'மதுரையில் மாட்டுத்தாவணி அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து கப்பலூர் வரை 27 கி.மீ நீள மதுரை சுற்றுச்சாலை, 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச் சாலையாக உருவாக்கப்படும்’ என்றார்கள். அது நிறைவேறவில்லை.

•  'அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நாமக்கல்-திருச்செங்கோடு சாலையின் 30.88 கி.மீ தூர இருவழிச் சாலை, 126 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்’ எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா. பணிகளுக்கு பிள்ளையார் சுழிகூட விழவில்லை.

• ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இதுவரை 57 புதிய பாலங்களை அறிவித்தார் ஜெயலலிதா. அவை ஆட்சி முடியும் தருணத்திலும் முழுமை பெறவில்லை.  

•  'சென்னையில் வியாசர்பாடி மேம்பாலம் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார் பழனிசாமி. எந்த அக்டோபர் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

•  'எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடி ரூபாயில் அமைக்கப்படும்’ என 110-ம் விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். அது எப்போது நிறைவேறும் எனத் தெரியாது!    

•  இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப்போவதாகச் சொல்லி 'தொலைநோக்குத் திட்டம்-2023’ என ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில், பல வண்ண கலர் மத்தாப்புகள் கண் சிமிட்டின. அதிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றி விரிவாகவே அலசியிருந்தது விஷன்-2023. '15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்’ எனச் சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை 4.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 4,000 கோடி ரூபாய்கூட ஒதுக்கப்படவில்லை!

• ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் டபுள் செஞ்சுரியை எட்டப்போகின்றன. அவற்றில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகள் வெளியிட்டார். இதில் ஆறு பணிகளே முடிக்கப்பட்டிருக்கின்றன. நில எடுப்பிலும் திட்ட அறிக்கை தயாரிப்பிலும் எஞ்சிய அறிவிப்புகள் கிடக்கின்றன. ஆனால், ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளுக்கு, அரசாணைகள் போட்டதையே பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார் அமைச்சர். எங்கே போய் முட்டிக்கொள்ள?!

மந்திரி தந்திரி - 26 !

திக்கித்திணறும் சென்னை!

'புதிய எல்லைச் சாலை மூலம் மாமல்லபுரமும் எண்ணூரும் இணைக்கப்படும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி துறைமுக வடக்கு இணைப்புச் சாலை வழியாக, கிழக்குக் கடற்கரை சாலை - மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு வரையில் அமைக்கப்படும் இந்த எல்லைச் சாலையைச் சுற்றிலும் இணைப்புகளை ஏற்படுத்தி, எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன், திறமையான வணிகப் போக்குவரத்துக்கும் துறைமுக இணைப்புக்கும் உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டது. ஆனால்,  திட்டம் தொடங்கப்படவில்லை. வெளிநாட்டு நிதி உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் காத்திருக்குமா?

சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு சட்டமன்ற விதி 110-ன் கீழ் ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் 250 கி.மீ சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன்கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். இதற்கு மொத்தம் 1,033 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்திருந்தார்கள். முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால், அந்தப் பணிக்கு இப்போதுதான் ஒப்புதலே கிடைத்திருக்கிறது. இனி அது எப்போது தொடங்கி எந்த நூற்றாண்டில் நிறைவேறுமோ?!

புறக்கணிக்கப்படும் திருவள்ளுவர்!

கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலாப் பயணிகள் போய் வருவதற்காக, மூன்று படகுகளை இயக்கிவருகிறது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம். ஆண்டுக்கு சுமார்

20 லட்சம் பயணிகள் விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் போய் வருகிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதால், திருவள்ளுவர் சிலையை மாற்றாந்'தாய்’ மனப்பான்மையுடனேயே அணுகுகிறது அ.தி.மு.க அரசு. பல சமயங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் கப்பல் போக்குவரத்து நடத்திவிட்டு, பருவநிலை, கடல் அலைச் சீற்றம் எனக் காரணம் சொல்லி, பக்கத்திலேயே இருக்கும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல மறுக்கிறார்கள். 'வள்ளுவர் சொல்லிய உலகப் பொதுமறை கருத்துக்கள் எல்லாம், உலகத்துக்குத்தான்... நமக்கு இல்லை’ என நினைத்துவிட்டார்கள்போல!  

டோல்கேட் கொள்ளை!

'சாலை அமைக்க 300 கோடி ரூபாய் செலவழித்துவிட்டு 3,500 கோடி ரூபாய் வரையில் டோல்கேட்டில் வசூல் செய்கிறார்கள். சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை; மின் விளக்குகள் இல்லை; வாகனம் நிறுத்த போதிய வசதி இல்லை; சர்வீஸ் சாலையும் இல்லை; சுங்கச்சாவடிகளையும் முறைப்படுத்துவதோடு தனியார் வசம் உள்ள சுங்கச்சாவடிகளை ரத்துசெய்துவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு பல கட்டமாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஆனால், இது எதற்கும் 'எடப்பாடியாரிடம்’ இருந்து ரியாக்‌ஷனே இல்லை. அரசியல் கட்சிகள் பலத்த போராட்டம் நடத்தியபோதும் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோதுதான் திருவாய் மலர்ந்தார். அப்போதும் என்ன சொன்னார் தெரியுமா? 'சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் ஒரே சீராகக் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்’ இந்தக் கோரிக்கையை வைக்க ஓர் அமைச்சர் எதற்கு... அவருக்குக் கீழ் செயல்பட இத்தனை அதிகாரிகள் எதற்கு?!

செங்கோட்டையனுக்கு செக்!

மந்திரி தந்திரி - 26 !

அரசியலில் செங்கோட்டையன்தான் பழனிசாமிக்கு ஏணி. ஆனால், அ.தி.மு.க அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்த செங்கோட்டையனை, அங்கு இருந்து தூக்கியடித்ததில் பழனிசாமிக்குப் பெரும் பங்கு உண்டாம். செங்கோட்டையன் மீண்டும் தலையெடுத்து வந்துவிட்டால் ஐவர் அணியில் இடம்பெற்று இருக்கும் தன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால், செங்கோட்டையன் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உஷாராக இருக்கிறாராம் எடப்பாடியார். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் தங்கமணி... இந்த மூவர் கூட்டணி நடத்தும் 'பவர் பாலிட்டிக்ஸில்’ பலர் சத்தம் இல்லாமல் காணாமல்போய்க்கொண்டிருக்கிறார்களாம்! 

சாதிக்காரர்களுக்கே சான்ஸ்!

மந்திரி தந்திரி - 26 !

எதிர்க்கட்சிக்காரனாக இருந்தாலும் தன் சாதியைச் சேர்ந்தவர் என்றால், நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட்டுகள் அவருக்கே ஓ.கே செய்யப்படுமாம். சொந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் வேறு சாதியினர் என்றால்... தடாதான்! துறையில் மட்டும் அல்ல, கட்சிப் பதவிகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் நடந்த கட்சித் தேர்தலில் சேலத்தின் 23 ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்துக்கு சிபாரிசு போக பெரும் வசூல் வேட்டையும் அமைச்சர் பேரைச் சொல்லி நடந்ததாம்!  தலைமைக்கு இது புகாராகச் சென்றாலும், 'ஐவர் அணியில் ஒருவர்’ என்பதால் பழனிசாமி மீதான புகார்கள் 'மியூட்’ செய்யப்பட்டுவிடுகிறதாம்!

குண்டக்க மண்டக்க புகார்கள்!

வகைதொகை இல்லாமல் பழனிசாமி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன. அதையும் எதிர்க்கட்சிகளே வாசிக்கின்றன. 'அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லி ஆளுநரிடம் மனு கொடுத்தது பா.ம.க. ராமதாஸ் அளித்த அந்தப் புகார் பட்டியலில் பழனிசாமியைப் பற்றி விரிவான அத்தியாயங்கள் இருந்தன. 'கோகோ கோலா ஆலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு. அதில்  அமைச்சர் பழனிசாமியுடன் தொழில் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ எனப் புகார்வாசித்தது அந்த மனு.

மந்திரி தந்திரி - 26 !

காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், 'அமைச்சர் பழனிசாமி வீட்டில் 1,000 கோடி ரூபாய் பதுக்கிவைத்திருக்கிறார்கள்’ எனத் திரி கொளுத்தினார். 'தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நடத்தும் வசூல்வேட்டையில் கிடைக்கும் தொகையை அமைச்சர் பழனிசாமி வீட்டில், சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காகப் பதுக்கிவைத்திருப்பதாக, சேலம் ஏரியாவில் பரவலாகப் பேச்சு நிலவுகிறது.  வருமான வரித் துறையும் தேர்தல் கமிஷனும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை உடனடியாகச் சோதனையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எல்லாம் கொந்தளித்தார் இளங்கோவன். உடனே அவர் மீது வழக்கு போட்டார் பழனிசாமி. ஆனாலும் சளைக்காத ஈ.வி.கே.எஸ்., 'அமைச்சர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, குறுக்குவிசாரணை நடத்துவேன்’ என அதிரடித்தார்.

அமைச்சரை இயக்கும் படை!

மந்திரி தந்திரி - 26 !

அமைச்சர்களின் வாரிசுகள் அதிகார மட்டங்களாக வலம்வரும் காலத்தில் பழனிசாமியின் ஒரே மகன் விதிவிலக்கு. 'வெகுளி’ என்ற பட்டத்தோடு  உலாவருகிறார். ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்துவைத்து மாமன், மச்சான், நண்பர்கள் எனப் பலரும் அமைச்சர் பேரைச் சொல்லில் காரியம் சாதிக்கிறார்களாம். அமைச்சரின் மனைவி ராதா, மச்சான் வெங்கடேஷ், அண்ணன் கோவிந்தராஜூ, பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குருசாமி, வாழப்பாடி குபேந்திரன், வளத்தி வெங்கடாசலம், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, அரியானூர் பழனிசாமி, சேலம் ஜங்ஷன் பாவா, கவுன்சிலர் சசிகலா, வீராணம் முத்துசாமி, சங்ககிரி நிலவள வங்கித் தலைவர் கந்தசாமி... என அமைச்சர் ஆதரவாளர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கட்சியினர்! 

மந்திரி தந்திரி - 26 !

பயமா... பாசமா?

சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு மற்றும் மாநில மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்தான் அமைச்சர் இல்லாத நாட்களில், மாவட்டத்தின் நிழல் அமைச்சர். இவர் எங்கு போனாலும் 10 கார்கள் புடைசூழச்  செல்வார். அமைச்சரின் முன்பே இவரை, 'வாங்க மாவட்டம்’ என அழைப்பார்கள் கட்சிக்காரர்கள். அமைச்சரும் அதை ரசிக்கிறார். அமைச்சருக்கு இளங்கோவன் மீது பாசமா... பயமா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, இளங்கோவன் பழனிசாமியுடன் நெருக்கமாக உலா வருகிறார். ஏனென்றால், அமைச்சரின் 'ஆல் இன் ஆல்’ தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் இளங்கோவன்தானாம்!